Skip to main content

(2) தேவராஜனும், யதிராஜனும்

(2) தேவராஜனும், யதிராஜனும் 


இளையாழ்வாரின் 16-ஆவது வயதிலேயே தன் தந்தை பரமபதமடைய, அவர் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தன் தாயார் மனைவியுடன் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் தேவப்பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் அருகில் குடிபுகுந்தார். அக்காலத்தில் திருபுட்குழியில் பிரபலமான அத்வைதச் சன்னியான யாதவபிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார். 

இக்காலத்தில் இளையாழ்வார் திருக்கச்சி நம்பி என்ற பாகவதரின் நட்பு கிடைத்தது. நம்பி ஆளவந்தாரின் சிஷ்யர். அவர் பேரருளாளனிடம் பிரேமை கொண்டு ஆலவட்டக் கைங்கரியம் செய்துகொண்டு பெருமாளிடம் அந்தரங்கமாகத் தினமும் பேசிக்கொண்டு இருந்தார். இவரிடம் ஏற்பட்ட நட்பின் காரணமாக இளையாழ்வாருக்கும் தேவப் பெருமாளிடம் அன்பும் பக்தியும் வளர்ந்தது. 

இளையாழ்வார் யாதவ பிரகாசரிடம் வேதாந்தப் பாடம் கற்கும் போது வைணவக் கொள்கைக்கு ஏற்காமல் சில வாக்கியங்களால் பிணக்கு ஏற்பட்டு, யாதவப்பிரகாசர் இளையாழ்வாரை கங்கையில் மூழ்கடிக்கச் சூழ்ச்சி செய்ய, அதிலிருந்து இரவோடு இரவாகத் தப்பிக்க, தேவப் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் வேடுவனாகவும், வேடுவச்சியாகவும் வந்த காப்பாற்றினார்கள். தாயாராக வந்த வேடுவச்சி, தனக்குத் தாகமாக இருக்கிறது என்று கூற, இளையாவாரும் சாலைக் கிணற்றிலிருந்து நீர் எடுத்துச் செல்ல, அவர்களைக் காணவில்லை. தன்னைக் காத்தவர்கள் தேவப் பெருமாளும் தாயாரும் என்று உணர்ந்த இளையாழ்வார், அன்று முதல் சாலைக் கிணற்றிலிருந்து பெருமாள் திருவாராதனத்துக்காகச் சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு சென்று சம்ர்பிக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டார். 

ஸ்வாமி தேசிகன் தனது யதிராஜ ஸப்ததியில் - 

தத்தத் தேய தயா ஸுதா அம்ருத நித்யா பீத்வா விவஸ்வத் பய: காலே ந: கரிசைல க்ருஷ்ண ஜலத: காஞ்ச்யாதிநாதோ வர்ஷதி

சாலைக் கிணற்றிலிருந்து ராமானுஜர் தினமும் கொண்டு வந்து கொடுத்த தீத்ததை வாரிப்பருகிய பேரருளாளன், தான் பருகியதைவிட அதிகமாகவே கருணை மழை பொழிகிறான். அதனால் அவனுடைய  வற்றாத கருணைக்குக்  காரணமே ராமானுஜர் தினமும் அளித்த நீர் தான் என்கிறார். 

அமுதனார் ‘காரேய் கருணை இராமானுசா இக்கடலிடத்தில் 

ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை ? 

என்று இவருடைய கருணையைப் போற்றுகிறார். 

ஆளவந்தார் தமக்குப்பின் இந்த ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்ப்பவர் யார் என்று சிந்தனையில் இருக்க, இளையாழ்வாரின் அருமை பெருமைகளைக் கேள்விப்பட்டு, அவரைக் காணவேண்டும் என்று பெருமாள் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்று அங்கே கரியமாணிக்கப் பெருமாள் சந்நிதியில் ‘ஆம் முதல்வன் இவன்’ என்று அவரை குளிரக் காடாக்ஷித்து, தேவப் பெருமாளிடம் நம் தரிசனத்துக்கு இவரைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டார். இளையாழ்வார், ராமானுஜமுநியாக நமக்கு ஆசாரியனாகக் கிடைத்தற்குக் காரணம் ஆளவந்தார் தேவப் பெருமாளிடம் ராமானுஜரை வேண்டிச் செய்த பிரபத்தி தான். 

இதன் பிறகு பல நிகழ்வுகள் நடந்தேறியது. இளையாழ்வாருக்கு திருக்கச்சிநம்பிகளின் திருவடிகளில் ஆச்ரயித்து உய்ய வேணும் என்று ஆசை வந்தது. அதை நம்பிகளிடம் கூற நம்பி அதற்கு இசையவில்லை. இளையாழ்வார் குழம்பிய நிலையில், தனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களைத் தேவப் பெருமாளிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்று நம்பியிடம் கூற, பெருமாளும் பிரசித்தி பெற்ற ஆறு வார்த்தைகளை அருளிச் செய்தார். 

