Skip to main content

மதி நலம்

 மதி நலம் 


சமீபத்தில் ‘மதி நலம்’ என்று ஆழ்வார்களே சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டிருந்தார். 

அதற்குப் பதில் சொல்லுவதற்கு முன் 

திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிற்கு எழுதிய அஞ்சலிக்  கட்டுரையில் இப் பகுதியைப் படித்துவிடுங்கள். 

“திருமாலின் திருவடியில் சேரப்போகும் நாள் சமீபித்துவிட்டது என்ற எண்ணம் வந்ததோ என்னவோ, ஆழ்வார் பாசுரங்களின் சிறப்பு பற்றி சமீபகாலமாக கல்கியில் எழுதிவந்தார். முதல் கட்டுரை வெளிவந்தபோது படித்துவிட்டு, 'குறிப்பிட்ட பாசுரத்தைப் பற்றி உங்கள் கண்ணோட்டத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இறுதிப் பகுதியில் அந்தப் பாசுரம் பற்றி முன்னோர்கள் தப்பாக வியாக்கியானம் செய்தார்கள் என்று ஏன் சொல்லியிருக்கிறீர்கள்? அவர்கள் பெரிய மகான்கள். அவர்களுடைய நோக்கில் எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் குறை சொல்லவேண்டும்?' என்று போனில் சொன்னேன். அதன்பின் அத்தகைய விமர்சனத்தை விட்டுவிட்டு, பாசுரத்தின் இலக்கியச் சிறப்பைப் பற்றி மட்டுமே எழுதினார். 'மெய்ப் பொருள் காண்பதே அறிவு' என்பதை உணர்ந்த பெருந்தகை அவர்.

இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால், ஆசாரியர்கள் ஆழ்வார்களின் பிரதிநிதி. தப்பு செய்ய மாட்டார்கள். தப்பாக தெரிந்தால் நமக்கு அது சரியாக புரியவில்லை என்று பொருள். 

ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கும்போது ஆழ்வார்கள் என்ன ‘கான்டெக்ஸ்ட்’ல் சொல்லியிருக்கிறார்கள் என்று படிப்பது மிக அவசியம். பெரியவாச்சான் பிள்ளை போன்ற உரையாசிரியர்களின் உதவியுடன் பாசுரங்கள் தொடர்பான ஐதீகங்களைப் படித்தால் ’மைக்ரோ ஃபைபர்’ கொண்டு  கண்ணாடியைத் துடைத்த மாதிரி பளிச்சென்று புரியும். தப்பான அர்த்தங்களை இடது கையால் ஒதுக்கிவிடலாம். தேவை இல்லாத கேள்விகள் சந்தேகங்களைத் தவிர்க்கலாம். 

சுஜாதா எழுதிய ’ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ ஆழ்வார்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு ’stepping stone’ என்று சொல்லலாம்.  இன்றும் பலர் அதை விரும்பி படிக்கிறார்கள். சுஜாதா எழுதியதை படித்துவிட்டு பெரியவாச்சன் பிள்ளை போன்றவர்களை நாடினால் தெளிவான அர்த்தம் கிடைத்து ‘அட’ என்று சொல்லத் தோன்றும். 

’ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ என்ற புத்தகத்தில் உதாரணத்துக்கு ஒரு பகுதியை இங்கே தருகிறேன். 

 ”அந்தணரான தொண்டரடிப் பொடியாழ்வார்,
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள்
அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன் ( 896 )

- என்று சொல்லும்போது தினம் குளிப்பதும் மூன்று முறை அக்கினி ஹோத்திரம் செய்வதும் போன்ற rituals முக்கியமில்லை என்பதை வலியுறுத்துகிறார்.

முதலாழ்வாரான பொய்கையாழ்வார்,


புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும்
அந்தியால் - ஆம்பயன் அங்கென்? ( 2114 )

- என்று பாடும்போது பகவானை மனத்தால் நினைக்காமல் வேறு மந்திரங்களை உருப்போட்டுச் செய்யும் சந்தியாவந்தனத்தால் பயனே இல்லை என்று கூறுகிறார். ஆரம்பத்திலிருந்தே சடங்குகள் முக்கியமில்லை என்கிறது வைணவம்.”

