ஆண்டாளின் அமுதம் - 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு*
செய்யும் கிரிசைகள் கேளீரோ!* பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,*
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி**
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்*
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்*
ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் கை காட்டி*
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்
இன்று ஐயம், பிச்சை என்ற இந்த இரண்டு வார்த்தைகளைப் பற்றி சில விஷயங்களைக் கூறுகிறேன். கேட்காதவர்களுக்குக் கொடுப்பது ஐயம், அதாவது கேட்காவிட்டாலும் குறிப்பு அறிந்து கொடுத்தல். பிச்சை என்பது யாசகம் கேட்பவர்களுக்குக் கொடுப்பது என்பதை முன்குறிப்பாக கொடுக்கிறேன்.
சென்ற வாரம் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது கையில் குழந்தையுடன் ஒரு பெண் என்னிடம் பிச்சைக் கேட்டாள். ”சில்லறை இல்லை” என்றேன். அவள் விடாமல் என்னைச் சுற்றி வந்து கேட்க, கோபமாக அவளைத் தவிர்த்தேன். விரட்டி விட்டேன் என்று கூறச் சொல்லலாம். வீட்டுக்கு வந்த பிறகு அதைப் பற்றி யோசித்தேன். பக்கத்தில் இருக்கும் கடையில் சில்லறை வாங்கி தந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அந்தப் பெண் கேட்ட போது கொடுக்கலாம் என்று என் மனம் ஒரு நொடி சொல்லியது ஆனாலும் ஏனோ கொடுக்கவில்லை. ஏதோ தடுத்துவிட்டது.
கர்ணன் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கும் போது யாசகனாக வந்த அந்தணனுக்கு இடக்கையில் வைத்திருந்த தங்க எண்ணெய் பாத்திரத்தை இடதுகையாலே கொடுத்துவிட்டானாம்.
தைத்ரிய உபநிஷத் வாக்கியம் `ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்.’
தானத்தைக் கொடுக்கும் போது, இவர்களுக்குக் கொடுக்க நாம் பாக்யம் பெற்றிருக்கிறோம் என்று கொடுக்கும் பொருள் மீது சிரத்தை காட்டாமல், சிரத்தையோடு கொடுக்க வேண்டும். மனம் கொடுக்க இசையும் சமயத்திலேயே கொடுத்துவிட வேண்டும். இடக்கையிலிருந்து வலக்கையில் வாங்குவதற்குள் மனம் மாறிவிட வாய்ப்புண்டு. அதனால் தான் கர்ணன் இடதுகையாலேயே தானத்தைச் செய்தான்.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
ஒருவன் செல்வம் இல்லை என்று சொல்லும் முன் குறிப்பு அறிந்து அவனது வறுமையைப் போக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
நீங்கள் கொடுக்கும் ஐயமும் பிச்சையும் ( ஆந்தனையும் = ஆகும் தனையும், முடிந்த அளவு ) போதும் போதும்’ என்று கை காட்டும் வரை கொடுக்க வேண்டும். போதும் என்று கை காட்டிவிட்டால் அதற்கு மேல் நாம் அளவுக்கதிகமாக ’over do' செய்யக்கூடாது.
இதற்கும் மஹாபாரதத்தில் ஒரு கதை உண்டு. யாகம் முடிந்து ததியாராதனை நடந்துகொண்டு இருக்கிறது. அந்தணர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்க அங்கே வந்த பீமன் எல்லோரையும் அதட்டி இன்னும் சாப்பிடுங்கள், இன்னும் சாப்பிடுங்கள் என்று பரிமாறிக்கொண்டு இருந்தான். மறு நாள் அந்தணர்கள் யாரும் சாப்பிட வரவில்லை. கிருஷ்ணர் பீமனை ஒரு மலைக்குச் சென்று அங்கே ஒரு முனிவரைப் பார்த்துவிட்டு வரச் சொன்னான். பீமனும் அங்கே சென்றான். முனிவரை தூரத்தில் பார்த்தான். முனிவர் “பீமா அருகில் வா!” என்று அழைக்க, அவர் வாயிலிருந்து துர்நாற்றம் வீசியது. அந்தத் துர்நாற்றத்தைச் சகிக்கமுடியாமல், தப்பித்தால் போதும் என்று பீமன் ஓடி வந்து கிருஷ்ணனிடம் காரணத்தைக் கேட்டான். அதற்குக் கிருஷ்ணர் இந்த முனிவர் ஒரு காலத்தில் சாப்பாடு பரிமாறும் போது உன்னைப் போல அதட்டிக்கொண்டே பரிமாறினார் என்றார்.
கடைசியாக திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில்
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று* இரந்தவர்க்கு இல்லையே என்று *
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ * நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை **
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால் * படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி *
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்.
என்கிறார்.
ஏழ்மையினால் கஷ்டப்பட்டு ஐயா ஒரு கவளம் சோறு கொடுங்கள் என்று கதறி பிச்சைக் கெட்டவர்களுக்கு, இல்லை என்று கடும் சொல்லால் மறுத்து நீசனானேன். இதனால் ஏற்படும் பாவத்தை எண்ணி அஞ்சி நடுங்கி இங்கே உன் திருவடிகளை சரணடைந்தேன் என்கிறார்.
பரமன் அடி பாடி என்பதில் ஒரு விஷயம் இருக்கிறது. பரமன் என்றால் பரமாத்மா என்று பொதுவான அர்த்தம் இருந்தாலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் மூலவரான வடபத்ரசாயிக்கு இன்னொரு திருநாமம் ‘பரம ஸ்வாமி’ - ஆண்டாளை வியக்காமல் இருக்க முடியவில்லை.
-சுஜாதா தேசிகன்
17.12.2024
மார்கழி - 2
Comments
Post a Comment