Friday, March 28, 2008

இலக்கிய சிந்தனை சார்பில் சுஜாதா இரங்கல் கூட்டம்

அன்பு மிக்க தேசிகன். வணக்கம்.


இன்று (22.3.08 - சனிக்கிழமை)சுஜாதா இரங்கல் கூட்டம் இலக்கிய சிந்தனையின் சார்பில் சென்னையில் நடந்தது. இ.பா தலைமை.


திருமதி சுஜாதவும் இரு மகன்களும் வந்திருந்தனர்.

கஸ்தூரி ரங்கன், க்ரேஸி மோகன், திருப்பூர் க்ருஷ்ணன், அலிடாலியா ராஜாமணி, பூர்ணம் குழு ரமேஷ், பாமா கோபாலன், மொழி பெயர்பாளர் சவுரி ராஜன், வைத்தீஸ்வரன், ரவி சுப்ரமணியம், செங்கை ஆழியான், நான் எல்லோரும் பேசினோம்.
 


கஸ்தூரி ரங்கன் டெல்லியில் வாரா வாரம் அவரை சந்தித்தது பற்றி சொன்னார். அவர் சொன்ன ஒரு வாக்கியம் கண்ணில் நீர் வரவழைத்தது. “சுஜாதாவை விட நான் மூன்று வருஷம் பெரியவன். என் இரங்கல் கூட்டத்தில் அவர் பேசுவார்னு நினைச்சேன். இப்பிடி ஆயிடிச்சு.” என்றார்.


மொழி பெயர்ப்பாளர் சவுரி ராஜன் டெல்லியில் ஹிந்தி தினசரிகளில் கூட அவர் இறந்ததை வெளியிட்டார்கள் என்றார்.


இலங்கையை சேர்ந்த செங்கை ஆழியான் இலங்கையின் பெரும்பலான எழுதாளர்கள் அவருடைய பாதிப்புடன் எழுதுவதாக சொன்னார். தானும் அப்படியே என்றார்! இலங்கையில் எல்லா பத்திரிகைகளும் குறைந்தது ஒன்று அல்லது அரை பக்கமாவது அவர் மரணத்துக்கு வருந்தின என்றார்.


அலிடாலியா ராஜாமணி சொன்னது : சாவி பத்திரிகைக்காக அவர் வீட்டுக்கு சாவி குழுவில் ஒருவனாக சென்றேன். இரவு 12 மணி வரை பேசினோம். சாவி சார் ஒரு ஐடியா சொன்னார். ஒரு ஆங்கிலப்பத்திரிகையை காட்டி இது போல் நாமும் செய்து பார்க்கலாமா என்றாராம். அதில் ஒரு துப்பறியும் கதையை தந்து யார் கொலை செய்தார்கள் என்று வாசகர்களைக் கண்டு பிடிக்கும்படி சொல்லியிருந்தார்கள். அது போல் சாவியில் செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டு சுஜாதாவிடமே அந்த பொறுப்பு தரப்பட்டது.  காலையில் ஆறு மணிக்கு இவர்கள் சோம்பல் முறித்து விழிக்கையில் அவர் மூன்று கதைகளுடன் வந்தாராம்!


தனக்குப்புதுப்புது ஐடியாக்கள் தருவது சுஜாதாதான் என்று நெகிழ்ந்து சொன்னவர் க்ரேஸி மோகன். நாடகங்களுக்கு வருவராம். எதை எப்படி மாற்றலாம் என்று மடமடவென்று கொஞ்ச நேரத்தில் சொல்லி விடுவாராம். தொகுத்துப் பார்த்தால் புது கதை ஒன்று அருமையாய் உருவாகியிருக்குமாம்.


ஆழ்வார்கள் பற்றி சுஜாதா எழுதியது அவரோடு நின்று போகக்கூடாது என்றும் யாரவது அவர் பணியைத் தொடர வேண்டும் என்றார் க்ரேஸி.


குமுதத்தில் அவர் கீழ் பணி புரிந்த அனுபவத்தை சொன்னார் பாமா கோபாலன். போட்டோ என்று சொல்லாமல் பொம்மை என்றுதான் சொல்வாராம் சுஜாதா!
பாமா கோபாலன் சொன்ன மற்றொரு சுவையான தகவல் - குமுதத்தின் முன்னாள் ஆசிரியர் இறந்த அன்று முதல்வர் கருணாநிதி அங்கு வந்திருந்தார். அவர் காரில் ஏறிக்கிளம்பப் போகும் சமயத்தில் சுஜாதா அவரை நெருங்கி “ எஸ் ஏ பி பற்றி ஒரு இரங்கல் கட்டுரை குடுக்க முடியுமா?” என்று கேட்டாராம். அடுத்த குமுதம் ஆசிரியர் யார் என்று தெரியாமல் காத்திருந்தவர்களுக்கு திரை விலகியது. எஸ் ஏ பி போன்ற ஒரு உயர்ந்த மனிதருக்கு கருணாநிதி போன்ற ஒரு உயர்ந்த மனிதர் இரங்கல் கட்டுரை எழுதுவதுதான் பொருத்தம் என்பது என்ன ஒரு துல்லியமான கணிப்பு!ஒரு கூட்டத்தில் அவர் பேசுவதை வேடிக்கை பார்க்கப் போயிருந்தாராம் ரவி சுப்ரமணியம். பேச எழுந்த சுஜாதா அங்கிருந்த கரும்பலகையில் எனக்குப்பிடித்த கதை என்று எழுதி, ஜே ஜே சில குறிப்புகள், ஒரு புளிய மரத்தின் கதை என்று எழுதினாரம். எனக்குப்பிடித்த கவிதை என்று ரவியின் கவிதையை எழுதினாராம். எத்தனை பெரிய இன்ப அதிர்ச்சி! பிறகு அந்தக்கவிதையை எழுதியவர் இங்குதான் இருக்கிறார் என்று மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்தாரம். முதல் முதலாக ரவியின் கவிதையைப்படித்துவிட்டு யார் என்றுகூடத்தெரியாமல் ஒரு போஸ்ட் கார்ட் போட்டராம். பிறகு அதை கவிதை தொகுப்பில் எடுத்துப் பிரசுரிக்கலாமா என்று கேட்ட போது “அது நல்லாவே இருக்காதேய்யா” என்றாராம். 


கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை. கழுதைக்கு எதற்காக தெரிய வேண்டும் கற்பூர வாசனை? ரவி சுப்ரமணியம் எழுதிய கவிதையில்  சுஜாதாவுக்குப்பிடித்த வரிகள் இது போல் பல!


நான்(வேதா கோபாலன்) பேசியது: அவருடைய லாட்டரல் திங்கிங்குக்கு 2 உதாரணங்கள். எத்தனையோ எழுத்தாளர்கள் எப்படி எழுதுவது என்று எழுதியிருக்கிறார்கள். சுஜாதா மட்டும்தான் எப்படி எழுதக்கூடாது என்று குமுதம் மீட்டிங்கில் பேசினார்.  அதை transcribe செய்யும் பாக்கியம் எனக்குக்கிடைத்தது. எல்லோரும் முன் கதை சுருக்கம் எழுதுவார்கள். ஒரு பிரபல எழுத்தாளரின் நீண்ட நாவலை முடிப்பதற்காக பின் கதை சுருக்கம் எழுதும் பணியை என்னிடம் தந்தார். மேற்கண்ட இரண்டு விஷயங்களுக்காகவும் என்னைப் பாரட்டிய பெருந்தன்மையை என்ன சொல்வது!


அன்றைய கூட்டத்தில் பலர் உணர்ச்சி வசப்பட்டிருந்ததைக் கண் கூடாகக் காண முடிந்தது. திருமதி சுஜாதாவின் முகத்தில் கம்பீரத்தை மிஞ்சிய சோகம்!


திருமதி சுஜாதா தன் கணவரை மிகவும் கவனமாகப்பார்த்துக்கொண்டதால் அவர் ஆயுள் இந்த அளவாவது நீடித்தது என்றார் திருப்பூர் க்ருஷ்ணன். ஒரு சமயம் சிங்கப்பூர் சாலையில் இவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்த பொழுது திருமதி சுஜாதாவுக்கு தன் கணவர் நடந்து வருவது பற்றிக்கவலை ஏற்பட்டதாம். அவர் அதிகம் நடக்கக்கூடாது. சொன்னால் கேட்க மாட்டார்.  சட்டென்று ஒரு ஐடியா செய்தாராம் திருமதி சுஜாதா. தனக்கு மிகவும் கால் வலிப்பதாக சொல்லி ஒரு டாக்ஸி வைக்க சொன்னாராம்!


திருப்பூர் க்ருஷ்ணன் சொன்ன மற்றொரு சுவையான தகவல்- முதலில் இணைய பத்திரிகைக்கு மின்னம்பலம் என்ற பெயர் வைத்ததும் ஒரு ப்ரபல கவிஞர் சண்டைக்கு வந்து விட்டாராம். அது தன் கவிதையில் இடம் பெற்ற ஒரு வார்த்தை என்றும் தன்னுடைய கண்டு பிடிப்பு என்றும் சொன்ன அவர் அதற்காக ஏராளமான தொகை ஒன்றையும் கேட்டாராம்.


சுஜாதா உடனே மின்னம்பலம் என்ற பெயரில் இருந்த மின் என்ற சொல்லைக் கடுகு சைஸ்க்கு ஆக்கி அம்பலம் என்பதை பெரிதாகப்போட செய்தாராம். அதோடு விட்டால் அப்புறம் அவர் என்ன சுஜாதா! அந்த கவிஞரை தன் வீட்டுக்கு அழைத்து மனைவி கையால் ஃபில்டர் காஃபி கொடுக்க செய்தாராம்! அப்புறம் என்ன! அந்த கவிஞர் இவருக்கு நல்ல நண்பராகிவிட்டாரம்!


ஒரு சமயம் சுஜாதாவின் மகன் கேஷவ் ப்ரசாத் (மின்) அம்பலம் அலுவலகத்துக்கு அப்பாவோடு வந்திருந்தாராம். முதலில் சுஜாதா கிளம்பிவிட்டார். சிறிது நேரம் கழித்து மகன் கிளம்பினாராம். சுஜாதா இரண்டு மூன்று முறை ஃபோன் செய்து விட்டாராம். அப்போதும் மகன் வீடு போய் சேரவில்லை. சுஜாதா ரொம்பவும் கவலைப்பட ஆரம்பித்து விட்டாராம்.


