பாட்டியின் தீபாவளி
தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம். என் பள்ளி காலத்தில் இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு.
தீபாவளி கொண்டாட்டங்களை கெடுத்ததில் முக்கிய பங்காற்றியது ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்ற கொலைகாட்சிககளுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.
தீபாவளிகள் பல கொண்டாடியிருந்தாலும், திருச்சியில் சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள்தான் இன்னும் நினைவில் இருக்கிறது. பட்டாசு வெடிக்கும் அந்த நாள் மட்டும் தீபாவளி இல்லை, முதலிரவு கணவன்போலச் சில மாதங்களுக்கு முன் எதிர்பார்ப்புகளிருந்து தீபாவளி தொடங்கிவிடும். பட்டாசு லிஸ்ட், புதுத் துணியுடன் தீபாவளி ரிலீஸ் சினிமாவும் அதில் பிறகு சேர்ந்துகொண்டது. அலைப்பேசி இல்லாத அந்தக் காலத்தில் வரும் தொலைப்பேசி அழைப்பில் ’கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்ற விசாரிப்புகள் இன்று ‘ஹாப்பி தீபாவளி’ ’வாட்ஸ் அப்’ல் சுருங்கிவிட்டது.
தீபாவளிக்கு என்ன டிரஸ் என்று முடிவு செய்வது பிரம்ம பிரயத்தனம். அந்த வருஷம் வந்த சினிமாவிற்கும் டிரஸ்ஸுக்கு நிச்சயம் சம்பந்தம் இருக்கும்.
புது வசந்தம் வந்த வருடம், திருச்சியில் பலர் மஞ்சள்-கருப்பு காம்பினேஷனில் டிரஸ் போட்டுக்கொண்டு அலைந்தார்கள். அடுத்த வருடம் சஃபாரி ஜுரம் என்னையும் சேர்த்து பலருக்குப் பரவியது. ராமர் கலரில் சஃபாரி போட்டுக்கொண்டு என்னுடைய பெல்பாட்டம் ஊரை எல்லாம் பெருக்கியது. அதே உடையில் இன்று சரவண பவனுக்கு சாப்பிட சென்றால் உங்களை மேனேஜர் என்று நினைத்து சல்யூட் அடிப்பார்கள்.
நான் படிக்கும்போது ’ரெடிமெட்’ வரவில்லை. சட்டை பிட், பேண்ட் பிட் வாங்கி அதைத் தைக்க வேண்டும். வாங்கிய துணி சட்டையாக எப்படி மாறும் என்ற கற்பனையில் அதைத் தைக்கக் கொடுக்க அப்பாவுடன் டைலர் கடைக்கு விஜயம் செய்வேன். தற்போது திருச்சியில் ரிதம்பாஸ் இருக்கும் இடத்தில்(இன்னும் இருக்கா ?) ஒரு சின்னப் பெட்டிக் கடை சைசில் ஓர் ஆஸ்தான டைலர் இருந்தார். வாங்கிய துணியைக் கொடுத்தவுடன் அதை அளந்து பார்த்து, 10 சென்டிமீட்டர் குறைகிறதே... சரி அட்ஜஸ்ட் செய்து தைக்கிறேன் என்று ஒரு தேதி தருவார். அது கிட்டதட்ட தீபாவளிக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முன்னாடி இருக்கும்.
"அண்ணே கைல ஒரு மடிப்பு வரணும்.. பேண்டுல மூன்று ஃபிளீட்...சைடு பாக்கெட்... உள்ளே சீக்ரெட் பாக்கெட்... மறந்துடாதீங்க" என்று நான் சொல்லுவதை எல்லாம் ஒழுங்காகக் குறிப்பு எடுத்துக்கொள்வார்.
அவர் குறிப்பிட்ட நாள் அன்று அவர் கடைக்குச் சென்றால் சோப்பு துண்டால் மார்க் செய்யப்பட்டு துணியை அரச மரச் சுள்ளிக் கட்டு மாதிரிக் கட்டி வைத்திருப்பார்.
