(4) நம்பெருமாளும் நம்மிராமானுசனும்
ஆலவந்தார் தன் வாழ்நாள் குறுகியுள்ளது என்பதை உணர்ந்து, இளையாழ்வாரை காஞ்சியிலிருந்து அழைத்து வாரும் என்று பெரியநம்பியை நியமித்தார். நம்பியும் காஞ்சிக்கு உடனே புறப்பட்டு, ராமானுஜர் வரும் வழியில் ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினத்தை இளையாழ்வார் காதில் விழுமாறு ஓதினார். அதில் பொதிந்துள்ள ஆழமான அர்த்த விஷேசங்களை அறிந்த ராமானுஜர் “இவை யார் அருளியது? அவரை நான் காண முடியுமா ?” என்று கேட்க, நம்பியும் “ஆளவந்தார் அருளியது, அவரை காண இப்போதே கிளம்பலாம் என்று அவரை அழைத்துக்கொண்டு திருவரங்கம் புறப்பட்டனர்.
ஆனால் பெரிய பெருமாளின் திட்டம் வேறாக இருந்தது. அந்தத் திட்டத்தை சற்று பார்க்கலாம்.
பெரிய நம்பியும், இளையாழ்வாரும் திருவரங்கம் நுழைய, ஆளவந்தார் பரம பதித்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து மனம் வருந்தினர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று இருவரும் புலம்பினர். அச்சமயம் இளையாழ்வார் ஆளவந்தாருடைய விரல்கள் மூன்று மடங்கியிருப்பதைக் கண்டு, அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று சபதம் செய்ய, மடங்கிய கைவிரல்கள் நிமிர்ந்தன. தன்னால் ஆளவந்தாரைப் பார்க்க முடியவில்லையே என்ற துயரத்தால் பெரிய பெருமாளிடம் சற்று கோபம் கொண்டு அவரை சேவிக்காமலேயே காஞ்சிபுரத்துக்குத் திரும்பினார்.
பிறகு பெரியநம்பியே ஆசாரியன் என்று திருக்கச்சி நம்பி மூலம் வரதன் ஆறு வார்த்தைகள் அருள, மீண்டும் திருவரங்கம் நோக்கி பெரிய நம்பியைக் காணச் சென்றார். வழியில் மதுராந்தகத்தில் இருவரும் சந்திக்க, அங்கேயே பஞ்சஸம்ஸ்காரம் நடைபெற்றது. பெரிய நம்பியைத் தன் ஆசாரியனாகக் கொண்டு அவரிடம் காஞ்சியில் பாடம் படித்தார். அவர்களுடைய தேவிகளுக்கிடையில் மனக்கசப்பு ஏற்பட்டு, கிணற்றடி சண்டையில் அது முற்றி, பெரிய நம்பி திருவரங்கத்துக்குத் திரும்பினார்.
இதற்கிடையில் வரதன் முன் இளையாழ்வார் சந்நியாசம் ஏற்று, இராமானுசமுநியாக திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார். அவர் திருவரங்கம் சென்று சேரும் வரை நாம் ராமாயணத்தைக் சற்று அனுபவிக்கலாம்.
ஸ்ரீமத் ராமாயணத்தில் லக்ஷ்மணனுக்கும், பரதனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஸ்ரீராமர் காட்டுக்குப் போகும்போது நானும் கூட வருவேன் என்று பிடிவாதம் செய்து ஸ்ரீராமருடன் வனவாசம் சென்றார் லக்ஷ்மணன். தன் தாய், மனைவி என்று எல்லாவற்றையும் துறந்து ஸ்ரீராமருக்குக் கைங்கரியமே பிரதானம் என்பது அவர் கொள்கை. பரதனோ எந்தப் பிடிவாதமும் பிடிக்காமல் நாடோ, காடோ ஸ்ரீராமர் என்ன சொல்லுகிறாரோ அதுவே வேதவாக்காக ஏற்றுக்கொண்டு அவர் பாதுகையே தஞ்சம் என்று ஆட்சி புரிந்தான். (ஸ்ரீ வைஷ்ணவத்தில் சேஷத்துவம், பாரதந்திரியம் என்று சில டெக்னிக்கல் விஷயங்கள் இருக்கிறது. இதில் எது சிறந்தது என்ற கேள்விக்குள் எல்லாம் இங்கே செல்ல வேண்டாம்.)
வனவாசம் முடிந்து ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் அன்று இளையபெருமாளிடம் ”தர்ம ரஹஸ்யங்களை அறிந்தவனே நமது முன்னோர்களால் ஆளப்பட்டு வந்த இந்த ராஜ்யத்தை என்னுடன் நீயும் சேர்ந்து பரிபாலனம் செய், உன்னை யுவராஜாவாக நியமிக்கிறேன்” என்கிறார் ராமர். ஆனால் லக்ஷ்மணன் இளவரசர் பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் கைங்கரியம் தான் செய்வேன் என்றார். அதனால் பரதனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
ஸ்ரீ ராமாயணத்தில் ஒன்றைக் கவனிக்கலாம். லக்ஷ்மணனை ’இளையபெருமாள்’ என்றும் பரதனை ’பரதாழ்வான்’ என்றும் கொண்டாடுவார்கள்.
லக்ஷ்மணனுக்கு ‘ஆழ்வார்’ பட்டமும், அரசாட்சியும் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் தான் கிடைத்தது !
ஆண்டாள் ‘செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்’ என்கிறார். அலை கடலாலே சூழப்பட்ட இப்பூமண்டலமும், பரமபதமும் சிறிதும் குறையாதபடி நிர்வகிக்கும் எம் பெருமாள் (நம் பெருமாள்) செங்கோல் உடைய திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவரான பெரிய பெருமாள் என்கிறாள். அதனால் தான் ஸ்ரீராமரின் வடிவமான நம்பெருமாளை நாம் ரங்க’ராஜா’ என்கிறோம். நம்பெருமாள் எங்குப் புறப்பட்டாலும் செங்கோல் இல்லாமல் போகமாட்டார், நாச்சியார் திருக்கோலம் உட்பட! அதே போல் அவருடன் கூடவே வருவது அவருடைய குடை. ‘சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்’ என்று ஆதிஷேசனே குடையாக இருக்கிறான்.
இராமானுசமுநி காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து சேர்ந்து கோயிலுக்குள் எழுந்தருளிய போது, நம்பெருமாளான ரங்க’ராஜன்’ விஸ்வக்சேனரை அனுப்பி அழைத்து வரச் செய்து, நம்பெருமாள் சந்தனு மண்டபம்வரை எழுந்தருளி இளையாழ்வாரை வரவேற்று தன் கையிலிருந்த செங்கோலை உடையவரிடம் கொடுத்து 'உபய விபூதி ஐஸ்வரத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம்’ என்று ஆட்சி செய்யும் பொறுப்பை இளையாழ்வாரிடம் ஒப்படைத்து அவரை ’உடையவராக்கினார்’.
ஸ்ரீராமவதாரம் போது இளையபெருமாளுக்கு யுவராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்ய முடியாத குறையை ஆயிரம் வருடங்களுக்கு முன் இளையாழ்வாருக்கு நம்பெருமாள் ஆட்சி செய்யும் பொறுப்பை ஒப்படைத்து நிறைவேற்றினார் ! இது தான் நம்பெருமாளின் திட்டம்!
4.5.2025
படத்தில் : நம்பெருமாளுடன் நம்மிராமானுசனும்
’சித்திர’ திருவாதிரை - இளையாழ்வாரின் 1008 திருநட்சத்திரம்
படம் உதவி : கஸ்தூரி ரங்கன்
Comments
Post a Comment