Skip to main content

தி ‘Great’ காவிரி

தி ‘Great’ காவிரி


மேலே பார்க்கும் இந்த வரைபடம் வெள்ளை காரன் காலத்தது. அதில் காவிரி நதிக்கு முன் ‘Great’ என்று இருப்பதை பலர் கவனித்திருக்க மாட்டார்கள். Great என்றால் ’பெருமையான’, ’பெரிய’ என்று பல அர்த்தங்கள் இருக்கிறது. 

அக்பர், அலெக்சாந்தர் போன்றவர்களுக்கு இருக்கும் இந்த ’கிரேட்’ அடைமொழி ஏனோ ராஜ ராஜ சோழன் போன்றவர்களுக்கு இல்லை. யோசிக்கலாம்.  வாஞ்சியின் உயிர்தியாகத்தை மறந்து ஆஷ்துரைக்கு நினைவிடம் அமைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். போகட்டும்.

வெள்ளைக்காரன் காலத்து மேப்பில் இருக்கும் இந்த ’கிரேட்’ இப்போது இல்லை ஏன் என்று யோசிக்கலாம். கிரேட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்குக் காவிரி என்றுமே புனிதமானவள்.  பட்டினப் பாலை, புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், மணிமேலகை, பாரதம், கம்பராமாயணம் என்று எல்லாவற்றிலும் ஓடுகிறது. ஸ்ரீரங்கத்துக்கு எந்த வழியாகச் சென்றாலும், முதலில் நம் கண்ணில் படுவது காவிரி தான். பார்த்தவுடன் அதை வணங்க வேண்டும்.  



காவிரிக்கு பல பெருமைகள் இருந்தாலும், காவிரி நீரை ஒரு முறை பருகிவிட்டால் அருள் கொடுக்காமல் இருக்காது. ஜேஷ்டாபிஷேகம் போது குடங்களில் காவிரி நீர் தங்க குடத்தில்  யானைமீது வருவதை படங்களில் பார்த்திருப்பீர்கள். பெருமாள் நித்திய திருவாராதனம் முதலியவற்றுக்கு இன்றும் காவிரியில் நீர் தான்.  திருவரங்கனுக்கு நித்திய கைங்கரியத்துக்கு காவிரி நீர் தான்.  தீர்த்த கைங்கரியம் மட்டும் இல்லாமக், இரண்டாகப் பிரிந்து நிரந்திர மாலையாக அவள் இருக்கிறாள். 

நம்மாழ்வார் ஒரு பாசுரத்தில்

தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய்
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே

ஒரு நாரை, மீன் கிடைக்குமா என்று காவிரிக் கரை பக்கம் மேய்கிறது.  அப்படி மேய்ந்து வரும்போது அங்கே ஒரு நண்டு கரை பக்கமாக ஒதுங்குகிறது, காவிரி “ஐயோ இந்த நண்டு இந்த நாரையிடம் மாட்டிக்கொள்ளப் போகிறதே” என்று தன் அலையால் தள்ளிக் காப்பாற்றுகிறாள்.  காவிரியின் அலைக்கு இந்த அருளும் தன்மைக்குக் காரணம் ஆழ்வார் வாழ்ந்தபோது திருவரங்கத்தில் காவிரி ஆறு சன்னதிக்கு உள்ளேயே வந்து “திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொண்டிருக்கிறான்” அரங்கன். 



ஆண்டாள் கூறிய “உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்” என்பதை தினமும் அனுபவித்துக்கொண்டு இருக்கும் பாக்கியசாலி.  பெரிய பெருமாளின் திருப்பாதத்தை தன் கையால் வருடும் காவிரிக்கு அருளும் தன்மை இல்லாமல் போய்விடுமா ? திருவரங்க பெருமாளுக்குப் பல தாயார்களில், காவிரியும் ஒரு தாயார். தாயார் என்றால் அருளும் தன்மை இருக்கத் தானே செய்யும் ? சாதாரண நண்டுக்கே அருளும் காவிரி, நமக்கு அருளாமல் இருப்பாளா என்ன ? 

அடுத்த முறை காவிரியை பார்த்தால் கைகூப்பி, உங்கள் குழந்தைகளுக்கும் அதை சொல்லிக்கொடுங்கள்.  



திருவரங்கத்தில் எல்லாமே பெரியவை. ஸ்ரீராமரால் ஆராதிக்கப்பட்டதால் பெரிய பெருமாள். 7-மதில்களும், பல மண்டபங்களும் உடைய பெரிய கோயில். தாயார் பெரிய பிராட்டி. மாமனார் பெரியாழ்வார். தளிகைக்கு பெரிய அவசரம்,  வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள். காவிரியை அசுத்தம் செய்தால் அதுவும் ‘பெரிய’ பாவம். 

எல்லோருக்கும் ஆடிப் பெருக்கு வாழ்த்துகள் !

- சுஜாதா தேசிகன்
ஆடி 18ம் பெருக்கு, 3.8.2022 

ஓவியம்: கேஷவ். 



Comments

Post a Comment