வாட் அன் ஐடியா சர்ஜி! பஹல்காம் தாக்குதலின் கொடூரம் விஷயம் - ஆண்களையும் பெண்களையும், இந்துக்களையும் முஸ்லிம்களையும், சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் பிரித்துப் பொறுக்கி திடீர் என்று அடித்தது தான். கூடவே “உங்க மோடியிடம் போய் சொல்லு” என்று செய்தி அனுப்பினார்கள். இறந்த கணவர் அடிப்பட்டுக் கிடக்க, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்த அந்தத் தேன்நிலவு ஜோடியின் படம் எல்லோரையும் உலுக்கியது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று பாரத மக்கள் எல்லோரும் மோதி மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். பீஹார் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் டிரம்ப் போன்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக ஆங்கிலத்தில் சூளுரைத்தார். நம் எல்லோர் மனதிலும் அடிப்பார் என்று தெரியும் ஆனால் எப்போது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உறுத்திக்கொண்டு இருந்தது. பொறுக்கி அடித்த அந்தப் பொறுக்கிகளுக்கு மோதி என்ன மாதிரி அதிர்ச்சி கொடுக்கப் போகிறார் என்பதை எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். முதலில் நதி நீர் கிடையாது என்றார். உடனே எல...