Skip to main content

கும்மாயம்

 கும்மாயம்
 
மனித மூளை விசித்திரமானது, அதற்கு விடை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றுக்கு விடை தெரியவில்லை என்றால் ஆழ்மனதில் அந்த விடைக்காகக் காத்துக்கொண்டிருக்கும். எதேர்ச்சையாக விடை கிடைக்கும்போது ஆனந்தப்பட்டு அடுத்த கேள்விக்கான விடையைத் தேடத் தொடங்கும். 
 
உ.வே.சா அவர்கள் மணிமேகலை என்ற நூலை ஆராய்ந்தபோது அதில் வரும் பல சொற்களுக்கு அவருக்குப் பொருள் கிடைக்கவில்லை. பல புத்தகங்களை ஆராய்ந்தும், பலரிடம் கேட்டும் தெரிந்துகொண்டார். அப்படி ஆராய்ச்சி செய்தபோது மணிமேகலையில் 27வது ‘சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை’யில்
 
“பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இயற்றி” (அடி, 175-6)
 
என்று ஒரு பகுதியில் ‘கும்மாயம்’ என்ற சொல்லின் பொருள் அவருக்குத் தெரியவில்லை. பலரைக் கேட்டுப்பார்த்தும் பயன் இல்லை. 
 
காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும் என்பது போல, கோயிலும் கோயில் சார்ந்த இடம் கும்பகோணம் என்று சொல்லலாம். பல பிரசித்தி பெற்ற திருகோயில்கள் அங்கே இருக்கின்றன. உ.வே.சா கும்பகோணத்தில் இருந்த சமயம் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் சந்நிதி பட்டாசாரியர் உ.வே.சா அவர்களின் வீட்டிற்கு ஒரு முறை வந்தபோது “கோயிலுக்கு வந்து பெருமாளை ஸேவிக்க வேண்டும்” என்றார். 
 
பிறகு ஒரு சமயம் உ.வே.சாவும் அவருக்கு உதவி செய்யும் திருமானூர்க் கிருஷ்ணையரென்பவரும் கோயிலுக்குச் சென்றார்கள். இவர்களைப் பார்த்த பட்டாசாரியார் அன்று ஒவ்வொரு சந்நிதியைப் பற்றிய வரலாறுகளையெல்லாம் சொல்லி தரிசனம் செய்வித்தார். 


கோயில் பிரசாதம்...
 
பல முறை பெருமாளை சேவித்திருந்தாலும், அன்று உ.வே.சா அனுபவித்து சேவித்தார். தரிசனம் முடிந்த பின் பட்டாசாரியர் “சற்று இருங்கள்” என்று சொல்லிவிட்டு மடைப் பள்ளிக்குச் சென்று பல பிரசாதங்களை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் எடுத்து வந்தார். 
 
பட்டாசாரியார் பிரசாதங்களை ஒவ்வொன்றாக எடுத்து அவர்களுக்குக் கொடுக்க - தேங்குழல், வடைத் திருப்பணியாரம், அதிரசம் என்று பல வந்தன. பட்டாசாரியார் ஒரு பிரசாதத்தைக் கொடுக்க “இதற்குப் பேர் என்ன?” என்று உ.வே.சா அதன் பெயரைக் கேட்டவாறே உட்கொண்டபோது ஒரு பிரசாதம் புதிதாக இருந்தது.
 
“இது புதிதாக இருக்கிறதே; இதன் பெயர் என்ன?”
 
“அதுவா? கும்மாயம்” 
 
“என்ன? கும்மாயமா!” என்று வியப்போடு மணிமேகலையின் பாடல் அடிகள் அவர் கண் முன்னே வந்து நின்றன. 
 
“ஐயா! இன்னும் கொஞ்சம் கொண்டு வரச் சொல்லுங்கள்” என்று கேட்டு உட்கொண்டார். பட்டாச்சாரியார் இவருக்கு ‘கும்மாயம்’ மிகப் பிடிக்கும் என்று நினைத்துக்கொண்டார். 
 
