சிங்கமாய தேவ தேவன்
நரசிம்ம அவதாரம் என்பது நரசிம்ம பிரபாவமா ? அல்லது பிரகலாதன் சரித்திரமா ? என்ற கேள்விக்கு என்றுமே பதில் கிடையாது. நரசிம்மரிடம் கேட்டால் “என் பக்தனுக்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவன். அதனால் இது என் பக்தனான பிரகலாதனின் கதை” என்பார். பிரகலாதனோ ”தனக்காக இரணியன் சொல்லும் தூணிலிருந்து உடனே வந்தாக வேண்டுமே என்று சர்வ வல்லமை மிக்க எம்பெருமானே ஒரு நொடி கலங்கினார். தன் பக்தனுக்கு அருள் மழையால் மூழ்கடித்து அவன் குண நலன் எவ்வளவு மகத்தானது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது அதனால் இது நரசிங்கனின் பிரபாவம்” என்பான்.
இவர்களுடைய பிரபாவத்தை பேச ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் முடியாத விஷயத்தை ஸ்ரீ நரசிம்மர் அருள் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை ஸ்ரீராமானுஜர் காட்டிக் கொடுத்தார். சுமார் ஆயிரம் வருடம் பின்னோக்கி செல்ல வாசகர்களை அழைக்கிறேன்.
ஸ்ரீ வைஷ்ணவச் சம்பிரதாயம் எங்கும் பரவி வளர வேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் ‘அறியக் கற்று வல்லார் வைட்ணவர்களைக் கொண்டு 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார். இந்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுக்கும் அவர்களுடைய நித்திய ஆராதனைக்கு ஸ்ரீலட்சுமி நரசிம்ம விக்ரகத்தைத் தந்தருளினார். ஸ்ரீமந் நாராயணனின் மற்ற அவதாரங்களைக் குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும் ஏன் ஸ்ரீநரசிம்மரை தேர்ந்தெடுத்தார் என்பதற்குக் காரணம் எங்கும் சொல்லப்படவில்லை என்றாலும் யூகிப்பதில் சிரமம் இல்லை.
தொண்டனூரில் பிரஹலாதனால் நிறுவப்பட்ட யோக நரசிம்மப் பெருமாள் ஆசீர்வதிக்க, ஸ்ரீராமானுஜர் 1000 சமணர்கள் ஒரே சமயத்தில் 1000 கேள்விக்கணைகளை வீச அவர்கள் எல்லோருக்கும் ஒரே சமயத்தில் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக உருவெடுத்து வாதத்தில் வென்றார்.
இராமானுசர் திருக்கோட்டியூர் நம்பியிடமிருந்து ரகசிய அர்த்தங்களைப் பெற்று, ‘திருக்கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவாராய்’ என்று தெற்காழ்வார் சந்நிதியிலே திரண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கெல்லாம் அவ்வர்த்தங்களை பிரசாதித்து அருளி எம்பெருமானார் என்ற திருநாமம் பெற்ற தெற்காழ்வார் சந்நிதி நரசிம்மர் சந்நிதி!
இராமானுச நூற்றந்தாதியில் ‘அன்று வாள் அவுணன் கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன்கீர்த்திப் பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தை இராமாநுசன்’ என்கிறார் அமுதனார். அதாவது ‘இந்த நரசிங்கப் பிரானுடைய கீர்த்தியான பயிர் ஓங்கி வளருமாறு தன் திருவுள்ளத்தில் தேக்கிய இராமானுசன்” என்கிறார். இந்த இராமாநுச நூற்றந்தாதி விளைந்த இடம் ‘காட்டழகிய சிங்கர் பெருமாள் கோயில்’ என்பது தற்செயலாக இருக்க முடியாது.
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஆரம்பத்தில் வரும் திருமாமம் ‘நரஸிம்ஹவபு:’’ - ஆபத்தில் இருக்கும் பக்தர்களைக் காக்க ஏற்ற வடிவத்தை எடுத்துக்கொண்டு ’அங்கு அப் பொழுதே’ ஓடோடி வருகிறான் என்று பொருள். இதை நம்மாழ்வார்
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப் பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே
எம்பெருமானைத் திட விஸ்வாச பக்தியினால் பற்றினால் எந்த வேறுபாடின்றி அவன் அருளை எல்லோரும் பெறலாம் என்பதையே இந்த அவதாரம் காட்டுகிறது. ஸ்வாமி வேதாந்த தேசிகன் காமாஸிகாஷ்டகத்தில் நரசிங்கப் பெருமானே நீ என்னைக் காக்கும் போது மற்ற தெய்வங்களை நாடவேண்டிய அவசியம் இல்லை. நீ காக்காமலிருக்கும் பொழுதும் மற்ற தெய்வங்களை நாடி என்ன பயன் ? இந்த மனவுறுதியுடன் உன்னையே எந்நாளும் சரணடைகிறேன் என்கிறார்.
