Skip to main content

(3) அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல்

 (3) அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல்


இன்று நினைத்தால் காலை புறப்பட்டு திருமலைக்குச் சென்று பெருமாளைச் சேவித்துவிட்டு மாலை வீடு திரும்பிவிடலாம்.  ஸ்ரீராமானுஜர் தன் வாழ்ந்த 120 வருடங்களில் திருமலைக்கு மொத்தம் மூன்று முறை தான் சென்றிருக்கிறார்! 

ஸ்ரீராமானுஜரின்  திருமலை யாத்திரையால் தான் இன்று நாம் கோவிந்தா கோஷத்துடன் திருவேங்கடவனை க்யூவில் சேவிக்க முடிகிறது! 

உடையவரின் முதல் யாத்திரையிலிருந்து தொடங்கலாம். 

ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் உடையவர் திருவாய்மொழி காலட்சேபம் சாதித்துக்கொண்டு இருக்கிறார். “சிந்து பூமகிழும் திருவேங்கடம்” என்ற பாசுர வரிகளைப் படிக்கும் போது, அவர் கண்களில் நீர் வழிகிறது. சீடர்களுக்குப் புரியவில்லை. அதில் ஒருவர் “ஏன் கண்களில் கண்ணீர் ?” என்று கேட்க அதற்கு உடையவர் “வேங்கடத்து எழில்கொள் சோதி” என்று ஆழ்வார் பாடிய இந்தத் திவ்வியதேசத்தில் நித்தியப் புஷ்பக் கைங்கரியம் செய்ய இப்போது யாரும் இல்லையே! என்று வருத்தமாக இருக்கிறது.. உங்களில் யாரேனுமுண்டோ ?” என்று கேட்க அங்கே ஓர் அமைதி நிலவியது.

அனந்தாழ்வான் எழுந்து ”அடியேனுக்கு நியமித்தருள வேண்டும்" என்றார். இது கேட்டு உகந்த எம்பெருமானார் ”நீர் ஒருவரே ‘ஆண் பிள்ளை'” என்று அவரைக் கொண்டாடித் தழுவியருளி விடை கொடுத்தருளினர். அனந்தாழ்வான் இப்போதே கிளம்புகிறேன் என்று திருமலைக்குப் புறப்பட்டார். அங்கே ஓர் அழகிய நந்தவனம் அமைத்து அதற்கு ‘இராமானுசன்’ என்று பெயர் சூட்டினார். 

இந்த நந்தவனத்தின் அருமைப் பெருமைகளைக் கேள்வியுற்ற உடையவர், திருவரங்கம் பெரிய பெருமாளிடம் அனுமதி பெற்று திருமலைக்கு புறப்பட்டார். வழியில் சோளிங்கரில் அக்காரக்கனியை சேவித்துவிட்டுச் செல்கையில், ஓர் இடத்தில் இரண்டு வழி தென்பட, சரியான வழி எது என்று தெரியாமல் குழப்பம் அடைந்தார். அங்கே ஒருவன் ஏற்றம் போட்டு தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்க, அவனிடம் “திருமலைக்கு வழி எது?” என்று வினவினார். அந்த விவசாயி சரியான பாதையைக் காட்டினான். விரஜா நதியைக் கடந்து வைகுந்தம் செல்லும் வழியைக் காட்டும் அமானவன் என்ற தேவன் போல இவன் நமக்கு திருவேங்கடவன் இருப்பிடத்துக்கு வழிகாட்டினான் என்று அவனை வணங்கிவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். 

கீழ் திருப்பதிக்கு வந்தடைந்ததும், “ஆழ்வார்கள் அந்த மலையையே கோயிலாகக் கொண்டனர். இந்த மலையே ஆதிஷேசன். இங்கே முத்தர்களும், நித்துயர்களும் இந்த மலையில் உயிருள்ள, உயிரற்ற பொருள்களாகச் சூழ்ந்திருக்க, ஆழ்வார்களே திருமலையில் ஏறாதிருக்க, நாம் எப்படி ஏறுவது என்று தயங்கி, மலையடிவாரத்திலிருந்தே சேவித்துக்கொள்கிறேன்” என்றார். அனந்தாழ்வான் முதலியவர்கள் “நீங்களே ஏற மறுத்தால் நாங்களும் ஏற மாட்டோம், வருங்காலத்தில் மற்றவர்களும் ஏற மாட்டார்கள்” என்று கூற, திருவேங்கடமுடையான் கைங்கரியம் தடைப்படக் கூடாது என்று எண்ணி, ஒரு நாள் உபவாசம் இருந்து, தன் கால் படாமல், முட்டியால் தவழ்ந்தவாறே மலைமீது ஏறினார். அங்கே மலையப்பனை மங்களாசாசனம் செய்து, மூன்று நாள் உபவாசமாகவே இருந்தார். பிறகு அனந்தாழ்வான் ஏற்படுத்திய ‘ராமனுசன்’ என்ற நந்தவனத்தைப் பார்த்து உகந்து ”வளர்த்ததனால் பயன்பெற்றேன்” என்று அனந்தாழ்வானைக் கொண்டாடினார். 

