Skip to main content

சுஜாதா பற்றி ரவிபிரகாஷ்(விகடன்)

என்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசையில் சுஜாதா பற்றியும் எழுதுவதாக இருந்தேன். ஆனால், அந்த நிகழ்வு சந்தோஷமான ஒன்றாக அமையாமல், திடுதிப்பென ஒரு துக்ககரமான சம்பவத்தில் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.


கடந்த 27-02-2008 புதன்கிழமை அன்று காலையில், விகடன் ஆசிரியர் திரு.அசோகன் எனக்குப் போன் செய்து, "எழுத்தாளர் சுஜாதா உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால் ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார்.



அலுவலகம் போனதும், அன்றைக்கு முடிக்க வேண்டிய இதழுக்கான ஃபாரம் லிஸ்ட் போட்டுக் கொடுத்துவிட்டு, நான் சுஜாதாவைப் பார்க்கக் கிளம்பினேன். வெறுங்கையாகப் போகவேண்டாம் என்பதற்காக ஒரு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கிக்கொண்டு போனேன். விகடன் எடிட்டோ ரியல் அலுவலகத்திலிருந்து பொடிநடை தூரத்தில் அப்போலோ.



ஆஸ்பத்திரியின் மெயின் பில்டிங்குக்குப் போனேன். சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜன் என்ற பெயரைச் சொல்லி, விசாரித்தேன். பக்கத்துக் கட்டடத்தில் முதல் மாடி, 48-ம் எண்ணுள்ள ஐ.சி.யு அறையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே போனதும், ஒரு நர்ஸ் மறித்து, "வெயிட்டிங் ஹாலில் டோ க்கன் வாங்கிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான் அனுமதிக்க முடியும்" என்றாள். அதே பில்டிங்கில் சுற்றிச் சுற்றித் தேடியும் வெயிட்டிங் ஹால் கிடைக்காமல், மீண்டும் ஒரு ஊழியரிடம் கேட்க, அவர் திரும்பவும் என்னை மெயின் பில்டிங்குக்குப் போகச் சொன்னார். அங்கே போய் விசாரிக்க, "நேரா போய் லெஃப்ட்டு!" நேரா போய் லெஃப்டை அடைந்து விசாரிக்க, "உள்ளே போய் ஃபர்ஸ்ட் ரைட்டு!" என அங்கங்கே என்னை மடைமாற்றி, குறிப்பிட்ட வெயிட்டிங் ஹாலுக்குக் கொண்டு சேர்த்தார்கள்.


அங்குள்ள வரவேற்பாளரிடம் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, விஷயம் சொல்லி டோ க்கன் கேட்டேன். "சார், டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வந்துட்டிருக்காங்க. அவங்க கீழே இறங்கினப்புறம் நீங்க போகலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!" என்றார். டீலக்ஸ் பஸ்ஸின் சொகுசு நாற்காலிகள் போல் போடப்பட்டிருந்த அந்த ஹாலில், ஒன்றில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, மூலையாக வைக்கப்பட்டு இருந்த டி.வி-யில் ஓடிக்கொண்டு இருந்த 'சூர்யவம்சம்' தொடரைப் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பெயர் அழைக்கப்படுமா என என் காதுகள் காத்திருந்தன.


முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, அழைக்கப்பட்டேன். வரவேற்பாளர் இன்டர்காமில், "தேவகி! ரவிபிரகாஷ்னு ஒருத்தரை அனுப்பறேன். அவரை ஃபர்ஸ்ட் ஃப்ளோர் 48-ம் ரூமுக்கு அனுப்புங்க" என்றுவிட்டு, "போங்க சார்!" என்றார். "டோ க்கன் சார்?" "தேவையில்லை. அதான், போன்ல சொல்லிட்டேனே!"


போனேன். மறுபடி டோ க்கன் கேட்டாள் அந்த நர்ஸ். "நீங்கதானே தேவகி?" என்றதும், சிரித்துக்கொண்டே, "நீங்களா? போங்க" என்று அனுமதித்தாள்.


ஒரே மாடிக்கு லிப்டில் சென்றிருக்க வேண்டியதில்லைதான். அப்போது இருந்த குழப்பத்தில் ஒன்றும் புரியவில்லை. காத்திருந்து, லிப்ட் வந்ததும் ஏறிச் சென்றேன். முதல் மாடியில் வெளிப்பட்டு, தேடித் தேடி, ஐ.சி.யு-வை அடைந்து, 28, 36, 42, 34, 17 என மாறி மாறி இருந்த அறைகளில் குழம்பி, அங்கிருந்த ஒருவரை விசாரிக்க, "இதோ!"


உள்ளே நுழைந்தேன். இருவர் அட்மிட் ஆகும் அறை. முதல் பிளாக் காலியாக இருந்தது. கடந்து உள்ளே போனேன். ஹா... சுஜாதா!


சின்ன வயதில் என்னைத் தன் எழுத்தால் அசர வைத்த சுஜாதா. "இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு!" என்று சாவி அவர்களால் நான் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட சுஜாதா. "எப்படிக் கூட்டினாலும் விடை ஒரே மதிப்பில் வர்றதுக்கு இப்படி ஒரு சுலபமான வழி இருக்கா? கிரேட்!" என்று வியந்து, தனது 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய சுஜாதா.


