மாலைக் கதைகள்(1) - அவதாரிகை
முன் குறிப்பு: ’சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்ற பெயரில் ’மாலை’ ஒளிந்துகொண்டு இருக்கிறது. அந்த மாலையில் சில ரகசியங்கள் இருக்கிறது. அதை இன்று சிறு சிறு பதிவுகளாக கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.
முக்கிய குறிப்பு, இதில் என் சொந்த அனுபவம் சிலவற்றையும் கூறப்போகிறேன். வாசகர்கள் அதைப் பொருத்தருள வேண்டும்.
’ஆண்டாள்’ என்ற பெயரைப் பல நூற்றாண்டுகளாக சொல்லி வருகிறோம். ஆனால் ஆண்டாள் தன்னை ‘ஆண்டாள்’ என்று எங்கும் சொல்லிக்கொள்ளவில்லை. பெரியாழ்வாரும் ஆண்டாள் என்று எங்கும் குறிப்பிடவில்லை.
ஆண்டாள் தன்னை ‘சுரும்பார் குழல்கோதை’ (நாச்சியார் திருமொழி) என்றும் ‘பட்டர்பிரான்கோதை’ (திருப்பாவை) என்றும், தன்னை ’கோதை’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறாள்.
நந்தவனம் அமைத்து, தானே மலைகளை தொடுத்து தினமும் பூமாலை கைங்கரியம் செய்து வந்த பெரியாழ்வார் ‘கோதை’ என்ற பெயரை ஆண்டாளுக்குச் சூட்டினார். கோதை என்றால் ’மாலை’ என்று பொருள். கோதை சமஸ்கிருதச் சொல் கிடையாது. அதை சம்ஸ்கிருதத்தில் உச்சரித்தால் ‘கோதா’ என்று வரும் (உதாரணம் - ஸ்வாமி தேசிகனின் கோதாஸ்துதி) ’கோதா’ என்றால் ‘நல் வார்த்தையை அருளிச்செய்தவள்’ என்று பொருள். பூமாலையைச் சூடிக்கொடுத்தாள்; பாமாலையைப் பாடிக்கொடுத்தாள். இரண்டு தன்மைக்கும் ஏற்றபடி அமைந்துள்ளது இதன் சிறப்பு.
நாதமுனிகளின் சீடரான ஸ்ரீ உய்யக்கொண்டார் திருப்பாவை தனியனில்
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
என்கிறார்.
இங்கேதான் முதன்முதலில் ’ஆண்டாள்’ என்ற பிரசித்தமான பெயர் வருகிறது.
அதனுடன் நற்பாமாலை, பூமாலை என்று இரண்டு மாலைகள் வருகிறது.
ஒவ்வொரு நாளும் பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகுபார்த்து, இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என எண்ணிக் கொடுத்தனுப்பிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, “இது தகாத காரியம்” என்று கோபித்துக்கொண்டார்.
அதன்படி மறுநாள் ஆண்டாள் சூடாத மாலையை எடுத்துக்கொண்டு அவர் கோயிலுக்குச் சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உவப்பானது; அதை எடுத்து வாரும்!” என்ற போது ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று திருநாமம் அவளுடன் ஒட்டிக்கொண்ட போது அதில் பூமாலை ஒளிந்துகொண்டது.
மாலையில் ஏதோ ரகசியம் இருக்கிறது. அதை அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.
- சுஜாதா தேசிகன்
1.8.2022
திருவாடிப்பூரம்
Comments
Post a Comment