ராமனைக் கற்போம்
நேற்று ஒருவர் என்னிடம் நான் பணிபுரியும் இடத்தில் பொறாமை குடிகொண்டுள்ளது இவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை உங்களிடம் ஏதாவது தீர்வு இருக்கிறதா என்று கேட்டார். எனக்குள் பொறாமை இருக்க நான் எப்படித் தீர்வு கொடுக்க முடியும் என்று நினைத்தவாறே ’இராமபிரானை கற்போம்’ என்ற புத்தகத்தை அன்று இரவு திறந்தேன். அதில் ஸ்ரீமத் ஆண்டவன் பொறாமை குறித்து விவரித்திருந்தார்( நிஜமாகவே!).
”கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?” என்ற ஆழ்வார் திருவாக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இங்கே ஆழ்வார் ”கற்பவர்கள் ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ? என்கிறார். இதில் இரண்டு வார்த்தைகளை ஒளிந்துகொண்டு இருக்கிறது. அதைச் சேர்க்க வேண்டும்.
முதலில் பிரான் - ’பிரான்’ என்றால் ’பெருங்கருணை’ என்று ஒரு பொருள். இப்போது
”கற்பவர்கள் பெருங்கருணை கொண்ட ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ?”
அடுத்த வார்த்தை ’குணக்கடலான’ என்பது. இது ஸ்ரீராமர் என்ற வார்த்தையிலேயே ஒளிந்துகொண்டிருக்கிறது. அதையும் சேர்த்தால்
‘”கற்பவர்கள் பெருங்கருணை கொண்ட குணக்கடலான ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ?”
உங்களுக்கு எல்லாம் வால்மீகி முனிவரின் கதை தெரிந்திருக்கும். வேடனாக இருந்த வால்மீகி ராமநாமத் தாரக மந்திரத்தைச் சொல்லித் தவம் புரிந்தார். எந்த மந்திரத்தை ஜபம் செய்கிறோமோ அதன் பொருளை, தேவதையை, அதன் குண விசேஷங்களைத் தியானம் செய்து ஜபம் செய்ய வேண்டும் என்பது பொதுவிதி. எனவே அவர் ராம நாமத்தை மனதில் தியானித்து குண விசேஷங்களைக் கண்டு களித்தவர், நாரதரிடம் ”இப்பேர்ப்பட்ட குணங்களை உடைய ஒருவர் இப்பூவுலகில் இருக்கிறாரா ?” என்று கேட்க அதற்கு நாரதர் எல்லையற்ற சகல கல்யாண் குணங்களும் பொருந்தியிருக்கும் ஒருவர் ’ஸ்ரீராமன்’ ”என்று பதில் கூறினார்.
வால்மீகி கேட்ட ஒரு கேள்வியில் “பிறர் ஆக்கம் குணநலன்கள் கண்டு அசூயை இல்லாதவன்” என்ற யார் என்று வருகிறது.
ஸ்ரீமத் ஆண்டவன் கூறும் சில விஷயங்களை உங்களுக்கு இங்கே தருகிறேன்.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். ( குறள் - 168)
பொறாமை என்பது மஹா பாபி, மிகக் கொடியது. இந்தப் பாபியோடு ஏற்படும் தொடர்பு "திருச் செற்றுத் தீயுழி உய்த்துவிடும்" அதாவது நம் செல்வத்தை அழித்து விடுமாம். அது மட்டுமா? நம்மை நரகத்திற்கு இழுத்துச் சென்று தள்ளிவிடுமாம், இத்தகைய தீயப் பண்பினை- பிறர் உயர்வைக் கண்டு பொறாமைப் படுவதை அறவே ஒழித்தவனாம் ராமன். பிறர் குணம் கண்டு மகிழ்வானேயொழிய அதைத் திரித்து, குற்ற மாகப் பேசும் பழக்கம் சிறிதும் இல்லாதவன்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதும்
உண்பதுமின்றிக் கெடும் ( குறள் - 166 )
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படுபவன், இவ்வுலக வாழ்விற்குத் தேவையான செல்வத்தையும், மேலுலகை எய்துவதற்குரிய புண்ணியத்தையும் இழப்பான், பிறருக்கு வரும் செல்வத்தைக் கண்டு அஸூயைப்பட்டால் உடுக்க உடையும் உண்ண உணவுமின்றி அழிவான் என்கிறது குறள்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் (குறள்-167)
வாழ்வாங்கு வாழும் ஒருவனைக் கண்டு (அழுக்காறு: பொறாமை) பொறாமைப்பட்டால் மஹா லக்ஷ்மி, தான் அவனுக்குச் செல்வத்தைக் கொடுக்காமல் தன் தமக்கையாகிய மூதேவியை அனுப்பிவிடுவாளாம்.
சென்ற வாரம் அடியேனுடைய ஆசாரியனான ஸ்ரீமத் 46 பட்டம் அழகியசிங்கரை சேவிக்கச் சென்றிருந்தேன். அவர் அறை சாத்தப்பட்டிருந்தது. அங்கே இருந்தவரிடம் சேவிக்க வேண்டும் என்று கூறினேன். “ஆசாரியன் ஸ்ரீமத் ராமாயணப் பாராயணம் செய்துகொண்டிருக்கிறார்..” என்று கதவைத் திறந்துவிட்டார். ஸ்ரீமத் ராமாயணத்துடன் இருக்கும் ஆசாரியனைச் சேவித்துவிட்டு வந்தேன்.
