(சுஜாதா பற்றி ரா.கி. ரங்கராஜன் ஜூவி கட்டுரை)
அழுதுகொண்டே எழுதுகிறேன். குமுறிக் குமுறி வரும் விம்மலை அடக்கிக்கொண்டு, காகிதத்தின் மீது விழும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடி எழுதுகிறேன்.
நாற்பத்தைந்து வருடங்களாக எனக்கு ஒரே சமயத்தில் குருவாகவும், சீடராகவும், தோழனாகவும் இருந்த சுஜாதா என்கிற மேதை மறைந்துவிட்ட துக்கத்தை எங்கே போய் ஆற்றிக்கொள்வேன்!
நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது... தபாலில் வந்திருந்த சிறுகதைகளைப் படித்துக்கொண்டு இருந்ததும், ஃபுல்ஸ்கேப் பேப்பரில் பொடிப் பொடியாக எழுதப்பட்டிருந்த ஒரு கதையைப் படித்துக்கொண்டு இருந்ததும்! என்ன நடை, என்ன உத்தி, என்ன ட்விஸ்ட் என்று பிரமித்தவனாக எங்கள் ஆசிரியர் எஸ்.ஏ.பி&யின் அறைக்கு ஓடிச்சென்று, ''ஒரு பிரமாதமான கதை... டெல்லியிலிருந்து ரங்கராஜன் என்ற ஒருவர் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்''
என்கிறேன். ''அவ்வளவு பிரமாதம் என்றால் பிரஸ்ஸ§க்கு அனுப்புங்கள். பிறகு பார்க் கிறேன்'' என்கிறார். 'சசி காத்திருக்கிறாள்' என்ற அந்தக் கதையை, இதழ் வெளியான பிறகு அவர் படித்துப் பார்த்துவிட்டு, ''மணியார்டர் அனுப்பி விட்டீர்களா?'' என்கிறார். இல்லையென்று நான் சொன்னதும், ஃபாரத்தைக் கொண்டு வரச் சொல்லி, கூப்பனில் நான் எழுதியிருந்த வரிகளின் கீழே, 'கதை ரொம்ப நன்றாக இருக்கிறது. அடிக்கடி எழுதுங்கள்' என்று தன் கைப்பட எழுதி, அன்பளிப்பு 20 ரூபாய் என்றிருந்ததை அடித்து, 30 ரூபாய் என்று திருத்தியதும் கண்ணீருக்கு நடுவே ஞாபகம் வருகிறது.
'எஸ்.ரங்கராஜன், வெறும் ரங்கராஜன், சுஜாதா ரங்கராஜன்' என்றெல்லாம் அவர் பெயரை மாற்றி மாற்றிப் போட்ட பின், கடைசியாக சுஜாதா என்ற பெயரை மட்டுமே நிலைநாட்டினேன்.
பேன்ட் அணிந்த இளைஞர்களும், சுடிதார் அணிந்த மங்கைகளும், கிதார் வாசிப்பவர்களும், டெல்லி கோடீஸ்வரர்களும், அவர்களுடைய ஆடம்பர மனைவிகளும் பாத்திரங்களாக அவரது கதைகளில் இடம்பெற்று, மத்திய வர்க்க பிராமணக் குடும்பத்தையே மையமாகக்கொண்டு இருந்த தமிழ்ச் சிறுகதை உலகத்தைத் தலைகீழாக மாற்றிவிட்டார்கள். 'கணையாழி' இலக்கிய இதழில், கடைசிப் பக்கத்தில் 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்' என்ற பெயரில் எழுதப்பட்டு வந்த கட்டுரைகளில் எஸ்.ஏ.பி&க்குத் தனி மோகம். சுஜாதாதான் அந்த ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று சொன்னதை நம்பாமல், சுஜாதாவையே நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டார். சுஜாதா எழுதிய முதல் நாவல் 'நைலான் கயிறு'. அப்போது அவர் சென்னைக்கு வந்திருந்தார். பகல் சாப்பாட்டுக்கு என்னுடன் என் வீட்டுக்கு வந்தார். போகும் வழியில், ''கணையாழி இதழில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அதைத் தொடர்கதையாக டெவலப் பண்ண ஆசை. எப்படிச் செய்யலாம்?'' என்று யோசனை கேட்டார். எனக்குத் தெரிந்தவரையில் சொன்னேன். அருமையான திருப்பங்களுடன் மாடர்ன் டச் கொடுத்து எழுதி, அபார புகழ் பெற்றார். அடுத்து, 'அனிதா இளம் மனைவி'. அதுவும் சிகரமான தொடர்கதை. அதன்பின் எத்தனை எத்தனை நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள்..!
அவர் எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகள் வேறு எந்தப் பத்திரிகையையும்விட ஆனந்த விகடனில்தான் அதிகம் வெளியாகியிருக்கின்றன. அவர் விகடனில் எழுதிய 'கரையெல்லாம் செண்பகப் பூ' ரொம்ப வித்தியாசமான, எல்லோராலும் பாராட்டப்பட்ட தொடர்கதை. ஜூனியர் விகடனில் அவர் தொடர்ந்து எழுதிய 'ஏன்? எதற்கு? எப்படி?', 'தலைமைச் செயலகம்' ஆகியவை அறிவியல்பூர்வமான அறிவுப் பொக்கிஷங்கள். விகடனில் அவர் பல விஷயங்கள் குறித்து எழுதி வந்த 'கற்றதும் பெற்றதும்' பகுதியின் தீவிர வாசகன் நான்.