"'நாளைக்கு மறுநாள் தீபாவளி.. இன்னும் தைக்கலையா ? தீபாவளிக்கு போட்டுக்கணும்...சரியில்லைனா ஆல்டர் வேற செய்யணும்"
"ராத்திரி 10 மணிக்கு வாங்க.. நிச்சயம் முடிந்திருக்கும்"
10 மணிக்குப் போகும் போது தையல் துணி மிஷினில் அடிப்பட்டுக்கொண்டு இருக்கும். ஆண் குழந்தையை எதிர்பார்த்து பெண் குழந்தை வருவது போல.. ( அல்லது பெண் குழந்தையை எதிர்பார்த்து ஆண் குழந்தை )
"அண்ணே... கைல மடிப்பு கேட்டேனே"
"அதுவா தம்பி... நான் சொல்லல பத்து சென்டிமீட்டர் கம்மி.
அவர் காலுக்குக் கீழே வெட்டப்பட்டு துணி பதினைந்து சென்டிமீட்டர் சிதறி கிடக்கும்.
"பேண்ட சைடு பாக்கெட் கேட்டேன் நீங்க முன்னாடி வெச்சிட்டீங்களே"
"அப்படியா... அடடே... பரவாயில்லை...இந்தக் கலருக்கு இது நல்லா தான் இறுக்கு.. போன கமல் படம் பார்க்கலை ? அதுல முன்னாடி தான் வைத்திருப்பார்"
வீட்டுக்கு வந்து போட்டுக்கொண்டு பார்க்கும்போது மர்மஸ்தானத்தை ஏதோ இழுப்பது போலவும்.
(அம்மா “கை எடுடா அங்கிருந்து”)
உட்கார்ந்தால் முட்டியை இறுக்கி மசாஜ் மாதிரி இருக்கும்.
பாட்டி அதைப் பார்த்துவிட்டு...
"ஏண்டா கீழே இவ்வளவு குட்டையா இருக்கு... ஒரு வாரத்துல நீ இன்னும் உசந்து போயிடபோற" என்பாள்.
நான் ஒன்பதாவது படிக்கும்போது என்று நினைக்கிறேன். மலைக்கோட்டை பக்கம் கிருஷ்ணா ரெடிமேட் வந்து இந்தப் பிரச்சனையிலிருந்து என்னை விடுவித்தது. அதற்குப் பிறகு அந்த டைலர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
எல்லாத் தீபாவளி மலர்களையும் என் அப்பா வாங்கிவிடுவார். மலர்களைத் தமிழ் சினிமா மாதிரி ஒரு ’டெம்ப்ளேட்டில்’ அடக்கிவிடலாம். சங்கராசாரியார், அருளுரைகளுடன் ஆரம்பித்து ( பிறகு அவை நின்று விட்டது!) விளம்பரக் கூட்டங்களுக்கு நடுவில் ஓவியங்களையும், ஒளிந்துகொண்டிருக்கும் சில நல்ல சிறுகதைகளைத் தேடுவது சுவாரசியமான பொழுதுபோக்கு.