பிரகலாதனின் கதை உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் இன்னொரு முறை கைக் கொள்ளும் அளவுக்கு அதை அள்ளிப் பருக உங்களை அழைக்கிறேன்.
பெருமாள் சந்நிதி வாசலில் துவாரபாலகர்களைப் பார்த்திருப்பீர்கள். துவாரம் என்றால் நுழைவாயில். பாலகர்கள் என்றால் காப்பவர்கள். நுழைவாயில் காவல் புரிபவர்கள். அவர்களுக்கு ‘ஜயன் விஜயன்’ என்று பெயர். ஒரு சமயம் பிரம்ம தேவனின் மானசீகப் புத்திரர்களான சனகாதி முனிவர்கள் மூவுலகையும் சுற்றி வந்த போது காரிய வைகுண்டத்தை வந்தடைந்தார்கள். இந்த முனிவர்கள் பார்ப்பதற்கு ஐந்தாறு வயதுக் குழந்தைகளைப் போல் இருக்க, சிறுகுழந்தைகள்தானே என்று எண்ணிய ஜெய விஜயர்கள் அவர்களை உள்ளே போகவிடாமல் தடுத்தனர்.
முனிவர்கள் கோபம் கொண்டு ”ரஜஸ், தமோ குணங்கள் மேலோங்கி இருக்கும் உங்களுக்கு வைகுண்டத்தில் வசிக்கும் தகுதி இல்லை. ஆகவே நீங்கள் அசுர பாவிகளாகப் பிறவி எடுப்பீர்கள்” என்று சபித்தனர்.
வைகுந்தத்திலிருந்து கீழே விழ, அதைக் கண்ட சநகாதிகள் அவர்கள் மீது கருணைக் கொண்டு “மூன்று பிறவிகளில் இந்தச் சாபத்தை அனுபவித்துவிட்டு, வைகுந்தம் திரும்புவீர்கள்” என்று சாபவிமோசனம் அருளினார்கள்.
ஜெய விஜயர்கள் இருவரும் காச்யபரின் மனைவியான திதி என்பவளுக்குப் புத்திரர்களாகப் பிறந்தனர். மூத்தவன் இரணியன் என்ற இரண்யகசிபு, இளையவன் இரண்யாக்ஷன். இரண்யாக்ஷனை வராகமூர்த்தியாக வதம் செய்த பின் அண்ணனாகிய இரண்யகசிபு பெருமாள் மீது கடும் கோபம் கொண்டு பழிக்குப் பழி வாங்கும் உள்ளத்துடன் எங்கெல்லாம் விஷ்ணுவிற்கு நெருக்கமான அந்தணர்களும் பசுக்களும் வேதங்களும் ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று அவற்றைத் தீக்கிரையாக்கி அழிக்கச்செய்தான்.
தன்னை எவரும் வெற்றி கொள்ளக்கூடாது, மரணம் கூடாது, பகைவனே இருக்கக் கூடாது, அகில உலகங்களுக்கும் தானொருவனே அரசனாக வேண்டும் என்று எண்ணம் வர, இதற்காக நெடுங்காலம் கடும் தவம் செய்தான். பிரம்மதேவர் தோன்றி “தவத்தின் பயனை நீ அடைந்துவிட்டாய். உனக்கு எனக்கு என்ன வரம் வேண்டும் ?” என்றார்
இரணியனும் “தங்களால் படைக்கப்பட்ட எந்த ஜீவராசிகளாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. உள்ளேயோ -வெளியிலோ, பகலிலோ - இரவிலோ, தங்களால் படைக்கப்படாவிட்டாலும் தக்ஷன் முதலியவர்களால் படைக்கப்பட்டவற்றாலோ, அஸ்திர-சஸ்திரங்களாலோ, மண்ணிலோ-விண்ணிலோ, மனிதர்களாலோ, விலங்குகளாலோ, உயிருள்ளவை-உயிரற்றவை, தேவர்கள்-அசுரர்கள், நாகர்கள் முதலியவர்களால் கூட மரணம் ஏற்படக் கூடாது. போரில் என்னை எதிர்ப்பவர்களே இருக்கக் கூடாது” என்று வேண்ட, பிரம்ம தேவர் அவனுக்குக் கேட்ட வரத்தை அளித்தார்.
வரம் வாங்கிய இரணியன் செருக்குடன் பல கொடுமைகளைச் செய்து வந்தான். இந்திரன் முதலான தேவர்களை விரட்டினான். மூன்று உலகையும் வென்று அதிக கர்வம் அடைந்தான்.
