(சுஜாதா பற்றி இரா.முருகன் குமுதம் ரிப்போட்டரில் எழுதிய கட்டுரை)
வெறும் பத்து நாளில் ஒரு பழக்கம் அழுத்தமாக மனதில் படிந்து விட்டது. தூர்தர்ஷனில்நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அகிலனின் ‘பாவை விளக்கு’ படத்தைப் பகுதி பகுதியாகக் காட்டினார்கள். அந்த மகாநடிகனின் ஒவ்வொரு கையசைவிலும் கண்ணசைவிலும் கட்டுண்டு தினசரி ராத்திரி ஒன்பது மணிக்கு டிவி முன்னால் உட்கார்ந்து விடுகிற பழக்கம் போன வாரம் முழுக்க என்னைப் பிடித்து இருந்த ஒன்று. அப்படி அரைமணி நேர அற்புத உலகத்தை எதிர்பார்த்து புதன்கிழமை இரவு சுவிட்ச் போட, வேறு ஏதோ கருப்பு வெளுப்பு உலகம். பாவை விளக்கு முந்திய நாள்தான் முடிந்து போனது என்பதை எப்படி மறந்து போனேன்?
சிவாஜியும், , சி.எஸ்.ஜெயராமனும், மருதகாசியும் ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’ என்று விசாரித்தபடி கொலம்பியா இசைத்தட்டாக மனதில் சுழன்று சுழன்று வர, சுற்றி கனமாகக் கவியும் வெறுமை. மேஜை மேல் வைத்த மொபைல் சத்தமில்லாமல் அதிர்கிறது. இதுதான் இதுதான் என்று ஏதோ துக்கத்தை எதிர்பார்த்து எடுத்த கை நடுங்குகிறது. “சுஜாதா சார் காலமாகி விட்டார்”. நண்பரான பத்திரிகை ஆசிரியரின் குரல் எதிர்முனையில். தொடர்ந்து பேச ஏதுமில்லாததுபோல் நீண்ட நிசப்தம். ‘சரி’. எதுவும் சரியில்லைதான். ஆனாலும் ஏதோ சொல்ல வேண்டுமே. சொல்கிறேன்.
ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் என்ற என்னை விட இருபது வருடம் மூத்த இளைஞர்.. குமுதத்தில் ‘நைலான் கயிறு’ என்று ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்தபோது துணிச்சலான, நவநாகரீகமான ஒரு பெண் எழுத்தாளர் என்று நினைத்தேன், முதல் ஷாக், தினமணி கதிரின் அவரை மாணவர்கள் சந்தித்தது, சுஜாதா புகைப்படத்துடன் வந்திருந்தது. ‘ரொம்ப சாதாரணமா, எலக்டிரிக் ட்ரெயின் பிரயாணி மாதிரி இருக்கீங்களே’ என்று ஒரு மாணவி கேட்க, பக்கத்தில் மீசை இல்லாத சாதுவான சுஜாதா என்ற ஆண் படம். அப்புறம் சுஜாதா கோடாலி மீசை, கொம்பு மீசை எல்லாம் வைத்துக்கொண்டு கதிர் தீபாவளி மலரில் எலக்டிரிக் டிரெயினில் வம்பு வளர்க்கும் சக பிரயாணி பற்றி (‘குரலா அது? டி எம் எஸ்ஸ¤க்கு ஜலதோஷம் பிடித்த மாதிரி’) கதை எழுதினார். கூடு விட்டு அவர் கூடு பாய, கதை சொல்கிற இளைஞர் ‘நான் இறங்கி பிளாட்பாரத்தில் நடந்து போவதைப் பார்த்தேன்’ என்று முடிக்கிற, திரும்பத் திரும்பப் படிக்க வைத்த அந்த வரியும் கதையும் தான் நான் முதலில் படித்த மாஜிக்கல் ரியலிசம். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸைப் படிக்க, என் மாஜிக்கல் ரியலிச நாவலை எழுத எனக்கு அதற்கு அப்புறம் முப்பது வருடம் கடந்து போனது.
இடைப்பட்ட இந்த நீண்ட கால கட்டத்தில் இலக்கியப் பத்திரிகையில் கவிதை எழுதினேன். வெகுஜனப் பத்திரிகையில் அதை சிலாகித்தார் சுஜாதா. அதன் மூலம் பரவலாக வெளியே தெரிய வந்தேன்.
