Skip to main content

ஆண்டாளின் அமுதம் - 4

 ஆண்டாளின் அமுதம் - 4


ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்*
ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்து ஏறி*
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து*
பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்**
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*
வாழ உலகினில் பெய்திடாய்!* நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்

இந்தப் பாசுரத்தில் வருணதேவனை ஆண்டாள் கூப்பிடுகிறாளா ? வணங்குகிறாளா ? அது ஆழி மழை ‘கண்ணா’வா? அண்ணாவா என்று பலவாறு அர்த்தம் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

பொதுவாக ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் “ஏன் மற்ற தேவதைகளை நீங்கள் வணங்குவதில்லை ?” என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது.”எனக்கு எல்லாத் தெய்வங்களும் ஒன்று தான்” என்று சிலர் சொல்லுவதையும் கேட்கிறோம்.

சிலப்பதிகாரத்தில் கோவலனை பிரிந்த வருத்தத்தில் இருக்கும் கண்ணகியிடம், தேவந்தி என்ற அவள் தோழி “நிறைய நாளாகக் காத்துக்கொண்டு இருக்கிறாயே!” என்று அவள் ஓர் உபாயம் சொல்லுகிறாள்.

“ஊரில் சோம குண்டம்-சூரிய குண்டம் என்ற குளத்தில் நீராடிவிட்டு, அங்கே இருக்கும் ஒரு மன்மதக் கோயிலில் வணங்கினால் பிரிந்தவர்கள் சேர்வார்கள்” என்கிறாள். அதற்குக் கண்ணகி “பீடு அன்று” என்று இரண்டு வார்த்தையில் பதில் சொல்லுகிறாள்.

பீடு என்றால் பெருமை “இது பெருமை சேர்க்காது” என்று பொருள்.

“கற்புடைய பெண்ணுக்கு இது பெருமை சேர்க்காது” என்று மறுத்துவிட்டாள்.

கணவனை வழிபடுகின்றவள் காமனை வழிபட நினைக்கவில்லை. 'தெய்வம் தொழாள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறாள். இல்வாழ்கைக்கு இன்பம் அடிப்படையன்று; அன்புதான் அடிப்படை என்பதை அறிவித்துவிடுகிறாள். கற்பின் திறத்துக்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.

இதில் நன்றாகக் கவனித்தால் கற்புடமையை நம்பும் பெண்களுக்கு அதுவே பலம். மற்ற பரிகாரம், தேவதைகள் எல்லாம் தேவை இல்லை. அது பெருமையும் சேர்க்காது.

ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லோருக்கும் பெருமாள் தான் கணவன். நாம் அவருக்கு வாழ்க்கைப்பட்டவர்கள். நமது கற்புடமை எப்படி இருக்க வேண்டும் ?

ஆழ்வார்கள் நாயக நாயகி பாவத்துக்கு எல்லாம் இது தான் அடிப்படை.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்! என்கிறார் வள்ளுவர்

இதை எல்லாம் சொல்லி நாம் ஒன்றையும் நிர்ணயம் செய்ய வேண்டாம். பெரியாழ்வார் பரத்துவ நிர்ணயம் செய்து கிழி அறுத்த கதை எல்லோருக்கும் தெரியும். பெரியாழ்வார் போல ஆண்டாள் கஷ்டப்பட வில்லை. அவள் அதை ஒரே வார்த்தையில் நறுக்கென்று ‘நாராயணனே’ என்று முதல் பாசுரத்திலேயே அதைச் செய்துமுடித்துவிட்டார். அதனால் அந்த வீண் சந்தேகம் எல்லாம் நம்தேவையே இல்லை.

ஆண்டாள் சொன்னால் வருண தேவன் கை கட்டிக்கொண்டு வந்து மழையைக் கொடுக்க வேண்டாமா ?

இங்கே ஆண்டாள் வருணதேவனை “முகந்து, கொடு, ஆர்த்தேறி”, “பெய்திடாய்” - நீ பொழிய வேண்டும் என்று கொஞ்சம் அதட்டும் தோரணையில் ஆணையிடுவது போல இருப்பதைக் கவனிக்கலாம். கண்ணன் நம் பக்கம் இருக்கும் போது தான் மற்ற தேவதைகளை இப்படி அழைத்துக் கட்டளையிட முடியும்.

வருண தேவனைப் பார்த்து மழை வேண்டும் என்று கேட்கும் ஆண்டாள் “ஊழி முதல்வன் போல் மெய் கறுத்து” என்று கூறுகிறாள்.