அவர் தங்கியிருந்த சமயம், எம்பெருமான் முன்பே வேதாந்த சங்கிரகத்தை உபன்யாசம் செய்தர். பிறகு திருமலை அடிவாரத்தில் ஓராண்டு தங்கியிருந்து, தனது தாய்மாமாவான பெரிய திருமலை நம்பியிடம் ஸ்ரீமத் ராமாயணத்தின் விஷேச அர்த்தங்களைக் கேட்டு, கோவிந்த பெருமாள் என்ற என்பாரைப் பரிசாகப் பெற்றுத் திரும்பினார். 

இரண்டாவது யாத்திரையில் திருவேங்கடம் சைவ ஸ்தலம் என்ற சர்ச்சை வலுத்திருந்தது. உடையவர் அவர்களுடன் வாதிட்டார். ஆனால் சைவர்கள் அதற்கு உடன்படவில்லை. கடைசியாக, அங்கே இருந்த சைவர்களை ஒன்று கூட்டி, திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், சிவனின் ஆயுதங்களான திரிசூலம், உடுக்கை போன்றவற்றை சந்நிதியில் வைத்து இரவு கதவை மூடினார். மறுநாள் கதவைத் திறக்கும் போது ‘சுடராழி வெண் சங்கேந்தி’ பெருமாள் காட்சி கொடுக்க, சைவர்கள் மறுப்பேதும் தெரிவிக்காமல் உடையவரை வணங்கி விடைபெற்றனர். பிறகு திருமார்பில் அலர்மேல் மங்கையைப் பிரதிஷ்டை செய்தார்.  மலை அப்பனுக்கு சங்காழி கொடுத்ததால் அவர் ஆசாரியனாகவும் ( “அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல்” ), அலர்மேல் மங்கையைப் பிரதிஷ்டை செய்ததால் அவனுக்கு மாமனாராகவும் ( “வேங்கடேச ச்வசுராபிதனார்”) போற்றப்படுகிறார். 

தனது மூன்றாவது யாத்திரையில், குலோத்துங்க சோழன் திருச்சித்தரக்குடத்து கோயிலைக் குலைத்ததைக் கேள்விப்பட்டு உள்ளம் உறைந்தது. அந்த உற்சவப் பெருமாளை மறைவாக எழுந்தருளச் செய்து, அங்கே இருந்த ஸ்ரீபார்த்தசாரதி கோயிலைப் பெரிதாக்கி, சந்நிதி ஒன்றை அமைத்து கோவிந்தராஜனைப் பிரதிஷ்டை செய்வித்தார். கீழ் திருப்பதி. மேல் திருப்பதி என்ற பேதமில்லாமல் ஒரே திவ்ய தேசமாக அதைத் தோற்றுவித்து, நித்தியக் கைங்கரியங்கள் நடைபெற ஏற்பாடுகளைச் செய்து, தமது அர்ச்சைத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்ய அனந்தாழ்வானுக்கு அனுமதியும் அளித்தார். 

இன்று நாம் திருமலைக்கு யாத்திரை செய்யும் போது இவற்றை எல்லாம் நினைக்காமல்,  தள்ளுமுள்ளு ஏற்படாமல் தரிசனம் கிடைக்குமா ?  லட்டு எக்ஸ்டரா கிடைக்குமா ?  என்று பல விஷயங்கள் யோசித்தவாறே சென்று  கடைசியாகப் பெருமாளை சில நொடிகளே சேவிக்கிறோம். 

-சுஜாதா தேசிகன்

3.5.2025
படத்தில் : மலையப்பனுடன் சங்காழி அளித்த அண்ணல்
’சித்திர’ திருவாதிரை - இளையாழ்வாரின் 1008 திருநட்சத்திரம்
படம் உதவி : கஸ்தூரி ரங்கன்

Comments