திருப்பூர் க்ருஷ்ணன் வியப்புடன் கேட்டாராம் “ அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் தனியாக வந்த உங்கள் மகனுக்கு நுங்கம்பாக்கத்திலிருந்து மைலாப்பூர் வரத் தெரியாதா” என்று கேட்டிருக்கிறார்.


“அமெரிக்காவிலிருந்து வர்றது ஈஸி. சென்னைக்குள்ளதான் கஷ்டம்!” என்றாராம் சுஜாதா!


அன்புடன்


வேதா கோபாலன்

Tuesday, March 25, 2008

சுஜாதா - நினைவுகள்! - என்.சி.மோகன்தாஸ்

இந்த வாரம் தினமலர் வாரமலரில் வந்த கட்டுரை


கேரளா  பரலூர் எனும் பகுதியில் 1982ல் முதன் முதலாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை செயல்படுத்த சுஜாதா வந்திருந்தபோது தான் அவருடன் எனக்கு முதல் சந்திப்பு.


அப்போது கொச்சியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். எழுத்தில் சக்கை போடு, போடும் நபரா இவர் என, முதல் நோட்டத்திலேயே சுஜாதா மீது ஏமாற்றம்! அவரது நடவடிக்கைகளை, "சாவி' பத்திரிகைக்கு எழுதலாமா எனக் கேட்டேன். "ஓ... தாராளமாய்!' என்றார். எழுத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்த எனக்கு, அவரை பற்றி எழுதி, பரபரப்பாய் நான் பேசப் பட வேண்டும் என்ற வேகம்; எனக்குள் பரபரப்பு. "இது அரசாங்கத்து சமாஜாரம். தப்பாய் எதுவும் வந்து விடப்படாது. எழுதி என்னிடம் காட்டிட்டு அனுப்பு!' என்றார். அதன்படியே எழுதிக் காட்டினேன்."ப்...ச்... போன்ற ஒற்றுக்களுக்கும், உங்களுக்கும் தகராறு போலிருக்கு!' என்று, கூறி விட்டு, சாப்பாட்டில் ஐக்கியமானார்.அன்றே அவசர தபாலில் சென்னைக்கு அனுப்பினேன். இரண்டு நாளில், சாவி அலுவலகத்திலிருந்து போன்... "கட்டுரை நன்றாக இருக்கிறது... பிரமாதமாய் பிரசுரமாகப் போகிறது!' என்று! அப்படியே மிதந்தேன்.


நண்பர்களிடமெல்லாம், "வருகிற வாரம், "சாவி' இதழை பாருங்கள்...' என்று கூறி, அகமும், புறமும் மகிழ்ந்தேன்.
தவிப்போடு காத்திருந்து, "சாவி' வாங்கி புரட்டினால் ஏமாற்றம்; என் கட்டுரையை காணவில்லை!


சுஜாதா, என்னிடம் அனுப்பச் சொல்லிவிட்டு, அங்கு போய் அதை, "வெளியிடாதீங்க...' என் றிருப்பாரோ என்று வேண்டாத சந்தேகம். பெரிய எழுத்தாளருக்கு ஏன் இத்தனை வஞ்சம் என்று நினைத்தபடி சாவி இதழுக்கு போன் பண்ணினால், "குமுதத்தில் அவரே எழுதி விட்டார். திரும்ப நாம போட்டால் நல்லாருக்காதுன்னு சாவி எடுத்துர சொல்லிட்டார்!' என்றனர்.


கைக்கு கிடைத்து வாய்க்கு கிடைக்காத நிலமை. என் கோபம் சுஜாதா மேல் திரும்பிற்று. இவ ருக்கு அதற்குள் என்ன அவசரம்? சாவியின் பிரசுரமான பின் அடுத்த வாரம் குமுதத்திற்கு எழுதியிருக்கலாமே  இவர் கொடுத்தால் எப்போது வேண்டுமானாலும் போடுவரே. என் நண்பர்களிடம் அவமானம்! அவரால் ஏற்பட்ட இழப்பை  அவரை வைத்தே தீர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னொரு சந்தர்ப்பத்தில், கொச்சி தமிழ்ச் சங்கத்தில் சுஜாதா பேசும்போது, சிறுகதை எப்படி எழுத வேண்டும், எப்படி அமைய வேண்டும் என்று இளம் எழுத்தாளர்களுக்கு விளக்கினார். அதைத் தொகுத்து சாவிக்கு அனுப்பினேன். அது இரண்டு வாரம் தொடர்ந்து பிரசுரமானது. "இப்போ என்ன சொல்றீங்க?' என்று கேட்கிற மாதிரி, அவர் பத்திரிகைகளே பார்க்க மாட்டார் என நினைத்து, சுஜாதாவுக்கு அனுப்பி வைத்தேன்.


