அன்பு மிக்க தேசிகன். வணக்கம்.
இன்று (22.3.08 - சனிக்கிழமை)சுஜாதா இரங்கல் கூட்டம் இலக்கிய சிந்தனையின் சார்பில் சென்னையில் நடந்தது. இ.பா தலைமை.
திருமதி சுஜாதவும் இரு மகன்களும் வந்திருந்தனர்.
கஸ்தூரி ரங்கன், க்ரேஸி மோகன், திருப்பூர் க்ருஷ்ணன், அலிடாலியா ராஜாமணி, பூர்ணம் குழு ரமேஷ், பாமா கோபாலன், மொழி பெயர்பாளர் சவுரி ராஜன், வைத்தீஸ்வரன், ரவி சுப்ரமணியம், செங்கை ஆழியான், நான் எல்லோரும் பேசினோம்.
கஸ்தூரி ரங்கன் டெல்லியில் வாரா வாரம் அவரை சந்தித்தது பற்றி சொன்னார். அவர் சொன்ன ஒரு வாக்கியம் கண்ணில் நீர் வரவழைத்தது. “சுஜாதாவை விட நான் மூன்று வருஷம் பெரியவன். என் இரங்கல் கூட்டத்தில் அவர் பேசுவார்னு நினைச்சேன். இப்பிடி ஆயிடிச்சு.” என்றார்.
மொழி பெயர்ப்பாளர் சவுரி ராஜன் டெல்லியில் ஹிந்தி தினசரிகளில் கூட அவர் இறந்ததை வெளியிட்டார்கள் என்றார்.
இலங்கையை சேர்ந்த செங்கை ஆழியான் இலங்கையின் பெரும்பலான எழுதாளர்கள் அவருடைய பாதிப்புடன் எழுதுவதாக சொன்னார். தானும் அப்படியே என்றார்! இலங்கையில் எல்லா பத்திரிகைகளும் குறைந்தது ஒன்று அல்லது அரை பக்கமாவது அவர் மரணத்துக்கு வருந்தின என்றார்.
அலிடாலியா ராஜாமணி சொன்னது : சாவி பத்திரிகைக்காக அவர் வீட்டுக்கு சாவி குழுவில் ஒருவனாக சென்றேன். இரவு 12 மணி வரை பேசினோம். சாவி சார் ஒரு ஐடியா சொன்னார். ஒரு ஆங்கிலப்பத்திரிகையை காட்டி இது போல் நாமும் செய்து பார்க்கலாமா என்றாராம். அதில் ஒரு துப்பறியும் கதையை தந்து யார் கொலை செய்தார்கள் என்று வாசகர்களைக் கண்டு பிடிக்கும்படி சொல்லியிருந்தார்கள். அது போல் சாவியில் செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டு சுஜாதாவிடமே அந்த பொறுப்பு தரப்பட்டது. காலையில் ஆறு மணிக்கு இவர்கள் சோம்பல் முறித்து விழிக்கையில் அவர் மூன்று கதைகளுடன் வந்தாராம்!
தனக்குப்புதுப்புது ஐடியாக்கள் தருவது சுஜாதாதான் என்று நெகிழ்ந்து சொன்னவர் க்ரேஸி மோகன். நாடகங்களுக்கு வருவராம். எதை எப்படி மாற்றலாம் என்று மடமடவென்று கொஞ்ச நேரத்தில் சொல்லி விடுவாராம். தொகுத்துப் பார்த்தால் புது கதை ஒன்று அருமையாய் உருவாகியிருக்குமாம்.
ஆழ்வார்கள் பற்றி சுஜாதா எழுதியது அவரோடு நின்று போகக்கூடாது என்றும் யாரவது அவர் பணியைத் தொடர வேண்டும் என்றார் க்ரேஸி.
குமுதத்தில் அவர் கீழ் பணி புரிந்த அனுபவத்தை சொன்னார் பாமா கோபாலன். போட்டோ என்று சொல்லாமல் பொம்மை என்றுதான் சொல்வாராம் சுஜாதா!
பாமா கோபாலன் சொன்ன மற்றொரு சுவையான தகவல் - குமுதத்தின் முன்னாள் ஆசிரியர் இறந்த அன்று முதல்வர் கருணாநிதி அங்கு வந்திருந்தார். அவர் காரில் ஏறிக்கிளம்பப் போகும் சமயத்தில் சுஜாதா அவரை நெருங்கி “ எஸ் ஏ பி பற்றி ஒரு இரங்கல் கட்டுரை குடுக்க முடியுமா?” என்று கேட்டாராம். அடுத்த குமுதம் ஆசிரியர் யார் என்று தெரியாமல் காத்திருந்தவர்களுக்கு திரை விலகியது. எஸ் ஏ பி போன்ற ஒரு உயர்ந்த மனிதருக்கு கருணாநிதி போன்ற ஒரு உயர்ந்த மனிதர் இரங்கல் கட்டுரை எழுதுவதுதான் பொருத்தம் என்பது என்ன ஒரு துல்லியமான கணிப்பு!
