(அதுதான் கடைசிப் பக்கம்... கி. கஸ்தூரி ரங்கன் தினமணியில் எழுதிய கட்டுரை)
அறுபது ஆண்டு பந்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதே என்று மனதில் சோகம் நிரம்பி வழியும் இத் தருணத்தில் பழைய நினைவுகள் அலை மோதுகின்றன.
ரங்கராஜன், சுஜாதாவைக் கைப்பிடித்து அதே பெயரில் பிரபல எழுத்தாளராகப் பிரகாசிக்கத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, அவருடனும் அவருடைய குடும்பத்தினருடனும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. 1950ம் ஆண்டுகளில் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ரங்கராஜனின் அண்ணன் என் வகுப்புத் தோழன். அப்போது ஏற்பட்ட நட்பில் தியாகராய நகர் மூஸô சேட் தெருவில் இருந்த அவன் வீட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அவன் அப்பா, மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளர். மாடியும் கீழுமாகப் பெரிய வீடு. ரங்கராஜன் அரை டிராயரில் காட்சியளிப்பான். அவன் தம்பி ராஜப்பா, அண்ணன் கிச்சாய் அக்கம் பக்கத்து விடலைப் பசங்கள் எல்லாரும் மாடி வராந்தாவில் கவர் பால், அரை மட்டை சகிதம் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த இடத்தில் தடுப்பாட்டம் தான் ஆட முடியும். பந்தை ஓங்கி அடித்தால் அடுத்த வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்துவிடும். எனவே அரை மணியில் அலுத்துவிடும். ஆட்டம் முடிந்தது என்று கலைந்து செல்வோம்.
நானும் ரங்கராஜனும் ஏதாவது விஷயம் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். இருவருக்கும் பொதுவாக இருந்த எழுத்தார்வம் காரணமாகப் பத்திரிகைகள் பற்றிப் பேசுவோம். அப்போதே ""குப்பை பத்திரிகை''களுக்கு மாற்றாக வித்தியாசமான பத்திரிகை வெளியிட வேண்டும் என்று பேசிக்கொள்வோம்.
அதற்கான சந்தர்ப்பம் வெகு ஆண்டுகள் கழித்து இருவரும் வேலை நிமித்தமாக தில்லியில் குடியேறியபின்தான் வந்தது. ரங்கராஜன் மதறாஸ் இன்ஸ்டிடியூட்டில் எலக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு தில்லியில் சிவில் ஏவியேஷன் துறையில் வேலைக்குச் சேர்ந்தான். நான் ஜர்னலிஸம் படித்துவிட்டு நியூயார்க் டைம்ஸ் நிருபரானேன். பிரம்மச்சாரிகளாக இருந்தவரை இருவரும் வேறு சில தனிக் கட்டைகளுடன் அறை ஒன்றில் தங்கியிருந்தோம். இருவருக்கும் குடும்பம் என்று ஏற்பட்ட பிறகு கரோல்பாக்கில் வேறுவேறு வீடுகளுக்கு மாறினோம். அப்போதும் நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு.
மீண்டும் பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை பலமாகப் பிடித்துக் கொண்டது. ""நீ தைரியமாக ஆரம்பி. நான் எழுதுகிறேன்'' என்று சொன்னான். நானும் 1965 ஆகஸ்டில் "கணையாழி' மாத இதழைத் தொடங்கிவிட்டேன். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று அவனுக்குப் புனைப்பெயர் சூட்டி கடைசிப் பக்கம் எழுத வைத்தேன்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இடையிடையே நீண்ட இடைவெளி விட்டு ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின் கடைசிப் பக்கம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. 2006ல் கணையாழி நின்று போயிற்று. அவனுடைய விருப்பத்தின் பேரில் கணையாழியின் பழைய பக்கங்களை மீண்டும் வெளியிட முயற்சி மேற்கொண்டேன். சித்தன் ஆசிரியர் பொறுப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ""யுகமாயினி''யில் கடைசி 16 பக்கங்களை கணையாழி பக்கங்கள் என்று அறிவித்து, அதில் மீண்டும் சுஜாதாவின் கடைசிப் பக்கத்தைத் தொடங்கச் செய்தோம்.
துரதிர்ஷ்டவசமாக சுஜாதா ஓர் இதழில் மட்டுமே எழுத முடிந்தது. திடீரென்று நிமோனியா ஜுரத்தில் படுத்துவிட்டார். மருத்துவமனையிலிருந்து மீண்டுவரவில்லை. அவருடைய கடைசி எழுத்து கணையாழி கடைசிப் பக்கத்துக்கு எழுதியதாகத்தான் இருக்கும்.
100 நாவல்கள், 250 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், ஒரு டஜன் நாடகங்கள், அரை டஜன் வெற்றிப் படங்கள் என்று எழுத்துலக சகலகலாவல்லவனாகத் திகழ்ந்த போதிலும் சுஜாதாவுக்கு ஓர் ஆதங்கம் இருந்தது. தமிழ்நாட்டில் தனக்கு உரிய இலக்கிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்பதுதான். அதைக் கடைசியாக எழுதிய கணையாழி பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
முதிர்ந்த வயதில் அவருடைய ஈடுபாடு திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும், திவ்யப் பிரபந்த பாசுரங்களிலும் சென்றது. அவற்றில் மூழ்கி ரசித்து சிறுசிறு கட்டுரைகளில் தந்திருக்கிறார். மாணவர்களுக்கும் புரியும்படி திருக்குறளை எளிய தமிழில் தந்திருக்கிறார்.
இலக்கியத்திற்கு அப்பால் அவர் நிகழ்த்திய சாதனை அவர் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வந்த ""அம்பலம்'' இணையதளம். மற்றொரு மகத்தான சாதனை தேர்தல் நடைமுறையை எளிதாக்கியிருக்கும் வாக்குப் பதிவு இயந்திரம். இதற்காகவாவது அவருக்கு ஒரு பத்ம விருது வழங்கியிருக்கலாம்.
(கட்டுரையாளர்: தினமணியின் முன்னாள் ஆசிரியர்)
( மெயில் அனுப்பிய உமா மகேஷ்வரனுக்கு நன்றி)
Comments
Post a Comment