சுஜாதா பேச்சில் சிக்கனம்; கடித விஷயத்திலோ மகா கஞ்சன்! இ மெயிலில் கூட ரொம்ப குறைவாக தான் எழுதுவார். என் கட்டுரை பற்றி அவரிடமிருந்து எந்த தகவலுமில்லை. ஆனால், அவரது புத்தக தொகுப்பு ஒன்றில் அதை அப்படியே என் பெயரில் சேர்த்து, அவர் மேல் பொய்யாய் இருந்த பகையை  பொல்லாப்பை போக்கிக் கொண்டார். அதன்பிறகு நான் குவைத் வந்து, முதல் முறை விடுமுறையில் சென்றபோது, குமுதம் ஆசிரியர் பொறுப்பிலிருந்த சுஜாதாவை சந்திக்கப் போனேன். எந்தவித வித்யாசமும் இல்லாமல் சகஜமாய் விசாரித்து, "குவைத் பற்றி குமுதத்தில் தொடர் கட்டுரை எழுதுங்களேன்!' என்றார்.


"சரி... சார்...' என்று, மழுப்பினேன். அன்று காலையில் தான் வேறொரு பத்திரிகைக்கு, அதே தொடர் எழுத ஒப்புக் கொண்டிருந்தேன். அதனால், குமுதத்தில், "கல்ப் "கன'வான்களுக்கு' என ஒரு கட்டுரை மட்டும் எழுதிக் கொடுத்தேன். பாராட்டி, வெளியிட்டார். யார், யாருக்கோ விருதுகள் கிடைக்கிறது. இந்த அறிவு  அறிவியல் களஞ்சியத்திற்கு பெரிய அங்கீகாரங்கள் யாரும் தர முன் வராதது ஏன் என்றே தெரியவில்லை. அவர் இப்போது, நம்மிடையே இல்லை. இனி, விழித்துக் கொண்டு விருதுகள் வழங்குவர்  வழக்கம் போல! தமிழ் எழுத்தாளனின், படைப்பாளியின், கவிஞனின் விதி இது!

கற்றதும் பெற்றதும்

ஏதோ தேடும் போது, சுஜாதா எழுதிய கடைசி கற்றதும் பெற்றதும் கண்ணில் பட்டது. சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு.


விகடனில் கற்றதும் பெற்றதும் முடிக்கும் போது, தற்காலிக முற்றும் மீண்டும் சந்திக்கலாம் என்று சொல்லுவார். இந்த முறை திடீர் என்று 'முற்றும்' போட்டார். 
ஏன் என்று பிறகு ஒரு சமயம் சொல்லுகிறேன். இப்போது படிக்க கடைசி பகுதி..


கம்ப்யூட்டரே, பதில் சொல்லு!
வயசாவதன் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று, சமீபத்திய ஞாபகங்கள் கண்ணாமூச்சி காட்டுவது. நினைவு இருப்பது போலிருக்கும்; வார்த்தை சிக்காது. இரண்டு நாட்களுக்கு முன், முகம்மது கைஃப் என்ற பெயர் சட்டென்று மறந்து போய், அதி-காலையில் ஒரு மணி நேரம் விழித்திருந்து யோசித்தேன். இந்த உபாதைக்கு நியூரான்களைப் புதுப்பிக்க மருந்து மாத்திரைகள் இருக்கிறதா? டாக்டர் ராமச்சந்திரன் போன்றவர்கள் சொல்லலாம்.


ஆனால், நான் கடைப்பிடிப்பது ஒரு நிச்சயமான மார்க்கம்... இன்டர்நெட்! ஞாபகம் வரவில்லை என்றால், அப்படியே விட்டு விட்டுக் காலை எழுந்ததும், கம்ப்யூட்டரைத் திறந்து google அலலது yahoo answers-ல் கேள்வி கேட்டால், கிடைத்துவிடும். இப்படித்தான் சாமர்செட் மாம் எழுதிய நான் படித்த மூன்றில் இரண்டு நாவல்களின் பெயர்கள் ஞாபக-மிருந்தன (Of Human Bondage, The Moon and Sixpence). மூன்றாவது பூச்சி பறந்தது. நெட்டில் கேட்டதில், சட்டென்று பதில்! The Razor’s Edge.


இணையம் இருக்கும் வரை இறப்பு இல்லை. அதில் தேடும் முறையை மறந்து-போய்விட்டால், ஏறக்குறைய சங்குதான்.சாமர்செட் மாமின் நாவல்களை நான் எம்.ஐ.டி. படிக்கும்போது, க்ளாஸ் கட் அடித்து--விட்டுக்கூடப் படித்திருக்கிறேன். பால் கோகேன் என்னும் சித்திரக்காரரின் வாழ்க்கை சார்ந்த


கதையோ, சுயசரித்திரம் சார்ந்த கதையோ, தாமஸ் ஹார்டியின் வாழ்வைத் தழுவிய நாவலோ... மாமின் உரைநடையின் தெளிவு என் எழுத்தை ஒரு விதத்தில் பாதித்தது.