எந்த விஷயம் குறித்து எழுதச் சொன்னாலும், உடனே எழுதிவிடுவார் சுஜாதா. அவருடைய தந்தை காலமானபோது, அவரைப் பற்றி எழுதும்படி கேட்டுக்கொண்டோம். வெகு உருக்கமாக எழுதினார். கேரளாவில் ஓர் இடைத் தேர்தலில் மின்பதிவு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு அடித்தளம் இட்டவர் சுஜாதாதான். தேர்தலின்போது அவர் அந்தத் தொகுதிக்குச் சென்றிருந்தார். அந்த அனுபவங்களை எழுதும்படி சொன்னபோதும், தனக்கே உரிய எளிமை நடையில் உடனே எழுதித் தந்தார். எழுத்தில் அவரைப் போல வீச்சும் வேகமும் உள்ள ஒருவரை இனிமேல் காண முடியாது.
நாலு வரி எழுதினாலும், அவருக்கே உரிய முறையில் 'நச்'சென்று எழுதுவது அவருடைய தனிச் சிறப்பு. என் குமாரன் ஸ்ரீதருக்குத் திருமணம் நடந்தபோது, வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அதில்... 'சின்னப் பையனாக இருந்த ஸ்ரீதருக்கா கல்யாணம்! இப்போதுதான் தெரிகிறது, எனக்கு எவ்வளவு வயதாகிவிட்டதென்று!' என்று எழுதியிருந்தார்.
ஸ்டீபன் கிங் எழுதிய 'ஞிகிஸிரி திளிஸிசிணிஷி' என்ற நாவலை எனக்கு அனுப்பினார் & அது போல நானும் எழுதவேண்டும் என்று! வெறுமே அனுப்பியிருக்கலாம். ஆனால், அதன் முதல் பக்கத்தில், 'நண்பர் ரா.கி.ரங்க ராஜன் அவர்களுக்கு, கொஞ்ச நாள் நான் வைத்திருந்து, ஜூலை மாதம் 5&ம் தேதி அன்புடன் அனுப்பிய புத்தகம் இது' என்று குறிப்பிட்டு, தேதியுடன் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் (புத்தகம் கொஞ்சம் பழசாகியிருந்ததே காரணம்!).
திருமாலின் திருவடியில் சேரப்போகும் நாள் சமீபித்துவிட்டது என்ற எண்ணம் வந்ததோ என்னவோ, ஆழ்வார் பாசுரங்களின் சிறப்புப் பற்றி சமீபகாலமாகக் கல்கியில் எழுதிவந்தார். முதல் கட்டுரை வெளிவந்தபோது படித்துவிட்டு, 'குறிப்பிட்ட பாசுரத்தைப் பற்றி உங்கள் கண்ணோட் டத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இறுதிப் பகுதியில் அந்தப் பாசுரம் பற்றி முன்னோர்கள் தப்பாக வியாக்கி யானம் செய்தார்கள் என்று ஏன் சொல்லியிருக்கிறீர்கள்? அவர்கள் பெரிய மகான்கள். அவர்களுடைய நோக்கில் எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் குறை சொல்லவேண்டும்?' என்று போனில் சொன்னேன். அதன்பின் அத்தகைய விமர்சனத்தை விட்டுவிட்டு, பாசுரத்தின் இலக் கியச் சிறப்பைப் பற்றி மட்டுமே எழுதினார். 'மெய்ப் பொருள் காண்பதே அறிவு' என்பதை உணர்ந்த பெருந்தகை அவர்.
புதிய எழுத்தாளர்கள் அவரைப் போல எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதுவது உண்டு. அவ்வளவு ஏன்... ஆரம்ப காலத்தில் நானே அவரைப்போல எழுதிப் புகழ்பெற வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஆசைப்பட்டதுண்டு. அவருடைய நுட்பமான அறிவு, அளவிட முடியாத உழைப்பு, படிப்பு, நட்பு வட்டாரம், பெரிய இடத்துப் பழக்க&வழக்கங்கள் இவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட எனக்கு வராது என்பதை உணர்ந்து, அவரை முந்தவேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டேன். மரணம் ஒன்றில்தான் அவரை முந்த முடியும் என்று எண்ணியிருந்தேன். அதையும் பொய்ப்பித்துவிட்டார் என் அருமை நண்பர் சுஜாதா!
பிகு: இந்த வாரம் ஜூவியில் ரா.கி. ரங்கராஜன் எழுதியது. நன்றி ஜூனியர் விகடன்
மற்ற பத்திரிக்கையில் வருவதை வாசகர்கள் அனுப்பினால் இங்கே பிரசுரிக்க விரும்புகிறேன்.
Comments
Post a Comment