மாலைக் கதை(4) - குளிந்த மதுரகவி
இடம் : திருக்கோளூர், ஜூன் 12, 2022
கோவிட்டுக்கு பிறகு மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், வானமாமலை, திருக்குறுங்குடி திவ்ய சேதங்களை ஒரு சுற்றி சுற்றினேன். நவதிருப்பதிகள் என்று பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் சிலவற்றை சேவித்துவிட்டு வைகாசி விசாகம் - நம்மாழ்வார் திருநட்சத்திரம் அன்று ஆழ்வார் அருளால் ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு சுமார் 1200 வருடங்கள் முன் பிரபந்தம் கிடைத்த புளியமரத்தில் ’ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம்’ ( இரண்டாம் பதிப்பு ) புத்தகத்தை வைத்துச் சேவித்தது ஓர் அனுபவம்.
அன்று ஆழ்வாருடன் தீர்த்தவாரி அனுபவத்துக்கு பிறகு ஆழ்வாரின் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு பிரபந்தம் கிடைக்க காரணமான ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ அருளிய ’தேவு மற்று அறியேன்’ என்று ஆசாரியனே எல்லாம் என்று நமக்கு முதன்முதலில் காட்டிக்கொடுத்த மதுரகவி ஆழ்வார் அவதார ஸ்தலமான திருக்கோளூருக்கு அவசர அவசரமாக சென்ற போது மதியம் 12.30மணி. நடை சாத்தியிருந்தார்கள்.
மாலை இரயிலை விட்டாலும் பரவாயில்லை மதுரகவியைச் சேவிக்காமல் ஊருக்குத் திரும்பக் கூடாது என முடிவு செய்து என்று மாலையே மீண்டும் திருக்கோளூர் அங்கு சென்றேன்.
இடது கையை உயர்த்திப் பார்ப்பது போலச் சேவை சாதிக்கும் ’வைத்த மாநிதி’ பெருமாளுக்குக் கோயில் வாசலில் பூவிற்கும் பெண்மணியிடம் பூமாலை ஒன்றை வாங்கிக்கொண்டேன். அவள் மீதி சில்லறையைத் துழாவிய போது பெருமாளையும் ஆழ்வாரையும் சேவிக்கும் ஆர்வத்தில் “சில்லறையை வரும் போது வாங்கிக்கொள்கிறேன்” என்று உள்ளே சென்றேன்.
இந்த பெருமாளிடம் அளவற்ற ஈடுபாட்டினால் நம்மாழ்வார்
உண்ணும்சோறும் பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
என்றும் ‘என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே’ என்றும் பாடியுள்ளார்.
பெருமாளை நன்கு சேவித்துவிட்டு, ‘வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்றுரைத்த ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் சந்நிதிக்கு சென்று அர்ச்சகரிடம் அன்று காலை ஆழ்வார் திருவடி சம்பந்தம் பெற்ற பிரபந்தம் புத்தகத்தை ”மதுரகவி ஆழ்வார் ஆசீர்வாதம் பெற்றுத் தர வேண்டும்” என்று சமர்ப்பித்தேன்.
அவர் உரத்த குரலில்
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே
என்று சேவித்து, புத்தகத்தை ஆழ்வாரிடம் சமர்ப்பித்து பூ, துளசி பிரசாதத்துடன் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்டு வாசலில் பூக்காரி கொடுக்க வேண்டிய பாக்கி பணத்தைப் பெற்றுக்கொள்ளச் சென்றேன். அவள் மீண்டும் எண்ணத் தொடங்கினாள்.
ஆபத்துக் காலத்தில் செல்வம் உற்ற துணையாய் இருந்து உதவுவது போல ‘வைத்தமாநிதி’ என்ற பெருமாள் அடியவர்களின் ஆபத்துக் காலத்தில் உற்ற துணையாய் இருக்கிறான். அப்பேர்பட்ட வைத்தமாநிதி பெருமாள் கோயில் வாசலில் மீதி சில்லறையை அற்பமாக வாங்கிக்கொண்டு வருகிறோமே என்று எண்ணம் தோன்றியது.
“சில்லறை வேண்டாம், அதற்கும் பூவே கொடுத்துவிடு” என்று அவள் கொடுத்த அரை முழம் மல்லிகைப்பூ மாலையை எடுத்துக்கொண்டு மதுரகவி ஆழ்வார் சந்நிதிக்கு மீண்டும் சென்று அர்ச்சகரிடம் சமர்ப்பித்தேன்.
அவர் அந்த சிறு துண்டு மாலையை வாங்கிக்கொண்டு அதை வளையல் போல் ஒரு சுற்று சுற்றி மதுரகவி ஆழ்வார் திருமுடியில் சாத்திவிட்டு “ஆழ்வார் குளிர்ந்திருப்பார்” என்றார்.
“நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்” என்று ஆழ்வார் அருளிய திருவாய்மொழி புத்தகத்தையும், நம்மாழ்வார் திருவடி தொழல் அட்டைப்படத்தைக் கண்டு உள்ளம் குளிர்ந்து அர்ச்சகர் கூறிய வார்த்தைகள் எனக்கு அது தோன்றவில்லை. அது ’அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்’லாக எனக்குத் தோன்றியது.
பிகு: மதுரகவிகள் திருமுடியில் சூட்டப்பட்ட மாலையை படம் எடுக்கவில்லை. இந்தப் படத்தில் ஆண்டாள் எப்படி சூடிக்கொண்டிருக்கிறோ அதே போல் சூட்டிக்கொண்டார்.
- சுஜாதா தேசிகன்
1.8.2022
திருவாடிப்பூரம்
அடுத்து திருப்பதியிலிருந்து மேல்கோட்டை வந்த மாலை.
Comments
Post a Comment