இப்போது படிக்கும்போது, அந்த நாவல்-கள் அப்படியொன்றும் ஓஹோ என்று தெரியவில்லை. Razors Edge நாவல் அப்போது போர் அடித்-தது. இப்-போது அதுதான் சிறந்த-தாகத் தெரிகிறது. மேற்கத்திய வாழ்வு அலுத்துப் -போய், ஒருவன் நிம்மதி தேடி இந்தியா-வுக்கு வந்து, ரமண மகரிஷியின் ஆசிரமத்தில் அமைதி காணும் கதை. சாமர்செட் மாம் எழுதிய எதையும் படித்திரா தவர்கள், அவருடைய Rain என்னும் சிறுகதையை மட்டும் படித்தால் போதும்.


-(0)-(0)-


திருமங்கையாழ்வாரின் காலத்தில் முதலில் கட்டப்பட்ட நீள்மதிலரங்கம் என்னும் திரு-வரங்கத்துக் கோயிலின் மதில் சுவர்கள் இப்போது சிதில-மடைந்து, காட்டுச் செடி பீறிட்டு உடைந்து-விழும் நிலை-யில் இருப்-பதை ராஜ் டி.வி-யில் காட்டி-னார்கள். இதைப் புதுப்-பிக்க ஒரு பிரபு மூணு கோடி ரூபாய் தந்திருப்ப-தாகவும், மதிலருகே வசிப்பவர்களைத் தற்-காலிக-மாக இடம் மாற்று-வதில்தான் பிரச்னை என்றும் சொன்னார்-கள்.


கோயிலை ஒட்டிய உத்தர வீதியின் மதில் சுவர்கள் பல அங்கங்கே சிதிலமாக இருப்ப-தையும், அவற்றுக்கருகே தற்காலிக அஸ்பெஸ்டாஸ் குடியிருப்புகள் முளைத்திருப்ப-தையும் சென்ற முறை பார்த்-தேன். இவற்றை யார் அனுமதித்-தார்கள், தெரியவில்லை! கோப்புகளை நோண்டிக் கண்டுபிடிப்பதற்குள் இம்மாதிரி-யான பிரச்னைக்கு உடனே கலெக்டரோ, கமிஷனரோ தீர்வு காண- வேண்டும். மதில் கல் இடிந்து யார் தலையிலா-வது விழும் வரை காத்திருக்கக்-கூடாது. பெரிய பெரிய கற்கள். உடனடி பரமபதம்!

Saturday, March 22, 2008

தமிழ் மாயக் கட்டம்

விக்கிரமாதித்தன் 'சிம்ரன் சின்னத் திரையை' பார்த்து அழுதுகொண்டு இருந்தான்.
"சீரியல் பார்க்காதேன்னு எவ்வளவு முறை சொல்றது?" என்று எட்டிப்பார்த்தது வேதாளம்
"சீரியல் பார்த்தாலும் வாத்தியார் நினைவு வருது என்ன செய்ய"
வேதாளம் பச்சையாக ஏதோ காண்பித்தது. அதை விக்கிரமாதித்தன் பார்த்த போது, 
இப்படி தெரிந்தது.
5 22 18
28 15 2
12 8 25

 


 


"இந்த மாதிரி பழைய விஷயத்தை எல்லாம் தூசு தட்டாதே, தும்மல் வருது" என்று விக்கிரமாதித்தன் சலித்துக்கொண்டான். 
வேதாளம் விடுவதாக இல்லை இது மாயக் கட்டம் இல்லை, மாயாஜால கட்டம்"மேல  உள்ள மாய கட்டங்களில் உள்ள எண்களின் ஆங்கில வார்த்தைகள் கொண்டு இந்த மாயா சதுரம் இங்கே இருக்கு பாரு"
விக்கிரமாதித்தன் பார்த்தான்
five (4) twenty-two (9) eighteen ( 8 )
twenty-eight (11) fifteen (7) two (3)
twelve (6) eight (5) twenty-five (10)

 


 


 


வேதாளம் தொடர்ந்தது.
"இந்த வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை கூட்டினாலும் மாயச் சதுரம் வருது பார்த்தையா ? "
"சரி இப்ப நான் என்ன செய்யனும் ?"
"இதே போல தமிழில் ஒரு மாயச் சதுரம்  செய் பார்க்கலாம் "  என்று சீரியலின் பிரேக் சமயத்தில் பறந்து போனது.

Thursday, March 20, 2008

சுஜாதா பற்றி குங்குமத்தில் வந்தவை

ஓவியர் ஜெயராஜ்
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_14_13_3_2008.jpg
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_15_13_3_2008.jpg


தி.முருகன் குங்குமம் முதன்மை ஆசிரியர்
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_18_13_3_2008.jpg
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_19_13_3_2008.jpg


சுஜாதா கேள்வி பதில்கள்
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_20_13_3_2008.jpg
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_22_13_3_2008.jpg
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_23_13_3_2008.jpg
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_24_13_3_2008.jpg


விவேக்
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_27_13_3_2008.jpg
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_28_13_3_2008.jpg


மனுஷ்ய புத்திரன்
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_30_13_3_2008.jpg
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_31_13_3_2008.jpg
http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_32_13_3_2008.jpg


( நன்றி: குங்குமம் )

Wednesday, March 19, 2008

வாடாத நினைவுகள் - லேனா தமிழ்வாணன்

லேனாவின் பார்வையில் என்ற இந்தப் பகுதியில் சமூக அக்கறைகளை மட்டுமே இதுவரை எழுதி வந்திருக்கிறேன்.


