(பிரிக்க முடியாத மௌனம் - எஸ்.ராமகிருஷ்ணன் அஞ்சலி கட்டுரை )
நேற்றிரவு பத்தரைமணிக்கு அவரது மரணம் பற்றிய குறுஞ்செய்தி வந்தது. சில நிமிசங்கள் அது நிஜம் தானா என்று நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் பதினைந்து குறுஞ்செய்திகள் உண்மை என்று உறுதிப்படுத்தியது.
கல்லூரிப் பருவத்தில் என்னோடு படித்து நீண்ட காலம் தொடர்பில்லாமலிருந்த நண்பன் நள்ளிரவில் போன் செய்து அழும் குரலில் கேட்டான், நிஜமாவாடா ?. எனது மௌனம் அவனுக்கு பதிலாக இருந்திருக்க வேண்டும். சட்டென உடைந்த குரலில் எவ்வளவு படிச்சிருக்கோம். எவ்வளவு பேசியிருக்கிறோம். வாத்தியார் போயிட்டாரு இல்லையா என்று ஆதங்கத்துடன் சொன்னான். நிஜம் அது.
எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.
படிப்பது, ஊர்சுற்றுவது, பெண்கள் பற்றிய உரையாடல்கள் என்று நீண்ட கல்லூரிவயதின் பிரிக்க முடியாத நண்பனைப் போலிருந்தார் சுஜாதா. புதுமைபித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள் மீது மரியாதையும் வியப்புமே மேலோங்கியிருந்தது. ஆனால் சுஜாதாவிடம் மட்டுமே இணக்கமான நட்பும் ஒருமையில் அழைக்கும் உரிமையும் ஏற்பட்டிருந்தது. அநேகமாக தினமும் சுஜாதாவைப் பற்றி பேச்சு கட்டாயம் வந்துவிடும். அவருக்காக மட்டுமே புத்தகம் படித்தார்கள் நண்பர்கள்.
இன்று கம்ப்யூட்டர் பற்றி எல்கேஜி குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் கம்ப்யூட்டர் என்பது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி. அதைப்பற்றி விருதுநகர் போன்ற சிறுநகரங்களில் இருந்த எங்களுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது.
ஆனால் விஞ்ஞானத்தில் ஈடுபாடு உள்ள நண்பர்களுக்கு ஒரே துணையாக இருந்தது சுஜாதாவின் அறிவியல்கட்டுரைகள். குறிப்பாக கணிப்பொறி பற்றி அவர் எழுதிய அறிமுகங்கள் மற்றும் விரிவான அலசல்கள். என்னோடு படித்தவனை இன்று அமெரிக்காவின் மென்பொருள் விற்பன்னராக மாற்றியிருக்கிறது.
எப்படியாவது சுஜாதா மாதிரி கம்ப்யூட்டர்ல வந்துறணும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். அது இன்று நிஜமாகவும் ஆக்கியிருக்கிறது. பின்னாளில் ஒரு முறை அவன் சுஜாதாவைப் பார்க்க விரும்பி நான் நேரில் அழைத்துக் கொண்டு போனபோது சட்டென அவர் காலில் விழுந்ததோடு அழுதும் விட்டான். அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனது கைகளைப் பற்றிக் கொண்டு எனக்கு தெரிஞ்சதை ஏதோ எழுதினேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.
அவன் சுஜாதாவிடம் அதிகம் பேசவில்லை. அவரை பார்த்துக் கொண்டேயிருந்தான். சொற்களற்ற நிர்கதியை அவன் அடைந்திருந்தான். பிறகு என்னிடம் போய்விடலாம் என்னமோ போலிருக்கு என்று சொன்னான். அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே வாத்தியார் ரொம்ப பெரிய ஆளுடா என்றபடியே அவன் அறியாமல் கண்ணீர் பெருகியது. அதை அவன் துடைத்துக் கொள்ளவேயில்லை. அது தான் சுஜாதாவின் ஆளுமை.
