Skip to main content

சுஜாதா அஞ்சலி கூட்டம் - பெங்களூர்

நேற்று பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. நானும் ஒரு சுஜாதா வாசகனாக என் நண்பருடன் சென்றிருந்தேன். கூட்டம் முதலில் கப்பன் பூங்காவில் என்று சொன்னார்கள், ஆனால் திடீர் என்று ஞானோதயம் வந்து தமிழ்ச் சங்கத்தில் என்று அறிவித்தார்கள். கொசுக்கடிக்கு இந்த இடம் தேவலாம் என்று போனேன்.



திண்ணையில் அறிவிப்பு மாறிக்கொண்டே இருக்க, கூட்டம் மாலை 4:00லா, 4:30மணியா என்ற குழப்பம் இருந்துக்கொண்டிருக்க. எதுக்கும் போகும் முன் திண்ணையில் ஒரு தடவை பார்க்கலாம் என்று பார்த்தால் 5:00மணி என்று போட்டிருந்தது. 4:45 மணிக்கு போன போது


'பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்'  வெளியில் சாக்பீஸில் 'சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம்' மாலை 5:30 என்று பலகையில் எழுதியிருந்தார்கள்.


பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் 'அல்சூர் லேக்' பக்கத்தில் இருக்கிறது. நான் பலபேரிடம் விலாசம் கேட்ட போது, எல்லோரும் இப்படி தான் சொன்னார்கள். லேக் பக்கத்தில் தமிழ்ச் சங்கம் என்று கேட்டால் யாராவது குளத்தில் தள்ளிவிடும் அபாயம் இருப்பதால் முகவரியை கொடுக்கிறேன்: சரியான முகவரி #59, அண்ணாசாமி முதலியார் தெரு.


5:35மணி ஆகியிருந்தது. யாரோ ஒருவர் சுஜாதா படத்தை கொண்டு வந்து மாலை போட்டு, பக்கத்தில் இரண்டு பூத்தொட்டிகளை வைத்தார். ஒருவர் அவர் புத்தகங்களை எடுத்து வந்து மேடையில் அடுக்கினார். இருபது வருஷம் கழித்து சுஜாதா இறந்த செய்தி கேட்டு நான் சென்னை வந்தேன் என்று ஆதாரத்துடன் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.


வானம் லேசாக மூடியிருந்தது. மழை வரும் அறிகுறி தென்பட்டது. 5:45மணி ஆனது கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஒருவர் தமிழ்ச் சங்க நிர்வாகியிடம் போய் மணி 5:45 ஆகிவிட்டதே கூட்டத்தை ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டவுடன். கொஞ்சம் டென்ஷனாகி "தலைவர் இன்னும் வரவில்லையே ? தலைவர் வராமல் கூட்டமா ?' தமிழ்ச் சங்கத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது தெரியுமா?" என்று பதில் சொன்னார்.


பாரம்பரியம் மிக்க இந்த தமிழ்ச் சங்கத்தின் தலைவரோ உபதலைவரோ ஒருவர் கோட் சூட் டையுடன் அப்போது வந்தார்.( நான் கிளம்பும் போது, என் மனைவி "தமிழ்ச் சங்கத்துக்கு போறீங்க ஒரு வேட்டியை கட்டிக்கொண்டு போக கூடாதா? இப்படி ஜீன்ஸ் போட்டுக்கொண்டு போறீங்களே ?" என்று சொன்னது நினைவுக்கு வந்தது )


வந்த தலைவர், மற்றும் நிர்வாகிகள் (தொண்டர்கள் என்றும் சொல்லலாம்) எல்லோரும் முதல் மாடிக்கு சென்றுவிட்டார்கள். காப்பி குடிக்க.


கீழே அரங்கில் மாலை போட்ட சுஜாதாவும், என்னை போன்ற சுஜாதா விஸ்வாசிகளும் தனியாக பேசிக்கொண்டிருந்தோம். மணி 6:00 ஆகியிருந்தது. ராகுகாலம் கூட கிடையாது ஏன் இவ்வளவு லேட் என்று சிலர் மேலே போய் அவர்களை அழைத்து வந்தார்கள். கூட்டம் சரியாக 6:20 க்கு ஆரம்பம் ஆனது.


பேச்சை ஆரம்பித்தவர் "கப்பன் பூங்காவிற்கு பதில் தமிழ்ச் சங்கத்திலேயே நினைவு அஞ்சலி விழாவை கொண்டாட முடிவு செய்தோம்" என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.


சுஜாதா பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு கமல், ரஜினி, ஷ்ரேயா போன்றவர்களை பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டு. சுஜாதாவிற்கு அஞ்சலி என்று முடித்தார்கள். மணி 7:25 ஆகியிருந்தது. என்னை 'சுருக்கமாக' பேச அழைத்தார்கள். நான் நன்றி, வணக்கத்துக்கு இடையில் 'சுஜாதா, சுஜாதா' என்று இரண்டு முறை சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தேன். கூட்டம் முடிந்ததும், தமிழ்ச் சங்கத்தில் திடீர் என்று நல்ல கூட்டம். என்ன என்று பார்த்தால் வெளியில் இடி மின்னலுடன் மழை. மழைக்கு நிறைய பேர் ஒதுங்கினார்கள்.


ஒதுங்கியவர் ஒருவர் யாரிடமோ "இங்கு என்ன சார் இன்னிக்கு டிராமாவா?" என்றார்


வெளியே போகும் போது, துண்டு காகிதத்தை ஒருவர் என்னிடம் கொடுத்தார். ஞாயிறு அன்று நூல் வெளியீடு, மற்றும் தொல்காப்பியர் கருத்தரங்கம், மாலை 3:00 மணி என்று போட்டிருந்தது. திங்கட்கிழமை போனால் சரியாக இருக்கும் என்று எண்ணினேன்.


 பிகு: 'பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்', ''பெங்களூர் தமிழ் சங்கம்' எது சரி என்று தெரியலை. 'பெங்ளூர்த் தமிழ்ச் சங்கம்' என்று தான் எல்லா இடங்களிலும் எழுதியிருந்தது.


 


 

Comments

  1. so u r saying - bangalore Tamil sangam is not proper

    ReplyDelete
  2. பெங்களூர் தமிழ்ச் சங்கம் என்பது சரி

    ReplyDelete

Post a Comment