ஆனால் முதல் முறையாக இப்பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்த எண்ணுகிறேன்.


தமிழ் எழுத்துலகில் நவீன வடிவங்களைப் பயன்படுத்தியவர்களுள் சுஜாதாவின் பங்கு மிக உருப்படியானது.60 வயது ஆனதும் சாய்வு நாற்காலியைக் கேட்காமல், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு வரை எழுத்து எழுத்து என்று 73 வயதிலும் எழுத்தை அப்படி நேசித்தார்.


வாசகர்கள் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே அவரது படைப்புகள் அமைந்தன. தம் திருப்திக்கு எதையாவது எழுதுவேன்; படித்துத் தொலைப்பது உங்கள் தலையெழுத்து என்கிறபோக்கு சுஜாதாவிடம் இருந்ததே இல்லை.


1970களில் இளைஞர்களாக இருந்தவர்களை ஈர்க்க ஆரம்பித்தார். அவர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார். காலத்திற்கு ஒவ்வாத எழுத்து என்றோ, இவர் அந்தக் காலத்து ஆசாமி என்றோ இவரது எழுத்துக்கள் பெயர் வாங்கியதே இல்லை. நவீனங்களுக்கு ஏற்ப, அண்மைத் தலைமுறைக்கு ஏற்பத் தன் எழுத்தை நவீனப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் சுஜாதாவுக்கு இருந்தது.


அறிவியல் சார்ந்த எழுத்து என்று எடுத்துக் கொண்டால், சுஜாதாவின் பங்களிப்பை எவருமே குறைத்து மதிப்பிடமுடியாது. எட்டாத உயரத்தில் இருந்த விஷயங்களைப் பிடித்துப் பாமரன் கையில் கொடுத்து இந்தா புரிந்து கொள்; இது மிகச் சுலபம் என்று ஆக்கியவர் சுஜாதா.


இவரது எழுத்து நடைமுறைக்குப் புதிது. அதில் இருந்த நமட்டுச் சிரிப்பை அடையாளம் காணவே உயர்ந்த ரசனை வேண்டும்.


ஆக, வாசகர்களின் இரசனைகளைக் கருத்தில் கொண்டு சில இடங்களில் இறங்கி வந்தும், சில இடங்களில் அவர்களிடம் நீங்கள் மேலே வாருங்கள் என்று இழுத்துக் கொண்டும் வந்த இரட்டைச் சாதனையாளர் சுஜாதா.


ப்ரியா படத்தில் ஆரம்பித்த இவரது திரையுலகச் சாதனை சாதாரணமானதல்ல. திரையுலகில் பலராலும் அண்ணாந்து பார்க்கப்படுகிற ஷங்கரே அண்ணாந்து பார்க்கிற மனிதராக எழுத்துலகைச் சேர்ந்த ஒருவர் விளங்கியிருக்கிறார் என்பது எழுத்துலகிற்கே பெருமை.


கணிப்பொறியும் எழுத்தும் சுஜாதாவின் இரு கண்கள். தொழில் நுட்பம் நன்கு தெரிந்தவர்களுக்கு எழுத்துலகம் என்பது தொலைதூரம். எழுத்தாளர்கள் பலருக்கோ கணிப்பொறி என்பது கனவுலகம். ஒரு மனிதன் இரு குதிரைகளில் சவாரி செய்யமுடியுமா என்று கேட்டவர்களுக்கு சுஜாதாவின் அறிவிக்கப்படாத பதில் முடியும் என்பது.


இந்த எழுத்துலக மேதை குமுதத்தோடு இணைந்திருந்த காலத்தில் நன்கு நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் நலனில் அவர் காட்டிய அக்கறைகள்; இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை எண்ணிப் பார்க்கும்போது என் கண்கள் பனிக்கின்றன.


தமிழ் எழுத்துலகிற்கென்று பல பெருமைகள் உண்டு. இவற்றுள் முக்கியமானது. எந்த மொழிக்காரர்களிடமும் தமிழ் வாசகர்கள் ஒன்றைச் சொல்லி மார்தட்டிக் கொள்ளலாம். "எங்களுக்கென்று ஒரு சுஜாதா இருக்கார் தெரியும்ல?"


 ( நன்றி: http://www.tamilvanan.com/ )

Sunday, March 16, 2008

சுஜாதா அஞ்சலி கூட்டம் - பெங்களூர்

நேற்று பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. நானும் ஒரு சுஜாதா வாசகனாக என் நண்பருடன் சென்றிருந்தேன். கூட்டம் முதலில் கப்பன் பூங்காவில் என்று சொன்னார்கள், ஆனால் திடீர் என்று ஞானோதயம் வந்து தமிழ்ச் சங்கத்தில் என்று அறிவித்தார்கள். கொசுக்கடிக்கு இந்த இடம் தேவலாம் என்று போனேன்.திண்ணையில் அறிவிப்பு மாறிக்கொண்டே இருக்க, கூட்டம் மாலை 4:00லா, 4:30மணியா என்ற குழப்பம் இருந்துக்கொண்டிருக்க. எதுக்கும் போகும் முன் திண்ணையில் ஒரு தடவை பார்க்கலாம் என்று பார்த்தால் 5:00மணி என்று போட்டிருந்தது. 4:45 மணிக்கு போன போது


'பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்'  வெளியில் சாக்பீஸில் 'சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம்' மாலை 5:30 என்று பலகையில் எழுதியிருந்தார்கள்.


பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் 'அல்சூர் லேக்' பக்கத்தில் இருக்கிறது. நான் பலபேரிடம் விலாசம் கேட்ட போது, எல்லோரும் இப்படி தான் சொன்னார்கள். லேக் பக்கத்தில் தமிழ்ச் சங்கம் என்று கேட்டால் யாராவது குளத்தில் தள்ளிவிடும் அபாயம் இருப்பதால் முகவரியை கொடுக்கிறேன்: சரியான முகவரி #59, அண்ணாசாமி முதலியார் தெரு.


5:35மணி ஆகியிருந்தது. யாரோ ஒருவர் சுஜாதா படத்தை கொண்டு வந்து மாலை போட்டு, பக்கத்தில் இரண்டு பூத்தொட்டிகளை வைத்தார். ஒருவர் அவர் புத்தகங்களை எடுத்து வந்து மேடையில் அடுக்கினார். இருபது வருஷம் கழித்து சுஜாதா இறந்த செய்தி கேட்டு நான் சென்னை வந்தேன் என்று ஆதாரத்துடன் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.


வானம் லேசாக மூடியிருந்தது. மழை வரும் அறிகுறி தென்பட்டது. 5:45மணி ஆனது கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஒருவர் தமிழ்ச் சங்க நிர்வாகியிடம் போய் மணி 5:45 ஆகிவிட்டதே கூட்டத்தை ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டவுடன். கொஞ்சம் டென்ஷனாகி "தலைவர் இன்னும் வரவில்லையே ? தலைவர் வராமல் கூட்டமா ?' தமிழ்ச் சங்கத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது தெரியுமா?" என்று பதில் சொன்னார்.


பாரம்பரியம் மிக்க இந்த தமிழ்ச் சங்கத்தின் தலைவரோ உபதலைவரோ ஒருவர் கோட் சூட் டையுடன் அப்போது வந்தார்.( நான் கிளம்பும் போது, என் மனைவி "தமிழ்ச் சங்கத்துக்கு போறீங்க ஒரு வேட்டியை கட்டிக்கொண்டு போக கூடாதா? இப்படி ஜீன்ஸ் போட்டுக்கொண்டு போறீங்களே ?" என்று சொன்னது நினைவுக்கு வந்தது )


வந்த தலைவர், மற்றும் நிர்வாகிகள் (தொண்டர்கள் என்றும் சொல்லலாம்) எல்லோரும் முதல் மாடிக்கு சென்றுவிட்டார்கள். காப்பி குடிக்க.


கீழே அரங்கில் மாலை போட்ட சுஜாதாவும், என்னை போன்ற சுஜாதா விஸ்வாசிகளும் தனியாக பேசிக்கொண்டிருந்தோம். மணி 6:00 ஆகியிருந்தது. ராகுகாலம் கூட கிடையாது ஏன் இவ்வளவு லேட் என்று சிலர் மேலே போய் அவர்களை அழைத்து வந்தார்கள். கூட்டம் சரியாக 6:20 க்கு ஆரம்பம் ஆனது.


பேச்சை ஆரம்பித்தவர் "கப்பன் பூங்காவிற்கு பதில் தமிழ்ச் சங்கத்திலேயே நினைவு அஞ்சலி விழாவை கொண்டாட முடிவு செய்தோம்" என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.


சுஜாதா பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு கமல், ரஜினி, ஷ்ரேயா போன்றவர்களை பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டு. சுஜாதாவிற்கு அஞ்சலி என்று முடித்தார்கள். மணி 7:25 ஆகியிருந்தது. என்னை 'சுருக்கமாக' பேச அழைத்தார்கள். நான் நன்றி, வணக்கத்துக்கு இடையில் 'சுஜாதா, சுஜாதா' என்று இரண்டு முறை சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தேன். கூட்டம் முடிந்ததும், தமிழ்ச் சங்கத்தில் திடீர் என்று நல்ல கூட்டம். என்ன என்று பார்த்தால் வெளியில் இடி மின்னலுடன் மழை. மழைக்கு நிறைய பேர் ஒதுங்கினார்கள்.


ஒதுங்கியவர் ஒருவர் யாரிடமோ "இங்கு என்ன சார் இன்னிக்கு டிராமாவா?" என்றார்


வெளியே போகும் போது, துண்டு காகிதத்தை ஒருவர் என்னிடம் கொடுத்தார். ஞாயிறு அன்று நூல் வெளியீடு, மற்றும் தொல்காப்பியர் கருத்தரங்கம், மாலை 3:00 மணி என்று போட்டிருந்தது. திங்கட்கிழமை போனால் சரியாக இருக்கும் என்று எண்ணினேன்.


 பிகு: 'பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்', ''பெங்களூர் தமிழ் சங்கம்' எது சரி என்று தெரியலை. 'பெங்ளூர்த் தமிழ்ச் சங்கம்' என்று தான் எல்லா இடங்களிலும் எழுதியிருந்தது.


