Skip to main content

75ஆம் சுதந்திர தினம் சில சிந்தனைகள்

75ஆம் சுதந்திர தினம் சில சிந்தனைகள்



இன்று எங்கள் அடுக்ககத்தில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ராஜஸ்தான் பாலைவனம், காஷ்மீர், சீனா எல்லை போன்ற இடங்களில் நம் தேசத்துக்கான சேவை செய்து ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஒருவர் கொடியேற்ற ’பாரத் மாதா கி ஜே’, ’வந்தே மாதரம்’ என்ற கோஷம் எதிரொலித்தது. அந்தச் சமயத்தில் என்னைப் போல் கண்ணீரைப் பலராலும் கட்டுப்படுத்த முடியாததைப் பார்க்க முடிந்தது.

கொடியேற்றிவிட்டு பிரிகேடியர் சில நிமிடங்களே பேசினாலும், அவர் பேச்சில் நம் பாரதத் தேசத்தின் பெருமையைச் சொல்லச் சொல்லக் கைத்தட்டல் ஓயாமல் இருந்த வண்ணம் இருந்தது. இன்றைய திறமையான இந்திய அரசினால் நம் பாரதத் தேசம் வேறு லெவலுக்கு செல்லும் என்றார்.

இந்த ஆண்டு நாடு முழுவதும் ’ஹர்கர் திரங்கா’ என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று மோதி அரசு அறிவித்ததால் எங்கள் ஊர் முழுக்க எல்லா இடங்களிலும், வாகனங்களிலும் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

தமிழ் நாட்டில் ? ரஜினி வீட்டில் கொடியை ஏற்றிவிட்டார், ’அட விஜய் வீட்டில் தேசியக் கொடி என்று ஆச்சரியமாக செய்தி வெளியிட்டு நாட்டுப் பற்றை ‘சங்கி’ அரசியல் பேசும் ஓர் அசிங்கமான பிரதேசமாக உருவெடுத்துள்ளது.

முன்பு ’ஷெர்ஷா’(கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையைச் சொல்லும் படம்), 'தி காஷ்மீர் ஃபைல்’ (நம் உண்மையான வரலாற்றைப் பேசும் படம்) போன்ற படங்களுக்குத் தமிழ்நாட்டில் ஒருவித அன்னியத் தன்மையே இருந்து வருகிறது. இன்று ஓ.டி.டியின் உதவியால் பல படங்களைப் பார்க்க முடிகிறது. இந்தியா - பாக் எல்லைப் பிரச்சனை படங்கள் முழுக்க உண்மைக்கு அருகில் வட மாநிலத்தவர்களே எடுத்துள்ளார்கள்.

கர்நாடகாவில் அப்படி இல்லை. இங்கே தேசப் பற்று எல்லோரிடமும் இருக்கிறது. URI Surgical Strikes என்ற படத்தைத் தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்தேன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் பையன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். ”யூரிக்கும் பேட்டைக்கும் என்ன வித்தியாசம் ?”

”பேட்டை ஆரம்பிக்கும் போது எல்லோரும் கைதட்டினார்கள், யூரி படம் முடிந்த பின் எல்லோரும் கைதட்டினார்கள்” என்றேன்.

தமிழ்நாட்டு கதாநாயகர்கள் நடித்த இராணுவப் படங்கள் ஏதாவது இருக்கிறதா என்று தேடிய போது முதலில் கிடைத்தது, விஜய் நடித்த துப்பாக்கி. விஜய் எல்லையிலிருந்து தமிழ் நாட்டை நோக்கி ரயில் வந்துகொண்டு இருக்க, திடீர் என்று ரயில் சக்கரம் பஞ்சர் ஆக, உடனே ராணுவ வீரர்களுடன் ஓர் ஓப்பனிங் சாங், அவர்களுடன் ஒரு ஃபிரண்ட்லி குஸ்தி சண்டையில் விஜய் பனியனுடன் தரிசனம் முடிந்த உடனே நகைச்சுவை, பாடல், பிறகு எல்லையிலிருந்து நம் ஊருக்குள் நுழைந்த தீவிரவாதியைப் போட்டுத்தள்ளுகிறார். பிறகு எல்லைக்குச் சென்றாரா என்று தெரியாது.

ரஜினி முதல்வன், இந்தியன் படங்களில் நடிக்க பயப்பட்டார் என்று சொல்லுகிறார்கள். அப்படியே பயப்படாமல் கார்கில் சென்றால் அங்கே இருக்கும் வீரர்கள் எப்போது அரசியல் பிரவேசம் என்று கேட்பார்கள். அதனால் கார்கில் எல்லாம் வேண்டாம், காலாவே போதும் என்று இருந்துவிட்டார். (அன்று முதல்வன் படம் இலவசமாக கேபிள் டிவியில் ஒளிபரப்பட்ட அரசியல் வேறு உண்டு. பயப்பட்ட காரணம் புரியும்!)

அப்படியும் சூப்பர் ஸ்டார் நடித்த படம் ஏதாவது கிடைக்குமா என்று தேடியதில் ’இராணுவ வீரன்’ படம் கிடைத்தது. அதில் இராணுவத்திலிருந்து கிராமத்துக்கு வருகிறார். அவ்வளவு தான். தமிழ்ப் படங்களில் இராணுவத்திலிருந்து ஊருக்கு வருபவர்களிடம் ‘மிலிட்டரி சரக்கு இருக்கா?’ என்று அலையும் கூட்டத்தைக் காண்பிக்கும் ஒரு காட்சி கட்டாயம் இருக்க வேண்டும். இது தான் தமிழ்ப் படங்களுக்குத் தெரிந்த இராணுவம்.