சலனமற்றுத் தலைசாய்த்துப் படுத்திருந்தார். தலை மட்டும்தான் வெளியே தெரிந்தது. உடம்பு எங்கே இருக்கிறது என்று புரியாமல் மேலே துணிகளும் போர்வையும் மூடியிருந்தன. லாலி லாலியாகத் தொங்கும் வயர்களின் நடுவே படுத்திருக்கும் அவரைப் பார்க்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அருகில் இருந்த இரண்டு நர்ஸ்களிடம், அவரது நிலை பற்றிக் கேட்டேன். "ப்ச்... நோ ஹோப்! டயலிசிஸ் நடந்துட்டிருக்கு. ஹார்ட் பீட் டவுன் ஆயிருச்சு. வென்டிலேட்டர் வெச்சிருக்கு. தெரியலே... இன்னிக்கோ நாளைக்கோ, ஒரு வாரமோ!'"


"சார் யாரு தெரியுமில்லே... வேர்ல்ட் ஃபேமஸ் ரைட்டர்!" என்றேன்.


"தெரியும். நாங்களும் இவரோட ஃபேன்ஸ்தான்!" - இருவரின் முகங்களிலும் ஒரு வறட்சிப் புன்னகை.


இதே கோலத்தில், இதே அப்போலோவில் என் குரு சாவி அவர்களைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.


நர்ஸிடம் சுஜாதாவின் மனைவி தங்கியிருக்கும் அறை எண்ணைக் கேட்டுக்கொண்டு வெளியே வந்தேன். கண்டுபிடித்து, உள்ளே போனேன். ஐந்தாறு பெண்மணிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார். கூடவே, உயரமாக ஒரே ஒரு ஆண். அவர் சுஜாதாவின் மகனாக இருக்க வேண்டும் என யூகித்தேன்.


சுஜாதாவுக்காக வாங்கி, அவரிடமே கொடுத்து, உடல்நிலை விசாரிக்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கி வந்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை, சுஜாதாவின் மனைவி சுஜாதாவிடம் கொடுத்து, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். "தெரியுமே! ரெண்டு மூணு தரம் வீட்டுக்கு வந்திருக்கீங்களே!" என்றார். அதன்பின் சம்பிரதாய விசாரிப்புகள்.


போன வியாழக்கிழமையே, நிமோனியா என அப்போலோவில் கொண்டு வந்து சேர்த்தார்களாம். இரண்டு மூன்று நாளில் குணமாகி, வீட்டுக்குப் போய்விடலாம் என்றிருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமாகி, டயலிசிஸ் செய்யவேண்டி வந்து, நேற்று (செவ்வாய்) மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வென்டிலேட்டர் வைத்து, உசிர் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்றார். "யாருக்குமே இன்னும் சொல்லலை. சங்கருக்குக்கூடத் தெரியாது. (டைரக்டர் ஷங்கரைச் சொல்கிறார் என்பது லேட்டாகத்தான் புரிந்தது.) யாருக்கும் சொல்லவேண்டாம்னுட்டார். 'உடம்பு சரியாகி வீட்டுக்கு வந்துடுவேன். நான் அப்போலோல சேர்றதும், வீடு திரும்பறதும் என்ன புதுசா? வீணா பிரஸ்ஸுக்கெல்லாம் சொல்லி காப்ரா பண்ணவேண்டாம்'னார். அதான் சொல்லலை. நாங்களே அதான் நினைச்சுண்டிருந்தோம். திடும்னு நேத்துலேர்ந்து இப்படி ஆயிடுத்து. ரொம்ப நெருங்கிய சொந்தக்காராளுக்கு மட்டும் சொன்னேன். இனிமேதான் ஒவ்வொருத்தருக்கா சொல்லணும்" என்றார். மாமிக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. ஆறுதல் சொல்லவேண்டியது மாமிக்கு மட்டும்தானா? என்னைப் போன்ற லட்சக்கணக்கான சுஜாதாவின் வாசகர்களுக்கும் அல்லவா?


பின்பு, சுஜாதாவின் மகனிடம் கைகுலுக்கிப் பேசினேன். இவரிடம் போனில் இரண்டொரு முறை பேசியிருக்கிறேன். அப்படியே சுஜாதாவின் குரல். சுஜாதாவிடமே இந்தக் குரல் ஒற்றுமை பற்றி வியந்து பேசியிருக்கிறேன்.


பின் அனைவரிடமும் விடைபெற்று, வெளியே வந்து, சுஜாதாவின் நிலைமை சீரியஸாக இருப்பது பற்றி அசோகனுக்குப் போன் மூலம் தெரிவித்துவிட்டு, வெளியேற வழி தெரியாமல் தடுமாறி, படிகளில் இறங்கி, அலுவலகம் வந்தேன். எம்.டி-யின் நம்பர் கொடுத்து, அவரிடம் பேசி விஷயத்தைச் சொல்லுங்கள் என்றார் அசோகன்.


பேசினேன். சுஜாதா கிடந்த இருப்பைச் சொன்னேன். போனிலேயே விசும்பி, விசும்பி அழத் தொடங்கிவிட்டார் எங்கள் சேர்மன் பாலசுப்ரமணியன். "நானும் அவரும் ஒரே வயசு. என்னை விட சில மாசங்கள்தான் மூத்தவராக இருப்பார். நாற்பது வருஷத்துக்கும் மேலான நட்பு" என்று மேலே பேசமுடியாமல் நா தழுதழுத்தார். பின்பு, "என் உடம்பு இருக்கிற இருப்புல எங்கேயும் போக முடியலியே! எனக்காக நாளைக்கு மறுபடியும் ஒரு தரம் போய், மாமி கிட்டே நான் ரொம்ப வருத்தப்பட்டேன்னு சொல்லுங்கோ!" என்றார். அதைச் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் எதிர்முனையில் அடக்கமாட்டாத அழுகை.