அந்தச் சமயம் இரணியன் மனைவி கயாது கருவுற்றாள். இரணியன் இல்லாத ஒரு சமயம் இந்திரனால் கயாதுவிற்கு ஆபத்து ஏற்பட, அச்சமயம் நாரதர் கயாதுவை காப்பாற்றி தன் ஆசிரமத்தில் பாதுகாத்தார். தினமும் ‘நாராயண’ மந்திரமும், விஷ்ணுவின் மகிமையும் கயாது கேட்டாள். அவளுடன் அவள் வயிற்றில் வளர்ந்த சிசுவும் கேட்டது. கருவிலேயே அந்தச் சிசு சிறந்த விஷ்ணு பக்தன் ஆகி, மிகக் கொடியவனான இரணியனுக்கு மிகவும் நல்லவனான பிரகலாதன் பிறந்தான்!
குழந்தைப் பருவம் முதலே ‘உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’ என்று பகவானிடம் அன்பு பக்தி என்று ஒன்றுபட்ட மனத்தோடு லயித்தான்.
இதைக் கம்பர்
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்,
நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன்,
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு தக்கோன்
அந்த இரணியனுக்கு அரிய ஒரு மைந்தன்; அறிவாளிகளில் சிறந்த அறிவாளி;வேதங்களை விடவும் தூயவன்; எல்லா உயிர்களுக்கும் நல்ல அறங்களுக்கும் தலைவன், ஒப்பற்ற ஞாநி; தாயைவிடச் சிறந்த அன்பு உடையவன். ஒப்பற்ற உத்தமன் பிரகலாதன்
என்று வியக்கிறார்.
கல்வி கற்கும் பிராயம் வந்ததும் பிரகலாதன் குருகுலத்தில் கல்வி கற்க ஏற்பாடு செய்தான். ஒரு நாள் இரண்யகசிபு தன் அன்பு மகன் பிரகலாதனை ஆசையோடு மடியில் ஏற்றி வைத்துக் கொண்டு “குழந்தாய்! இவ்வளவு நாட்கள் நீ படித்தாயே சாரமான விஷயத்தைச் சொல்லப்பா?” என்றான்.
”சொல்கிறேன் தந்தையே கவனமாக கேளுங்கள். ஆதியும், நடுவும், முடிவும் இல்லாதவன்; எல்லாக் காலங்களிலும், எல்லாத் தேசங்களிலும் இருப்பவன். இறப்பும் பிறப்பும் இல்லாதவன். வளர்ச்சியும் அழிவும் அற்றவன். ஜகத்தில் எல்லாக் காரணங்களுக்கும் காரணமானவன். உண்டாக்குதல் அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனான அந்த அச்சுதனை அடிபணிந்து நிற்கிறேன். அவனை வணங்கி வழிபடுவதே சாரமான விஷயம்” என்றான்.
இதைக் கேட்ட தந்தை வெகுண்டு எழுந்தான். ”நாட்டில் தன் பெயரைத் தவிர்த்து மற்ற பெயர்களைச் சொல்லக் கூடாது என நான் இட்ட கட்டளை. அப்படி இருக்க என் ஆணையை மதியாமல் என் பிள்ளைக்கு எனக்கு விரோதமானவற்றை அதுவும் என் பகைவனைப் புகழ்கிறான். இதை யார் கற்பித்தது?” என்று கர்ஜித்தான்
குருமார்கள் நடுங்கினார்கள். ”அசுரர்களின் அரசே! கோபித்துக்கொள்ளாதீர்கள். இவை எதையும் நாங்கள் போதிக்கவில்லை!” என்றார்கள்.
இரணியன் உடனே “குழந்தாய்! உனக்கு இவ்விஷயத்தை உபதேசித்தவர் யார்
?” என்று கேட்க அதற்கு பிரகலாதன்
”இருதயத்தில் வசிக்கும் நாராயணனே உபதேசிப்பவன். அவனைத் தவிர வேறொருவரும் எவருக்கும் உபதேசம் செய்ய முடியுமா ?” என்றான்.
இரணியனுக்குக் கோபம் கொப்பளித்தது “துர்புத்தி உள்ளவனே, உலகிற்கெல்லாம் நாயகன் நானே! அப்படிப்பட்ட என் முன்னே நீ அஞ்சாமல் விஷ்ணுவைப் புகழ்கிறாயே, யார் அவன் ?” என்றான்.
பிரகலாதன் “தந்தையே! அவனுடைய ஸ்வரூபம் இப்படிப் பட்டது என்று சொல்ல முடியாது. யோகிகளுடைய தியானத்தில் மட்டுமே பெறக் கூடியவனான அந்த ஸ்வரூபத்திலிருந்து தான் உலகங்கள் உண்டாகின்றன. இந்தப் பிரபஞ்சமே அவர் தான். அவர் தான் சகல உலகுக்கும் பரமேஸ்வரனான விஷ்ணு!” என்று பதில் கூறினான்.
