Skip to main content

Pac-Man வீடியோ கேம்

Pac-Man வீடியோ கேம்




கம்ப்யூட்டர் வந்த புதிதில் பாக் மேன் என்ற வீடியோ கேம் ஒன்று கூட வந்தது பலருக்கு நினைவு இருக்கலாம். ஆங்கிலத்தில் மேஸ்(maze) என்பார்கள் தமிழில் புதிர் பாதை என்று சொல்லலாம். அந்தப் புதிர் பாதையில் பயணிப்பது தான் விளையாட்டு ரொம்ப சுலபம் ஆனால் கடைசி இலக்கை அடைவது மிகக் கஷ்டம்.

விளையாட ஆரம்பித்தவுடன், உங்களுக்கு மூன்று ‘லைப்’ இருக்கும், அவைகளை வைத்துப் புதிர்பாதையில் பயணிக்க வேண்டும். பயனிக்கும்போது எல்லா புள்ளிகளையும் சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும். முழுங்கும் புள்ளிக்கு ஏற்ப உங்களுக்குப் பாயிண்ட் கிடைக்கும். பாயிண்டுக்கு ஏற்ப உங்களுக்கு ஏதாவது பழம், தங்கம் என்ற உடனடி பரிசுகள் குவியும். 10,000 பாயிண்டு கிடைத்தால் இன்னொரு ‘லைப்’ கிடைக்கும்! எப்போதும் பரிசுகளே கிடைக்காது. சில சமயம் பயணிக்கும்போது நடுவில் பூதம் மாதிரி ஏதாவது வந்து உங்கள் இருக்கும் எல்லா பாயிண்டும் உயிரையும் வாங்கிவிடும்.

அடுத்த லைப் கொண்டு விளையாட வேண்டும். விளையாட விளையாடப் பாயிண்டுக்கு ஏற்ப அடுத்த நிலைக்குப் போகலாம். அடுத்தடுத்த நிலை இன்னும் கஷ்டமாக இருக்கும். விளையாட அரம்பித்து கொஞ்சம் பழகியபின் நீங்கள் விளையாடிப் பல நிலைக்குச் சென்று செத்து பிழைத்து ஆனால் கடைசி இலக்கை அடைய தவிப்போம். நண்பர்களிடம் கேட்டால்
“இந்த வழியில் போய்ப் பார், நான் அப்படி தான் சென்று நான்காம் நிலையில் இருக்கிறேன்” என்றும்.
”அப்படி எல்லாம் வேண்டாம் வேறு வழி காண்பித்து இங்கே வேகமாகச் சென்றால் உடனே ஐந்தாம் நிலைக்குப் போகலாம்” என்று அறிவுரை கூறுவார்கள். ஆனால் யாரும் இலக்கை அடைந்தவர்கள் இல்லை.

எல்லா வீடியோ கேமும் ஒரு விதமான நோய் தான். விளையாட ஆரம்பித்தால் முடிக்கும் வரை அதை விடமாட்டோம். ஒரு கட்டத்தில் நீங்கள் விளையாடுவதை விட கேம் உங்களை விளையாட ஆரம்பித்து உனக்கா எனக்கா என்று பார்த்துவிடலாம் என்று ஈகோ ஏற்பட்டு மீண்டும் மீண்டும் என்று இப்படியே பல மணி நேரம் ஏன் பல மாசம் என்று இலக்கை அடையமுடியாமல் தவிப்போம்.

எல்லா விடியோ கேமிலும் ஒரு ஹாக் இருக்கும் சிலருக்கு மட்டும் தான் தெரியும். ”ரொம்ப சுலபம்” என்று சொல்லும் நண்பன் சில சமயம் கிடைப்பார்கள். ஆர்வமாக “என் சொத்தை எல்லாம் உனக்கு எழுதிவைக்கிறேன் எப்படி என்று மட்டும் சொல்” என்றால் அந்த ரகசியத்தை உடைப்பான்.

