Skip to main content

கண்டேன் தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !

கண்டேன் தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !

‘தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !’ மீண்டும் பதிப்பிக்கப் போகிறார்கள்

என்று தெரிந்து அதை ஆர்டர் செய்து, யாம் பெற்ற இன்பம் பெருக.. என்று

கல்கி கடைசிப் பக்கத்தில் எழுதியது நினைவு இருக்கலாம்.

( இல்லாதவர்கள் இங்கே படிக்கலாம்


என் அப்பாவுடன் அந்தக் கால அச்சகத்துக்குச் சென்றிருக்கிறேன்.

அழுக்கு முண்டா பனியனுடன் , வேட்டியா லுங்கியா என்று அடையாளம் தெரியாத  வஸ்துவை உடுத்திக்கொண்டு  60 வாட் விளக்கு வெளிச்சத்தில், சோடா புட்டி கண்ணாடியுடன்,  கையெல்லாம் மைக் கறையுடன் ஒவ்வொரு எழுத்தாக அச்சுக்கோப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி கஷ்டமான வேலைக்குப் போக கூடாது என்று நினைத்ததுண்டு. 

இந்தக் காலத்தில் ஏசி அறையில் கணினியின் உதவியுடன் DTP போன்றவை வளந்தாலும், அந்தக் கால அச்சுப்புத்தகங்கள் குறிப்பாக உரைகள் போல இந்தக் காலத்தில் டைப் செட் செய்ய ஆட்கள் இல்லை. இன்று ஒரு வித டெம்பிளேட் வைத்துக்கொண்டு கட் & பேஸ்ட் செய்துகொண்டு இருக்கிறார்கள். அப்படியே மீண்டும் டைப் செட் செய்தாலும் பிழைகள், அலைன்மெண்ட் என்று அனுமார் வால் போல வேலை நீண்டு கொண்டு போகும். 

60 ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சா கம்பராமாயணத்துக்குச் செய்த பதவுரை, விளக்கவுரையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றால் ஸ்ரீராமரின் அருளும், பிரயத்தனமும், கம்பன் மீது காதலும் இருந்தால் மட்டுமே முடியும். 

மாறன் பதிப்பகத்தாரும், உ.வே.சா நூல் நிலையமும் பழைய புத்தகத்தை ஸ்கேன் செய்து அதைச் செப்பனிட்டு ( ‘ப’ க்கு மேல் ஓர் அழுக்கு ஒட்டிக்கொண்டு இருந்தால் அது ‘ப்’ ஆகிவிடும்! ) அச்சுப் பிசகாமல் கிட்டத்தட்ட 11,000 பக்கங்களை மீட்டெடுத்து, மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். புத்தகத்தைப் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. படிக்க அவசியம் இல்லை, கையில் வைத்துக்கொண்டாலே போதும் என்று தோன்றுகிறது. 

இதன் வெளியீட்டு விழா இந்த மாதம் 6ஆம் தேதி ஸ்ரீ வானமாமலை மடம் திருவல்லிக்கேணியில் கோலாகலமாக நடந்தது. 

சென்ற வாரம் சென்னை சென்ற போது அட்டகாசமான பேக்கிங்கில் சுடச் சுட யாம் பெறும் சன்மானமாக அமைந்தது. அதை பெருமாள் முன் அடுக்கி வைத்து மேலே ராமரை அமர்த்திய போது ‘நீங்க ரிடையர் ஆனால் உங்களுக்குக் கவலை இல்லை!” என்று கிச்சனிலிருந்து அசரீரி ஒலித்தது. 

இதைப் படித்து முடிக்க இந்த ஆயுள் போதாது. 

இன்று அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த போது ஒவ்வொரு பாகத்தின் அட்டைப்படத்துக்கு விளக்கம், முதல் பாகத்தில் ஸ்ரீ உவே. ச. வாசுதேவன் ஸ்வாமி எழுதியுள்ள ஆய்வுரை பிரமிக்க வைக்கிறது. இதற்கு அவர்கள் செய்த பிரயத்தனம் தெரிகிறது. 

இப் பொக்கிஷத்தைக் கொண்டு வந்த ஸ்ரீராமர் உட்பட எல்லோருக்கும் பல்லாண்டு! 

புத்தகம் குறித்து தகவல்களைப் பெற ‘வாட்ஸ்ஆப்பில்’ இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் : 9980794542 / 9844124542

- சுஜாதா தேசிகன் 25.08.2022Comments

  1. Thank you for the information! One of my goals is to learn Kamba Ramayanam properly. This may be a great tool! Who better than Tamizh thatha to learn from?

    ReplyDelete

Post a Comment