ஊழி முதல்வன் போல் கறுத்து என்று சொன்னாலே போதுமே எதற்கு “மெய்” என்று கூடுதலாக எதற்குச் சொல்லுகிறாள் ? இலக்கியம் பேசுபவர்கள் அது எதுகைக்கு அமைந்த வார்த்தை என்பார்கள். ஆனால் ஆண்டாள் என்ன சினிமா கவிஞரா வீணாக வார்த்தையை விரயம் செய்ய ?

திருவரங்கத்தில் மார்கழி மாதம். பகல் பத்து உற்சவம் கடைசி நாள். நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் சேவைச் சாதிப்பார். அப்போது பராசரபட்டர் பெருமாளைச் சேவித்துவிட்டு ”நாச்சியார் கோலம் மிகப் பொருத்தமாக இருக்கிறது.. இருந்தாலும் நாச்சியார் மாதிரி கண்களில் அந்தக் கருணை மட்டும் இல்லை” என்றாராம்.

அது போல எம்பெருமானுடைய நிறத்தை மேகங்கள் கொள்ளலாமே தவிர அவனுடைய கருணையைக் கொள்ள முடியாது. அதனால் ஆண்டாள் “மெய்” கறுத்து என்று கூறுகிறாள். கருமேகங்கள் மழைக்குப் பிறகு வெளுத்துவிடும், ஆனால் கண்ணனின் திருவுள்ளம் நமக்கு எப்போதும் அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று எப்போதும் கறுத்தே இருக்குமாம். அந்த வாத்ஸல்யம் வேண்டும் என்று உணர்த்தத் தான் ஆண்டாள் ‘மெய்’ கறுத்து என்று அழுத்தி தன் கருத்தைக் கூறுகிறாள்.

இதையே நாச்சியார் திருமொழியில் “பொருத்தம் உடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை” அதாவது, ”பொருத்தமுடைய தலைவன் கண்ணனின் உடல் போல உள்ளமும் கறுத்தவன்” என்கிறாள் ஆண்டாள்.

அடுத்து பெரியாழ்வார் பாசுரம் ஒன்றை அனுபவிக்கலாம்

கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக் *
கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல் *
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு *
அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை **
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் *
கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி * எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும் *
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே

பெரிய வாயும் கோபக் கண்களும் கொண்ட யானைக்கு ஒரு பாகன் சோற்றுக் கவள உருண்டையைக் கொடுப்பது போல, தேவர்களுக்கு எல்லாம் தேவனான கண்ணன், கோவர்த்தன மலையைத் தூக்கிய பொழுது, மேலே இருக்கும் மேகங்கள் கடலில் இறங்கி, தண்ணீரை அள்ளி, வானத்தில் உயர்ந்து, ஒரு குடத்திலிருந்து கொட்டுவது போல மழையைப் பொழிந்தது என்கிறார்.

இங்கே அதே போல் ஆண்டாளும் “ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்து ஏறி” என்கிறாள்.

திருவாய்மொழியில் ”பொலிக பொலிக” என்று ஆரம்பிக்கும் பாசுரத்தில் நம்மாழ்வார் எம்பெருமானாருடைய அவதாரத்தையே காட்டி எம்பெருமானார் அவதாரம் செய்வதற்கு முன்பாகவே ’பவிஷ்யதாசார்யன்’ பற்றிக் குறிப்பிடுகிறார் என்பது நம் ஆசாரியர்களின் நிர்ணயம்.

இந்தப் பாசுரத்தில் அதே போல் ஓர் அழகான கருத்து உள்ளது.

காஞ்சி வரதன் என்ற பேரருளாளன் தன் பெயருக்கு ஏற்றார் போல் கருமை நிற மேகம் போல் எல்லோருக்கும் பேர் அருளான கருணையைப் பொழிகிறான். அவன் எங்கே போய் முகந்து கொண்டு வருகிறான் ? ராமானுசர் என்ற கடலில். தினசரி தீர்த்த கைங்கரியம் செய்து செய்து ராமானுசர் கொண்டு சேர்த்த தீர்த்தத்தைக் குடித்துக் குடித்து அளவு கடந்த கருணையை ”தீங்கின்றி நாடெல்லாம்” பொழிகிறார் !

-சுஜாதா தேசிகன்
19.12.2024
மார்கழி - 4

Comments