ஆண்டாளும் தோழிகளும் - ஒரு நாடகப் பார்வை சென்ற ஆண்டு கார்த்திகை கடைசி நாள் அடியேனுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஆண்டாளின் திருப்பாவைக்குப் பெரியவாச்சான் பிள்ளையின் 'மூவாயிரப்படி' வியாக்கியானத்தை வரிக்கு வரி எடுத்துக்கொண்டு, திருப்பாவையை ஒரு நாடகம் போல எழுத வேண்டும் என்பதுதான் அது. ஆண்டாள் தன் திருப்பாவைக்கு இட்ட பெயர் கோதையின் ’சங்கத் தமிழ் மாலை’. முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்று பாடபுத்தகத்தில் படித்திருக்கிறோம். அந்த மூன்றும் திருப்பாவையில் பொதிந்துள்ளன. இயல் மற்றும் இசையை நாம் படித்தும் கேட்டும் ரசித்திருக்கிறோம்; ஆனால் அதில் 'நாடகம்' ஒளிந்துகொண்டிருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது தான் அடியேனின் நோக்கம். ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்ற பொக்கிஷத்தைக் கட்டிக்காத்தது நம் முன்னோர்களின் வியாக்கியானங்கள். இந்த வியாக்கியானங்கள் இல்லையென்றால், ஆழ்வார் பாசுரங்களை நாம் வெறும் பாடல்களாக மட்டுமே ஓதிக்கொண்டிருந்திருப்போம். சில 'கோனார் நோட்ஸ்' போன்ற உரைகளைப் படித்தால் கொட்டாவிதான் வரும்; சுவைத்து ரசித்திருக்க முடியாது. அதிலிருந்து முழுவதும் மாறுபடுகிறது...