அன்று இரவு, பத்து மணிக்கு அசோகனிடமிருந்து போன்... "சுஜாதா எக்ஸ்பயர்ட்!"


எழுத்துலக சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது!


***


சுஜாதாவுடனான தொடர்பு எனக்குப் பெருமதிப்புக்குரிய சாவி அவர்களின் மூலம் கிடைத்தது. 'சாவி' வார இதழின் பொறுப்பாசிரியராக நான் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, அடிக்கடி போன் மூலம் தொடர்பு கொண்டு சுஜாதாவிடம் பேசியிருக்கிறேன். கதைகள் கேட்டு வாங்கிப் போட்டிருக்கிறேன்.


ஒரு முறை சிறுகதை எழுதித் தந்தவர், அதற்குத் தலைப்பு எழுத மறந்துவிட்டார். ஃபாரம் முடித்து அனுப்பவேண்டிய கடைசி கட்ட நிலையில், சட்டென அந்தக் கதைக்குத் தலைப்பு வைப்பதையே வாசகர்களுக்கு ஒரு போட்டியாக அறிவித்துவிட்டேன். சிறந்த தலைப்பை சுஜாதாவே தேர்ந்தெடுப்பார் என்று குறிப்பிட்டேன். மறுநாள் காலை, லே-அவுட் செய்த அட்டைகளைப் பார்வையிட்ட சாவி அவர்கள், என் சமயோசித புத்தியைப் பாராட்டினார்.


அன்று காலையே சுஜாதாவுக்கு போன் செய்து, "கதைக்குத் தலைப்பு எழுத மறந்துட்டீங்க. அதுக்குத் தண்டனையா ரவி உங்களுக்கு ஒரு வேலை வெச்சுட்டான். கதைக்கான தலைப்பை எழுதச் சொல்லி வாசகர்களுக்குப் போட்டி அறிவிச்சிருக்கான். பரிசுக்குரிய சிறந்த தலைப்பை நீங்கதான் செலக்ட் பண்ணித் தரீங்க!" என்றார் சாவி.


"ஆகட்டும்" என்றார் சுஜாதா. "ஆனா, ஆயிரக்கணக்குல விடைகள் வந்தா அத்தனையையும் எனக்கு அனுப்ப வேணாம். ரவியையே தேர்ந்தெடுத்து, அதிகபட்சமா எனக்கு 20, 25 தலைப்புகள் அனுப்பி வெச்சா போறும்!" என்றார். அதன்படியே செய்தேன். அதிலிருந்து ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். கூடவே, சிறுகதைக்குத் தலைப்பு வைக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பையும் எழுதி அனுப்பியிருந்தார். தலைப்பு மிகச் சுருக்கமாக ஒரு வார்த்தையில் இருந்தால் உத்தமம்; அல்லது, ஓரிரண்டு வார்த்தைகளில் இருக்கலாம். கதையின் தலைப்பு எக்காரணம் கொண்டும் கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்துவதாக இருக்கக்கூடாது என அவர் கொடுத்திருந்த குறிப்புகள் வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப் பயனுள்ளவை.


அதன்பின், சுஜாதா ஒருமுறை சாவியைப் பார்க்க வந்திருந்தபோது, அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி, "இவன் உங்க தீவிர வாசகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு" என்று சொல்லி, போட்டோ வுக்குப் போஸ் கொடுக்கையில், "ரவி, உனக்குப் பிடிச்ச எழுத்தாளர் சுஜாதா பக்கத்துல வந்து நின்னு போட்டோ எடுத்துக்கோ" என்றார். அந்தப் போட்டோ இன்னும் என்னிடம் மிகப் பத்திரமாக இருக்கிறது.


சாவி பத்திரிகையின் சர்க்குலேஷன் குறைந்துகொண்டே வந்த ஒரு கட்டத்தில், என் எதிர்கால நிலைமை குறித்து பயந்து, குமுதம் வார இதழில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்தேன். அப்போது குமுதம் பொறுப்பாசிரியராகச் சேர்ந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார் சுஜாதா. 'தங்களைப் பார்த்துப் பேசவேண்டும்' என்று அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குப் போனேன். அவர் அப்போது நுங்கம்பாக்கத்தில் இருந்தார் என்று ஞாபகம்.


"என்ன விஷயம்?" என்று கேட்டார்.


"சொன்னேன். 'சாவி சாரை விட்டு வர மனசில்லை சார் எனக்கு. ஆனாலும், என் எதிர்காலத்தைப் பத்தியும் யோசிக்கணுமே! அவருக்குப் பிறகு நான் எங்கே போவேன்? பத்திரிகை ரொம்பத் தள்ளாடிக்கிட்டிருக்கு. அவரால நடத்த முடியலை. ஏஜென்ட்டுகள் கிட்ட ரொட்டீனா போய் பணம் வசூலிக்கச் சரியான ஆட்கள் இல்லே. சரியா எடுத்து நிர்வாகம் செய்ய ஆள் இல்லை. மிஞ்சிப் போனா இன்னும் ஆறு மாசம், இல்லே ஒரு வருஷம்... அத்தோட பத்திரிகையை இழுத்து மூடிடுவார். அதுக்கப்புறம் நான் எங்கே போய் நிப்பேன்? அதான், உங்க கிட்டே வந்தேன்" என்றேன்.


