ஆண்டாளின் அமுதம் - 3
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகள**
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்
சென்ற பாசுரத்தில் ஐயமும், பிச்சை என்று வந்ததால் உடனே ஆண்டாளுக்கு நமக்காகக் கையேந்தி பிச்சை கேட்ட வாமன அவதாரம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். உடனே ஓங்கி உலகளந்த உத்தமனைப் பாடுகிறாள்.
உத்தமனைப் பாடி என்று சொல்லாமல் உத்தமன் ‘பேர்’ பாடி என்று எதற்குச் சொல்லுகிறாள். பெருமாளைக் காட்டிலும் அவனுடைய திருநாமத்துக்கு ஏற்றம் அதிகம் என்பதைச் சுட்டிக் காட்ட, பெரியவாச்சான் பிள்ளை ’அவன்’ கட்டிப்பொன் போலே, ‘திருநாமம்’ பணிப்பொன் போலே என்கிறார்.
கட்டிப்பொன் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது, அதுவே பணிப்பொன் போல என்றால் அழகிய நகைகளாக அணிந்துகொள்ளலாம்.
முதல் பாசுரத்தில் ’வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது’ என்று கூறியிருந்தேன். அதற்கு ஒரு கதை உண்டு. ஓர் அரசன் தன் நாட்டிலிருந்து வைகுண்டம் எவ்வளவு தூரம் என்று கேட்டான். அரசவையில் இருந்த பண்டிதர்கள் எல்லோரும் முழித்தார்கள். வழக்கம் போல் அரசன் பரிசு அறிவிக்க, ஓர் ஏழைப் பாகவதன் ‘வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது’ என்று கூறினான். எப்படி என்று அரசன் கேட்க கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே என்று கூப்பிட்ட உடன் பெருமாள் நேரில் வந்தார் என்று வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது என்றார்.
கணினி உலகில் ’ஜம்ப் ஸ்டார்ட் ( jump start ) ’ என்ற வார்த்தை ஒன்று இருக்கிறது. அதே போல இயந்திரப் பொறியியலில் ( mechnical engineering ) ‘கிக் ஸ்டார்ட்’ ( kick start ) என்ற வார்த்தை இருக்கிறது. இது எல்லாம் என்ன என்று சொல்லி உங்களைக் குழப்பப் போவதில்லை.
முதலையிடம் அகப்பட்ட கஜேந்திரன் பெருமாளை கூப்பிட்ட உடனே அவசர அவசரமாகக் கருடன் மீது குதித்துப் பறந்து வந்தான். இது - jump start
‘நாராயணா’ என்ற நாமம் சொல்லும் பிரகலாதனைக் காக்கத் தூணை உடைத்து வெளியே வந்தான் - இது kick start
தன் தாயை ஓயாமல் அடிக்கும் மகன், அடித்து அடித்து கை வலிக்கும் போது ‘அம்மா’ என்று அழைப்பது போல பெருமாளின் திருநாமம் என்கிறார் பட்டர்.
திருமங்கை மன்னன் ஒரு படி மேலே சென்று பெற்ற தாயைவிட நாராயணன் நாமம் நன்மை தரும் என்கிறார்.
“நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்”. கண்டுகொண்டது மட்டுமல்லாமல் அந்த நாமத்தைச் சேவித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்றும் பட்டியலிடுகிறார்.
அந்தச் சொல்லை கண்டுக்கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.
பாடவல்ல நாச்சியார் என்று பெயர் எடுத்த ஆண்டாள் சும்மா இருப்பாளா ? 30 பாசுரத்தில் எவ்வளவு பாட என்று நீங்களே எண்ணிக்கொள்ளலாம்.
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி ; ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி ; தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது - வாயினால் பாடி ; பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி - கேசவனைப் பாடவும் ; பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு ; மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று - நாமம் பலவும் நவின்று ; முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட ; மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் ; கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி
பங்கயக் கண்ணானைப் பாட ; மாற்றாரை மாற்று அழிக்க - வல்லானை மாயனைப் பாடு ; தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடு ; உன் மைத்துனன் பேர் பாட
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி ; கோவிந்தா! - உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு
அதனால் தான் திருப்பாவை முப்பதும் செப்பினால் “நீங்காத செல்வம் நிறைந்து எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்”.
பாம்பு தீண்டினால் அந்த விஷம் நீங்க கருட மந்திரத்தை உச்சரிக்கிறோம். கருடனையே கொண்டு வந்து கட்டுவதில்லையே! அது போலத் தான் திருப்பாவையும்.
-சுஜாதா தேசிகன்
18.12.2024
மார்கழி - 3
Comments
Post a Comment