Skip to main content

மாலைக் கதை(5) - திருமலையிலிருந்து மேல்கோட்டை வந்த மாலை

 மாலைக் கதை(5) - திருமலையிலிருந்து மேல்கோட்டை வந்த மாலை ( நிறைவு )



இந்தக் கதை திரைப்படம் போல இரண்டு பகுதிகள் கொண்டது.

பகுதி 1
இடம்: ஜூலை 7, திருமலை

அன்று திருப்பதியில் இருந்தேன். இந்த முறை திருமலையில் ஸ்ரீராமானுஜர் சந்நிதியை பொறுமையாக சேவித்துவிட்டு வர வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தேன்.
ஸ்ரீராமானுஜரின் திருமேனி மூன்று பிரசித்தம், ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், மேல்கோட்டை. திருமலையில் இருக்கும் திருமேனிக்கும் ஏற்றம் உண்டு. பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போல் ஸ்ரீ அனந்தாழ்வான் உடையவர் உகக்க திருவேங்கடனுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். ஸ்ரீராமானுஜர் திருமலை விஜயத்துக்கு பிறகு புறப்பட்ட சமயம், அவர் பிரிவை தாங்க முடியாமல் அவர் அனுமதியுடன் ஸ்ரீராமானுஜருடைய விக்ரஹத்தை சமைத்து, பிறகு அதை திருவேங்கடமுடியான் நியமனத்தால் அதை சந்நிதி உள்ளே பிரதிஷ்டை செய்தார்.

பெருமாளைச் சேவித்துவிட்டு அடியவர்களின் அலைகளில் தள்ளப்பட்டுக் கரையில் ஒதுங்கி அங்கே இருந்த ஒரு காவலரிடம் அனுமதி வாங்கி உடையவரை நிதானமாக சேவித்துக்கொண்டு இருந்தேன். அப்போது கோயில் சிப்பந்தி போன்ற ஒருவர் என் அருகில் வந்து பூப்பந்து போல ஒரு மாலையை கொடுக்க வந்தார்.

அடியேனை உடையவர் சந்நிதி அர்ச்சகர் என்று நினைத்து அவர் ஸ்ரீராமானுஜருக்கு அந்த மாலையைக் கொடுக்கிறார் என்று எனக்கு தோன்ற, அந்த மாலையை நான் பெற்றுக்கொள்ள தாமதித்தேன். அவர் முகத்தில் ஏமாற்றம். இது பெருமாள் மாலை என்று சைகை காண்பித்துவிட்டு வேகமாக கூட்டத்தில் இருந்த ஒரு பக்தர் கையில் அதைக் கொடுத்துவிட்டு மறைந்தார். அடடா கைக்கு வந்த பெருமாள் மாலை இப்படி போய்விட்டதே என்று நொந்துகொண்டேன்.

பக்தர் கையில் அந்த மாலையில் ஒரு பூவாவது கிடைக்குமா என்று தேடிய போது அந்த பக்தரையும் காணவில்லை. சரி, அந்த இடத்தில் அம்மாலையின் ஓர் இதழாவது கிடைக்குமா என்று தேடிய போது புகுந்த வீட்டுக்கு சென்ற புது மணப் பெண் அலம்பி விட்ட தரை மாதிரி சுத்தமாக எதுவும் கிடைக்கவில்லை. உடையவரை மீண்டும் சேவித்துவிட்டு ஒரு சொட்டு வருத்தத்துடன் கிளம்பி, அனந்தாழ்வான் தோட்டத்துக்கு சென்று அங்கே பிரபந்த புத்தகத்தை வைத்து சேவித்துவிட்டு ஊருக்கு வந்தேன். .

பகுதி - 2:
இடம் : மேல்கோட்டை, ஜூலை 17 2022

அன்று காலை மேல்கோட்டைக்கு கிளம்பினேன். போகும் வழியில் பெருமாளுக்கும், உடையவருக்கும் பூ வாங்கிக்கொண்டேன். கடைக்காரர் மீதி சில்லறைக்குத் துண்டு மல்லிகைப்பூவைக் கொடுக்க, அதையும் பையில் போட்டுக்கொண்டு மேல்கோட்டை வந்தடைந்தேன்.

பிரபந்தப் புத்தகத்தைச் செல்லப் பிள்ளையிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தமர் உகந்த திருமேனியான எதிராசர் சந்நிதிக்கு சென்று பூமாலையை அர்ச்சகரிடம் கொடுத்த போது அந்தத் துண்டு மாலைக் கண்ணில் பட்டது. அதையும் அர்ச்சகரிடம் கொடுத்த போது திருமலையில் உடையவர் சந்நிதிக்கு முன் சிப்பந்தி ஒருவர் அளித்த மாலை கை நழுவிப் போனது நினைவுக்கு வந்து சென்றது.

உடைவரை நன்றாக சேவித்துவிட்டு படியில் இறங்கினேன். அப்போது கோயில் சிப்பந்தி ஒருவர் என் அருகில் வந்து ஒரு மாலையை கையில் கொடுத்துவிட்டு வேகமாக சென்றார்.

கையில் வாங்கிய மாலை உடையவர் முன் நாள் உடுத்துக் களைந்த மாலை.

திருமலையில் உடையவர் சந்நிதி வாசலில் கோயில் சிப்பந்தி கொடுத்த மாலையை நழுவவிட்டு, மேல்கோட்டையில் அதே உடையவர் சந்நிதி முன் திருமலை கோவில் சிப்பந்தி போல் இங்கும் ஒரு சிப்பந்தி மூலமாக வட்டியும் முதலுமாக இவ்வளவு பெரிய மாலை.

கை கனத்தது; நெஞ்சம் நிறைந்தது.

சற்று முன் ஸ்ரீ உ.வே பட்டண்ணா ஸ்வாமி தொலைப்பேசியில் அழைத்து மேல்கோட்டை ஸ்ரீ யதுகிரி தாயாருக்கும் ஆண்டாளுக்கும் ஒரே திருநட்சத்திரம் அதனால் அங்கே ஆண்டாள் சந்நிதி என்று தனியாக கிடையாது என்ற தகவலை சொன்னார்.

- சுஜாதா தேசிகன்
1.8.2022
திருவாடிப்பூரம்

( மாலைக் கதைகள் நிறைவு பெற்றது, ஆளவந்தார்
திருநட்சத்திரம் அன்று செடிக் கதை ஒன்று இருக்கிறது! )

Comments