ஒரு எழுத்தாளராக அவரது புனைகதைகள் உருவாக்கிய வாசகர்கள் ஒரு பக்கம் என்றால் அவரது விஞ்ஞானம் மற்றும் நவீன தொழில்நுட்பம் பற்றிய அறிமுகத்தின் வழியாக
தங்கள் வாழ்வை உருவாக்கி கொண்டவர்கள் மறுபக்கம். இரண்டிலுமே அவருக்குத் தனியிடமிருக்கிறது.
சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் அளவு கன்னடத்தில் கூட வேறு எவரும் எழுதியிருப்பார்களா என்று தெரியவில்லை.
நாலைந்து முறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். அவரது தனித்துவம் அவரிடமிருந்த இயல்பான நகைச்சுவை. எதையும் நட்போடு எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு. நான் அறிந்தவரை இதுவரை அவர் எவரையும் பற்றி கடுமையாகப் பேசியோ, எழுதியோ அறிந்ததேயில்லை. எழுத்தாளர்களில் பலருக்கும் இல்லாத அரிய மனப்பக்குவம் அது.
ஒவ்வொரு முறை சுஜாதாவைச் சந்திக்கும் போது ஏதாவது ஒரு புதிய துறை சார்ந்து அவர் தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மனிதன் இவ்வளவும் படிக்கிறார் என்று.
ஒரு முறை லேண்ட்மார்கினுள் அவர் புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்து பார்த்தேன். அவர் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தவுடனே தீர்மானித்துவிடுகிறார். சில நிமிச நேரம் கூட தேர்வு செய்ய யோசிப்பதில்லை. எப்படி சார் அது என்று கேட்டவுடன் தாழ்ந்த குரலில் பட்சி சொல்லுது என்று சிரித்த முகத்தோடு சொன்னார். அவருக்குள் இருந்த பட்சி கடைசி வரை சரியாகவே சொல்லிக் கொண்டிருந்தது.
தமிழ் கதையுலகில் அவரது எழுத்து விசேசமானது. இதைவிட எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்ல முடியாது என்பதற்கு அவரது நடையே உதாரணம். சொற்களை அவர் பயன்படுத்தும் விதம் ஆச்சரியமளிக்ககூடியது. குறிப்பாக அவரது வர்ணனைகள். சொல்லை உடைத்து சுருக்கும் லாவகம். அதை சவுக்கடி வசனநடை என்று சொல்லலாம். ஒரு சொடுக்கில் தாவிச் செல்லும் அற்புதம் கொண்டது.
சுஜாதாவின் பழந்தமிழ் இலக்கியத் தேர்ச்சியும் தமிழ் கவிதைகளின் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடும் மிக முக்கியமானது. அவர் கவிதைகளை உணர்ந்து வாசிப்பதையும் தான் உணர்ந்தவற்றை உலகிற்கு அடையாளம் காட்டுவதையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இன்று பிரபலங்களாக உள்ள பல முக்கியக் கவிஞர்கள் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். அதுவும் அவர்களது முதல் தொகுப்புகள் வெளியான நாட்களில் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டவர்கள்.
அவரது கவிதைரசனை மொழிக்கு அப்பாற்பட்டது. சங்கக்கவிதையை ரசிப்பது போலவே ஹைகூ கவிதைகளை ரசித்திருக்கிறார். அவருக்கு வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் பிடித்திருக்கிறது இன்னொரு புறம் மகுடேஸ்வரனையும் பிடித்திருக்கிறது.