"சரி, நாளைக்கு குமுதம் ஆபீஸ் வாங்க! எடிட்டரும் (எஸ்.ஏ.பி.) இருப்பார். பேசி முடிவு பண்ணலாம்" என்றார்.


அதன்படியே மறுநாள் காலையில், குமுதம் ஆபீஸ் போனேன். எஸ்.ஏ.பி. அவர்களைச் சந்தித்தேன். உடன் சுஜாதாவும் இருந்தார்.


எஸ்.ஏ.பி. எடுத்த எடுப்பில் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அவரது குரலும் சுஜாதாவின் குரலைப் போலவே மிக மென்மையாக இருந்தது.


"சுஜாதா சொன்னார் உங்களைப் பத்தி. நீங்கதான் சாவி பத்திரிகையைப் பாத்துக்கறீங்களா?" என்றார்.


"ஆமா சார்!" என்றேன்.


"உங்களோட வேற யார் யாரு வொர்க் பண்றாங்க?"


"ஆசிரியர் குழுனு யாரும் கிடையாது. நான் மட்டும்தான். நான்தான் அங்கே பொறுப்பாசிரியர், உதவி ஆசிரியர் எல்லாமே! லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் இருக்கார். ராணிமைந்தன் முக்கிய நிருபரா மேட்டர்கள் கொண்டு வந்து தருவார். மத்தபடி கதை, கட்டுரை, ஜோக்ஸ் செலக்ஷன் எல்லாமே நான்தான்."


"இப்ப நீங்க அந்த வேலையை விட்டுட்டு இங்கே வந்து சேர்ந்துட்டீங்கன்னா, சாவி யாரை வெச்சு நடத்துவார்?"


"ஒரு வாரம் ராணிமைந்தனை வெச்சு நடத்தலாம். தொடர்ந்து பார்த்துக்க ஆள் வேணும். சாவிக்கும் வயசாச்சு. முடியாது. அதனால..."


"அதனால..?"


"அதிகபட்சம் அடுத்து ரெண்டு வாரம் நடத்துவார். அப்புறம் மூடிடுவார்."


"அப்படியா சொல்றீங்க?" என்றார் எஸ்.ஏ.பி.


"ஆமாம். ஏற்கெனவே பத்திரிகை தள்ளாடிட்டிருக்கு. அதை நிறுத்திட என் விலகல் ஒரு காரணமா இருக்கும்!" என்றேன்.


எஸ்.ஏ.பி. சற்று யோசனையில் மூழ்கினார். பின்பு, "சமீபத்துல ஒரு ஃபங்ஷன்ல சாவி சாரைப் பார்த்தேன். பத்திரிகை நஷ்டத்துல ஓடறது பத்தி சொல்லிட்டிருந்தார். 'நிறுத்திடலாம்னு நினைக்கிறேன்'னு சொன்னார். எனக்குக் கஷ்டமா போச்சு! 'இல்ல சார், பத்திரிகை ரொம்ப நல்லா வந்துட்டிருக்கு. லே-அவுட், எடிட்டிங் எல்லாம் பிரமாதம். வேற சில காரணங்களால அதை உங்களால கொண்டு வர முடியாம இருக்கலாம். அதுக்கெல்லாம் தகுந்த ஆளுங்களைப் போட்டுச் சரி பண்ணிக்குங்க. ஒரு நல்ல பத்திரிகை இப்படி திடும்னு நிக்கிறது எனக்கு வருத்தமா இருக்கு. எனக்காக பல்லைக் கடிச்சுக்கிட்டு 2000-வது ஆண்டு வரைக்குமாவது நீங்க 'சாவி'யைத் தொடர்ந்து நடத்தணும்'னு கேட்டுக்கிட்டேன். 'சரி, முயற்சி பண்றேன்'னார்" என்றவர் சற்று இடைவெளி விட்டு,


"இது நடந்து ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே நீங்க குமுதத்துல சேர்ந்து, அதனால சாவி சார் வேற வழியில்லாம சாவி பத்திரிகையை நிறுத்தும்படி ஆகுதுனு வெச்சுக்குங்க. அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பார்? நாளைப் பின்ன என்னை எங்கேயாவது பார்க்கும்போது, 'என்ன சார், 2000 வரைக்கும் நடத்தணும்னு கேட்டுக்கிட்ட நீங்க அடுத்த கொஞ்ச நாள்லயே, பத்திரிகையின் விலா எலும்பு மாதிரி இருக்கிற ரவியை உருவிக்கிட்டீங்கன்னா என்ன அர்த்தம்?'னு கேட்டா, அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன்?" என்றார்.


இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சுஜாதாவின் பலமான சிபாரிசோடு குமுதத்தில் சேர்ந்துவிடலாம் என்று ரொம்ப நம்பிக்கையோடு போயிருந்தேன். எஸ்.ஏ.பி. என்னடாவென்றால் இப்படி ஒரு கேள்வியைத் தூக்கிப் போடுகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது?


"சார், மறுபடியும் சொல்றேன்... எனக்கு சாவியை விட்டு வர மனசில்லை. ஆனா, நான் அங்கே நீடிச்சாலும், அவர் இன்னும் எத்தனை நாளைக்கு சாவியை நடத்துவார்னு தெரியாது. உங்க கிட்டே '2000 வரைக்கும் நடத்துவேன்'னு அவர் சொல்லியிருக்கலாம். ஆனா, அது சாத்தியமில்லை. எனவே, நான் சுயநலமா யோசிச்சுதான் முடிவு எடுக்க வேண்டியிருக்கு!" என்றேன்.


