Skip to main content

தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !

தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !



கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில் இருந்தது!) பிறகு அது நூலாக வந்தது. பல வருஷங்கள் மறுபதிப்பு இல்லை. ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா அவர்கள், இதைப் பற்றி வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்களிடம் மெரினாவில் நடையின்போது சொல்ல, அவர் உடனே டி.கே.சியின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, அந்த நூலின் மூன்று பாகங்களையும் தேடிப் பிடித்து வெளியிட்டார். இந்த விஷயத்தை என்னிடம் கூறிய சுஜாதா “புத்தகம் வரும். ஒரு பிரதி வாங்கிவிடுங்கள் பொக்கிஷம்” என்றார். புத்தகம் வந்தபோது பதிப்பகத்துக்குச் சென்று வாங்கியது இன்றும் நினைவு இருக்கிறது.

அந்தச் சமயம் சுஜாதா என்னிடம் ‘டி.கே.சியின் கடிதங்கள்’ புத்தகம் படித்திருக்கிறார்களா ? என்று கேட்டார். உங்கள் மூலம் தான் டி.கே.சியே எனக்குத் தெரியும் என்றேன்.அப்போது அவரிடம் இருந்த ‘டி.கே.சி. கடிதங்கள்’ என்ற புத்தகத்தை எனக்கு அன்புடன் கொடுத்து “படித்துப் பாருங்கள். திரும்பத் தரவேண்டாம்” என்றார்.

டி.கே.சி. கடிதம் ஒன்றில் இப்படி எழுதியிருக்கிறார் :

“உங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன். நீங்கள் ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தமிழர்களையும் சொல்ல வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எதைச் சொல்லவேண்டும்? ‘டி.கே.சி. என்று ஒருவன் இருந்தான். அவன் சொல்வான், உலகத்திலேயே தமிழைப் போன்ற உயர்ந்த மொழி வேறு ஒன்றும் இல்லை, உலகத்திலேயே கம்பனைப் போன்ற உயர்ந்த கவிஞன் வேறு ஒருவரும் இல்லை, என்று சொல்லுவான். இதைத் தமிழர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். 500 ஆண்டுகள் அல்லது 1000 ஆண்டுகள் கழித்தாவது உலகமெல்லாம் இதை ஒப்புக்கொள்ளும்”

டி.கே.சி கம்பர் மீது வைத்திருந்த பிரேமை இது.

கம்பனை விட்டுவிட்டால் தமிழ் இலக்கியம் முழுமை பெறாது. பட்டிமன்றத்துக்கு அப்பால் எட்டிப் பார்க்காத கம்பன் கம்பராமாயணத்தில் எழுதிய பாடல்கள் மொத்தம் பத்தாயிரத்துக்கு மேல். இவற்றை எல்லாம் ஓலைச்சுவடிகளிலிருந்து பிரதி எடுத்து, சரி பார்த்து அச்சிட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. தமிழும் அதன் இலக்கணமும் நன்கு தெரிந்து, பாட பேதங்களை ஒப்பு நோக்கி… நிறைய வேலைகள் இருக்கிறது. உதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த திருப்பாவை முதல் பாடலின் முதல் சில வரிகள் உள்ள ஓலைச்சுவடியின் படத்தைப் பாருங்கள்(பார்க்க படம்). தெரிந்த பாடல் ஆனால் படிக்க எவ்வளவு கஷ்டம் என்று நீங்களே படித்துப் பாருங்கள்!




‘ஓலைச்சுவடி’ என்றவுடன் நமக்குப் பனைமரம் நினைவுக்கு வராமல், உ.வே.சாமிநாதையர் தான் நினைவுக்கு வருவார். அவர் தொண்டு அத்தகையது. அவர் தன் வாழ்நாளில் தன் ஆசிரியரிடம் முறையாக முழுக் கம்பராமாயணத்துக்கும் பாடம் கேட்டவர். பாடம் கேட்கும் பொழுது பல அருமையான செய்திகள், குறிப்புகளும் நோட்ஸ் எடுத்து வைத்துக்கொண்டார். இவற்றை எல்லாம் உரையாக வெளியிட வேண்டும் என்று விரும்பினார். இதற்காகப் பல காலம் கம்பராமாயண ஏட்டுச் சுவடிகள் பலவற்றை ஆராய்ந்து குறிப்பெடுத்து தேவையான முன்னேற்பாடுகள் செய்துவைத்திருந்தார். துரதிருஷ்டவசமாக, அவர் காலத்தில் புத்தகம் வெளிவரவில்லை.


1942ல் ஐயர் அவர்கள் காலமான பின், அவருடைய மகன் திரு கல்யாண சுந்தர ஐயர் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார். 1949ல் பால காண்டத்தில் ஆரம்பித்து, சுமார் பத்து ஆண்டுகளில் படிப்படியாக எல்லாக் காண்டங்களையும் கொண்டு வந்தார். மொத்தம் 10,000க்கு மேற்பட்ட பக்கங்களுடன் பத்துத் தொகுதிகளாக வெளிவந்தது. கடைசியாக 1967ல் வந்த பதிப்புக்குப் பிறகு மறுபதிப்பு இல்லை.

அரை நூற்றாண்டுக்குப் பிறகு இதை உ.வே.சாமிநாத ஐயர் நூல் நிலையமும் மாறன் பதிப்பகமும் இணைந்து மீண்டும் ‘re-produce’ செய்யப் போகிறார்கள்.



சீதைக்கு ராமரிடம் இருந்த பிரேமை போல, கம்பரிடமும், கம்பராமாயணத்தின் மீதும் அதீதப் பிரேமை கொண்டுள்ள மாறன் பதிப்பகத்தின் எஸ். பார்த்தசாரதியிடம் பேசினேன்.

“ஒழுங்கான அனுமதி பெற்று, இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியால், பழைய பிரதிகளை ஸ்கேன் செய்து, செப்பனிட்டு, மீண்டும் கொண்டுவரப் போகிறோம். வேலைகள் ஆரம்பித்துவிட்டோம். மொத்தத் தொகுதிகளும் ஜனவரி புத்தகக் கண்காட்சிக்கு வரும். மொத்தம் 500 பிரதிகள் தான் அச்சடிக்கப் போகிறோம்!” என்றார்.

“பத்தாயிரம் பாடல்கள், பத்தாயிரம் பக்கங்கள் விலை அதிகமாக இருக்குமோ?” என்றேன்.

“மொத்தம் ரூ.5000/= ஆகிறது. கூடுதல் பிரதிகள் வாங்கினால் கழிவு போன்ற திட்டங்கள் வைத்திருக்கிறோம்”

“கம்பரின் தமிழ், தமிழ் தாத்தாவின் உரையுடன் ஒரு பாடலுக்கு 50 பைசா  ஆகிறது! எனக்கு ஒரு செட் பார்சல்” என்றேன்.

வாங்குவது நன்கொடை. வாங்கிய பிறகு நமக்குக் கொடை.

- சுஜாதா தேசிகன், 
நன்றி கல்கி கடைசிப் பக்கம், October 8, 2021

Comments