உ.வே.சா.வுக்குக் கும்மாயத்தின் சுவையைவிட அதன் பெயர் அதிக சுவையைக் கொடுத்தது. மணிமேகலையில் கண்ட கும்மாயம் மடைப்பள்ளியில் இருக்கிறது என்று வியந்து “இதனை எப்படிச் செய்வது?” என்று கேட்டபோது பட்டாசாரியார் விரிவாக விளக்கினார். 
 
கும்மாயத்தைப் பற்றி அந்தப் பட்டாச்சாரியரிடம் தெரிந்துகொண்ட பிறகு நீலகேசி யென்னும் நூலிலும் அச்சொல் வந்திருப்பதை அறிந்துகொண்டார். வேறு நூல்களிருந்தும் சில செய்திகள் அவருக்குத் தெரிய வந்தன. அவற்றையெல்லாம் சேர்த்து மணிமேகலைக் குறிப்புரையில் இவ்வாறு எழுதியிருக்கிறார் 
 
“கும்மாயம், புழுக்கிய பச்சைப் பயற்றோடு சருக்கரை முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி. இப்பெயரோடு இது விஷ்ணு ஆலயங்களில் இக்காலத்தும் வழங்கி வருகின்றது. ‘கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி’ (பெரியாழ்வார் திருமொழி,3.3.3) என்பதில் கும்மாயம் என்பதற்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் ‘குழையச் சமைத்த பருப்பு’ என்று பொருள் செய்திருக்கின்றனர். ‘பயற்றது கும்மாயம்’ (நன்னூல், சூத்திரம் 299, மயிலை நாதருரை மேற்கோள்).
 
இதைப் படித்த பின்னர் கும்மாயம் எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ள சில ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன். முதலில் பெரியாழ்வார் திருமொழியில் இந்தப் பாசுரத்தைப் பார்க்கலாம் 
 
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
            குடத் தயிர் சாய்த்துப் பருகி
 பொய்ம் மாய மருது ஆன அசுரரைப் 
            பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
 
குழையச் சமைத்த பருப்பையும் வெண்ணெய்யையும் விழுங்கிவிட்டு, குடத்தில் நிறைந்த தயிரைச் சாய்த்துக் குடித்தும், பொய்யையும் மாயச் செயல்களையும் புரியும் அசுரர்களால் ஆவேசிக்கப்பெற்ற இரட்டை மருத மரங்களை விழுந்து முறியும்படி, இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த நீ இப்போது ஒன்றும் செய்யாதவன் போல வந்து நின்றாய் என்று பெரியாழ்வார் வியந்து தன் பிள்ளைத் தமிழில் பாடுகிறார். 
 
குழந்தைகளுக்குத் தாய் நன்றாக மசித்துத்தான் சோறு ஊட்டுவார். அதேபோல பெரியாழ்வாரும் நன்றாக மசித்து கண்ணனுக்குக் கும்மாயத்தை ஊட்டுகிறார். 
 


கவிஞர் பெரியசாமி தூரனின்
 
கவிஞர் பெரியசாமி தூரனின் குழந்தைகளுக்கான பாடல்கள் ‘மழலை அமுதம்’ என்று 1981ல் வெளிவந்துள்ளது (கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் வெளியீடு). அதில் ‘கும்மாயம்’ என்ற சிறுவர் பாடல் இப்படி வருகிறது. 
 
கும்மா கும்மா கும்மாயம் 
 கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம் 
 அம்மா தெய்வம் கும்பிடு 
 அப்பா தெய்வம் கும்பிடு 
 அவரே தெய்வம் கும்பிடு 
 அன்பாய் என்றும் நடந்திடு 
 கும்மா கும்மா கும்மாயம் 
 கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம் 
 
(குறிப்பு: கும்மாயம் என்பதற்குப் பாயசம் என்பது பொருள்)
 
பெரியாழ்வார் பாசுரத்தைப் படித்த பின் இதை எழுதியிருப்பாரோ என்று கூடத் தோன்றுகிறது. 
 