எஸ்.ஏ.பி. புன்னகைத்துவிட்டு, "ஒண்ணும் கவலைப்படாதீங்க! நீங்க குழப்பம், கவலை எல்லாத்தையும் விட்டுட்டு, வழக்கம்போல நாளைக்கு சாவி கிட்டேயே வேலைக்குப் போங்க! எவ்வளவு காலம் நடத்தறாரோ நடத்தட்டும். அது வரைக்கும் அவர் கிட்டேயே வேலை செய்யுங்க. சாவி போன்ற பத்திரிகை ஜாம்பவான்களிடம் வேலை செய்ய, நீங்க கொடுத்து வெச்சிருக்கணும். அவர் என்னிக்குப் பத்திரிகையை மூடிட்டு உங்களை வேற வேலை தேடிக்கச் சொல்றாரோ, அன்னிக்கு வேற எங்கேயும் போகாம நேரே என்கிட்டே வாங்க. குமுதத்தின் கதவுகள் உங்களுக்காக என்னிக்கும் திறந்திருக்கும்" என்றார்.


எதிர்பார்த்தபடி குமுதத்தில் வேலை கிடைக்கவில்லை என்றாலும், எஸ்.ஏ.பி. கொடுத்த தைரியமும், சொன்ன ஆறுதல் வார்த்தைகளும் என் மனசில் இருந்த குழப்பத்தையும் கவலையையும் துப்புரவாகப் போக்கிவிட்டன. அவர் சொன்னபடியே, தொடர்ந்து சாவியிடம் வேலைக்குப் போய் வந்தேன்.


எஸ்.ஏ.பி. அடுத்த இரண்டு நாளில் அமெரிக்கா பயணமானார். அங்கிருந்து திரும்பி வரவில்லை... உயிரோடு!


சுஜாதாவை நான் மீண்டும் சந்தித்தது, சாவி பத்திரிகை நின்ற பின்பு!


மீண்டும் குமுதம் ஆபீஸ் போனேன். ஒரு சின்ன அறையில், மிகச் சாதாரண மர மேஜையின் பின்னால், மர நாற்காலியில் எலிமென்ட்டரி ஸ்கூல் வாத்தியார் போல அமர்ந்திருந்தார் சுஜாதா. என்னைப் பார்த்ததும், "வாங்க ரவி! முன்னாடி கிடைக்கவிருந்த ஒரு நல்ல வாய்ப்பு கை நழுவிப் போயிடுச்சு உங்களுக்கு. இப்ப சூழ்நிலையே வேற. எல்லாமே மாறிப்போச்சு! இங்கே சப்-எடிட்டர்கள் தேவையில்லே. ரிப்போர்ட்டர்கள்தான் தேவை. இளம் விஞ்ஞானிகள் நாலஞ்சு பேரைப் பார்த்து லேட்டஸ்ட் தியரிகள், கண்டுபிடிப்புகள்னு ஏதாவது மேட்டர் பண்ணிட்டு வாங்க. நாலு வாரம் தொடர்ந்து பண்ணா போதும்; மாச சம்பளத்தைவிட அதிகமா ரெமுனரேஷன் வாங்கிடலாம்!" என்று சொல்லி அனுப்பினார்.


எனக்குத் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை. இளம் விஞ்ஞானிகளை எங்கே போய்த் தேடுவேன் என்று சுஜாதாவிடமே கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது. தவிர, நான் பேட்டி எடுத்தெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. ஜர்னலிஸத்தில் நான் பழகாத ஒரு பிரிவு, பேட்டி எடுத்தல்தான். குறிப்பாக அரசியல்வாதிகள், சினிமா தொடர்புடையவர்கள் என்றால், எனக்கு அலர்ஜி!


சாவியில் இருக்கும்போது கவிஞர் வைரமுத்துவுடனெல்லாம் டீல் பண்ணியிருக்கிறேனே தவிர, அதெல்லாம் சப்-எடிட்டராக இருந்துதான். பேட்டி என்று யாருக்காகவும் போய்க் காத்திருந்தது இல்லை.


எனவே, "ஆகட்டும் சார்!" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்தால் போதும் என்கிற மன நிலையில் எஸ்கேப் ஆனேன்.


அதற்கப்புறம், 'சுதேசமித்திரன்' நாளிதழில் சுதாங்கனின் கீழ் ஒரு நாலு நாள் வேலை பார்த்தேன். இடையில், சாவி நின்றவுடனேயே வேலை கேட்டு ஆனந்த விகடனுக்கும் விண்ணப்பித்திருந்தேன். என்னைப் பற்றி அங்கிருப்பவர்களுக்குத் தெரிந்திருந்தது. கூடவே, ஓவியர் அரஸ்ஸின் பலமான சிபாரிசும் சேரவே, அங்கிருந்து அழைப்பு வந்தது. விகடன் அலுவலகத்துக்குப் போனது, ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களைப் பார்த்துப் பேசியது, வேலையில் சேர்ந்தது எல்லாவற்றையும் பிறகு விரிவாக எழுதுகிறேன்.


விகடனில் வேலையில் சேர்ந்த பின், சுஜாதா அவர்களுடனான தொடர்பு அறுந்தது.


அங்கே சீனியர்களே சுஜாதா, வாலி, வைரமுத்து போன்ற பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தனர். பின்னர் மதன், ராவ், வீயெஸ்வி என ஒவ்வொருவராக விலகிவிட, ஆனந்த விகடனின் நிர்வாக ஆசிரியர் ஆனார் அசோகன்.