இரணியன், “மதிகேடனே! பரமேஸ்வரன் என்று பெயர் படைத்தவன் நான் ஒருவனே! நீ இறக்க விரும்பியே இவ்வாறு என் முன்னே விஷ்ணுவைப் பற்றிப் புகழ்கிறாய். வாழ விரும்பினால் விஷ்ணுவை துதிப்பதை விட்டுவிட்டு என்னையே துதிசெய்!” என்றான்.
பிரகலாதன், “ தந்தையே! அந்த விஷ்ணு என்னை மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும், ஏன் உமக்கும் அவர் தான் ஈசன். இதை உணருங்கள். கோபம் கொள்ளாதீர்கள்” என்று பவ்யமாகப் பதில் கூற,
அஞ்சாமல் உடனுக்குடன் பதில் சொல்லும் பிள்ளையைக் கண்டு வியந்த இரணியன் “துஷ்டப் புத்தி உடைய இவன் என் சொல்லைக் கேளாமல் பாபத்தைச் செய்கிறான். இவன் மனதில் எவனோ ஒருவன் புகுந்துள்ளான். அதனால் இத்தகைய சொற்களைச் சொல்லுகிறான். இவனுள் புகுத்திருப்பவன் யாரோ !” என்றான்
பிரகலாதன், “அப்பா, நீங்கள் கூறுவது உண்மையே! என் மனதில் ஒருவன் புகுந்து, இவ்வாறு என்னைப் பேச வைக்கிறான். அவன் தான் விஷ்ணு. ஆனால் என் மனதில் மட்டும் புகுந்து இவ்வாறு செய்விக்கிறான் என்பதில்லை. என்னையும், உங்களையும் மற்றும் எல்லோர் மனதிலும் புகுந்து ஆட்டி வைப்பவன் அவனே!” என்று விளக்க, இரணியன் புதல்வனுடன் வாதாட விரும்பாமல் அருகில் இருந்த அசுரர்களை நோக்கி “துஷ்டனான இவனை அப்புறப்படுத்துங்கள். குருகுலத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். இவனை நன்கு தண்டிக்கச் செய்யுங்கள். என்னையே பகவானாக எப்பொழுதும் துதிக்கச் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டான்.
சில காலம் கழித்து, மீண்டும் ஒரு நாள் இரணியன் பிள்ளையின் போக்கை அறிய அழைத்து வரச் செய்தான். மீண்டும் மடியில் உட்கார வைத்து, “குழந்தாய், ஏதாவது ஒரு விஷயம் சொல்லு” என்று கேட்கப் பிரகலாதன் முன்பு போல் பகவானைப் பற்றியே புகழத் தொடங்க, அறிவிழந்த இரண்யகசிபு கோபத்தால் தன் மடியிலிருந்து பிரகலாதனைக் கீழே தள்ளினான். கண்கள் சிவக்க “அடேய்!, இனி இவனிடம் பேசிப் பயனில்லை. இவன் இனி உயிரோடு இருக்கக் கூடாது உடனே இவனைக் கொல்லுங்கள்” என்று உத்தரவிட்டான்.
பிள்ளைப் பருவத்தில் அர்த்தமற்ற சொற்களைக் கூறினாலும் பெற்றோர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் பிரகலாதனோ உயர்ந்த விஷயங்களைப் பேசுகிறான். இப்படிப் பட்ட குழந்தைகளைப் பெற ஏங்கியிருக்கும் பெற்றோர்கள் இருக்க, இரணியனோ அவனைக் கொண்டாடாமல் சீறி வெகுள்கிறானே என்று திருமங்கை ஆழ்வார் வியக்கிறார்.
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம்
நாமம்
ஒள்ளிய ஆகி போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு
இலனாகி
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று
அனல் விழி பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை திருவல்லிக்கேணி கண்டேனே
இரணியனின் உத்தரவிட, பல அசுரர்கள் கோழியடிக்க குறுந்தடியா என்பதைப் போலப் பெரிய ஆயுதங்களுடன் திரண்டனர். திரண்ட அசுரர்களைக் கண்டு பிரகலாதன் கலங்கவில்லை. “அசுரர்களே விஷ்ணு எங்கும் நிறைந்திருக்கிறான். உங்களிடத்திலும், என்னிடத்திலும் ஏன் உங்கள் ஆயுதங்களிடத்திலும் இருக்கிறான்! இந்த ஆயுதங்களால் எனக்கு எந்த கெடுதலும் செய்ய முடியாது!” என்றான்
அசுரர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கினார்கள். ஆனால் அந்தச் சிறுவன் பிரகலாதன் புதுப் பொலிவு பெற்று விளங்கினான். இதைக் கண்ட இரணியன் பயமுறுத்திப் பயனில்லை. நல்வார்த்தை சொல்லிப் பார்ப்போம் என்று எண்ணி பிரகலாதனைக் கூப்பிட்டு “பகவானைத் துதிப்பதைக் கைவிடு. என்னிடம் பயம் வேண்டாம் உனக்கு நான் அபயம் தருகிறேன்! திருந்திவிடு” என்றான்.