இப்போது மேலே உள்ளப் பகுதியைப் படிக்கும்போது ’அட ஆழ்வாரே சொல்லிவிட்டார்’ பாருங்கள் ஆசாரியன் தினமும் சந்தியாவந்தனம் முதலியவற்றை செய்ய வேண்டும் என்று சொல்லுவதை ஏன் கேட்க வேண்டும் என்று நமக்குத் தோன்றும்.

பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனம் முதலியவற்றைச் செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய தர்மம். 

முதல் திருவந்தாதி படிக்கும்போது, அதில் உள்ள நூறு பாசுரங்களையும், முடிந்தால் இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்று எல்லாவற்றையும் ஒரு முறை நிதானமாகப் படித்தால் நமக்கு வேறு விதமான அர்த்தம் கிடைக்கும்.

சுஜாதா மேற்கோள் செய்த அந்த இரண்டு வரி பாசுரத்தின் முழு வடிவத்தை முதலில் படிக்கலாம். 

குளித்து மூன்று அனலை ஓம்பும்* குறிகொள் அந்தணமை தன்னை*
ஒளித்திட்டேன், என்கண் இல்லை;* நின்கணும் பத்தன் அல்லேன்**
களிப்பது என் கொண்டு? நம்பீ!* கடல்வண்ணா! கதறுகின்றேன்*
அளித்து எனக்கு அருள் செய், கண்டாய்,* அரங்க மா நகருளானே!

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அந்தணர். அவர் சொல்லுகிறார் ”குளித்து மூன்று முறை அக்கினி ஹோத்திரம் போன்ற எந்தக் கடமையும்  செய்யவில்லை. உன்னிடம் பக்தியும் இல்லை, என் விஷயத்தில் இந்தக் குறைகளை எல்லாம் பார்க்காமல் நீ எனக்குக் கிருபை செய்ய வேண்டும்” என்கிறார்.

இப்போது நமக்குக் கிடைக்கும் பொருள் வேறு அல்லவா ?

ஆழ்வார் முக்கியமில்லை என்று சொல்லவில்லை, ஆனால் என்னால் செய்யமுடியவில்லை அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அருள் செய்ய வேண்டும் என வேண்டுகிறார். ஆழ்வார்கள் என்றுமே தர்மத்துக்குப் புறம்பாக கூற மாட்டார்கள். அதையே தான் ஆசாரியர்கள் கிளிப் பிள்ளை போல நமக்குச் சொல்லுவார்கள். 

அடுத்து பொய்கையாழ்வார் பாசுரத்தையும் முழுமையாகப் பார்க்கலாம்.

நகரம் அருள்புரிந்து நான்முகற்கு பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியால் ஆம் பயன் அங்கு என் ( 2114 )

பிரம்மாவிற்கு வேதத்தைத் தந்த பெருமாளின் பெயர்களை மனத்தால் நினைக்காமல், வேறு மந்திரத்தை ஓதி என்ன பயன் ? என்கிறார் ஆழ்வார்.

மனத்தால் அவனை நினைத்தால் நல்லது ஆனால் எவ்வளவு பேருக்கு அப்படி அவனைத் தியானம் செய்ய முடிகிறது ? இதனால்  பக்தன் என்று வேஷம் போடுபவர்களுக்கு அவன் அருள் புரிய மாட்டான் என்ற பொருள் கிடைக்கிறது.

மேல் சொன்ன  ( 2114) பாசுரத்துக்கு ஏழு பாசுரங்கள் கடந்து வந்தால் இந்தப் பாசுரம் வருகிறது.

குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என் நெஞ்சே என்றும்
புறன் உரையே ஆயினும் பொன் ஆழி கையான்
திறன் உரையே சிந்தித்திரு ( 2122 )

மலையைப் போலக் குற்றங்கள் செய்தாலும் பெருமாள் அவற்றைப் பார்க்காமல், நாம் மனத்தால் சொல்லாமல், பொய்யாக ’lip service'ல் அவன்  திருநாமங்களைச் சொன்னாலும்  அவன் நமக்கு அருள் புரிகிறான்.

இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை ஓர் ஐதீகம் சொல்லுகிறார்.

’வைக்கோல் கன்று’ உபயோகித்து பால் கறக்கும்போது, கன்று என்று நம்பி தாய்ப் பசுப் பால் கொடுப்பது போல  நாம் வேஷம் போட்டாலும் பெருமாள் அருள் புரிவார் என்கிறார். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்றாகப் பக்தியாக இருந்தாலும், பெருமாளின் குணத்தில் எந்த மாற்றமும் இல்லை ! ஸ்ரீராமர் இராவணனே வந்தாலும் அவனுக்கு அடைக்கலாம் தருவேன் என்கிறார்.