அவர் பந்தா இல்லாதவர்; பழகுவதற்கு மிக மிக எளிமையானவர்; தன் தலைக்குப் பின்னே ஒளிச் சக்கரம் சுழல்வது போன்ற எண்ணங்கள் எதுவும் இல்லாதவர். அவர் விகடனின் முக்கியப் பொறுப்புக்கு வந்த பிறகுதான் சுஜாதா, வாலி இருவரிடமும் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. சுஜாதாவுடனாவது முன்பே பழகியிருக்கிறேன். காவியக் கவிஞர் வாலியின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது விகடனில்தான். அதற்குக் காரணம் அசோகன்தான். மற்றபடி, எனக்கு வைரமுத்துவுடனான தொடர்பு சாவியோடு அறுந்தது. விகடனில் தொடரவில்லை. காரணம், இங்கே வைரமுத்துவுடன் மிக நெருக்கத்தில் இருந்தவர் கண்ணன்.


சுஜாதாவிடம் சிறுகதை, கட்டுரைகள் வேண்டுமென்றால், அது விகடனுக்காக மட்டுமல்ல, ஜூனியர் விகடனுக்காக இருந்தாலும் என்னைத்தான் பேசச் சொல்வார் அசோகன். அதே போல் வாலியிடம் ஏதாவது பேசவேண்டும் என்றாலும், என்னைத்தான் பேசச் சொல்வார். அதை அசோகன் எனக்கு அளித்த கௌரவமாகவே கருதினேன். இந்த இரு ஜாம்பவான்களுடன் தொடர்பு கிட்டியதற்கு, இன்றளவும் அசோகனுக்கு மானசிகமாக நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.


சுஜாதாவிடம் பல முறை போனிலும், சில முறை நேரிலும் பேசியிருக்கிறேன். மிக மென்மையான குரலில் பேசுவார். பெரும்பாலும் அவர் பேச்சினிடையே 'அது வந்திட்டு...' என்ற சொற்றொடர் தவறாமல் இடம்பெறும்.


அவர் விகடனில் தொடர்ந்து எழுதி வந்த 'கற்றதும் பெற்றதும்' கட்டுரைகளில் ஒரு முறை, மாயச் சதுரம் அமைப்பது பற்றி எழுதியிருந்தார். எப்படிக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 15 வருகிற 3x3 கட்டத்தைக் கொடுத்துவிட்டு, சீனர்கள் அதை சனி கிரகத்துக்கான கட்டம் என்று சொல்வதாகவும், அதே போல் 9x9 கட்டத்தைக் கொடுத்து (எப்படிக் கூட்டினாலும், கூட்டுத் தொகை 369 வரும்) அது சந்திரனுக்கான மாயச் சதுரம் என்றும், அது போல் உங்களால் (வாசகர்களால்) அமைக்க முடியுமா என்றும் கேட்டிருந்தார்.


இப்படியான மாயச் சதுரங்கள் அமைப்பது பற்றி நான் விளையாட்டாக, எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அறிந்து வைத்திருந்தேன். இந்த ட்ரிக்கை யார் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள் என்பது நினைவில்லை. உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக திருச்சி போயிருந்த சமயத்தில், அங்கே யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்தார் என்று ஞாபகம்.


ஒற்றைப்படை எண்ணிக்கையிலான சிறு சிறு கட்டங்கள் கொண்ட எத்தனை பெரிய மாயச் சதுரத்தையும் அமைக்கமுடியும். ஒரே ஒரு ட்ரிக்தான். மேல் நோக்கி வலது புறமாகப் பாயும் ஒரு அம்புக்குறியைக் கற்பனை செய்துகொள்ள வேண்டும். அதன் போக்கிலேயே கட்டங்களை நிரப்பிக்கொண்டு போகவேண்டும். அதாவது, ஒரு எண்ணை ஒரு கட்டத்தில் பூர்த்தி செய்த பிறகு, அடுத்த எண்ணைப் பக்கத்தில் உள்ள கட்டத்துக்கு மேலே உள்ள கட்டத்தில் எழுத வேண்டும். இதற்குப் பல துணை நிபந்தனைகள் உள்ளன. எல்லாமே சிம்பிள்தான்! இந்த விதிமுறைகளின்படி எத்தனை பெரிய மாயச் சதுரமும் அமைக்க முடியும். ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என்பதில்லை. எந்த ஒரு எண்ணிலிருந்தும் தொடங்கலாம்; கூட்டு எண்ணாக எந்த ஒரு எண்ணையும் பயன்படுத்திக் கூட்டிக் கூட்டிப் போட்டுக்கொண்டே போனால், இறுதியில் படுக்கைவசமாக, நெடுக்குவசமாக, மூலை விட்டமாக எப்படிக் கூட்டினாலும், ஒரே கூட்டுத் தொகைதான் வரும்.


அது எப்படி என்று சுஜாதாவுக்கு விரிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதி, 25x25 அளவிலான ஒரு பெரிய மாயச் சதுரத்தையும் தயார் செய்து அனுப்பியிருந்தேன்.