இதைக்கேட்ட பிரகலாதன் தந்தையின் அறியாமை பார்த்து புன்னகையுடன் “அப்பா! பிறவி, பிணி, மூப்பு, மரணம் ஆகிய எல்லாவற்றினாலும் ஏற்படும் பயங்களும் எம்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே அகன்று விடுகிறது. அப்படிப்பட்ட எம்பெருமான் என் மனதிலேயே எழுந்தருளியிருக்க என் மனதில் பயம் எங்கே இருக்கும் ? பயம் இருந்தால் தானே உங்களிடம் அபயம் வேண்டி நிற்க வேண்டும் ? அந்த அபயமும் அவன் தந்தால் தான் உண்டு!” என்றான்
இதற்குப் பதில் சொல்ல முடியாத இரணியன் மிகுந்த கோபத்துடன் விஷம் நிறைந்த பற்களால் இவனைக் கடித்துக் கொல்லுமாறு நாகங்களுக்கு உத்தரவிட்டான். கொடிய நாகங்கள் விஷத்தால் பிரகலாதனைத் தீண்ட முடியவில்லை. அந்த விஷமும் அமிர்தமாகியது!
இரணியன் உடனே யானைகளைக் கொண்டு தாக்க உத்தரவிட்டான். மலையைப் போன்ற உருவம் கொண்டு, நான்கு தந்தங்களால் பிரகலாதனை யானைகள் கீழே தள்ளித் தாக்கின, அப்போது தந்தையைப் பார்த்து பிரகலாதன் “அப்பா!, நீங்கள் ஏவிய இந்த யானைகளின் தந்தங்கள் வஜ்ராயுதத்தின் நுனி போல மிகக் கடினமாக மார்பில் மோதுகிறது, ஆனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை, இதற்குக் காரணம் என் பலம் இல்லை, பெருமாளிடம் கொண்டுள்ள பகவத் பக்தி!” என்றான்.
இப்படி பகவத் பக்தியின் பெருமையைக் கண்கூடாக உணர்த்தினால் தன் தந்தை உண்மையை உணர்ந்து தன் செருக்கு ஒழிந்து, எம்பெருமானிடம் பக்தி செலுத்துவார் என்று பக்தியின் சிறப்பைக் கூறினான். ஆனால் இரணியன் மனதில் பக்தி ஏற்படவே இல்லை. மேலும் பல தீங்குகளை விளைவிக்க அசுரர்களை ஏவினான்.
அசுரர்கள் பிரகலாதனை மலைமீது இருந்து கீழே தள்ளினார்கள். கீழே புரண்டு விழுந்தால், என்னுள் இருக்கும் எம்பெருமானுக்கு ஏதாவது தீங்கு நேரிடுமோ என்று அஞ்சி தீங்கு நேரிடாதபடி ஒரு கர்ப்பிணி தன் வயிற்றினுள் உள்ள சிசுவை எப்படிப் பாதுகாப்பாளோ அது போலப் பாதுகாத்தான் பிரகலாதன். கண்ணனைக் காக்க விரும்பிய அச்சிறுவனைப் பூமி தேவி காப்பாற்றினாள்.
அசுரர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி அடைந்து, . வேறு வழி தெரியாமல் முழித்தார்கள். இரணியன் தன் இயலாமையைக் கண்டு மிகக் கவலை கொண்டு தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவனுடைய புரோகிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுக்ராசார்யருடைய புத்திரர்கள். அவர்கள் இரணியனிடம் “பாலப் பருவம் எல்லாக் குற்றங்களையும் செய்யத் தூண்டும். ஆகையால் இந்தப் பாலகனிடம் கோபம் கொள்ளாதீர்கள். நாங்கள் ஒரு பூதத்தைச் சிருஷ்டி செய்து அவனை அழித்துவிடுகிறோம். அவனை எங்களிடம் விட்டுவிடுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்கள்.
இரணியனும் ஆசிரியரை மாற்றித்தான் பார்ப்போமே என்று அவர்களிடம் அனுப்பினான். பிரகலாதனும் புதிய ஆசிரியர்களுடன் மற்ற மாணவர்களுடன் கல்வி பயின்று வந்தான். தந்தைக்குத் தான் பக்தி உண்டாகவில்லை, என்னுடன் இருக்கும் இச்சிறுவர்களுக்கு விஷ்ணு பக்தியை எளிதில் ஊட்டலாம். அவர்கள் விரும்பிச் சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை என்று அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினான்.
இதையே நம்மாழ்வார்
சிற்ற வேண்டா; சிந்திப்பே அமையும் கண்டீர்கள்; அந்தோ!