‘முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்’ என்ற நூலில்,
 
“கும் - குமை. குமைதல் = புழுங்குதல். கும் - கும்மாயம் = குழைய” என்று விளக்கம் தந்துள்ளார்கள். 
 
கல்வெட்டில் கும்மாயம் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று தேடும்போது 




 
படம்: ஏதோ ஒரு கல்வெட்டு
 
அம்பாசமுத்திரத்திலுள்ள பழமையான கோயிலான ‘எரிச்சாவுடையார் கோயிலில் வரகுன மஹாராஜா ஆட்சிக் காலத்தில் ஒரு கல்வெட்டில் ‘கும்மாயம்’ பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. (தற்போது இந்தக் கல்வெட்டு சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது) [AR No. 105 of 1905] அதில் வரிசையாக இப்படி வருகிறது.
 
“...கும்மாயத்துக்கு பயற்றுப் பருப்பு நிவேதிக்க பசுவின்னனறு நெய் ஒரு ஆழாக்கு, பசுவின் தயிர் ஒர் உரி, கருவாழைப்பழம் நான்கு, சர்க்கரை ஒரு பலம்...” என்று வருகிறது 
 
Epigraphia Indica தொகுதி 21ல் கும்மாயம் பற்றிய ஒரு குறிப்பில் இப்படி வருகிறது.
 
“கும்மாயம் செய்வதற்குப் பாசிப் பருப்பு முக்கியப் பொருளாகத் தெரிகிறது. ஆனால் தற்போது அது வழக்கத்தில் இல்லை. தற்போது கும்மாயம் சுண்ணாம்பு, மண் கலவையைக் குறிக்கிறது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பெரும்பாணாற்றுப்படையில் ‘அவரை வான் புழுக்கு’ என்பது கும்மாயத்தைக் குறிக்கலாம் என்கிறார்கள். கும்மாயம் என்பது நன்கு வேக வைத்த பச்சைப்பயிறு கூடவே கொஞ்சம் வெல்லம் என்று தெரிகிறது.”
 
‘பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்’ என்ற புத்தகத்தில் “தமிழர் விருந்துள் தலைசிறந்தது திருமண விருந்து. அதிற் பதினெண் வகைக் கறியும், கன்னலும் (பாயசம்) படைக்கப்பெறும். பதினெண் வகைக் கறிகள்: அவியல் (உவியல்), கடையல், கும்மாயம், கூட்டு (வெந்தாணம்), துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி (ஆணம்), அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உழுந்து வடை, காரவடை, தேங்குழல், முக்கனிகளுள் ஒன்று என்பன”
 
என்று பட்டியலில் கும்மாயம் வருவதை வாசகர்கள் கவனிக்கலாம். 
 
பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றில் கண்ணனுக்கு வரிசையாக சில சிற்றுண்டி செய்துவித்து கண்ணனைச் சாப்பிட வரும்படி அழைக்கிறார். 
 
அப்பம் கலந்த சிற்றுண்டி 
 அக்காரம் பாலிற் கலந்து 
 சொப்பட நான் சுட்டு வைத்தேன் 
 தின்னல் உறுதியேல் நம்பி
 
 


ஸ்ரீரங்கத்தில் அடியேனுக்கு கிடைத்த பிரசாதம்..
 
சின்ன குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கும்போது அவர்களுக்குப் பிடித்தவற்றையும் சேர்த்துத் தருவோம் (உதாரணம்: சிப்ஸ்!) அதே போல கண்ணனுக்கு பெரியாழ்வார் அப்பம் ‘கலந்த’ சிற்றுண்டி தருகிறார். 
 
அதே போல் குழந்தைகள் வெறும் பாலைக் குடிக்க மாட்டார்கள். அதில் ஏதாவது கலக்க வேண்டும் (உதாரணம் - பூஸ்ட்). பெரியாழ்வார் அக்காரம் கலந்த பாலைக் கொடுக்கிறார். அக்காரம் என்றால் வெல்லம் என்று பொருள். 
 