அதைப் படித்துவிட்டு, சுஜாதா உடனே எனக்கு போன் செய்தார். "ஆச்சர்யமா இருக்கு ரவிபிரகாஷ்! எப்படி இதை நீங்க கண்டுபிடிச்சீங்க? பிரமிப்பா இருக்கு. மேத்ஸ்ல நீங்க கில்லாடியோ?" என்றெல்லாம் மனம் விட்டுப் பாராட்டினார். "அப்படியெல்லாம் இல்லை சார்! கணக்குல நான் புலியும் இல்லை. இந்த மாதிரி கணக்குப் புதிர்கள்னா எனக்கு இன்ட்ரஸ்ட் உண்டு. எப்பவோ சின்ன வயசுல யாரோ சொல்லிக்கொடுத்த ட்ரிக்தான் இது. ஒற்றைப் படை எண்ணில் அமைந்த மாயச் சதுரங்கள் அமைக்கிறதுக்கான ட்ரிக் இது. அதுக்கப்புறம் நானே முயற்சி பண்ணி இரட்டைப் படை மாயச் சதுரத்துக்கு என்ன ட்ரிக்னு கண்டுபிடிச்சேன். அதையும் உங்களுக்கு எழுதி அனுப்பறேன், பாருங்க!" என்றேன்.


சுஜாதா தனது அடுத்த க-பெ கட்டுரையில், 'மாயச் சதுரம் பற்றி ஒரு சுவாரஸ்யமான கடிதம், விகடன் ஆசிரியர் குழுவைச் சார்ந்த ரவிபிரகாஷிடமிருந்து வந்தது. எந்த எண்ணையும் ஆரம்ப எண்ணாக வைத்து, ஒற்றைப் படை எண் வரிசையில் எத்தனை பெரிய மாயச் சதுரத்தையும் அமைக்க, ஓர் எளிய முறை சொல்லியிருக்கிறார். Amazing! இதே போல் இரட்டைப் படை மாயச் சதுரம் அமைக்கவும் ஒரு தந்திரம் உள்ளது. தெரிந்தவர்கள் எழுதலாம்' என்று என்னைப் பற்றிச் சிலாகித்துக் குறிப்பிட்டிருந்தார்.


ஏராளமான வாசகர்கள் மாயச் சதுரம் அமைப்பது பற்றி எழுதியிருந்தார்கள். அவற்றில் சிக்கலான வழிமுறைகளை விட்டுவிட்டு, எளிமையானவற்றை, சுலபத்தில் விளக்கிப் புரிந்துகொள்ள முடிகிற வழிமுறைகளை நானே தேர்வு செய்து, சின்ன குறிப்புகளோடு சுஜாதாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை அப்படியே அடுத்த வார 'கற்றதும்-பெற்றதும்' கட்டுரையில் ஆரம்பப் பகுதியாக வைத்திருந்தார்.


சுஜாதா மறைவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கூட, அவரோடு போனில் பேசி, காதலர் தினத்தை முன்னிட்டுக் காதல் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தேன். கேட்ட ஒரு வாரத்துக்குள் கட்டுரையை எனக்கு இ-மெயில் செய்தார். அதற்கு அவர் தலைப்பு எதுவும் வைக்கவில்லை. இரண்டு வகையான காதலைப் பற்றி அவர் அதில் விவரித்திருந்தார். எனவே, நானே 'காதலிலே ரெண்டு வகை' என்று தலைப்பு போட்டு, கீழே பிராக்கெட்டுக்குள் குட்டியாக 'சைவம், அசைவம் அல்ல!' என்று போட்டிருந்தேன். வைரமுத்துவின் வரிகளை சுஜாதா பாணியில் கொஞ்சம் நகைச்சுவையாக்கிய தலைப்பு அது.


அவரது கட்டுரை விகடனில் பிரசுரமான பிறகு, அது பற்றிய அவரது அபிப்ராயத்தைக் கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். சந்தர்ப்பம் அமையவில்லை.


அது மட்டுமல்ல, விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் என் 'ஏடாகூட கதைகள்' புத்தகத்தை அவர் வீட்டுக்கே சென்று அவரிடம் கொடுத்து ஆசி வாங்கி வரவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். அதற்கும் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.


விகடன் பிரசுரம் மாதா மாதம் வெளியிடும் 'விகடன் புக் கிளப்' என்கிற புத்தகத்தில் வெளியிட பொன்ஸீ என்னிடம் சுஜாதா பற்றி ஒரு கட்டுரை கேட்டிருந்தார். வியாழன் அன்று காலையில், அவரைப் பற்றி எனக்குத் தோன்றியதை மடமடவென்று கம்போஸ் செய்தேன். ஜூனியர் விகடனுக்காக ரா.கி.ரா-விடம் சுஜாதா பற்றி ஒரு கட்டுரை கேட்கச் சொன்னார் அசோகன். கேட்டேன். அதன்படியே மறுநாள் (வியாழன்) காலை கொடுத்தார். அது ரொம்ப நீளமாக இருக்கவே, ஜூ.வி-யில் இடம் இல்லாத காரணத்தால், இரண்டு பக்க அளவில் சுருக்கிக் கொடுக்கச் சொன்னார்கள். செய்தேன்.


சுஜாதா பற்றிய அந்த நினைவு அஞ்சலி கட்டுரைக்கு ரா.கி.ரா வைத்திருந்த தலைப்பு...


'அவரைப் போல் இனி ஒருவர் வரமாட்டார்!'


சத்தியமான வார்த்தை.


<hr>


சுஜாதா கட்டுரை


''விகடன் பிரசுரத்திலிருந்து வெளியாகும் 'விகடன் புக் கிளப்' புத்தகத்துக்காக சுஜாதா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுங்கள்'' என்று 27.2.2008 புதன்கிழமை இரவு போன் பண்ணிக் கேட்டார் பொன்ஸீ. சுஜாதா மறைந்த தினம் அது. மறுநாள் வியாழனன்று காலையில் கம்போஸ் செய்யத் தொடங்கி, அடுத்தடுத்து வந்த விசாரிப்பு போன்கால்களால் எட்டரை மணிக்கு எழுதி முடித்த கட்டுரை கீழே!