குற்றம் அன்று; எங்கள் பெற்றத் தாயன், வடமதுரைப் பிறந்தான்
குற்றம் இல் சீர் கற்று, வைகல் வாழ்தல் கண்டீர்-குணமே
என்கிறார்.
பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் வாழும் வகையை மிகச் சுருங்கச் சொன்னோம். அவனையே நினையுங்கள். அந்த நினைவு ஒன்றே போதும்.
பிரகலாதனின் உபதேசத்தைக் கேட்ட அசுரச் சிறுவர்கள் பிரகலாதனின் செயலைக் கண்டு வியந்து, உனக்கு இதை எல்லாம் யார் கற்றுக்கொடுத்தது என்று கேட்க பிரகலாதன் ”என் தந்தை தவம் புரிய மந்திரமலைக்குச் சென்றிருந்தபோது இந்திரன் அசுரர்களுடன் போர் புரிய வந்தான். அந்தச் சமயம் என் தாய் பயத்தால் நடுங்கிய போது, இந்திரன் அவளை இழுத்துச் சென்றான். தற்செயலாக நாரத முனிகள் அந்தப் பக்கம் வந்து இந்திரனிடம் இவளை விட்டுவிடுங்கள். இவள் வயிற்றில் பகவானது பரம பக்தன் இருக்கிறான் என்றார். இந்திரனும் நாரதரின் சொல்லுக்குத் தலைவணங்கி என் தாயை விட்டுவிட்டான். நாரதர் என் தாயை அவருடைய ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று உனது கணவன் வரும் வரை இங்கேயே இருக்கலாம் என்று தங்க இடம் கொடுத்து, என் தாய்க்குப் பல தத்துவங்களை உபதேசித்தருளினார். அதையெல்லாம் நான் கருவிலிருந்து கேட்டுக்கொண்டு இருந்தேன். அவர் கூறிய அனைத்தும் எனக்கு நினைவில் இருக்கிறது!” என்றான்.
இரணியனிடம் உள்ள பயத்தால் அவர்கள் இதை அரசனிடம் சொல்ல, இரணியன் சமையல்காரர்களை வரச் சொல்லிக் கூவினான். முன்பு பாம்பு, யானை, நெருப்பு முதலியவற்றிலிருந்து தப்பிவிட்டான். அதனால் இவனுக்கு அறியாத வகையில் இவன் புசிக்கும் உணவில் விஷத்தைக் கலந்துவிடுங்கள். அறிந்தால் தப்பித்துவிடுவான்” என்றான்.
சமையற்காரர்களும் உணவில் விஷத்தை வைத்துக் கொடுக்க, இவர்கள் கொடுத்த உணவை எம்பெருமானுக்கு நிவேதனம் செய்துவிட்டு பிரசாதமாக உட்கொண்டதால் யாதொரு தீங்கும் நேரவில்லை.
சமையற்காரர்கள் “அரசே மிகக் கொடிய விஷத்தை உணவில் கலந்து கொடுத்தும் புத்திரனுக்கு ஒன்றும் ஆகவில்லை! நாங்கள் இனி என் செய்வோம்?” என்று முறையிட்டார்கள்.
“குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பே! என்னைத் தவிர வேறு யாரோ ஒரு லோக நாயகன் இருப்பதாகச் சொன்னாயே அந்த லோக நாயகன் எங்கேடா ?” என்று கத்தினான்.
பிரஹலாதன் “தந்தையே! அவர் எங்கும் இருக்கிறான்!”
“அப்படியானால் இந்த
தூணில் ஏன் இல்லை?”
“இருக்கிறார் என் கண்களுக்குத் தெரிகிறாரே!”
இதைக் கேட்ட இரணியன் மிகவும் கோபமும் பயமும் கொண்டு தானே பார்த்துப் பார்த்துக் கட்டிய தூணைக் காட்டி ”இந்தத் தூணில் உனக்குத் தெரிகிறானா ? ஒரு சிங்கம் யானையின் மீது ஏறி அதன் தலையைக் கிழித்து ரத்தத்தை எப்படிக் குடிக்குமோ அது போல உன்னை வெட்டித் தள்ளுகிறேன்! உன்னைக் காப்பாற்றுவான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அந்த ஹரி உன்னைக் காப்பற்ற வரட்டுமே!” என்று அந்தத் தூணில் வந்து ஒளிந்து கொண்டிருக்க முடியாது என்ற எண்ணத்துடன் மிகுந்த சினங்கொண்டு வாளைக் கையிலேந்தி தன் சிங்காசனத்திலிருந்து குதித்து ’அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு அங்கு அப் பொழுதே’ பயங்கரச் சத்தத்துடன் சிங்கக் கர்ஜனையுடன் ஓர் ஆள்-அரி தூணிலிருந்து வீயத் தோன்றி வெளிப்பட அந்த அற்புதமான திருமேனியைக் கண்டான்.
