Skip to main content

(1) தேரோட்டிய யதுபதியும், வழிகாட்டிய யதிபதியும்

 (1) தேரோட்டிய யதுபதியும், வழிகாட்டிய யதிபதியும்



ஸ்ரீராமானுஜருடைய தந்தை ஆசூரிகேசவ சோமயாஜி தம்பதிக்கு வெகு காலமாகப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒரு சமயம் அவர் திருவல்லிக்கேணிக்கு பெருமாளை சேவிக்க சென்றிருந்தார். அப்போது அங்கே ஸ்ரீ பார்த்தசாரதியை வணங்கி தனக்குப் பின் கைங்கரியத்துக்கு ஒரு புத்திரனை வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றைச் செய்தார். பெருமாள் அவர் கனவில் தோன்றி “நாமே உமக்குப் புத்திரனாகப் பிறக்கிறோம்” என்பதை பிள்ளைலோகம் ஜீயர் ராமானுஜரின் சரித்திரத்தில் எடுத்துரைக்கிறார். 

பத்ம புராணத்தில் “இன்னும் நீண்ட காலத்திற்குப் பின்பு பகவானே உலகத்தில் ஒரு திரிதண்டி சந்நியாசியாக அவதாரம் செய்து தர்மத்தை நிலைநிறுத்துவான். அந்தத் திரிதண்டி சந்நியாச அவதாரம் செய்பவர் பாதராயணாருடைய உபதேசங்களையும், கீதார்த்தங்களையும் உபதேசிக்கும் அந்தத் தெய்வப் புருஷர் வியாச சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதி உலகத்தைப் புரட்டு வாதங்களிலிருந்து மீட்டு உண்மைப் பாதைக்குத் திருப்புவார்” என்கிறது. 

இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானத்தில் “அனந்த : ப்ரதமம் ரூபம் லக்ஷ்மநச்ச ததா: பரம் பலபத்ரஸ் த்ருத்யஸ்து கலௌ கச்சித் பவிஷ்யதி ” என்ற பதம் காண்பிக்கப்பட்டுள்ளது.  இதன் பொருள் முதலில் ஆதிசேஷனாகவும், பின்னர் லக்ஷ்மணனாகவும், பிறகு பலராமனாகவும் அவதரித்த இவர் தான் இந்தக் கலியுகத்தில் ஸ்ரீ ராமானுஜராக அவதரித்தார் என்கிறது யாதவாச்சல மஹாத்மியம். ( இங்கே கச்சித் என்பது ஸ்ரீராமானுஜரை குறிக்கிறது என்பது நம் ஆசாரியர்களின் வாக்கு). 

இளையாழ்வார் பார்த்தசாரதியின் அவதாரமே என்பது நம் ஆசாரியர்களின் வாக்கு. இதை ஸ்வாமி தேசிகன் தன் யதிராஜ சப்ததியில் ஒரு ஸ்லோகம் மூலம் நிலைநாட்டுகிறார். சிலேடையாக, இரண்டு விதமான அர்த்தம் கொடுக்கும் அந்த ஸ்லோகம் இது (பயப்பட வேண்டாம். ஒவ்வொரு வரியாகத் தமிழிலேயே அர்த்தம் கொடுக்கிறேன். )

சமிதோதய சங்கராதி கர்வ :
ஸ்வபலாதுத்தருத யாதவப்ரகாச : I
அவரோபிதவாந் ச்ருதேரபார்த்தாந்
நநு ராமாவரஜ : ஸ ஏஷ பூய :  II 

சமிதோதய சங்கராதி கர்வ  

முதல் அர்த்தம் = பாணாசுர யுத்தத்தில் போது (சிவன், முருகன், அக்னி முதலானோர் வந்த போதும் ) அவர்களைக் கண்ணன் வென்றான்.

இரண்டாம் அர்த்தம் == அத்வைதிகளின் வாதப் பிரதிவாதங்களை முறியடித்தார் ஸ்ரீராமானுஜர். 