“முதல் ஸ்டேஜ் ரொம்ப ஈசி அதற்குள் சென்றபின் 3 என்று அடிக்க வேண்டும்” அடுத்த நிலைக்கு உடனே போகலாம் அங்கே “6” என்று அடிக்க வேண்டும், உடனே மூன்றாம் நிலைக்கு அழைத்துச் செல்லும் அங்கே “12” என்று அடித்த உடன் “கேம் ஓவர் .. இலக்கை அடைந்துவிட்டாய். புதையல் உனக்கே” என்று சொல்லும்.

வழக்கம்போல இந்த வீடியோ கேம் பற்றிய உரை கீழே !

கம்ப்யூட்டர் வந்த புதிதில் பாக் மேன் என்ற வீடியோ கேம் ஒன்று கூட வந்தது ( பலப்பலப் மயக்கங்கள் இவ்வுலகில் மக்களுக்கு உண்டாகுமாறு மாயச் செயல்களை புரிந்து இன்புற்று அவனின் திருவருள்படி அவன் லீலையை ஆரம்பிக்கிறார். நம்மாழ்வார் ”இன்புறும் இ விளையாட்டு உடையானை” என்கிறார் ). பலருக்கு நினைவு இருக்கலாம்.

ஆங்கிலத்தில் மேஸ்(maze) என்பார்கள் தமிழில் புதிர் பாதை என்று சொல்லலாம். விளையாட்டுக்கு அறிவு தேவை இல்லை. அந்தப் புதிர் பாதையில் பயணிப்பது தான் விளையாட்டு ரொம்ப சுலபம் ஆனால் கடைசி இலக்கை அடைவது மிகக் கஷ்டம். ( ’அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய’ அறிவில்லை என்று தெரிந்துகொள்வது தான் அறிவு’ என்கிறார் நம்மாழ்வார் )

விளையாட ஆரம்பித்தவுடன், உங்களுக்கு மூன்று ‘லைப்’ இருக்கும், ( பல பிரவிகள் ) அவைகளை வைத்துப் புதிர்பாதையில் ( இலக்கு இல்லாமல் ) பயணிக்க வேண்டும். பயனிக்கும்போது எல்லா புள்ளிகளையும் சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும். ( ஜீவாத்மா அத்தை தின்று அங்கே கிடக்கும்..) முழுங்கும் புள்ளிக்கு ஏற்ப உங்களுக்குப் பாயிண்ட் கிடைக்கும் ( புண்ணியம் ) பாயிண்டுக்கு ஏற்ப உங்களுக்கு ஏதாவது பழம், தங்கம் என்ற உடனடி பரிசுகள் குவியும் ( புண்ணியத்தால் பலன்கள் ) . 10,000 பாயிண்டு கிடைத்தால் இன்னொரு ‘லைப்’ கிடைக்கும்! ( பிரம்ம லோகமே கிடைக்கலாம் ) எப்போதும் பரிசுகளே கிடைக்காது. சில சமயம் பயணிக்கும்போது நடுவில் பூதம் மாதிரி ஏதாவது வந்து உங்கள் இருக்கும் எல்லா பாயிண்டும் உயிரையும் வாங்கிவிடும். ( பாவம் அதற்கு ஏற்ற பலன்கள் )

அடுத்த லைப் கொண்டு விளையாட வேண்டும். ( அடுத்த பிறவி ) விளையாட விளையாடப் பாயிண்டுக்கு ஏற்ப அடுத்த நிலைக்குப் போகலாம். அடுத்தடுத்த நிலை இன்னும் கஷ்டமாக இருக்கும். ( கர்ம, ஞான யோகம் ) விளையாட அரம்பித்து கொஞ்சம் பழகியபின் நீங்கள் விளையாடிப் பல நிலைக்குச் சென்று செத்து பிழைத்து ஆனால் கடைசி இலக்கை அடைய தவிப்போம். ( மோட்சம் என்ற இலக்கை அடைய இந்த யோகம் எல்லாம் மிக கஷ்டம் )

