Skip to main content

அப்போலோ தினங்கள்


அப்போலோ தினங்கள்




'அப்போலோ தினங்கள்' என்று கடைசியாக அவர் எழுதியதைப் பார்த்தபோது, எனக்கு அவர் ஆஸ்பத்திரியில் போராடிய கடைசித் தருணம்தான் நினைவுக்கு வந்தது.

அதற்கு முன் நான் அவரைப் பார்த்தது, பிப் 21ம் தேதி. உடம்பு மெலிந்து, ஆக்ஸிஜன் மிஷினின் உதவியால் சுவாசம். கடந்த பதினைந்து வருடங்களில் நான் அவரை எவ்வளவோ முறை சந்தித்திருக்கிறேன்; இதுமாதிரி பார்ப்பது முதல் முறை. அத்தனை கஷ்டத்திலும், 'என்ன தேசிகன், ஆம்டையா நல்லா இருக்காளா? ஆண்டாள் எப்படி இருக்கா? ஸ்கூல் எல்லாம் ஒழுங்காப் போறாளா?' என்று எதையும் விடாமல் விசாரித்தார்.





எல்லாரும் நல்லா இருக்காங்க சார்!'


'கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?' என்றார்.


சில மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ரத்தப் பரிசோதனை அளவில் கிரியாடினின் அளவு அதிகமாக இருப்பதாகத் தகவல் வந்ததால், டாக்டர் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லியிருந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.


'இந்தத் தடவை உடம்பு ரொம்ப படுத்திடுத்து. ஆஸ்பிட்டல் போனா இன்னும் படுத்துவாங்களே' என்றார்.


'ஒண்ணும் ஆகாது சார்! ஒரு டயாலிஸிஸ் பண்ணிட்டு அனுப்பிடுவாங்க!'


கண்களைக் கொஞ்ச நேரம் மூடிக் கொண்டார். நாக்கால் உதட்டை ஈரப்படுத்திக்கொண்டார். அருகிலுள்ள பிரின்டர், ஃபான்ட் பிரச்னையினால் பூச்சி பூச்சியாக எதையோ அடித்துத் தள்ளியிருந்தது.




ஆம்புலன்ஸில், 'ஏ.ஸி சரியா இல்லியே' என்றார். ஃபேனைத் தட்டிவிட்டு, அவர் பக்கம் திருப்பினேன். 'எனக்கு ஒண்ணும் சீரியஸ் இல்லை, டிரைவரிடம் மெதுவாவே போகச் சொல்லுப்பா.'


ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டுக் கிளம்பினேன். 27ம் தேதி காலையில் அவரது மூத்த மகன் ரங்காவிடமிருந்து அழைப்பு. 'அப்பாவுக்கு ரொம்ப முடியலை, சீக்கிரம் கிளம்பி வாப்பா' என்றார்.


சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, 'இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது' என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.


ஆனால், நான் மருத்துவமனை போன சமயம், அவர் உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்... பெருமாளே, இதெல்லாம் அவருக்குத் தெரியக் கூடாது என்று ரெங்கநாதரை வேண்டிக்கொண்டேன்.


'சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது'


என்று அவர் தன் எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில் எழுதியிருந்தார்.


சென்ற ஜூன் மாதம் அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஸ்ரீசூர்ணம் கேட்டு நெற்றியில் இட்டுக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.


ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளைச் சேவித்த பின், அவருக்கு ஏற்பட்ட மனநிறைவை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. 'எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!' என்றார் நெகிழ்வுடன். கோயிலில் ஏனோ சில இடங்களில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துகொண்டார். அதைக் 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்தார்.


ஸ்ரீரங்கம் பயணம் முடிந்த பின், 'இந்த ட்ரிப்புக்கு நான் எவ்ளோ தரணும்?' என்றார். 'சிவாஜி படத்தின் பிரிவ்யூக்கு ஒரு டிக்கெட்' என்றேன். அதற்கும் ஒரு சிரிப்பு.


பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். 'அது உடம்புக்கு ஆகாது' என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், 'உன் பேர் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.




'ஏம்பா, உன் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிருக்க, ஸ்கூல்ல கேலி பண்ண மாட்டாங்களா?'


'சார், மரகதவள்ளின்னே பேர் இருக்கும்போது...'


'மரகதவள்ளி நாளையே சுருக்கி மேகி ஆயிடுமே' என்றார் தனக்கே உரிய நகைச்சுவையுடன்.


சமீபத்தில் ஒரு முறை 'உன்னுடன் பைக்கில் வருகிறேன்' என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். 'இப்ப என்ன ஸ்பீட்?' என்று விசாரித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!' என்று பைக் சவாரியை அனுபவித்தார்.


'ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்' தொகுப்புக்கு நான் கோட்டோவியங்கள் வரைய ஆசைப்பட்டபோது, அவரிடம் என்னென்ன வரைய வேண்டும் என்று கேட்டேன். ஒரு பேப்பரை எடுத்து, ரங்கு கடை எங்கே இருக்கும், அவர் வீடு, கோபுரங்கள், தெருக்கள் என்று ஏராளமான இடங்களை மேப் போல போட்டுக் காண்பித்தார். வரைந்து வந்து காண்பித்தபோது, மிகவும் ரசித்தார். அவரும் ஓர் ஓவியர்தான் என்பது பலருக்குத் தெரியாது. அவர் வரைந்த வாட்டர் கலர் படங்கள் முன்பு அவர் வீட்டில் மாட்டியிருக்கும். அதே போல், கணையாழியின் கடைசிப் பக்கத்திலும் சில சின்னச் சின்ன படங்கள் வரைந்துள்ளார்.


ஐந்து வருடங்களுக்கு முன் அவரின் பயோகிராஃபியை எழுத வேண்டும் என்று கேட்டேன். 'உண்மையைச் சொல்ல வேண்டி வரும்; கூடவேபிரச் னையும் வருமே' என்று யோசித் தார். போன வருடம் மீண்டும் அதே யோசனையைச் சொன்ன போது, 'ஓ, தாராளமா செய்ய லாமே!' என்றார் ஆர்வத்துடன். 'சில பகுதிகளை எழுதிட்டு வர்றேன், பாருங்க' என்றேன். 'நீ எழுதுறாப்ல எழுதாத; நான் எழுதுறாப்ல எழுது' என்று உற்சாகப்படுத்தினார்.


அதைத் தொடர்ந்து, அவரைப் பேசவைத்து, சில பகுதிகளை ரெக்கார்ட் செய்தேன். பல தர்மசங்கடமான கேள்விகளுக்கு எளிமையாகப் பதில் சொன்னார். சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, கண்களில் நீர் வந்தது. அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள், கதைகளில் அவர் பயோகிராஃபி சம்பந்தமான பகுதிகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்...


'எல்லாமே ஒரு குறுக்கெழுத்துச் சதுரம் போல இருக்கிறது, மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று வார்த்தைகளுக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. வெள்ளைக் கட்டங்களை நிரப்புகிறோம். பல வார்த்தைகள் கிடைத்துவிட்டன. சில வார்த்தைகளுக்கு எழுத்துகள் தான் உள்ளன. சில வார்த்தைகள் காலியாகவே இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அது நிரப்பப்படும்'
என்று சுஜாதா எழுதிய வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.




அவர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகம் நிறைய. நவம்பர் மாதம், 'இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புஸ்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அதுதான் எனக்கு எல்லாம்!' என்றார்.


அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, 'சிற்றஞ் சிறுகாலே...' என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.


'மனித உயிர் என்பது வற்றாத ஓர் அதிசயம், அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும்'


என்று சுஜாதா சொன்னது எவ்வளவு உண்மை!


இப்போது பிரிகிறோம், இனி எப்போது சந்திப்போம் சுஜாதா சார்?

- -சுஜாதாவின் நண்பரும் சீடருமான தேசிகன்
விகடன் - மார்ச் - 2008 

முக்கியமான பிகு: இந்த கட்டுரை ஆனந்த விகடனில் பிரசுரம் ஆனது. இதன் பின்னாடி ஒரு கதை இருக்கிறது. ஆனால் அதை இங்கே சொன்னால் தற்பெருமையாகிவிடும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன். 

கடைசியில் ”சுஜாதாவின் நண்பரும் சீடருமான தேசிகன்”  என்பதை நான் எழுதவில்லை.  ஆ.விக்கு போன் செய்து கேட்ட போது “சார் அது எடிட்டர் கடைசியில் சேர்த்தார்” என்றார்கள். இதனால் எனக்கு பல இலக்கிய சங்கடங்கள் நிகழ்ந்தது.  சுஜாதா இருந்திருந்தால் இன்னொரு சிறுகதை எழுதியிருப்பார்.  ஆனால் அந்த கடைசி வரி பலரை ‘டிஸ்டர்ப்’ செய்தது என்னவோ உண்மை.



சுஜாதா எழுதிய கடைசி பத்தி 'அப்போலோ தினங்கள்' அதில் எழுதியிருப்பது



இன்று 18வது நாள்.. எத்தனை பேருக்கு கவலை, மனக் கஷ்டம். இதை விதி என்று சொல்வதா தற்செயல் என்பதா? எப்படியும் இந்த அனுபவத்தை நான் மறக்கவோ மீண்டும் தாங்கவோ முடியாது. இனி ஆஸ்பத்திரி பக்கமே வரக்கூடாதபடி பகவான் என்னைக் காக்கவேண்டும். மனைவியும் மகனும் பொறுமையாக பார்த்துக் கொண்டதை மறக்கவே மாட்டேன். இவர்கள் இல்லை என்றால் சீரியஸாகி விளைவுகள் விபரீதமாயிருக்கும்.


( விகடனில் இரண்டு லைன் எஸ்டிராவாக இருக்கிறது அது தவறு )

Comments

  1. Very heart wrenching

    ReplyDelete
  2. A writer I admired most and who inspired me to write. To read that he suffered hellish experiences towards the end of his life makes me relive that my experience in my seventies. The fact that heaven & hell is more or less experienced by one in this life is very much ttue!

    ReplyDelete

Post a Comment