கீரையைக் கைகூப்பி வணங்கினாளே !
ஸ்ரீ ஆளவந்தார் வாழி திருநாமத்தில் ”பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே” என்ற ஒரு வரி வருகிறது. ’பச்சை இட்ட’ என்ற சொல் இன்றும் கிராமங்களில் கீரையைக் குறிக்கிறது. வாழி திருநாமத்தில் ’பச்சை இட்ட’ என்பது ’தூதுவளை’ கீரையைக் குறிக்கிறது.
மணக்கால் நம்பி லால்குடி அருகில் அவதரித்தார். இன்றும் அந்த ஊர் மணக்கால் நம்பி பெயரைக் கொண்டே விளங்குகிறது. அதற்கு முன் அவ்வூருக்கு என்ன பெயர் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல் தான் தூதுவளைக் கீரையும்.
தூதுவளை கீரை ( இதன் தாவரப் பெயர் Solanum trilobatum என்பதாகும். செடி முழுக்க ஏன் இலையில் கூட முட்கள் இருக்கும்). சில வருடங்கள் முன் சென்னையில் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்க தொடங்கினேன்.
“மைலாப்பூர் போங்க சார் அங்கே தான் எல்லாம் கிடைக்கும்”
“சைதாப்பேட்டையிலே டிரை பண்ணுங்களேன்?”
“பெஸ்ட் திருவல்லிக்கேணி கங்கனா மண்டபம் தான் சார்”
கடைசியில் தி.நகர் மார்கெட்டில் ஒரு பாட்டியிடம் கேட்க
“முள்ளு அதிகம்.. இப்ப எல்லாம் பறிப்பதற்கு ஆள் இல்லை...கஷ்டம், நாளைக்கு வாங்க”
மறுநாள் ஒரு பை நிறையத் தூதுவளை கீரையைத் தருவித்துத் தந்தார். யாருக்காவது சளி, இருமலா ?” என்ற பாட்டியிடம் "இது ஆளவந்தாருக்கு” என்றேன்.
ஆளவந்தாருக்கும் தூதுவளைக்கு என்ன சம்பந்தம் ?
அதைப் பார்க்கும் முன் அவர் சரித்திரத்தின் ஒரு பகுதியைத் சுருக்கமாக தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆளவந்தார் 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகளின் பேரன். ( நாதமுனிகளின் குமாரர் ஈஸ்வர முனியின் பிள்ளை ).
நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரும், ஆண்டாள் திருப்பாவையில் கூறிய ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.
யமுனைத் துறைவரின் தந்தை ஆசாரியரின் திருவடி அடைந்த பின், மஹாபாஷ்யபட்டர் என்பவரிடம் சாஸ்திரப் பாடம் கற்றுக்கொண்டு வந்த காலத்தில், சோழ மன்னனின் ஆஸ்தான வித்துவானாக இருந்த ஆக்கியாழ்வான் என்னும் ராஜகுரு அந்நாட்டில் உள்ள வித்துவான்களை வென்று அவர்களிடம் கப்பம் வாங்கி வந்தார்.
ஒரு நாள் யமுனைத் துறைவருடைய ஆசிரியரான மஹாபாஷ்யபட்டருக்கு கப்பம் கேட்டு ஓலை அனுப்ப, பட்டர் திகைத்து நின்றார். அந்தச் சமயத்தில் யமுனைத்துறைவர் அந்த ஓலையைக் கிழித்து எறிந்தார்.
இதை கேள்விப்பட்ட அரசன் ’இவர் சாமான்யரல்லர்’ என்று அறிந்து இவர் வருவதற்குப் பல்லக்கை அனுப்பி உரிய மரியாதைகளுடன் அரசபைக்கு வரவழைத்தான்.
அரச சபையில் பல பண்டிதர்கள் முன்னிலையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவருக்கும் வாதப் போர் தொடங்கிய சமயம் அரசனும் அரசியும் தங்களுக்குள் சபதம் செய்துக்கொண்டார்கள். மன்னன் யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார், அப்படி அவர் ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்கு தந்துவிடுவதாக சொன்னார். அரசியோ "யமுனைத்துறைவர் வென்றுவிடுவார், அப்படித் தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்குப் பணிப்பெண்ணாவேன்” என்றாள்.
வாதத்தில் யமுனைத் துறைவர் ஆக்கியாழ்வானைத் தோற்கடிக்க அரசன் பாதி ராஜ்ஜியத்தை யமுனைத்துறைவருக்கு வழங்கினான்.
ராணி மகிழ்ச்சி அடைந்து “என்னை ஆள வந்தீரோ” என்று எடுத்து அணைத்துக் கொண்டாள். அன்று முதல் யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்ற திருநாமம் உண்டாயிற்று.
ஆளவந்தார் தனக்குத் தரப்பட்ட ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், இந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிந்த மணக்கால் நம்பி மகிழ்ச்சி அடைந்து தன் ஆசார்யரின் கட்டளையை நிறைவேற்றத் தக்க சமயம் என்று எண்ணி ஆளவந்தாரைக் காண வந்தார், ஆனால் அவரால் அரண்மனைக் காவலைத் தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை.
