ஆண்டாளின் அமுதம் - 1
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்*
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்**
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்!*
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்
ஆண்டாளின் சரித்திரத்தை இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம். பாடிக்கொடுத்தாள், சூடிக்கொடுத்தாள். ஆனால் அவளின் திருப்பாவைக்கு உரைகள் எண்ணிலடங்காதவை.
ஆண்டாள் சங்கத் தமிழில் மட்டுமே பாடிக்கொடுத்தாள் என்று நினைக்கிறோம். அவள் வடமொழியிலும் நமக்கு அருளியிருக்கிறாள். ஆச்சரியப்பட வேண்டாம். அது தான் ஸ்ரீமத் ராமாயணம். இது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். எப்படி என்று சொல்லுகிறேன்.
கோதா ஸ்துதியில் ஸ்வாமி தேசிகன் ‘பொறுமையில் இவளே பூமிப்பிராட்டி!’ என்று ஆண்டாளைப் பூமித்தாயின் அவதாரம் என்கிறார். கோதையான பூமித்தாயின் காதான வான்மீகத்திலிருந்து தோன்றியது தான் ஸ்ரீமத் ராமாயணம். காதிலிருந்து தோன்றியதற்கே இந்த ஏற்றம் என்றால் அவளின் திருவாய் மூலம் பாடிக்கொடுத்த பிரபந்தத்துக்கு உள்ள ஏற்றம் அவ்வாறு இருக்கும் ?
வேதாந்த தேசிகன் அருளிச் செய்த அதிகாரசங்கிரகத்தில் குருபரம்பரையைச் சொல்லும் போது “நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக்கொண்டார்” என்கிறார். இந்த ’நன்னெறி என்பது என்ன என்று சற்று ஆராயலாம்.
உங்களுக்கு எல்லாம் தெரிந்த உய்யக்கொண்டார் அருளிச் செய்த தனியனை முதலில் படிக்கலாம்.
அன்னவயற் புதுவை * ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
இதில் பாமாலை என்று கூறாமல் ‘நற்’பாமாலை என்று உய்யக்கொண்டார் ஏன் கூறுகிறார்? சங்க நூல்களில் ஆற்றுப்படை என்று வகை ஒன்று இருக்கிறது. ஆறு - வழி; படை - படுத்துதல். இங்கே ஆண்டாள் எல்லோரையும் எழுப்பி வழிப்படுத்தி வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது என்று அழைத்துச் செல்கிறாள்.
திருப்பாவையில் பொதிந்துள்ள இந்த நன்னெறியை உய்யக்கொண்டார் கண்டதால் அதை ’நற்’பாமாலை என்றார். இந்த நற்பாமாலையை கேட்டால் பெருமாளே இசைவான். அதனால் இது இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை ஆனது. திருப்பாவை காட்டும் நன்னெறியை உரைக்க வல்லவரான உய்யக்கொண்டாரை, அதனால் தான் ஸ்வாமி தேசிகன் “நன்னெறியை உரைத்த உய்யக்கொண்டார்” என்கிறார்.
’மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்’ என்ற வரியை ஒத்த வரி ஒன்று பரிபாடலில் ( 11:77-78) இப்படி வருகிறது
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க
தனுசு ராசியில் சூரியன் இருக்கும் காலம் மார்கழி. அப்போது சந்திரன் மிதுன ராசியில் வரப் பௌர்ணமி நாளாகும். இது ஆதிரை நட்சத்திரத்தில் நிகழும்.
தமிழகத்திலும், கேரளத்திலும் இந்த மார்கழி நீராட்ட வழிபாடு நிகழ்ந்துள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளது. ராஜராஜன் காலத்துக் கல்வெட்டும் கூட உள்ளது.
தண்ணீரில் குடைந்து நீராடும் விளையாட்டாக ஆண்டாள் கூறினாலும், கண்ணனோடு கலந்திருக்கும் கலவியையே இது குறிக்கும் என்பது ஸ்ரீ வைஷ்ணவ உரையாசிரியர்களின் கருத்து.
