ஆண்டாளின் அமுதம் - 5
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை*
தூய பெருநீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கை*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை**
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும்; செப்பு ஏலோர் எம்பாவாய்
இப் பாசுரத்தின் தொடக்க வார்த்தையும் கடைசி வார்த்தையும் தான் இந்தப் பாசுரத்தின் சாராம்சம். ”மாயனை செப்பு”
முதல் வார்த்தையான ‘மாயன்’ என்பதில் முழுக் கிருஷ்ணாவதாரமும் ( மற்ற அவதாரங்களும் ) அடங்கிவிடும். இந்தப் பாசுரத்தை மெதுவாக ஒவ்வொரு வார்த்தையாகப் படித்துக்கொண்டு வந்தால் முதல் நான்கு வரிகளில் கிருஷ்ணாவதாரம் மொத்தமும் நம் கண்முன்னே வந்து செல்லும்.
கம்சனின் உபத்திரவம் தாங்க முடியாது அவனிடம் முறையிட்ட போது மாயனாக தேவகி வயிற்றில் சங்கு சக்கரங்களுடன் பிறந்து மாய வித்தை காண்பித்தான். அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி சாமானியக் குழந்தையாகக் காட்சி அளித்து மாயம் புரிந்தான். தூய பெருநீர் யமுனை வழிவிட யசோதைக்கு மாயச் செய்யும் குழந்தையானான். அங்கேயும் கம்சனின் தொல்லைகள் தொடர அவற்றை இந்த மாயன் முறியடித்தான். ஆயர்பாடியில் யசோதைக்கு மாய லீலைகள் பல செய்து காட்டினான். ஆயர்பாடியில் கறந்த பாலில் தன் பிஞ்சு காலை அதில் தோய்த்து அதைத் தயிராக்கினான். அதிலிருந்து கிடைத்த வெண்ணெய் உண்டு உலகம் உண்ட பெருவாயா என்ற பெருமாயன் அவன் . தயிர்ப் பானைக்கு மோக்ஷம் அளித்து மாயம் புரிந்தான். கண்ணன் ஆயர்பாடியில் வசித்த பின் தேவகியிடம் திரும்பியதும் யசோதை அனுபவித்தது போல் நான் அனுபவிக்க முடியவில்லையே என்று ஏங்கிய போது ‘குன்றினால் குடை எடுத்ததும்’ என்று குலசேகரப் பெருமாள் கூறியது போல அவன் செய்த மொத்த லீலைகளையும் தேவகி பார்த்து அனுபவிக்கும்படி செய்து மகிழ்வித்த மாயன். இப்படி எல்லாவற்றையும் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் நம் ஆழ்வார்கள் அவன் யசோதையிடம் கட்டுப்பட்டு கட்டுண்ட விஷயத்தை தான் கொண்டாடுகிறார்கள். அதைத் தான் இங்கே ஆண்டாள் ‘தாமோதரன்’ என்று குறிப்பிடுகிறாள்.
இந்தத் திருநாமத்துக்கு ஏன் இவ்வளவு ஏற்றம் ?
வள்ளுவர்
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
பார்வைக்கு எளிமை, சொல்லுக்கு இனிமை உடைய மன்னனை நாடு புகழும் என்கிறார். பகவானோ இந்தப் பிரபஞ்சத்துக்கே மன்னன் அவன் காட்டிய எளிமையை என்னவென்று கூறுவது ? இதுவே ஒரு பெரிய மாயம் அல்லவா ?
அதைத் தான் மதுரகவி ஆழ்வார் ‘கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண பண்ணிய பெரு மாயன்’ என்கிறார். இதை நினைவு கூர்ந்து நம்மாழ்வார் ‘எத்திரம் உரலினோடு இணைந்து இருந்த ஏங்கிய எளியே!” என்று அந்த வித்தகனை எண்ணி ஆறு மாதம் கண்ணீர் மல்கிக் கிடந்தார்.
பெரியாழ்வார்
சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பி தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே
அதாவது நான் உனக்கு உடமை என்பதற்கு அடையாளமாக என் தோள்களில் ‘சக்கரப்பொறி’ ஒற்றிக்கொண்டு விட்டேன். அதே போல் நீ எங்கள் பந்தத்துக்குக் கட்டுப்பட்டு அந்தப் பந்தத்திற்கு அடையாளமாகத் தாமோதரனாக இருக்கிறாய். உன் வயிற்றில் இருக்கும் அந்தத் தழும்பே அதற்கு அடையாளம் என்கிறார். தாம என்பதற்கு ‘பந்தம்’ என்று பொருள்.
மதுரகவி ஆழ்வாரின் பாசுரத்தை இப்படிப் படிக்க வேண்டும்.
சின்னஞ்சிறு முடிகளையுடைய 'கண்ணி' தாம்பு
உடலில் அழுந்தும்படியான 'நுண்' தாம்பு
நீட்டமில்லாத 'சிறு' தாம்பு கயிறு
பக்தி என்ற கயிற்றால் கட்டுப்பட்டான். அதில் இருக்கும் சின்னஞ்சிறு 'கண்ணி' முடிகள் தான் ’தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி’ என்று தான் நாம் சிறு பக்தி முடிகள் உடைய நீட்டமில்லாத 'சிறு' பக்தி தாம்புக் கயிற்றைக் கொண்டு, அவன் உடலில் அழுந்தும்படியான ‘மனத்தினால் சிந்திக்க' என்ற 'நுண்' தாம்புக் கயிற்றைக் கொண்டு நாம் அவனை நாம் கட்டவேண்டாம். அவனே அதற்குக் கட்டுப்படும் எளிய மாயன்.
இவனே கட்டுப்பட்டு இவனே அதை அறுத்துக்கொள்ள முடியாமல் நாம் செய்யும் சிறு பக்திக்குக் கைமாறாக இவனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஏங்கி நிற்கும் மாயன்!
இதனால் தான் “எத்திரம் உரலினோடு , இணைதிருந்து ஏங்கிய எளிவே” என்று நினைத்தவாறே நம்மாழ்வார் பெருமாளுடைய குணத்தை வியந்து ஆறு மாசம் மயக்க நிலையிலேயே இருந்தார்.
நம்முடைய பந்தத்தையும் அவன் நம்மிடம் கட்டுப்பட்ட பந்தத்தையும் அவனாலும் நம்மாலும் அறுக்க முடியாது என்பதைத் தான் ஆண்டாள் பிறகு
’உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ என்கிறாள்.
மாயன் என்பதை - மா ஆயன் என்றும் கூறலாம். அதாவது சிறப்புமிக்க,பெரிய என்று பொருள். அதாவது சிறப்புமிக்க,பெரிய ஆயன். அவனே மாயன்.
-சுஜாதா தேசிகன்
20.12.2024
மார்கழி - 5
Comments
Post a Comment