Skip to main content

சுஜாதா - நினைவுகள்! - என்.சி.மோகன்தாஸ்

இந்த வாரம் தினமலர் வாரமலரில் வந்த கட்டுரை


கேரளா  பரலூர் எனும் பகுதியில் 1982ல் முதன் முதலாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை செயல்படுத்த சுஜாதா வந்திருந்தபோது தான் அவருடன் எனக்கு முதல் சந்திப்பு.


அப்போது கொச்சியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். எழுத்தில் சக்கை போடு, போடும் நபரா இவர் என, முதல் நோட்டத்திலேயே சுஜாதா மீது ஏமாற்றம்! அவரது நடவடிக்கைகளை, "சாவி' பத்திரிகைக்கு எழுதலாமா எனக் கேட்டேன். "ஓ... தாராளமாய்!' என்றார். எழுத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்த எனக்கு, அவரை பற்றி எழுதி, பரபரப்பாய் நான் பேசப் பட வேண்டும் என்ற வேகம்; எனக்குள் பரபரப்பு. "இது அரசாங்கத்து சமாஜாரம். தப்பாய் எதுவும் வந்து விடப்படாது. எழுதி என்னிடம் காட்டிட்டு அனுப்பு!' என்றார். அதன்படியே எழுதிக் காட்டினேன்.



"ப்...ச்... போன்ற ஒற்றுக்களுக்கும், உங்களுக்கும் தகராறு போலிருக்கு!' என்று, கூறி விட்டு, சாப்பாட்டில் ஐக்கியமானார்.அன்றே அவசர தபாலில் சென்னைக்கு அனுப்பினேன். இரண்டு நாளில், சாவி அலுவலகத்திலிருந்து போன்... "கட்டுரை நன்றாக இருக்கிறது... பிரமாதமாய் பிரசுரமாகப் போகிறது!' என்று! அப்படியே மிதந்தேன்.


நண்பர்களிடமெல்லாம், "வருகிற வாரம், "சாவி' இதழை பாருங்கள்...' என்று கூறி, அகமும், புறமும் மகிழ்ந்தேன்.
தவிப்போடு காத்திருந்து, "சாவி' வாங்கி புரட்டினால் ஏமாற்றம்; என் கட்டுரையை காணவில்லை!


சுஜாதா, என்னிடம் அனுப்பச் சொல்லிவிட்டு, அங்கு போய் அதை, "வெளியிடாதீங்க...' என் றிருப்பாரோ என்று வேண்டாத சந்தேகம். பெரிய எழுத்தாளருக்கு ஏன் இத்தனை வஞ்சம் என்று நினைத்தபடி சாவி இதழுக்கு போன் பண்ணினால், "குமுதத்தில் அவரே எழுதி விட்டார். திரும்ப நாம போட்டால் நல்லாருக்காதுன்னு சாவி எடுத்துர சொல்லிட்டார்!' என்றனர்.


கைக்கு கிடைத்து வாய்க்கு கிடைக்காத நிலமை. என் கோபம் சுஜாதா மேல் திரும்பிற்று. இவ ருக்கு அதற்குள் என்ன அவசரம்? சாவியின் பிரசுரமான பின் அடுத்த வாரம் குமுதத்திற்கு எழுதியிருக்கலாமே  இவர் கொடுத்தால் எப்போது வேண்டுமானாலும் போடுவரே. என் நண்பர்களிடம் அவமானம்! அவரால் ஏற்பட்ட இழப்பை  அவரை வைத்தே தீர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னொரு சந்தர்ப்பத்தில், கொச்சி தமிழ்ச் சங்கத்தில் சுஜாதா பேசும்போது, சிறுகதை எப்படி எழுத வேண்டும், எப்படி அமைய வேண்டும் என்று இளம் எழுத்தாளர்களுக்கு விளக்கினார். அதைத் தொகுத்து சாவிக்கு அனுப்பினேன். அது இரண்டு வாரம் தொடர்ந்து பிரசுரமானது. "இப்போ என்ன சொல்றீங்க?' என்று கேட்கிற மாதிரி, அவர் பத்திரிகைகளே பார்க்க மாட்டார் என நினைத்து, சுஜாதாவுக்கு அனுப்பி வைத்தேன்.


சுஜாதா பேச்சில் சிக்கனம்; கடித விஷயத்திலோ மகா கஞ்சன்! இ மெயிலில் கூட ரொம்ப குறைவாக தான் எழுதுவார். என் கட்டுரை பற்றி அவரிடமிருந்து எந்த தகவலுமில்லை. ஆனால், அவரது புத்தக தொகுப்பு ஒன்றில் அதை அப்படியே என் பெயரில் சேர்த்து, அவர் மேல் பொய்யாய் இருந்த பகையை  பொல்லாப்பை போக்கிக் கொண்டார். அதன்பிறகு நான் குவைத் வந்து, முதல் முறை விடுமுறையில் சென்றபோது, குமுதம் ஆசிரியர் பொறுப்பிலிருந்த சுஜாதாவை சந்திக்கப் போனேன். எந்தவித வித்யாசமும் இல்லாமல் சகஜமாய் விசாரித்து, "குவைத் பற்றி குமுதத்தில் தொடர் கட்டுரை எழுதுங்களேன்!' என்றார்.


"சரி... சார்...' என்று, மழுப்பினேன். அன்று காலையில் தான் வேறொரு பத்திரிகைக்கு, அதே தொடர் எழுத ஒப்புக் கொண்டிருந்தேன். அதனால், குமுதத்தில், "கல்ப் "கன'வான்களுக்கு' என ஒரு கட்டுரை மட்டும் எழுதிக் கொடுத்தேன். பாராட்டி, வெளியிட்டார். யார், யாருக்கோ விருதுகள் கிடைக்கிறது. இந்த அறிவு  அறிவியல் களஞ்சியத்திற்கு பெரிய அங்கீகாரங்கள் யாரும் தர முன் வராதது ஏன் என்றே தெரியவில்லை. அவர் இப்போது, நம்மிடையே இல்லை. இனி, விழித்துக் கொண்டு விருதுகள் வழங்குவர்  வழக்கம் போல! தமிழ் எழுத்தாளனின், படைப்பாளியின், கவிஞனின் விதி இது!

Comments