அரண்மனை சமையலறையில் பணிபுரிபவர்களின் வாயிலாக, ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்பார் என்ற விஷயத்தை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.
பல மாதங்கள் கடந்த பிறகும் ஆளவந்தார் இவரைப் பற்றி விசாரிக்காமல் போக, திடீர் என்று நான்கு நாட்கள் கீரை கொடுப்பதை மணக்கால் நம்பி நிறுத்திவிட, ஆளவந்தார் “நான்கு நாட்களாக ஏன் தூதுவளை கீரை இல்லை?” என்று சமையல் பணியாட்களை விசாரிக்க “ஒரு வயதான பிராமணர் பல மாதங்களாக கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்தார், நான்கு நாட்களாக அவர் வரவில்லை” என்று கூறினார்கள். ’அவர் மறுபடி வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று ஆளவந்தார் பணித்தார்.
மறுநாள் நம்பி கீரையைக் கொண்டு போய் கொடுக்க சமையற்காரர் ஆளவந்தாரிடம் அவரை அழைத்துக்கொண்டு சென்றார்.
ஆளவந்தார் நம்பியைப் பார்த்து உங்களுக்கு என்ன நிதி வேண்டும்? என்று கேட்க நம்பி எனக்கு ஒன்றும் வேண்டாம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதைத் தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
தினமும் நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின் உட்பொருளில் திளைத்த ஆளவந்தார் “அவனை அடைவதற்கு உபாயம் எது?” என்று கேட்க நம்பியும் சரம ஸ்லோகத்தை உபதேசித்து, “அவனை அடைவதற்கு அவனே உபாயம்” என்று ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதைப் புரியவைத்தார்.
பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே” என்றார்.
”நீண்ட அப்பெரியவாய கண்களை”க் கொண்டு பெரியபெருமாள் ஆளவந்தாரை ஆட்கொண்டார். அதன் பிறகு ஆளவந்தார் எல்லாவற்றையும் துறந்து துறவு மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தையே உறைவிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்து வந்தார். ஆளவந்தாரிடம் தூது சென்ற கீரை அதனால் அதற்கு தூதுவளைக் கீரை என்று பெயர் ஏற்பட்டது.
இன்றும் ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் திருநட்சத்திரம் அன்று ஆளவந்தாருக்குத் தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
சென்ற ஆண்டு ( 2021 ) ஆளவந்தார் திருநட்சத்திரம் அன்று தூதுவளைக் கீரை நினைவு வந்தது “தூதுவளைக் கீரை பால்கனி தொட்டியில் வளர்த்திருந்தால் ஆளவந்தாருக்கு இன்று சமர்பித்திருக்கலாம்” என்று மனைவியிடம் கூறினேன்.
அடுத்த ஆளவந்தார் திருநட்சத்திரத்துக்குள் விதைகள் அல்லது செடியைத் தேட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
அடுத்த வாரம் அந்த அதிசயம் நடந்தது. ஒரு துளசி தொட்டியில் தொட்டியில் சின்னதாக ஒரு செடி வளர்ந்தது. சில நாட்களில் அது தூதுவளை என்று தன்னை சொல்லிக்கொண்டது. ஆச்சரியமாக ”சென்ற வாரம் தான் சொன்னேன் அதுவாக வளர்ந்துவிட்டது!” என்று மகிழ்ந்தேன்.
நன்கு வளர்த்து வரும் சமயம் ஏதோ ஊருக்கு ஒரு வாரம் சென்று திரும்பிய போது தூதுவளை செடி தண்ணீர் இல்லாமல் வாடிக் கருகி போய்விட்டது. என்னை நானே நொந்துக்கொண்டு வருத்ததுடன் ஆளவந்தாரை நினைத்துக்கொண்டேன்.
அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அதே தொட்டியிலிருந்து இன்னொரு புதுத் தூதுவளை செடி எட்டிப் பார்த்தது. ஒருவருடமாக அதைப் பாதுகாத்து, இன்று கொஞ்சம் பெரிய செடியாக வளர்ந்து, இன்றைய ஸ்ரீ ஆளவந்தார் திருநட்சத்திரத்துக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கிறது.
மடக்கிளியை கைகூப்பி வணங்கினாளே என்பது கிளிக்கு மட்டும் இல்லை கீரைக்கும் பொருந்தும்.
- சுஜாதா தேசிகன்
10.08.2022
ஆளவந்தார் திருநட்சத்திரம்
படங்கள் : பால்கனியில் வளர்ந்த தூதுவளை
ஆளவந்தார் அவதார ஸ்தலம் கோட்டோவியம் : ஸ்ரீ பாலஜி ரவி, நன்றி
அற்புதம் அற்புதம்
ReplyDeleteரொம்ப அருமை Acharyan ஸ்ரீ ஆள வந்தார் charithiram தூதுவளை கீரையுடன்🙏🙏
ReplyDelete