இன்னொரு பாசுரத்தில் பெரியாழ்வார்: 
 
“செந்நெல் அரிசி சிறுபருப்புச்
 செய்த அக்காரம் நறு நெய் பாலால்”
 
என்று அக்கார அடிசல் செய்யத் தேவையானவற்றை இப்படிப் பட்டியலிடுகிறார்.
 
செம் நெல் அரிசி 
 சிறு பயற்ற பருப்பு 
 கரும்பை காய்ச்சித்திரட்டின கரும்புக்கடியும் (வெல்லம்) 
 மணமிக்க நெய்யும் 
 பாலால் சமைத்தேன் 
 
பெரியாழ்வார் சொன்ன அக்கார அடிசல் குறிப்பை, ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில்:
 
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு* நான்
 நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
 நூறு தடா நிறைந்த “அக்கார அடிசில்” சொன்னேன்
 ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?
 
அதை அழகருக்குச் சம்பர்பிக்கப் பிரியப்படுகிறாள். அவளின் விருப்பத்தை ஸ்ரீராமானுஜர் பூர்த்தி செய்து வைத்தார் என்ற வரலாறு தெரிந்ததே. அக்கார அடிசல் பற்றி ஸ்ரீரங்கத்தில் கல்வெட்டு இருக்கிறது. 
 
ஸ்ரீரங்கம் கோயிலில் ராஜமஹேந்திரன் திருச்சுற்று கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி சுவரில் அமைந்துள்ள கல்வெட்டில் நயினாராசார்யரின் சிஷ்யரான பிள்ளைலோகம் ஜீயரின் சிஷ்யரான ஜீயர் ராமானுஜ தாஸன் என்பவரால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட சாஸனத்தில் (23-4-1618) 
 
‘ஸ்ரீரங்க ராஜ சரணம்புஜ ராஜஹம்ஸராய் ஸ்ரீமத் பராங்குஸ பதாம்புஜ ப்ருங்க ராஜராய்’ ‘பல்கலையோர் தாமென்ன வந்து அனைத்துலகும் வாழப் பிறந்து தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவித்து பொன்னரங்கமென்னில் மயலே பெருகும்’ ஸ்வாமி எம்பெருனாருடைய சித்திரை மாஸம் திருவாதிரை திருவத்யயநம் சாத்துமுறை முதல் நாள் ஆறாந்திருவத்யயநம் பொலிக பொலிக திருவாய்மொழி சிறப்பு அமுது செய்தருளும் படிக்கு பொலியூட்டாக பெருமாள் ஸ்ரீபண்டாரத்தில்... வருஷம் வருஷம் தோறும் ஸ்வாமி நம்பெருமாள் அமுது செய்தருளும்படி ‘செந்நெல் அரிசி சிறுபருப்புச் செய்த அக்காரம் நறு நெய் பாலால்’ என்கிற திவ்யஸ்ரீஸுக்தியின் படியே.’ நம்பெருமாளுக்குக் கண்டருளச் செய்து, பிறகு வைணவ அடியார்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்யப்ப்பட்டது என்கிறது இந்தக் கல்வெட்டு. 
 
பெரியாழ்வார் சொல்லிய அதே குறிப்பைக் கொண்டு செய்தார்கள் என்று தெரிகிறது. 
 
 


2017’ல் சாரங்கபாணி பெருமாள் கோயில்... ( படம் சுஜாதா தேசிகன்)
 
ஸ்ரீசாரங்கபாணி கோயிலில் இன்னும் கும்மாயம் பிரசாதம் வழங்கப்படுகிறதா என்று தெரிந்துகொள்ள அவர்களைக் கூப்பிட்டேன். “என்ன சார்? கும்மாயமா? அது என்ன?” என்று என்னைத் திருப்பி கேட்டார்கள். 
 
பிறகு அங்கே கோயில் கைங்கரியம் செய்பவர் ஒருவரின் தொலைபேசியை நண்பர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டு, அவர் பட்டாசாரியாரைத் தொடர்புகொண்டு, கீழ்க்கண்ட தகவலை எனக்கு அளித்தார். 
 