ஸ்வபலாதுத்தருத யாதவப்ரகாச : I

முதல் அர்த்தம் = யது குலத்தை தன் வலிமையால் பிரகாசப்படுத்தினார் கண்ணன் 

இரண்டாம் அர்த்தம் == தன் அறிவின் வலிமையால் சிறந்த பொருளைக் கூறி யாதவ பிரகாசரை நல்வழிப்படுத்தி தன்னிடத்தில் சேர்த்துக்கொண்டார். 

அவரோபிதவாந் ச்ருதேரபார்த்தாந்

முதல் அர்த்தம் = அ-பார்த்தர்களை அழித்தார் கண்ணன் 

இரண்டாம் அர்த்தம் == அப-அர்த்தங்களை அழித்தார் ஸ்ரீராமானுஜர் 

(அபார்த்தாந் - பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பார்த்தன் - அர்ஜுனன். அ-பார்த்தான் அர்ஜுனனுக்கு எதிரியாக இருக்கும் கௌரவர்களின் கர்வத்தை அழித்தார். 

அப - அர்த்தான் - அபஸ்வரம் என்பது போல அப-அர்த்தம் - தவறான அர்த்தம். அதாவது வேதத்துக்குத் தப்பான அர்த்தம் சொல்லுபவர்களை வென்றார் ஸ்ரீராமானுஜர். )

நநு ராமாவரஜ : ஸ ஏஷ பூய :

அதனால் அந்தப் பார்த்தசாரதி பெருமாளே ஸ்ரீராமானுஜராக அவதாரம் செய்திருக்கிறார் என்று ஸ்தாபிக்கிறார் ஸ்வாமி வேதாந்த தேசிகன்.

அன்று கீதாசாரியனான கண்ணன் செப்பிய கீதைக்கு, அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் கீதா பாஷ்யம் அருள ராமானுஜனாக அவதரித்தார் என்பதை

இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார் சொல்லுகிறார்.

ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில்? * மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் ** செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமாநுசனைப் பணியும் நல்லோர் *
சீரினில் சென்று பணிந்தது * என் ஆவியும் சிந்தையுமே 

திருக்கோட்டியூர் நம்பி உடையவரிடம், “அவரோ நீர் எம்பெருமானாரே!” ( மெய்மைப் பெருவார்த்தையான சரம ஸ்லோகத்தை அருளிச் செய்த கீதாசாரியன் தானோ நீர் !) என்று கொண்டாடி இந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார்.  இதனால் தான் இன்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் உற்சவ நடைமுறை பெருமாளுக்கு நடப்பது போல் நடக்கிறது.  

பார்த்தசாரதி கோயிலில் எழுந்தருளியிருக்கும் உடையவருக்கு, பார்த்தசாரதி பெருமாளுக்கு நடப்பது போலவே உற்சவ காலத்தில் பத்து நாட்களிலும்  காலை, மாலை இரண்டு வேளைகளிலும் புறப்பாடு மற்றும் கண்ணாடி அறை சேவையும் உண்டு.  இன்றும் ஸ்ரீபார்த்தசாரதி முன் இளையாழ்வார் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் போது “ஸ்ரீபார்த்ஸூத  - க்ருபா - லப்த - நிஜாவதார - வைபவா! எச்சரிகை” என்கிறார்கள். 

திருவல்லிக்கேணியில் ஆழ்வார்கள், ஆசாரியர்களின் திருநட்சத்திரம் அன்று பெருமாளுடன் அந்தந்த ஆழ்வார்களோ, ஆசாரியர்களோ திருவீதிப்புறப்பாடு கண்டருளுவார்கள். ஆனால் ஸ்ரீராமானுஜருக்கு மட்டும் அப்படி நடப்பதில்லை. ஸ்ரீராமானுஜரே பார்த்தசாரதியாக இருக்க, நமக்கு எதற்கு என்று நினைத்துவிட்டார் போலும்!


-சுஜாதா தேசிகன்
2.5.2025
படத்தில் : திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாளுடன் இளையாழ்வார்
’சித்திர’ திருவாதிரை - இளையாழ்வாரின் 1008 திருநட்சத்திரம்

Comments

  1. தேசிகன் தேசிகனை உகப்பதில் ஆச்சர்யம் எங்கே?

    ReplyDelete

Post a Comment