தலை தீபாவளி மாப்பிள்ளை, துணி எடுக்கும் பெண்கள் போன்ற ஜோக்ஸ் கட்டாயம் இருந்தே தீரும். உதாரணத்துக்கு, “ஏங்க…ஏங்க காஞ்சிபுரம், தர்மாவரம், பனாரஸ் இந்த ஊரெல்லாம் நெனச்சா உங்களுக்கு என்ன ஞாபகம் வருது”
“திருப்பதி, திருச்செந்தூர், பழனி ஞாபகம் வருது”
பட்டாசுகளைத் திகட்டத் திகட்ட வெடித்திருக்கிறோம். அதற்குக் காரணம் என் நண்பனின் அப்பா போலீஸில் இருந்தது தான். யானை வெடி வாங்க காந்தி மார்கெட் போயிருக்கிறேன். பட்டாசைச் சாதாரணமாக வெடித்த மாதிரி ஞாபகம் இல்லை. புஸ்வாணம், மத்தாப்பு வகைகளைப் பிரித்து, அதன் ரசாயன வெள்ளி துகள்களை ஒரு டப்பாவில் அடைத்து, திரியைச் சொருகி, அதை ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் இறக்கி… . அதை எல்லாம் இப்போது நினைக்கும்போது பயமாக இருக்கிறது. ராக்கெட்டின் குச்சியைக் கழட்டி தரையில் ஓடவிட, ’கள்’ குடித்த குரங்குபோல அந்த ஏவுகணை பக்கத்து விட்டு ஜன்னல் உள்ளே சென்ற சற்று நேரத்தில் உள்ளே அலறல் சத்தம் கேட்க… , பழைய காம்ப்ளான் டப்பாவில் உள்ளே அணுக்குண்டு போட்டு விட்டு ஓடியிருக்கிறோம். இதற்கு மேலேயும் செய்திருக்கிறோம் ஆனால் பொதுநலம் கருதி அதை எங்கே எழுதாமல் விட்டுவிடுகிறேன். இதை எல்லாம் விட என் பாட்டி வெடித்த வெடியைப் பற்றிக் கடைசியில் சொல்லுகிறேன்.
வெங்கடேஷ் பட் இல்லாத யூடியூப் காலத்தில் பாட்டி ஓர் ஆழாக்குக்கு ஒரு கைபிடி என்று ஏதோ அளவு சொல்லத் தீபாவளிக்கு ஒரு வாரம் முன் அம்மாவும் பாட்டியும் தேன்குழல், நாடா, முள், கை , மைசூர்பாக், தீபாவளி லேகியம் என்று மும்முரமாக இருக்க… நாங்கள் ரிலீஸ் ஆகப்போகிற படங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்போம். ’தளபதி’ காலை ஆறு மணி ரசிகர்கள் காட்சிக்குக் கை நிறைய மிட்டாய் கொடுத்து, படத்தில் வரும் 'சுந்தரி பாட்டை' கட் செய்தார்கள். படத்துக்கு நடுவில் சீட்டுக்கு அடியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். மீதி படத்தைச் சப்பளாம் கொட்டிக்கொண்டு பத்மாசனத்திலே பார்த்தது நினைவில் இருக்கிறது.
நாயகன் படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பற்றிப் பலரிடம் பேசியிருக்கிறோம். நாயகன் கமல் மாதிரி ஆக வேண்டும் என்று பலர் மீசையை எடுத்தார்கள்.
ஒரு நாளில் எவ்வளவு சினிமா பார்க்கலாம் என்று யாராவது கேட்டால் அதற்குச் சரியான பதில் - 5. தீபாவளி அன்று நிச்சயம் 4 படங்கள் பார்த்துவிடுவோம். அடித்துப் பிடித்து டிக்கெட் எல்லாம் வாங்க வேண்டாம். ஒரு நண்பனின் அப்பா போலீஸ் அடுத்த நண்பனின் அப்பா பட விநியோகஸ்தர்.
ஒரு தீபாவளிக்கு பாக்யராஜின் ’ராசுக்குட்டி’ படப்பெட்டி ஏதோ காரணத்தால் தாமதமாக வர, நைட்ஷோ இரவு 12.30க்கு ஆரம்பித்தது. அந்தத் தீபாவளி மட்டும் ஐந்து படம். மறுநாள் படத்தின் கதைகள் காய்கறிகள் குழைந்து அவியல் போலக் குழம்பியிருக்கும்.