அவருக்குள் எப்போதுமே ஒரு கவிஞன் இருந்தான். அவன் மிக தன்னடக்கமானவன். எழுதி தன்னை காட்டிக் கொள்ளாதவன். மாறாக கவிதையை ரசிப்பதையும் கவிதையின் செயல்பாடுகள் பற்றி விவாதிப்பதிலும், கவிதை வாசித்தலின் வழியாக தியானநிலையை உணர்ந்தவனுமாக இருந்திருக்கிறான். பகடிக்காக அவர் எழுதிய மரபுக்கவிதைகளில் கூட இலக்கணம் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கணிப்பொறியியல், இலக்கியம் நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞான கதைகள், சிறுகதைகள் குறுநாவல்கள், இசை என்று அவர் தொடாத துறைகளே இல்லை. எதிலும் அவர் நுனிப்புல் மேயவில்லை. சிறிய உதாரணம், ஒரு முறை அவரோடு நீலி கதை தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு நிமிசம் இருங்கள் என்றபடியே அவரது புத்தக அடுக்கிலிருந்து நுறு வருசங்களுக்கு முன்பு வெளியான பெரிய எழுத்து நீலிகதையை கொண்டு வந்து வாசித்து காட்டி விளக்கினார். அவர் தேடுதலில் கொண்ட நாட்டம் ஆச்சரியமளிக்க கூடியது. அதே நேரம் தனக்கு தெரியாதது தொடர்பாக அவர் உடனே ஒத்துக் கொள்வதோடு அதைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்பதற்கும் தயாராக இருப்பார்.
தமிழ் சினிமாவில் அவரது கதைகள் முறையாகப் படமாக்கபடவில்லை என்ற குறை அவருக்குள் நெடுங்காலமாகவே இருந்து வந்தது. ஆனாலும் தான் வசனம் எழுதுகின்ற படங்கள் பற்றி அவருக்கு ஒரு குறையுமில்லை. அத்தோடு ஐம்பது வருசமாக எழுதப்பட்டு வந்த அடுக்குதொடர் வசனங்களும் கண்ணீர் மல்கி பெருகும் நீண்ட பிலாக்கணங்களையும் விலக்கி அவர் எழுதிய நறுக்கு தெறித்த வசனங்கள் இன்று என் போன்றோருக்கு முன்னோடியாக உள்ளன.
அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவருக்கும் எல்லோரையும் பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவரிடமிருந்த எளிமை மற்றும் நேர்பட பேசுதல். அத்தோடு குறைகாணாத பெரிய மனது.
எழுத்தாளர்களில் லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட முதல் எழுத்தாளர் இவர் மட்டுமே. இவரை இலக்கியாவதிகளும் வாசித்தார்கள். எளிய மனிதனும் வாசித்தான். இருவருக்கும் அவர் நெருக்கமாகவே இருந்தார். அதைப்பற்றி ஒரு போதும் அவர் பெருமிதம் கொண்டதில்லை மாறாக எளிய புன்னகை மட்டுமே கொண்டிருந்தார்.
சுஜாதாவின் எழுத்து மூன்று தலைமுறைகளை தாண்டி இன்றும் தொடர்ந்த வாசிப்பிற்கும் விருப்பத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அவரது ஆளுமை எண்ணிக்கையற்ற வாசகர்களை உருவாக்கியிருக்கிறது. மேம்படுத்தியிருக்கிறது. அவர்களில் நானும் ஒருவனாகயிருக்கிறேன்.
சுஜாதா அதிகம் பேசக்கூடியவரில்லை. பொது விழாக்களில் கூட அவர் பேசுவதற்கு மிகுந்த தயக்கம் கொள்வார். அவர் பேசுவிரும்பியதெல்லாம் எழுத்தானது. சர்சைகள் விவாதங்கள். பாராட்டுகள் யாவற்றையும் மௌனமாக ஏற்றுக் கொண்டிருந்தார். இனியும் அவரோடு பேசிக் கொள்ள அவரது எழுத்து மட்டுமே இருக்கும். அவரது மௌனம் கவிதையைப் போல எங்கும் எப்போதும் நீக்கமற்று நிறைந்திருக்க கூடும்.
பின்குறிப்பு. இதைக் கணிப்பொறியில் எழுதும் போது கூட முதல்முதலாக கணிப்பொறியில் எழுதியவர் சுஜாதா தான் என்ற நினைப்பு மேலோங்குகிறது. அவரைப்போல கணிப்பொறியில் எழுத வேண்டும் என்ற ஆசை சமீபமாக தான் சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக நானும் சொல்லிக் கொள்கிறேன்.
போய் வாருங்கள் வாத்தியாரே.
எழுத்தாக எப்போதும் இருப்பீர்கள்.
( எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றி )
Comments
Post a Comment