Skip to main content

(6) அழகனும், கோயில் அண்ணனும்

 (6) அழகனும், கோயில் அண்ணனும் 


உடையவர் ஒரு சமயம் நாச்சியார் திருமொழி காலக்ஷேபத்தில் 

நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?’ 

என்ற பகுதி வந்த போது, சட்டென்று தன் சீடர்களுடன் திருமாலிருஞ்சோலைக்கு புறப்பட்டார். 

அங்கே அழகரைத் தொழுது நின்று, ஆண்டாளின் விருப்பம் போல் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தடா அக்கார அடிசிலும், வெண்ணெய்யும் சமர்ப்பித்தார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தான் பாடியதைச் செயல் படுத்திய ஸ்ரீராமனுஜரின் செயலுக்கு உகந்து “வாரும் என் அண்ணலே” என்று அர்ச்சை குலைத்துக் கொண்டு முன்பே வந்த காரணத்தால் இன்றும் நமக்கு அதே நிலையில் சேவை சாதிக்கிறாள்.

இன்றும் அதனால் தான் ‘பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே” என்று அநுசந்தாதித்து வருகிறோம். 

ஒரு முறை கிடாம்பி ஆச்சான் திருமாலிருஞ்சோலை அழகர் திருமுன்பே அகதிம் (கதியற்றவனை) என்று தொடங்கும் ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினத்தின் 48-ஆம் ஸ்லோகத்தை விண்ணப்பம் செய்தார். அதற்கு அழகர் ”நம்மிராமானுஜனை ஆசாரியனாக பெற்ற நீர் கதியற்றவன் என்று சொல்லல் ஆகாது” என்றார்.  

4.5.2025
படத்தில் : அழகனுடன் கோயில் அண்ணன்.
’சித்திர’ திருவாதிரை - இளையாழ்வாரின் 1008 திருநட்சத்திரம்
படம்: கஸ்தூரி ரங்கன்

Comments