சுஜாதா பேரைக் கேட்டாலே அதிருதுல்லே!


'சிவாஜி... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லே..!' - சிவாஜி படத்தில் சுஜாதா எழுதிய இந்த வசனம் பட்டிதொட்டி பூராவும் பற்றிக்கொண்டு, இன்னமும் அதிர்ந்துகொண்டு இருக்கிறது.


சொல்லப்போனால், இந்த வசனம் எழுத்துலகைப் பொறுத்தவரை சுஜாதாவுக்கே பொருந்தும். 1960-கள் வரை கட்டுப்பெட்டியாக இருந்த தமிழ் நடை, சுஜாதாவின் வருகைக்குப் பின் சிலிர்த்துக்கொண்டு படு நவீனமாகியது. மாட்டுவண்டியிலும் குதிரையிலும் பயணித்துக்கொண்டு இருந்த தமிழ் உரைநடைக்கு மின்சாரம் பாய்ச்சி, அதை ராக்கெட்டில் சீறிப் பாயச் செய்தவர் சுஜாதா. வாயிலேயே நுழையாத ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களின் கதைகளைத்தான் தாங்கள் படிப்பதாக ஜம்பமடித்துக்கொண்டு இருந்த அன்றைய இளைஞர்களைத் தமது காந்த எழுத்தால் கட்டிப்போட்டு, 'நான் சுஜாதாவின் வாசகன்' என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளச் செய்தவர் சுஜாதா.


அன்றிலிருந்து இன்று வரை எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் 'சுஜாதா'தான்!


அவர் இன்று நம்மிடையே இல்லை!


தமிழகத்தின் தென்கோடி கிராமங்களில் வசிக்கும் சாமான்ய மனிதர்கள் பலரால் எப்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்ததை இன்னமும் ஏற்க முடியவில்லையோ, அப்படித்தான் இந்தப் புரட்சி எழுத்தாளர் சுஜாதா மறைந்ததையும் வாசகர்களால் ஜீரணிக்க முடியும் என்று தோன்றவில்லை.


சுஜாதாவின் பேனா தொடாத விஷயங்கள் உண்டா? சிறுகதை, நெடுங்கதை, சரித்திரக் கதை, ஆன்மிகம், நாவல், நாடகம், கட்டுரை, புதுக்கவிதை, ஹைக்கூ, வெண்பா, திரைக்கதை வசனம்... எத்தனை எத்தனை! நகரத்து இளைஞனுக்கும் கிராமியப் பாடல்களை அறிமுகப்படுத்தி, மண் வாசனையில் மயங்க வைத்த 'கரையெல்லாம் செண்பகப் பூ', கடினமான அறிவியல் விஷயங்களையும் எளிய தமிழில் சொன்ன அடுத்த நூற்றாண்டு, கி.பி.இரண்டாயிரத்துக்கு அப்பால், சிலிக்கன் சில்லுப் புரட்சி, செய்தி சொல்லும் செயற்கைக் கோள்கள், கணிப்பொறியின் கதை, தலைமைச் செயலகம்... தூண்டில் கதைகள், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என, ஜீனோமிலிருந்து ஜீனோ நாய்க்குட்டி வரை எல்லா தளங்களிலும் அவரது பேனா நாட்டியமாடியிருக்கிறது.


தான் பெற்ற கண் சிகிச்சை, பல் சிகிச்சை, ஹார்ட் ஆபரேஷன், டயலிஸிஸ் பற்றியெல்லாம் கூட விளக்கமாகவும், வாசகர்களை பயமுறுத்தாத விதத்தில் நகைச்சுவையோடும் எழுதி, விழிப்பு உணர்வு ஏற்படுத்தியவர் சுஜாதா.


ஆழ்வார்களைப் பற்றியும் எழுதுவார்... அணு ஆராய்ச்சி பற்றியும் எழுதுவார்; கும்பகோணம் கோயில்கள் பற்றியும் எழுதுவார்... குவாண்டம் தியரி பற்றியும் எழுதுவார்! ஜூனியர் விகடனில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிய 'ஏன்? எதற்கு? எப்படி?' கேள்வி-பதில் பகுதி வாசகர்களின் அறிவியல் தாகத்துக்குத் தண்ணீர் வார்த்தது. ஆனந்த விகடனில் அவர் தொடர்ந்து எழுதி வந்த 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைகளில் அவர் வாசகருக்குச் சொல்லாத விஷயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


'க-பெ' கட்டுரை ஒன்றில்... "எழுபது ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த பல்லை ஏழே நிமிஷங்களில் நீக்கி, ட்ரேயில் 'ப்ளங்க்' என்று போட்டபோது, அதை வாஞ்சையுடன் பார்த்து, 'போய் வா, நண்பா!' என்று விடைகொடுத்தேன்" என்று பல்லுக்கும் பிரியாவிடை கொடுத்து எழுதியிருக்கிறார் சுஜாதா. இன்று அவருக்கே நாம் விடைகொடுத்து அனுப்பவேண்டும் என்றால், முடியுமா நம்மால்?


தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளிலும் அவரது வாசகர் வட்டம் பரந்து விரிந்திருக்கிறது. சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை அவர்கள் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறார்கள்?


தன்னைப் படைத்த பிரம்மனின் பிரிவால் கலங்கி நிற்கும் கணேஷ் - வசந்த்துக்கு யார் ஆறுதல் சொல்லப்போகிறார்கள்?


( நன்றி: ரவிபிரகாஷ்)

Comments