மாலைக் கதைகள்(2) - மாலையின் ரகசியம்
ஸ்ரீ உய்யக்கொண்டார் திருப்பாவை தனியனில் நற்பாமாலை; பூமாலை என்பதை கோதா, கோதை என்று பொருள் கொள்ளலாம். மாலையில் ஏதோ ரகசியம் இருக்கிறது.
தன் சித்தத்தில் எப்போதும் விஷ்ணுவையே வைத்திருந்த விட்டுசித்தர் என்ற பெயர் கொண்ட பெரியாழ்வார் வேதங்களின் சாரத்தைக் கொண்டு பாண்டியன் கொண்டாடப் பரதத்துவத்தை நிலை நாட்டினார். அவரை வேத வித்து என்றே கூறலாம். அப்பேர்பட்டவர் தினமும் என்ன செய்தார் ?
பெருமாளுக்கு நந்தவனம் அமைத்து, மாலைகளைத் தன் கையால் தொடுத்து அதை பெருமாளுக்கு சமர்ப்பித்தார். பெருமாளுக்கு பூமாலை கட்டி ஆசையும் ஆர்வத்துடன் சமர்பிப்பதைக் காட்டிலும் பெரிய மெடிடேஷன் இல்லை என்பதை உணர்த்தினார்.
பெருமாளுக்கு மாலைகளைக் கட்டி அதை சமர்ப்பிப்பது தான் வேதத்தின் சாரத்தைப் புரிந்துகொண்டதன் பயன். காரணம் பாகவதத்தில் இருக்கிறது.
ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் முதல் முதலில் மதுரா விஜயத்தின் போது ஊரைச் சுற்றி வருகிறார்கள். நல்ல துணியை உடுத்த எண்ணி ஒரு சலவைக்காரனிடம் கேட்க அவன் மறுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அடுத்ததாக ஒரு பூக்கடைக்குச் சென்று அங்கே ’சுதாமா’ என்ற ஒரு மாலை கட்டுபவர் இருக்க அவர் கிருஷ்ணனுக்கு அன்பாக மாலை ஒன்றைத் தருகிறார். ஆனால் கிருஷ்ணனின் சின்ன கழுத்துக்கு அது சரியாக பொருந்தவில்லை. பக்கத்தில் மாடு மெய்க்கும் சிறுவர்கள் வைத்திருக்கும் ஒரு சின்ன கோலை வாங்கி கழுத்துக்கு மாலைத் தாங்கியாக வைத்து மாலை சூட்டி அழகை ரசிக்க, அப்போது கண்ணன் ”சுதாமா உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் தருகிறேன்” என்றதற்கு சுதாமா
“இந்த அழகு முகத்தைப் பார்த்தால் போதும் கண்ணா, வேறு என்ன வேண்டும் எனக்கு?” என்கிறார். (இன்றும் உற்சவர்களுக்கு சின்னதாக மாலைத் தாங்கி வைத்து அலங்காரம் செய்வதை பார்க்கலாம்)
கண்ணனுக்குப் பூமாலை பிடிக்கும் என்ற ரகசியத்தை உணர்ந்த ஆண்டாள் தினமும் தான் சூடிக் கண்ணாடியில் அழகு பார்த்த மாலையை பெருமாளுக்கு அனுப்பினார்.
ஆண்டாளைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் போதும் ஆண்டாள் கழுத்தில் உள்ள மாலை பெரிய பெருமாள் கழுதுக்கு வந்த பிறகு ஆண்டாள் மறைந்தாள். கடைசியாகவும் அவள் சூட்டிய மாலையையே விரும்பி ஏற்றுக்கொண்டார் பெருமாள்.
கண்ணனுக்கு மாலை பிடிக்கும் என்ற ரகசியத்தை ஆண்டாளுக்கு சொன்னது யாராக இருக்கும் ? வேறு யார் பெரியாழ்வார் தான்! பூமாலை சூடிக்கொடுத்து, சங்கத் தமிழ் மாலை பாடினாள்.
இந்த ரகசியத்தை மேலும் ஒருவர் தெரிந்துகொண்டார் அது தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய பாசுரங்களுக்கு ‘திருமாலை’ என்று பெயர். வடமொழியில் அமைந்த விஷ்ணு தர்மம் என்ற நூலில் சாரம் திருமாலை என்று கூறுவர். அதனால் தான் 'திருமாலையறியாதவன் பெருமாளையறியாதவன்’ என்பார்கள். விஷ்ணு தர்மத்தை அறிந்த இவர் செய்தது பெரியாழ்வார் செய்த அதே கைங்கரியமான நந்தவனம் அமைத்து பூமாலை மட்டும் இல்லை சொல்மாலையையும் அவனுக்குச் சூட்டினார்.
பெரியாழ்வாரின் ‘மாதவத்தோன்’ என்று தொடங்கும் திருமொழியை ’திருவரங்கத் தமிழ்மாலை’ என்பார்கள்.
கோதை தன் திருப்பாவையை ‘சங்கத் தமிழ்மாலை’ என்று கூறுகிறாள். ஸ்ரீவேதாந்த தேசிகன் ஆழ்வர் பாசுரங்களை ‘செய்யதமிழ் மாலைகள் நாம்தெளியவோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே’ என்கிறார்.
இந்த மாலைகளே வேதம் அனைத்துக்கும் வித்து !
அடுத்து சில பதிவுகளில் அடியேனுக்கு நிகழ்ந்த சில மாலைக் கதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
- சுஜாதா தேசிகன்
1.8.2022
திருவாடிப்பூரம்
அடுத்து கோதையின் ஜடை
Comments
Post a Comment