ஏ.கே.ராமானுஜன் சில ஆழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘Hymns of the drowning’ என்று தலைப்பு கொடுத்தார். தமிழில் இதை மூழ்குபவர்களின் பாடல்கள் எனலாம்.
ஆழ்வாரில் ‘ஆழ்’ என்ற வேர்ச்சொல்லுக்கு ’மூழ்குவது, முழுக்குவது, ஆழமாக இருப்பது” போன்ற பொருள்கள் வருகிறது. அதாவது ’ஆழ்’வார்கள் நாரயாணனின் பக்திக் கடலில் அவன் மீதான அன்பால் உருகி(உருக்குகின்ற நெடுமாலே) மூழ்கினர்.
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எல்லோரையும் அந்தப் பக்திக் கடலில் நீராட அழைக்கிறார்.
சங்க தமிழ் பாடல்கள் எல்லாம் சாதாரண மானிடர்கள் தங்களுடைய ஆற்றலைச் செலவழித்து அனுபவிக்கும் சிற்றின்பப் பாடல்கள்.
ஆண்டாள் சொல்லுவதோ சங்கத் தமிழ் ’மாலை’ என்று அவன் ஆற்றலில் கிடைக்கும் பேரின்பப் பாடல்கள்.
நாராயணன் என்ற மணம் மிக்க பொய்கையில் ‘நீராட விருப்பமுள்ளவர்கள் வாருங்கள்’ என்று ஆண்டாள் எல்லோரையும் கிருஷ்ண அனுபவத்தில் நீராடி ழூழ்க கூப்பிடுகிறாள்!
(நீராடப் போதுவீர் போதுமினோ) என்று திருப்பாவையில் ஆண்டாள் அழைப்பு விடுப்பது போல
“முனைவன், மூவுலகு ஆளி அப்பன்
திரு அருள் மூழ்கினளே.”
என்று நம்மாழ்வார் பெருமாளின் அருளில் மூழ்குகிறார்.
நமக்கு அந்த மாதிரி மோகம் ஏற்பட என்ன செய்யவேண்டும் ? நம் உள்ளம் தூய்மையாக வேண்டும். என்ன செய்யலாம் ?
”கண்ணனுடன் நெருங்கிய தொடர்புடையது யமுனை. அதில் ஒருவர் நீராடினால் அவர்களுக்குப் புறத் தூய்மை கிடைக்கும். ஆனால் திருப்பாவையைப் பாடினால் அகம் தூய்மை அடைகிறது” என்கிறார் ஸ்வாமி தேசிகன் கோதா ஸ்துதியில்.
’ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்’ என்று நம்மாழ்வார் கூறுவது போல நம் அவன் நம் மனதுக்குள் சென்று நம் உடலே தித்திப்பாய் போய்விடும்.
”நீண்ட நேரம் நீராடினால் கண்கள் சிவக்கும். இனிப்பான தேனும் மிகுதியாக உண்டால் புளிப்பை உண்டாக்கும்” என்கிறது ஒரு குறுந்தொகை பாடல். ஆண்டாள் கோஷ்டி நீராட வரப் போகிறார்கள் என்ற எண்ணமே கண்ணுக்குக் கண்கள் சிவந்துவிட்டதாம்! அதனால் தான் அவன் “கார்மேனி செங்கண்”. பலர் கூடி அவனிடத்தில் அன்புடன் நீராடுவதால் அவன் “கூடல் அழகர்” ஆகிறான்.
”நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து” இன்றைய நாளைக் கொண்டாடுவோம்.
இந்த மார்கழி மாதம் அடியேனுக்கு வேறு சில பணிகள் இருப்பதால் சமயம் கிடைக்கும் போது ஆங்காங்கே படித்த/கேட்ட விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
- சுஜாதா தேசிகன்
16.12.2024
மார்கழி - 1
( படம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்கார சேவை )
Comments
Post a Comment