இது தொன்றுதொட்டு வரும் வழக்கம். தினமும் மத்தியம் பட்டரும் அவருடைய தம்பியான சீராமப்பிள்ளை ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகங்களைச் சேவிக்க அதை உடையவர் கண்களை மூடி திருச்செவி சாற்றுவார் என்கிறது குருபரம்பரை.
உடையவரின் பெருமையைக் கூற வந்த திருவரங்கத்தமுதனார் ‘படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் இராமானுசன்’ என்கிறார்.
‘ஹேராம்’ என்று உயிரை விட்ட காந்தியடிகளின் ‘ராம நாம’ பக்தி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். நமக்குச் சுதந்திரம் கிடைத்ததற்கு ‘மஹாத்மா’ காந்தி என்று சொல்லுகிறோம். அவருக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது? அவர் தொடர்ந்து ஜபித்த ‘ராம’ நாமம்தான்! நமக்குச் சுதந்திரமே ‘ராம’ நாமத்தில்தான் கிடைத்தது என்று சொன்னால் மிகையாகாது.
காந்தியடிகளுக்கு எப்படி ராம நாமத்தின் மீது இவ்வளவு ஈடுபாடு வந்தது?
”சின்ன வயதில் பேய் பிசாசு பயம் எனக்கு உண்டு. ராம்பா என்ற செவிலித்தாய் எனக்கு ஓர் உபாயம் சொன்னாள். விடாமல் ‘ராம நாமம்’ சொன்னால் பயம் போய்விடும் என்றாள். எனக்கு உபாயத்தைவிட அவளிடம் நம்பிக்கை இருந்தது. தினமும் ராம நாமம் சொல்ல ஆரம்பித்தேன். அந்தத் தவறிழைக்காத ராம நாமத்தின் விதைதான் இன்றும் என்னைக் காக்கிறது’ என்றார்.
குணக்கடலான ராமரை, அவருடைய ராம நாமத்தைத் தினமும் தியானித்ததால் தான் அவரிடம் பல நற்குணங்களைக் காணமுடிந்தது.
இன்று ராமரை நிந்திப்பவர்கள், ராமாயணத்தைக் கேலி பேசுபவர்களிடம் நற்குணங்களையும் நேர்மையையும் எப்படிக் காண முடியும் ?
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்*
சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து*
ஆர் வினவிலும் வாய் திறவாதே*
அந்த காலம் அடைவதன் முன்னம்**
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து*
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி*
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு,*
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே
என்கிறார் பெரியாழ்வார் புலம்புகிறார்.
(சோர்வு: களவு, ஆர்வம்: பக்தி, அரவ தண்டம்: யமபாதை)
கடைசிக் காலத்தில் பேச முடியாத நிலை, வாழ்நாளில் ஈட்டிய பொருள்கள் பலப்பல. அவற்றை ஒளித்து வைத்திருப்பார், சிலரிடம் கொடுத்து வைத்திருப்பார். குறிப்பிட்ட சிலருக்குச் சிற்சில பொருள்களைக் கொடுக்க எண்ணம். பேச முடிந்தால் அன்றோ வைத்த இடத்தைச் சுட்டி, வைத்திருப்பவரை அடையாளம் கூறி எடுத்துக் கொள்ளச் சொல்லலாம். உறவினர்களும் நண்பர்களும் சுற்றி அமர்ந்து, 'அதை எங்கு வைத்திருக்கிறாய், இது யாரிடம் இருக்கிறது" என வினவும் போது வாய்திறந்து சொல்ல முடியாது. சொல்ல முடியவில்லையே எனக் கண்களில் நீர் வரும், இத்தகைய மரணகாலம் வருவதற்கு முன்,
துணையும் சார்வும் ஆகுவார் போல்*சுற்றத்தவர் பிறரும்*
அணைய வந்த ஆக்கம் உண்டேல்,*அட்டைகள் போல் சுவைப்பர்**
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த*எம் கார் முகிலை*
புணை என்று உய்யப் போகல் அல்லால்*இல்லை கண்டீர் பொருளே
என்று நம்மாழ்வார் அந்தப் புலம்பலுக்கு விடை தருகிறார்
ஆபத்துக் காலத்தில் துணை போலவும், உதவுவது போலவும் உற்றார் உறவினர்களும் உங்கள் செல்வம் உள்ளவரை அட்டைகள் போல ஒட்டி உறவாடுவார்கள். இவர்களை நம்புவதைவிட ஒரே அம்பினால் ஏழு மரங்களை அநாயாசமாகத் துளைத்த எங்கள் எம் காளமேகப் பெருமாளை தஞ்சம் அடைவது தான் ஒரே வழி என்பதை அறிவீர்களாக என்கிறார்
ஸ்ரீமத் ராமாயணத்தையும், ஸ்ரீராமரையும் படித்திருந்தால் தமிழ்நாட்டில் லஞ்சப் பணத்தையும், கர்நாடகாவில் நிலத்தையும் திருப்பிக் கொடுப்பதைத் தவிர்த்திருக்கலாம்!
அதனால் தான் ஆழ்வார் ”கற்பவர்கள் பெருங்கருணை கொண்ட குணக்கடலான ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ?”
ராம நாமத்தை கற்றாலே நற்குணங்கள் வரும் என்கிறார் ஆழ்வார்.
- சுஜாதா தேசிகன்
2.10.2024
காந்தி ஜெயந்தி

ஓவியம் : நன்றி கேஷவ்
Arumai Sir 🙏
ReplyDelete