“திரு அத்யன உற்சவ ஏழாம் திருநாள் ‘கற்பார் ராமபிரானை’ என்ற பாசுர நாளில் கும்மாயம் பெருமாளுக்குச் சமர்பிக்கிறார்கள். இது ராமருக்கு ரொம்ப பிடித்த சிற்றுண்டி.”
 
“பெரியாழ்வார் கிருஷ்ணருக்கு என்று சொல்லியிருக்கிறார்”
 
“ஓ அப்படியா, இங்கே ராமருக்குத்தான்!”
 
“எப்படிச் செய்வது?”
 
“ஒரு படி பயத்தம் பருப்புக்கு ஒரு படி தண்ணீர், நல்லா மசியனும். அப்பறம், படி வெல்லத்தை அதில் சேர்த்து நல்லா கெட்டியாகும் வரை அடுப்பில் நெய்விட்டுக் கிளர வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் நெய்யில் முந்திரிப் பருப்பு வறுத்து இறக்க வேண்டும்... முன்பு பாலில் பருப்பைக் குழையவிடுவோம் அதிக நேரம் ஆகும். அதனால் இப்ப தண்ணீரில்...” என்று ஐந்து நிமிடத்தில் சொல்லிமுடித்தார். 
 
பன்னிரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டில் கருப்பெட்டி கொண்டு செய்த இனிப்புப் பணியாரம் பற்றிய குறிப்பு இருக்கிறது. பாண்டியர்கள் வாழைப்பழம், சீரகம், சுக்கு, மிளகு எல்லாம் சேர்த்து இனிப்பு செய்திருக்கிறார்கள். விஜயநகரத்துக் கல்வெட்டு ஒன்று திருப்பதியில் அவல், பலாப்பழம், கரும்புச்சாறு கொண்டு செய்யப்பட்ட ஒரு பதார்த்தைச் சொல்லுகிறது. அதிரசம் செய்வது பற்றியும் ஒரு குறிப்பு இருக்கிறது. காஞ்சிபுரம் வரதாராஜப் பெருமாளுக்கு 15 வகையான உணவு வகை பற்றிய குறிப்பில் இவை வருகிறது. பானகம், வடை பருப்பு, கறியமுது, ததியோனம், தோசை, அதிரசம், ஆப்பம், வடை, சுக்குப்பொடி, புளியோதரை, எள்ளோரை, கடுகோரை, பொங்கல், இட்லி, அக்கார அடிசல். 
 
இதுபோலப் பல உணவு பற்றிய குறிப்புகள் நம் கல்வெட்டில் இருக்கின்றன. 
 


கல்வெட்டில் உணவு வகைகள் !
 
கல்வெட்டில் கும்மாயம் செய்யத் தேவையானவை என்ற பட்டியலில் பாசிப்பருப்பு, வெல்லம், நெய், தயிர், கருவாழைப்பழம் கொண்டு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது - இன்று இதைப் போல யாரும் செய்வதில்லை! 
 
பாய்ஸ் படத்தில் செந்தில் என்ன என்ன கோவிலில் என்ன என்ன பிரசாதம் என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார். அது போல ‘கல்வெட்டில் உணவு வகைகள்’ என்று யாராவது ஆராய்ச்சி செய்தால் இது நல்ல தலைப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது - food for thought!
 
- சுஜாதா தேசிகன்
 25-07-2019
 நன்றி: வலம் ஜூலை இதழில் பிரசுரமானது. 
 படங்கள் இணையம், நன்றி. 

Comments

  1. யப்போய் அடுத்த தடவ ஆத்துக்கு சொல்லிட்டு வரேன்.
    கும்மாயம் கொடுங்கோ

    ReplyDelete
  2. அக்காரம் என்றால் சர்க்கரை என்று வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசத்தில் கேட்டுள்ளேன்.

    ReplyDelete

Post a Comment