ஆண்டாளின் அமுதம் - 5 மாயனை மன்னு வட மதுரை மைந்தனை* தூய பெருநீர் யமுனைத் துறைவனை* ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கை* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை** தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது* வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க* போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசாகும்; செப்பு ஏலோர் எம்பாவாய் இப் பாசுரத்தின் தொடக்க வார்த்தையும் கடைசி வார்த்தையும் தான் இந்தப் பாசுரத்தின் சாராம்சம். ”மாயனை செப்பு” முதல் வார்த்தையான ‘மாயன்’ என்பதில் முழுக் கிருஷ்ணாவதாரமும் ( மற்ற அவதாரங்களும் ) அடங்கிவிடும். இந்தப் பாசுரத்தை மெதுவாக ஒவ்வொரு வார்த்தையாகப் படித்துக்கொண்டு வந்தால் முதல் நான்கு வரிகளில் கிருஷ்ணாவதாரம் மொத்தமும் நம் கண்முன்னே வந்து செல்லும். கம்சனின் உபத்திரவம் தாங்க முடியாது அவனிடம் முறையிட்ட போது மாயனாக தேவகி வயிற்றில் சங்கு சக்கரங்களுடன் பிறந்து மாய வித்தை காண்பித்தான். அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி சாமானியக் குழந்தையாகக் காட்சி அளித்து மாயம் புரிந்தான். தூய பெருநீர் யமுனை வழிவிட யசோதைக்கு மாயச் செய்யும் குழந்தையானான். அங்கேயும் கம்சனின் தொல்லைகள் தொடர அ...