கமலுக்கு காஷ்மீர் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர் உலக நாயகன். அதனால் பல எல்லைகளைத் தாண்டி ஆப்கானிஸ்தான் சென்று பின் லாடனை நேரில் சந்தித்து, தாலிபானிடம் தத்துவம் பேசி அழுது, ஆட்டம் ஆடி சர்வதேசத் தீவிரவாத பிரச்சனையை அரசியலுடன் பேசி விட்டுத் திரும்புவார்.

விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் இராணுவ உடையை அணிந்தால் கம்பீரமாக இருக்கும். ஆனால் என்ன பிரயோஜனம் ? இவர்களை அங்கே எல்லையில் வேலை செய்ய விடாமல், பிரதமருக்கு ஓர் ஆபத்து என்று ஒரு கான்பிரன்ஸ் ரூம் ப்ரொஜெக்டரில் சில தீவிரவாதிகள் படங்கள், குண்டு வெடிப்பில் இறந்த சடலங்கள் என்று நாட்டின் உயர் பதவியில் இருப்பவர் PPTல் பிரதம மந்திரியிடம் காட்ட. அவரும் பதட்டத்துடன் இதைத் தடுக்க என்ன வழி என்று கேட்க, ஒரே ஓர் ஆள் இருக்கிறார் என்று சரத்குமாரை டீ குடிக்கும் போது அடுத்த விமானம் பிடித்து வரச் சொல்லிவிடுவார்கள். வந்தவர் பிரதமருக்கு ஒரு சல்யூட் அடித்து, என் குழுவை நானே அமைத்துக்கொள்கிறேன் எனக்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என்று வீராப்பாக பேசிவிட்டு, அடுத்த காட்சியே கவுண்டமணியுடன் நகைச்சுவை செய்யத் தொடங்கிவிடுவார். அல்லது கதாநாயகியை நாய் துரத்த அவள் பயத்தில் இவர் மீது ஏறி உட்கார்ந்துகொள்வார். முடிந்தது எல்லை பிரச்சனை.

விஜயகாந்த்தின் பிரச்சனையே வேறு, காஷ்மீர் எல்லை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் நம்ம ஊர் வீரப்பனைப் போட்டுத் தள்ள நம்ம எல்லைக்கு வாங்க என்று கூப்பிட, சிவந்த கண்களுடன், இடது காலை தூக்கி அடித்து... பிறகு உங்களுக்குத் தெரிந்த கதை தான்.

அஜித் போன்ற நளினமான நடிகர்கள் கூலிங் கிளாஸ், போட்டுக்கொண்டு விவேகமான விமானம், கார், பைக் என்று தூள் கிளப்ப அவருக்கு எல்லையே கிடையாது.

ஹிந்தி மற்றும் மற்ற மொழிகளில் வந்த எல்லைப் பாதுகாப்பு, இராணுவம், காவல்துறை சம்பந்தப்பட்ட படங்கள், வெப் சீரிஸ் பார்த்தால் அதில் அதிகாரிகள் கைகுலுக்கிக்கொள்ளும் போது அல்லது ஆணையைப் பெற்றுக்கொள்ளும் போதும் ‘ஜெய் ஹிந்த் சார்!” என்கிறார்கள். ஆனால் தமிழில் ரோஜாவில் ஆரம்பித்து எந்தத் தமிழ்ப் படமானாலும் (சொற்பக் காட்சிகள் இருந்தால் கூட) ’ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தை வந்ததாக எனக்கு நினைவு இல்லை.

தமிழ்ப் படத்தில் தேசியப் பற்று ? சிந்து பைரவி படத்தில் ஒரு காட்சி வரும் ஜேகேபியோட மனைவி.. சங்கீதம்னா..’ என்று சொல்லிமுடிக்க, ‘கிலோ என்ன விலை’ என்று சுலக்‌ஷனா கத்தரிக்காகக்காரனிடம் கேட்பார்.

இன்று ’ஒன்றிய’ என்ற ஒரு வாதையைப் பிடித்துக்கொண்டு அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் தேசிய கீதத்தை 'இந்திய ஒன்றிய நாட்டுப்பண்’ என்று கிச்சுகிச்சு மூட்டுகிறாரகள். ராக்கெட்ரி படத்தில் கடைசியில் நிஜ நம்பி நாராயணன் ’ஜெய் ஹிந்த்’ என்று கூற ஹிந்தியில் ஷாருக்கான் ’ஜெய் ஹிந்த்’ என்று கூறுவார் ஆனால் தமிழில் ஜெய்பீம் சூர்யா ’ஜெய்ஹிந்த்’ என்று கூறாமல் அசடு வழிந்துகொண்டு இருப்பதற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம். (மாதவன் ஒரு இயக்குநராக இங்கே தோற்றுவிட்டார் என்றே சொல்லுவேன்).

இவர்களை என்ன செய்யலாம் ? ஒன்றும் செய்ய முடியாது, சுஜாதா சொல்லுவது போல் ’பசித்த புலி தின்னட்டும்'

ஜெய் ஹிந்த்!

- சுஜாதா தேசிகன்
15-08-2022
( படங்கள் இன்று எங்கள் அடுக்ககத்தில் கொடியேற்றம் போது எடுத்தது )

Comments