இந்த நரசிங்கத் திருவுருவம் உலகியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதே என்று சிந்திக்கும் போதே பகவான் நரசிம்மன் அவன் எதிரில் வந்து நின்றார். அவரது திருமேனி பயங்கரமாக இருந்தது. உருக்கி வார்த்த தங்கம் போன்று, மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்ட சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறிய போது, இரணியன் நரசிங்கனை நோக்கி வாளோடு பாய்ந்தவனை பகவான் பாம்பு எலியைப் பிடிப்பது போலப் பிடித்துக் கொண்டு அச்சபையின் வாயிற்படியில் தன் துடைகளின் மீது அவனைக் கிடத்தி அந்தி வேளையில் சுதர்சன சக்கரமே மிகக் கூர்மையான வாள் போன்ற நக ஆயுதமாக விளங்க, கருநாகத்தை கருடன் அலகால் கிழிப்பது போல தன் கூரிய நகங்களால் முதலில் மார்பை விளையாட்டாக கிள்ளிக் கிழித்தார்.
இதைப் பெரியாழ்வார் ‘முன் கீண்டான்’ என்கிறார். அவனது இதயத்தில் எங்காவது ஒரு மூலையில் சிறிதளவேனும் பக்திகலந்த எண்ணம் உள்ளதா என்று பார்த்து, அப்படி இருந்தால் அவனை ரக்ஷிக்க வேண்டும் என்ற திருவுள்ளமாம்! ஆனால் அப்படி எதுவும் இல்லாத காரணத்தால் இரு கால்களையும் தன் ஒரு கையால் பற்றி, ஒரு கையால் அவனது தலையை அழுத்தி பிடிக்க அப்போது அசுரனின் கண்கள் பிதுங்கி வெளிப்பட, அவனது மார்பில் அழுந்த ஊன்றி யானையைக் கொன்று அதன் குடல்களை மாலையாகத் தரித்த சிங்கம் போல விளங்கினார் ஸ்ரீநரஹரி.
இவ்வளவு உக்கிரமாக இருக்கும் சிங்கப் பெருமானை பெரியாழ்வார் ‘கோளரி இன்னுருவம்’ என்கிறார். இதைப் புரிந்துகொள்ள காமாஸிகாஷ்டகத்தில் விடை தருகிறார் ஸ்வாமி வேதாந்த தேசிகன். அதில் சிங்க உருவத்துடன், திருமுகம் பிடரிமயிர்கள் அசைய பயங்கரமாய் பெரும்சிரிப்புடன் புருவங்கள் துடிக்க இரணியனைப் பார்த்த அதே சமயம் அசுரச் சிறுவனான பிரகலாதனுக்கு கனிவுடன் முலைப் பாலூட்டும் தாய் போல இன்முகத்துடன் ’அழகியான் தானே அரிஉருவன் தானே’ என்று இருந்தார் என்கிறார்!
ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் நரசிங்க அவதாரத்தின் தத்துவத்தை இந்தப் பாசுரத்தில் சொல்லுகிறார்
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று*
வாடி வாடும் இவ் வாள்-நுதலே
தன்னை நாயகியாக வைத்து ஆழ்வார் தன் பக்தியின் வெளிபாட்டைப் பார்க்கிறோம். இதில் ஆழ்வார் நரசிங்கமாக பிரகலாதனுக்கு உதவிய பெருமாள் தனக்கு உதவவில்லையே என்று வருத்தப்பட்டு ‘நரசிங்கா!’ என்று அகம் கரைந்து அழைக்கிறார்.
நரசிங்க பெருமாள் பிரகலாதனுக்கு காட்சி கொடுக்க, நெடுங்காலமாக நேரில் சேவிக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறப் பிரகலாதனுக்குப் பேச நா எழவில்லை. அந்த நிலையிலும் ’ஸ்ரீவிஷ்ணவே நம:’ என்று அங்கண் இரண்டும் கொண்டு என்னை நோக்க வேண்டும் என்று எம்பெருமான் முன் வேண்டி நின்றான்.
பெருமாள் உனக்கு வேண்டியதைக் கேள் என்று வரம்தர முன் வந்த போது, அச்சிறுவன்
மனம் தளரவில்லை.
“எற்றைக்கும் ஏழேழ்
பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்” என்பதைப் போல எந்தப் பிறவி எடுத்தாலும் உன்னிடம் மட்டும் அழிவில்லாத பக்தியுடன்
உம் திருவடிகளுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தையே அருள வேண்டும்” என்று கைகூப்பி நின்றான்.
