Skip to main content

மாலைக் கதை(3) - சூடிக்கொடுத்த கோதையின் ஜடை

மாலைக் கதை(3) - கோதையின் ஜடை



இடம் : ஸ்ரீவில்லிபுத்தூர் மே 12- 2019

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லும் முன் ஸ்ரீகோதா ஸ்துதி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்வாமி தேசிகன் எப்படி அருளினார் என்ற கதை சுவாரசியமானது.

வைகாசி பிரதோஷம். ஸ்வாமி தேசிகன் அன்று மௌன விருதம். மாலை விரதம் முடிந்த பின் ஆண்டாள் சந்நிதிக்கு சென்று மங்களாசாசனம் செய்யலாம் என்று எண்ணியிருந்தார். அச் சமயம் மங்கள வாத்தியங்கள் முழங்க அகத்துக்கு வெளியே வந்தார். அவர் வசிக்கும் தெரு வழியாக ஆண்டாள் வந்துகொண்டு இருந்தார்.

பொதுவாக ஆண்டாள் ஸ்வாமி தேசிகன் வசிக்கும் தெரு வழியாக புறப்பாடு கண்டருளும் வழக்கம் இல்லை. ஆனால் அன்று அவள் வழக்கமாகச் செல்லும் தெருவில் போக முடியாத சூழ்நிலை அதனால் ஸ்வாமி தேசிகன் திருமாளிகை நோக்கி ‘இன்றுயாம் வந்தோம்’ என்று வந்த போது. அர்ச்சா மூர்த்தியான ஆண்டாள் அவர் கண்களுக்கு ஆண்டாளாகவே தெரிய மௌன விரதத்தைக் கலைத்து ’குளிர் அருவி’ போலக் கோதா ஸ்துதி சாதிக்க அதைக் கேட்ட ஆண்டாள் மனது குளிர்ந்து இனி ஒவ்வொரு வருடமும் இந்த உற்சவத்தின் போது ஸ்வாமி தேசிகனின் கோதா ஸ்துதி கேட்க பிரியப்பட்டாள்.

அன்று ஆண்டாள் சன்னதி வந்தடைந்த சமயம் கோதா ஸ்துதி ஆரம்பித்து ஆண்டாள் புறப்பாடு ஆரம்பித்திருந்தது. தூறல். ஆண்டாள், ரங்கமன்னார் மீது படாதபடி குடையைப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் வேகமாக ஓடிக் கொண்டு இருந்தார்கள்.

ஆண்டாளுக்கு பூ ஜடை என்ன அழகு என்று மனதில் நினைத்துக்கொண்டு ’குழல் கோதை’யின் ஜடையைப் பார்த்தபடி நானும் ஓடினேன். கோதா ஸ்துதி சேவிக்கப்பட்டு, அன்று தூறலையும் பொருட்படுத்தாமல் ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளி’ அடியேனுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருப்பாளோ என்று எண்ணியபடியே இருந்தேன்.

நம்பெருமாள் வாத்திய கோஷம் எதுவும் இல்லாமல் இராமானுச நூற்றந்தாதி அனுபவிப்பது போல ஆண்டாள் ரங்கமன்னாருடன் ஸ்வாமி தேசிகனின் கோதா ஸ்துதியை அனுபவிக்கிறார்.

திருவேங்கடமுடையான் சந்நிதியில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் வீற்றிருக்கத் திருவாராதனம், கோஷ்டி, தீர்த்தம் பிரசாதம், தீர்த்தம், ஸ்ரீ சடகோபன் என்று எல்லாம் முடிந்து மீண்டும் ஆண்டாள் சந்நிதிக்கு திரும்பினாள்.


 

சந்நிதிக்கு கதவு சாத்தப்பட்ட பிறகு பட்டர் அடியேனைக் கூப்பிட்டு ’ஆண்டாளை நல்லா அனுபவித்துக்கொள்ளும்’ என்று சொன்ன போது சின்ன குழந்தையை அருகே சென்று மூக்கும் முழியும் ரசித்து பார்ப்பது போல ஆண்டாளை அனுபவித்தேன். ’இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்’ என்ற மாமுனிகளின் வாக்கு நிஜமானது.

ஆண்டாளின் எல்லா அழகையும் சேவித்துவிட்டு ஆண்டாள் ஜடையை மீண்டும் ஒரு முறை ரசித்துவிட்டு மறுநாள் விஸ்வரூபம் சேவிக்க வேண்டும் என்று கிளம்பினேன்.

மறுநாள் விஸ்வரூபம் சேவித்த பிறகு, வடபத்ரசாயி கோயிலுக்குச் சென்று காத்துக்கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் ஆண்டாள் மாலை அங்கே வர, ஆண்டாள் மாலையைச் சூடிக்கொண்டு விஸ்வரூபம் சேவை இனிதே நடந்தது.

அங்கிருந்து பெரியாழ்வார் சந்நிதிக்கு சென்று காத்துக்கொண்டு இருந்தேன்.
பெருமாள் மாலை அங்கே வர, பெரியாழ்வார் வெளியே எழுந்தருளி வரபத்ரசாயி சந்நிதியை நோக்கி “பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தார்” என்று ”விரைந்து கிழியறுத்து” பல்லாண்டு இசைத்த பெரியாழ்வாரை முன்னிட்டு நாங்களும் ஆழ்வாருடன் சேர்ந்து பல்லாண்டு சேவித்தோம்.

இந்த மாதிரி ஓர் அனுபவத்தை வேறு எந்த திவ்ய தேசங்களிலும் காணக் கிடைக்காது. ஆழ்வாருடன் மங்களாசாசனம் என்பது எப்பேர்ப்பட்ட விஷயம். மங்களாசாசனம் முடித்த ஆழ்வார் மீண்டும் ஆஸ்தானத்துக்குத் திரும்பிச் செல்ல முதல் நாள் பார்த்த ஆண்டாளின் ஜடை அவர் திருமுடியில் சூடிக்கொண்டு இருந்தார்!




ஊருக்குக் கிளம்பினேன். ஊருக்குக் கிளம்பும் முன் ஆழ்வாரை இன்னொரு முறை சேவித்துவிட்டு வந்துவிடலாம் என்று சென்ற போது அங்கே அர்ச்சகர் ”யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசாக” என்று அடியேனுக்குப் பெரியாழ்வாரின் ஜடையை பிரசாதித்து அருளினார்.

இந்த ஜடை முதல் நாள் ஆண்டாள் திருமுடியில் ஸ்வாமி தேசிகனின் கோதா ஸ்துதி கேட்டு, ஆண்டாள் ’சூடிக் களைந்த’ மாலையாகக் காலை வடபத்ரசாயிக்கு சாற்றி ‘உடுத்துக் களைந்த’ பிரசாதமாக பெரியாழ்வார் தன் திருமுடியில் சாற்றிக்கொண்டு பிரசாதமாக ’சூடிக்கொடுத்த ஜடை’ அடியேனின் கையில்!

- சுஜாதா தேசிகன்
1.8.2022
திருவாடிப்பூரம்

அடுத்து குளிந்த மதுரகவி

Comments

Post a Comment