1. அஹமேவ பரம் தத்வம் - எல்லாத் தத்துவங்களுக்கும் காரணமான பரத்துவம் நானே.

 2. தர்சனம் பேத ஏவ - சித் ( அறிவுள்ள ஜீவாத்மா ), அசித் (அறிவற்ற ஜட பொருள்) என்னிடமிருந்து ( பரமாத்மா ) வேறுபட்டவை.

 3. உபாயம் ப்ரபத்தி - என்னைச் சரணடைவதே என்னை அடைய வழி. பிரபத்தியே உபாயம்.

 4. அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் - சரணாகதி செய்துவிட்டால், கடைசிக் காலத்தில் என்னை நினைக்காவிட்டாலும் பரவாயில்லை.

 5. தேஹாவஸானே முக்தி - தேகத்தினிடமிருந்து விடுதலையே மோட்சம்.

 6. பூர்ணாசார்ய பதாச்ரிதா - மஹாபுர்ணரான பெரிய நம்பியே உமக்கு ஆசாரியனாக ஏற்றுக்கொள்.

மேலே உள்ள ஆறு வார்த்தைகளை இப்படிப் படித்துப் பாருங்கள். சுலபமாகப் புரியும். 

சித் அசித், ஈஸ்வரன் என்ற வேற்றுமை உடைய தத்துவமே உண்மையான வேதத்தின் அர்த்தம். அந்த வேதத்தில் சொல்லியிருக்கும் பரமாத்மாவே எல்லாவற்றிற்கும் காரணமானவன். அவனே மெய்ப்பொருள். அந்தப் பரமாத்மாவை ஆசாரியன் மூலம் சரணாகதி செய்வதே மோட்சத்துக்கான ஒரே வழி. சரணாகதி செய்துவிட்டால் இந்த உடலை விட்டு ஆத்மா விடுதலை பெற்ற பின் மரணத்தருவாயில் அவனுடைய சிந்தனை செய்யாவிட்டாலும் மோட்சம் உத்தரவாதம். சரணாகதி செய்த ஆசாரியனையே அண்டி(கைங்கரியம்) இரு.

அதற்குப் பின் இளையாழ்வார், பெரியநம்பி தேவிகளுக்கிடையில் கிணற்றடியில் மனஸ்தாபம் ஏற்பட, பெரியநம்பிகள் இளையாழ்வாருக்கு தெரியாமல் திருவரங்கத்துக்குப் புறப்பட்டார். இதை அறிந்த இளையாழ்வார் மனம் நொந்து, துறவு மேற்கொள்ள விரும்பினார். தமக்குத் துறவு நல்க வைஷ்ணவச் சந்நியாசி யாரும் இல்லாமையால், தேவப் பெருமாளையே தன் ஆசாரியனாகக் கொண்டு, அவரிடமே திரிதண்டக் காஷாயத்தைப் பெற்றுத் தரித்து, ‘இராமானுசமுநி’ என்று அழைக்கப்பட்டார். 

இளையாழ்வார் அனந்தப் புஷ்கரணியில் நீராடி, வரதனின் வணங்கி “எல்லாம் துறந்தேன். இனி நீயே எனக்கு எல்லாம். எனக்குக் காஷாயத் திரிதண்டங்களை அளிக்க வேண்டும்” என்று விழுந்து வணங்கினார். 

தேவப் பெருமாளும் அவற்றை அளித்து “இளையாழ்வாரே இனி நீர் ராமானுஜமுநி” என்று கூறினார். 

தேவப் பெருமாளே இவருக்குத் துறவு நல்கியதால் இவர் யதிகளுக்கு எல்லாம் ராஜாவாக, யதிராஜனாக விளங்கினார். 

பிறகு இராமானுசமுநி திருவரங்கம் சென்றாலும், அவருடைய திருவாராதன எம்பெருமானாகத் தேவப் பெருமாள் அவருடன் கூடவே சென்றார். 

( இன்றும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் ஆராதித்த தேவப் பெருமாளை சேவிக்கலாம்). 

இளையாழ்வாருக்கு தேவப் பெருமாளால் இடப்பட்ட பெயர் ‘ராமானுசமுனி’. மேல்கோட்டையில் இருக்கும் ஓர் ஓலைச்சுவடியில் உடையவரின் கையெழுத்தைச் சேவிக்கலாம். அதில் ‘இராமானுசமுநி’ என்று தான் கையெழுத்திட்டிருக்கிறார்! 

-சுஜாதா தேசிகன் 2.5.2025 படத்தில் : காஞ்சிபுரம் தேவராஜனுடன் இராமானுசமுநி ’சித்திர’ திருவாதிரை - இளையாழ்வாரின் 1008 திருநட்சத்திரம்

Comments