ஒரு கூட்டத்தில் அவர் பேசுவதை வேடிக்கை பார்க்கப் போயிருந்தாராம் ரவி சுப்ரமணியம். பேச எழுந்த சுஜாதா அங்கிருந்த கரும்பலகையில் எனக்குப்பிடித்த கதை என்று எழுதி, ஜே ஜே சில குறிப்புகள், ஒரு புளிய மரத்தின் கதை என்று எழுதினாரம். எனக்குப்பிடித்த கவிதை என்று ரவியின் கவிதையை எழுதினாராம். எத்தனை பெரிய இன்ப அதிர்ச்சி! பிறகு அந்தக்கவிதையை எழுதியவர் இங்குதான் இருக்கிறார் என்று மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்தாரம். முதல் முதலாக ரவியின் கவிதையைப்படித்துவிட்டு யார் என்றுகூடத்தெரியாமல் ஒரு போஸ்ட் கார்ட் போட்டராம். பிறகு அதை கவிதை தொகுப்பில் எடுத்துப் பிரசுரிக்கலாமா என்று கேட்ட போது “அது நல்லாவே இருக்காதேய்யா” என்றாராம்.
கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை. கழுதைக்கு எதற்காக தெரிய வேண்டும் கற்பூர வாசனை? ரவி சுப்ரமணியம் எழுதிய கவிதையில் சுஜாதாவுக்குப்பிடித்த வரிகள் இது போல் பல!
நான்(வேதா கோபாலன்) பேசியது: அவருடைய லாட்டரல் திங்கிங்குக்கு 2 உதாரணங்கள். எத்தனையோ எழுத்தாளர்கள் எப்படி எழுதுவது என்று எழுதியிருக்கிறார்கள். சுஜாதா மட்டும்தான் எப்படி எழுதக்கூடாது என்று குமுதம் மீட்டிங்கில் பேசினார். அதை transcribe செய்யும் பாக்கியம் எனக்குக்கிடைத்தது. எல்லோரும் முன் கதை சுருக்கம் எழுதுவார்கள். ஒரு பிரபல எழுத்தாளரின் நீண்ட நாவலை முடிப்பதற்காக பின் கதை சுருக்கம் எழுதும் பணியை என்னிடம் தந்தார். மேற்கண்ட இரண்டு விஷயங்களுக்காகவும் என்னைப் பாரட்டிய பெருந்தன்மையை என்ன சொல்வது!
அன்றைய கூட்டத்தில் பலர் உணர்ச்சி வசப்பட்டிருந்ததைக் கண் கூடாகக் காண முடிந்தது. திருமதி சுஜாதாவின் முகத்தில் கம்பீரத்தை மிஞ்சிய சோகம்!
திருமதி சுஜாதா தன் கணவரை மிகவும் கவனமாகப்பார்த்துக்கொண்டதால் அவர் ஆயுள் இந்த அளவாவது நீடித்தது என்றார் திருப்பூர் க்ருஷ்ணன். ஒரு சமயம் சிங்கப்பூர் சாலையில் இவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்த பொழுது திருமதி சுஜாதாவுக்கு தன் கணவர் நடந்து வருவது பற்றிக்கவலை ஏற்பட்டதாம். அவர் அதிகம் நடக்கக்கூடாது. சொன்னால் கேட்க மாட்டார். சட்டென்று ஒரு ஐடியா செய்தாராம் திருமதி சுஜாதா. தனக்கு மிகவும் கால் வலிப்பதாக சொல்லி ஒரு டாக்ஸி வைக்க சொன்னாராம்!
திருப்பூர் க்ருஷ்ணன் சொன்ன மற்றொரு சுவையான தகவல்- முதலில் இணைய பத்திரிகைக்கு மின்னம்பலம் என்ற பெயர் வைத்ததும் ஒரு ப்ரபல கவிஞர் சண்டைக்கு வந்து விட்டாராம். அது தன் கவிதையில் இடம் பெற்ற ஒரு வார்த்தை என்றும் தன்னுடைய கண்டு பிடிப்பு என்றும் சொன்ன அவர் அதற்காக ஏராளமான தொகை ஒன்றையும் கேட்டாராம்.
சுஜாதா உடனே மின்னம்பலம் என்ற பெயரில் இருந்த மின் என்ற சொல்லைக் கடுகு சைஸ்க்கு ஆக்கி அம்பலம் என்பதை பெரிதாகப்போட செய்தாராம். அதோடு விட்டால் அப்புறம் அவர் என்ன சுஜாதா! அந்த கவிஞரை தன் வீட்டுக்கு அழைத்து மனைவி கையால் ஃபில்டர் காஃபி கொடுக்க செய்தாராம்! அப்புறம் என்ன! அந்த கவிஞர் இவருக்கு நல்ல நண்பராகிவிட்டாரம்!
ஒரு சமயம் சுஜாதாவின் மகன் கேஷவ் ப்ரசாத் (மின்) அம்பலம் அலுவலகத்துக்கு அப்பாவோடு வந்திருந்தாராம். முதலில் சுஜாதா கிளம்பிவிட்டார். சிறிது நேரம் கழித்து மகன் கிளம்பினாராம். சுஜாதா இரண்டு மூன்று முறை ஃபோன் செய்து விட்டாராம். அப்போதும் மகன் வீடு போய் சேரவில்லை. சுஜாதா ரொம்பவும் கவலைப்பட ஆரம்பித்து விட்டாராம்.
திருப்பூர் க்ருஷ்ணன் வியப்புடன் கேட்டாராம் “ அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் தனியாக வந்த உங்கள் மகனுக்கு நுங்கம்பாக்கத்திலிருந்து மைலாப்பூர் வரத் தெரியாதா” என்று கேட்டிருக்கிறார்.
“அமெரிக்காவிலிருந்து வர்றது ஈஸி. சென்னைக்குள்ளதான் கஷ்டம்!” என்றாராம் சுஜாதா!
அன்புடன்
வேதா கோபாலன்
Comments
Post a Comment