முந்தைய பாராவை எழுத்து பிசகாமல் அப்படியே எடுத்து தமிழில் ஒரு நூறு எழுத்தாளர்கள், கவிஞர்களாவது தங்கள் கட்டுரைகளில் ஒட்ட வைத்துக் கொள்ளலாம். கொள்ள வேண்டும். அந்த நன்றி மறந்தால், எங்க வாத்தியார் பாணியில் சொல்வதாக இருந்தால், ‘இன்று ராத்திரி சாப்பாடு கிடைக்காது’.
மூன்று தலைமுறைகளைத் தொடர்ந்து வசீகரித்து வரும் சுஜாதாவின் எழுத்து ரகசியம் என்ன? எழுத்தில், இலக்கியத்தில், அறிவியலில் அவருக்கு இருந்த தீராத காதல். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் படிப்பதில் காட்டுகிற அதே ஈடுபாட்டை நானோ டெக்னாலஜியின், ஸ்டெம் செல் உருவாக்கும் மருத்துவ நுட்பத்தில் காட்டுவார் அவர். காலத்தோடு கைகோர்த்துச் செல்லும் எழுத்து பாணி அவருடையது. மற்றவர்கள் எல்லாரும் கம்ப்யூட்டர் கற்பழித்தது என்று கதை எழுதி தலையில் ராட்சத பல்புகள் சுழல ஒரு யந்திரம் நடந்து வருவதாகப் படம் போட்ட காலத்திலேயே அவர் கதையிலும் கட்டுரையிலும் நாம் தொட்டு உணரக் கூடிய கம்ப்யூட்டரைக் காட்டினார். பஞ்சாயத்து போர்ட் நூலகத்தில் பத்திரிகை படிக்கக் கிடைக்கிற கிராமப்புற, சிறு நகர இளைஞர் கூட்டத்துக்கு அவர் இப்படிக் காட்டியது கம்ப்யூட்டரை மட்டுமில்லை. ஷியாம் பெனகலின் ‘அங்கூர்’, பாபு நந்தன் கோடுவின் ‘தாகம்’ போன்ற ஆர்ட் சினிமாக்களை, ஞானக்கூத்தன் கவிதைகளை, எம்.பி.சீனிவாசன் சேர்ந்திசையில் ஆயிரம் கார்ப்பரேஷன் பள்ளிச் சிறுவர்களை. ஒரே குரலில் ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்று பாரதி பாடலைப் பாடவைத்த அற்புதத்தை, சால்வடார் டாலி, பிகாசோவின் ஓவியத்தை, பீட்டில்ஸின் ‘செர்ஜண்ட் பெப்பர்ஸ் லோன்லி ஹார்ட் கிளப்’ இசை ஆல்பத்தை, ஹோலோகிராமை, ஆழ்வார் பாசுரத்தை. எதைத்தான் விட்டார் அவர்? எழுத அவரும் படிக்க நாமுமாக தொடர்ந்து கொண்டே போகும் இது என்று தோன்றியது நேற்று தூர்தர்ஷனில் ‘பாவை விளக்கு’ முடிந்து போனமாதிரி சட்டென்று மனதில் அழுத்த, திரும்ப ஒரு வெறுமை எங்கும் நிறைகிறது.
எனக்கு அண்மையில் ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார் - ‘என்னது? ஐம்பத்து ரெண்டெல்லாம் வயதில் சேர்த்தியா? ஏன் அதற்குள் வேலைக்கு குட்பை சொல்லி விட்டு இலக்கிய சேவையில் முழுமூச்சாக இறங்க நினைக்கிறாய்? எழுபத்துரெண்டு வயதில் இன்னும் நான் பார்ட் டைம் கன்சல்டண்ட் ஆக வேலை பார்க்கிறேனே? வேறு எதுவும் இல்லாவிட்டாலும் வீட்டில் மனைவிக்கு ஒரு ஏழெட்டு மணி நேரம் தனிமையில் நிம்மதி கிடைக்குமில்லையோ?’
நாலு வரிக் கடிதத்திலும் இந்த நகைச்சுவை தான் சுஜாதா. For me, he goes on for ever.
(மெயில் இதை எனக்கு அனுப்பிய இரா.முருகனுக்கு நன்றி)
Comments
Post a Comment