தீபாவளி முதல் நாள் இரவு தெப்பக்குளம், NSB சாலை நடைமேடை கடையில் பனியன், ஜட்டி, கைக்குட்டை, வேட்டி, வெடி என்று எல்லாவற்றையும் குவித்து வைத்து விற்பார்கள். கருர், ஜீயபுரம், லால்குடி என்று சுத்துப்பட்ட எல்லா ஊர்களிலிருந்தும் வருபவர்கள் இனிமேல் இது எல்லாம் அடுத்த தீபாவளிக்குத் தான் கிடைக்கும் என்பதைப் போல அள்ளிக்கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன்.
தீபாவளி என்றால் என் பாட்டி நினைவுக்கு வருவாள். காலை வாசலில் ‘மல்லிகை முல்லை’ நாதஸ்வரத்துடன் வானொலியில் ‘உன்னைக் கண்டு நான் ஆட’ பாடலுடன் பட்டாசு சத்தம் ஜுகல் பந்தியாக ஒலிக்க, ‘தீபாவளி இனாம்’ வாங்கச் சிலர் வாசலில் வந்து நிற்பார்கள்.
என் பாட்டி “உங்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லையே ?” என்பாள்.
“பாட்டி, நாங்க வருஷா வருஷம் தீபாவளிக்கு மட்டும்தான் வருவோம்! அதனால, தினமும் எங்களைப் பார்க்க முடியாது. சீக்கிரம் ஏதாவது கொடு, நிறைய வீட்டுக்குப் போக வேண்டும்!” என்று அவசரப்படுத்துபவர்களை, “கொடுக்கிறேன்! உன் கண் ஏன் சிவந்திருக்கு? ராத்திரி சரியா தூங்கலையா?” என்று விசாரித்துவிட்டு சில்லறையைக் கொடுப்பாள். போதைக் கண்ணுக்கும் தூங்காத கண்ணுக்கும் பாட்டிக்கு வித்தியாசம் தெரிந்தாலும் தெரியாதது போலப் பேசுவாள்.
இப்படிப் பல நினைவுகள் இருந்தாலும், என் தாத்தாபற்றி என் அப்பா கூறிய சம்பவத்தை வியக்காமல் இருக்க முடியாது. என் தாத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியத் தேசிய இராணுவத்தில் ( INA ) சேர்ந்து, போர்க் கைதியாகச் சிங்கப்பூரில் மாட்டிக்கொண்டு, உயிருடன் இல்லை என்று தீர்மானித்து அவருக்குத் திவசம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
பிணக் குவியல்களுக்கு நடுவில், பர்மா வழியாக இந்தியா வந்து தீபாவளிக்கு சில மாதங்கள் முன் ஒரு நாள் திடீர் என்று வீட்டு வாசலில் நின்றார். அன்று தான் பாட்டிக்குத் தலை தீபாவளி!
என் பாட்டி வெடித்த வெடியைப் பற்றிச் சொல்லுகிறேன்.
ஒரு தீபாவளி விடியற் காலை நான் குளித்துக்கொண்டு இருந்தேன். திடீர் என்று சமையல்கட்டில் பயங்கரச் சத்தம் புகையும் குப்பைக்கும் நடுவில் பாட்டி பயந்துகொண்டு இருந்தாள்.
”என்ன ஆச்சு பாட்டி ?" என்று எல்லோரும் உள்ளே நிழைந்தோம்.
"உனக்கு மத்தாப்பு கொளுத்த மெழுகுவத்தி பத்த வெச்சேன்...”
குளித்துவிட்டு வெடிக்க நான் வைத்திருந்த ஒத்த லக்ஷ்மி வெடி அது. பாட்டி மெழுகுவத்தி என்று நினைத்து லக்ஷ்மி வெடியை... இன்றும் எனக்கு அந்தத் தைரியம் வரவில்லை.
எல்லோருக்கும் இனிய தீவாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
- சுஜாதா தேசிகன்
31.10.2024
Unforgettable Nostalgia moments
ReplyDelete