நண்பர்களிடம் கேட்டால்
“இந்த வழியில் போய்ப் பார், நான் அப்படி தான் சென்று நான்காம் நிலையில் இருக்கிறேன்” என்றும்.
”அப்படி எல்லாம் வேண்டாம் வேறு வழி காண்பித்து இங்கே வேகமாகச் சென்றால் உடனே ஐந்தாம் நிலைக்குப் போகலாம்” என்று அறிவுரை கூறுவார்கள். ஆனால் யாரும் இலக்கை அடைந்தவர்கள் இல்லை. ( பல மார்க்கங்கள், தியான, யோக சாமியார்கள் )

எல்லா வீடியோ கேமும் ஒரு விதமான நோய் தான். விளையாட ஆரம்பித்தால் முடிக்கும் வரை அதை விடமாட்டோம். ( எல்லா ஜீவாத்மாவும் என்றாவது இலக்கை அடையும் ) ஒரு கட்டத்தில் நீங்கள் விளையாடுவதை விட கேம் உங்களை விளையாட ஆரம்பித்து உனக்கா எனக்கா என்று பார்த்துவிடலாம் என்று ஈகோ ஏற்பட்டு ( நம் முயற்சி செய்தால் எதுவும் முடியாது ) மீண்டும் மீண்டும் என்று இப்படியே பல மணி நேரம் ஏன் பல மாசம் என்று இலக்கை அடையமுடியாமல் தவிப்போம் ( பல பிரவிகள் எடுத்து முடியாமல் தவிப்போம்... நம்மாழ்வார் ”நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே” என்று எல்லாம் அவன் விளையாட்டு அவனிடம் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்கிறார். ஆனால் அவனிடம் ஜெயிக்க ஒருவழி இருக்கு )


எல்லா விடியோ கேமிலும் ஒரு ஹாக் இருக்கும் சிலருக்கு மட்டும் தான் தெரியும். ”ரொம்ப சுலபம்” என்று சொல்லும் நண்பன் சில சமயம் கிடைப்பார்கள். ( தகுந்த ஆசாரியன் தான் நண்பன் )

ஆர்வமாக “என் சொத்தை எல்லாம் உனக்கு எழுதிவைக்கிறேன் எப்படி என்று மட்டும் சொல்” என்றால் அந்த ரகசியத்தை உடைப்பான். ( ஆசாரியனிடம் என் ஆத்மா பெருமாளுடையது என்று பரிபூர்ண சரணாகதி செய்த பின் )

“முதல் ஸ்டேஜ் ரொம்ப ஈசி அதற்குள் சென்றபின் 3 என்று அடிக்க வேண்டும்” அடுத்த நிலைக்கு உடனே போகலாம் அங்கே “6” என்று அடிக்க வேண்டும், உடனே மூன்றாம் நிலைக்கு அழைத்துச் செல்லும் அங்கே “12” என்று அடித்த உடன் “கேம் ஓவர் .. இலக்கை அடைந்துவிட்டாய். புதையல் உனக்கே” என்று சொல்லும்.
( மூன்றில் ஒரு மூன்று மூவிரண்டு முந்நான்கும்
தோன்றத் தொலையும் துயர்

மூன்றில் - ரஹஸ்யத்ரயத்தில், ஒரு - ஒப்பற்ற மூன்றும் - மூன்று பதங்களை உடைய திருமந்திரமும், மூவிரண்டும் - ஆறு பதங்களையுடைய த்வயமும், முந்நான்கும் - பனிரண்டு பதங்களடங்கிய சரமஸ்லோகமும், தோன்ற - அர்த்ததுடன் ப்ரகாசிக்க, துயர் - துக்கங்கள், தொலையும் - தொலைந்து போகும் ! )

- சுஜாதா தேசிகன்
6.12..2019
45ஆம் பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்

Comments