“நீ நிலையான பக்தி
வேண்டும் என்று கேட்கிறாய் அது தான் உன்னிடம் இருக்கிறதே! அதனால் வேறு ஒரு வரத்தைக்
கேள்” என்று பெருமாள் கூற,
”அழகிய சிங்கரே! என் தந்தை தான் செய்த பாபங்களிலிருந்து விடுபட வேண்டும்” என்று கேட்க, பகவானும் அவ்வாறே கொடுத்து அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து முடித்தார்.
அஹோபில மடத்தின் முதல் ஜீயர் பற்றிய சிறு குறிப்பு:
இன்றைக்கு சுமார் 645 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1379ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருநாராயணபுரத்தில் கிடாம்பி ஸ்ரீகேசவாச்சார்யாரின் புதல்வராக, ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்துடன் அவதரித்தார் அந்த மஹான்.
ஸ்ரீகேசவாச்சாரியார் உரிய காலத்தில் பஞ்சமஸ்காரங்களைப் பண்ணிவைத்து, வேதம், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், சாஸ்திரங்களை சொல்லிக்கொடுத்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதைப் போல இவருடைய ஞானத்தைக் கண்டு சந்தோஷமடைந்தார்.
ஒரு நாள் இவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் சிங்கவேள்குன்றம்
என்ற அஹோபில நரசிம்மர் ’அஹோபிலத்துக்கு வந்து எம்மை ஆராதிப்பீர் என்று கூற தனது இருபதாவது வயதில் ( 1398 ) அஹோபிலத்துக்கு நடந்து,
மலைமேல் ஏறிச்சென்று அங்குள்ள நரசிம்மர்களைச் சேவிக்க புறபட்டார்.
அப்போது அங்கே ஒரு யதி(துறவி) உமக்காகத் தான் இங்கே காத்திருக்கிறோம்
என்று கூறி தன் காஷாயத்தை கொடுத்து, ஸ்ரீபாஷ்யகாரர் சந்நிதியில் இருந்த திரிதண்டத்தையும்
கொடுத்து ‘சடகோப ஜீயர்’ என்ற திருநாமத்தை அருளினார்.
அஹோபிலத்தில் உள்ள நவநரசிம்ம மூர்த்திகளையும் சடகோப ஜீயர் ஆராதிக்க மாலோல நரசிம்மன் ஸ்ரீ சடகோப ஜீயருடைய இரண்டு திருக்கைகளிலும் குதித்து எழுந்தருளினார். இதைக் கண்ட கோயில் நிர்வாகிகள் ஆச்சரியப்பட்டு இந்த மாஹா தேசிகனைத் தண்டம் சமர்ப்பித்து அந்தக் கோயில் நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்தார்கள்.
அவர் கையில் குதித்து ஏறிக்கொண்ட ஸ்ரீ மாலோலன் தான் நித்தியத் திருவாராதன பெருமாளாக இன்றும் அஹோபில ஜீயர்களுடன் பயணம் செய்கிறார். ஜீயரை அதனால் ’அழகிய சிங்கர்’ என்றும் அழைக்கிறோம்.
ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மஹா தேசிகன்’ என்று அழைக்கப்பெற்ற இந்த முதல் ஜீயரைத் தொடர்ந்து இன்றைக்கு 640 ஆண்டுகளாக எம்பெருமானார் தரிசனத்தை அஹோபில மடத்து ஜீயர்கள்
வளர்த்து வருகிறார்கள்.
திருமழிசை ஆழ்வார்
கூறாகக் கீறிய கோள் அரியை வேறாக
ஏத்தியிருப்பாரை, வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்
எதிர்த்து நின்ற இரணியனின் மார்பைக் கூறிய நகங்களால் பிளந்த நரசிம்ம மூர்த்தியை
உண்மை உள்ளத்தோடு துதிக்கும் மெய்யடியார்களையும் கூட, அம்மெய்யடியார்களை வழிபடும் அடியார்க்கு
அடியார்களின் தவம் வென்று நிற்கும் என்கிறார் ஆழ்வார்.
அதனால் இக்கலியுகத்தில் நாம் நம்முடைய பாபங்களைப் போக்க பிரகலாதன் அளவுக்கு முயற்சி செய்வது கடினமாக இருந்தாலும், பிரகலாதனின் சரிதத்தைக் கேட்பது சுலபம், அப்படிக் கேட்டாலே நம் பாபங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஆன்றோர் வாக்கு.
-சுஜாதா தேசிகன்
ஆனி ஸ்வாதி அன்று எழுதிய கட்டுரை.
8.10.2024 இன்று புரட்டாசி கேட்டை - அஹோபில மடத்தின் முதல் ஜீயரான, ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மஹா தேசிகன் திருநட்சத்திரம்.
படங்கள்: மைசூர் அருகில் உள்ள பெலகோலா நரசிம்மர் கோயிலில் அடியேன் எடுத்தது.
ஓவியம் நன்றி : கேஷவ்
Comments
Post a Comment