சுஜாதாவின் கடைசிக் காலத்தில் ஒரு நாள் என்னிடம் ”நாலாயிரத்துக்கும் காலக்ஷேபம், உபன்யாசம் போன்றவை கிடைக்குமா ?  அதைக் கேட்க வேண்டும்” என்ற அவருடைய விருப்பத்தை என்னிடம் கூறினார். தற்போது உள்ளது போல் ’பென் டிரைவ்’  வஸ்துக்கள் மற்றும் காக்ஷ்சேபம் போன்றவை இணையத்தில் கிடையாது. அதனால் அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. 

சுஜாதாவின் தம்பி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமியின் காலக்ஷேபத்துக்கு செல்வார். சுஜாதா பிரபந்தம், ஸ்ரீபாஷ்யம் குறித்து பல சந்தேகங்களை அவர் தம்பியிடம் கேட்டு தெரிந்துக்கொள்வார் ( இதை சுஜாதாவே என்னிடம் பல முறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார்). இதை எதற்கு இங்கே சொல்லுகிறேன் என்றால் சுஜாதாவும் கடைசியில் பூர்வாசாரியர்களை நாடினார் என்று சொல்லுவதற்கு தான். 

இப்போது ‘மதி நலம்’ என்றால் என்ன என்று பார்க்கலாம். 

எல்லோருக்கும் தெரிந்த பாசுரம் இது 

உயர்வு அற உயர் நலம்* உடையவன் எவன்? அவன்*
மயர்வு அற மதி-நலம்* அருளினன் எவன்? அவன்**
அயர்வு அறும் அமரர்கள்* அதிபதி எவன்? அவன்*
துயர் அறு சுடர்-அடி* தொழுது எழு என் மனனே! 

இதில் நம்மாழ்வார் எனக்கு மதி நலம் அருளினான் என்று கூறுகிறார். மதி என்றால் அறிவு, நலம் என்றால் நல்ல, நல்ல அறிவை எனக்குக் கொடுத்தான் என்று படிக்கும் போது அப்படியென்றால் ஆழ்வாருக்கு அதற்கு முன் இல்லையா ? என்று கேள்வி வரும். இதற்குத் தான் பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் நமக்கு தேவைப் படுகிறார்கள்.

மதி என்றால் ஞானம், நலம் என்றால் பக்தி. பக்தியுடன் கூடிய ஞானத்தை எனக்கு வழங்கினான் என்கிறார் ஆழ்வார். பக்தி இல்லாத ஞானம் எதற்கும் உதவாது. 

மேலே உள்ளப் பாசுரத்தைப் படிக்கும் போது ’எவன் ? அவன் ’ என்று நம்மாழ்வாரும் நம்மைப் போலக் கேள்விகளாக கேட்கிறார் என்று தோன்றும்.  ஆனால் இந்தப் பாசுரத்திலேயே பதில் இருக்கிறது.!  இந்தப் பாசுரத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று பார்க்கலாம். 

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவனோ,
அவனே மயர்வு அற மதி-நலம் அருளினன் எவனோ
அவனே அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவனோ
அவனையே துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே.!

ஏன் நம்மாழ்வார் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு அதே பாசுரத்தை இப்படிப் படிக்க வேண்டும்.

உயர்வு அற உயர் நலம் உடையவனான அவனே,
அயர்வு அறும் அமரர்களுக்கு அதிபதியான அவனே நம்மாழ்வாருக்கு
மயர்வு அற மதி நலம் அருளினான் ஆகையால் நம்மாழ்வார் கூறும்
அறிவுரைகளின் படி அவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது எழ வேண்டும். 

நம்மாழ்வார் சொன்னதையே தான் நம் ஆசாரியர்களும் கூறுகிறார்கள். அதைக் கேள்வி கேட்காமல் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். 

- சுஜாதா தேசிகன்
25.08.2022

Comments

  1. எத்தனை தடவை எத்தனை வியாக்யானங்கள் வந்தாலும் முதல் பத்தில் முதல் பாசுரம் ஒன்றை புரிந்து கொள்ள மீதி 999 உம் தேவை படுகிறது என்ற ரீதியில் படிக்க வைக்கும் நம் அழ்வார்

    ReplyDelete

Post a Comment