 


 

Friday, March 14, 2008

சுஜாதா எழுதிய கடைசி பாசுரம்

சில நாட்களாக உடல்நலத்தில் சற்று நலிவு ஏற்பட்டதனால் ஓரிரு எண்ணங்கள் தொடரை தொடர்ந்து எழுதமுடியவில்லை. இப்பொழுது உடல்நிலை சரியாகிவிட்டதால் இந்த தொடரை விட்ட இடத்தில் எடுக்கிறேன்.திவ்ய பிரபந்தத்தில் எந்த பாசுரத்திலும் ஏதாவது ஒரு புதிய செய்தி இருந்தே தீரும். அந்த புதிய செய்திகளை சொல்லும்போது அதன் தமிழும் பக்தியும் சொல்லாட்சியும் அவரவர் ஆர்வங்களுக்கேற்ப நமக்கு கிடைக்கும். பல புதிய சொற்கள் பயில முடியும். இதற்காக ஒரு வைணவனாகவோ பக்தியால் நிறைந்தவனாகவோ இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. தமிழார்வம் மட்டும் போதும். உதாரணத்திற்கு குலசேகர ஆழ்வாரின் 'வாளால் அறுத்து சுடினும்' என்ற பாசுரத்தில் அந்த காலத்து சர்ஜரி பற்றிய செய்திகள் கிடைத்தன என்பதை குறிப்பிட்டோம். இப்படி ஒவ்வொரு பாசுரத்திலும் நம்மால் திளைக்க முடியும்.'கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை,
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே.'


இந்தப் பாசுரத்தை எழுதிய திருப்பாணாழ்வாரின் வாழ்க்கையைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அவர் ஸ்ரீரங்கம் கோவில் நுழைவதற்கு அனுமதி கிடைக்காமல் தவித்தது. பகவானே பக்தனின் கனவில் தோன்றி 'என் நிஜமான பக்தனை ஏன் வெளியே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டது. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவராக இருந்தும் அவரை மிகுந்த மரியாதைகளுடன் அரங்கனின் சந்நிதிக்கு அழைத்து வந்து அவர் பரவசம் அடைந்தது' என இந்தச் செய்திகள் எல்லாம் 'திவ்ய சூரி சரிதம்' போன்ற நூல்களில் கிடைத்தாலும் திருப்பாணாழ்வாரின் இந்தப் பாடலை தனிப்பட்டு ரசிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை. 'ஸ்ரீரங்கநாதர் ஒருவரே எனக்குப் போதும். வேறு யாரையும் தரிசிக்க வைத்து என்னை குழப்பாதீர்கள்' என்கிறார்.


மற்றுமோர் தெய்வமில்லை என்கிற சித்தாந்தம் வைணவத்தில் மிக முக்கியமானதொன்று. எந்த கடவுள் பெரியவர் யார் சீனியர் யார் ஜூனியர் என்பதெல்லாம் கவனம் கலைக்கும் விஷயங்களாகும். 'திருமால் ஒருவனே எனக்குப் போதும். அவனை தரிசித்த பின் எனக்கு வேறு யாரும் தேவையில்லை' என்கிறார் ஆழ்வார்.


பிரபந்தத்தில் எண்ணிக்கையில் மிக குறைவான பாசுரங்கள் இவருடையது. என்னுடைய பழைய பாவங்களையெல்லாம் தீர்த்து வைத்து என்னை 'வாரமாக்கி' வைத்தான். 'குத்தகைக்காரனாக்கிவிட்டான்' என்று சொல்லும்போது கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவின் பரஸ்பரம் புரியும்.

Thursday, March 13, 2008

Why He Mattered...

Why He Mattered...


Friday March 7 2008 18:24 IST


Baradwaj Rangan
The unfortunate demise of the Tamil writer Sujatha — from the news-channel eulogies, though, you’d think the man was merely a screenwriter, giving shape to the visions of Shankar and Mani Ratnam — has occasioned a steady outpouring of how-I-learnt-to-read-Tamil-with-his-books memories, and while I know from experience that that’s true, I feel no one has zeroed in on why this is so.

 After all, there were so many other Tamil writers — the great modernist god that was the early Vairamuthu, say — who were Sujatha’s contemporaries and who were certainly no slouches when it came to a certain felicity of expression that could make any rank newbie fall in rapturous love with the language. But I think what made Sujatha stand apart and speak to so many of us who grew up in the seventies and the eighties was that his writings were instantly appealing to a generation that could understand Tamil and speak Tamil and read Tamil and perhaps even write Tamil — but thought in English.

I’m not just talking about the sci-fi setting of En Iniya Iyandhira and its robo-dog named after the Roman goddess Juno — all far, far removed from the sociopolitical and moralistic scenarios that constituted a lot of the writing in the local magazines of the time — but Sujatha’s Western sensibilities would peek through even his pieces on ancient religious texts.


By “Western” sensibilities, I mean that he could demystify the most arcane of abstractions with the lightest of touches and with the gentlest sense of humour. In other words, he would take his subject seriously without taking himself seriously — and that was refreshing to a generation whose defining characteristic was (a borderline don’t-care-ish) casualness. As an aside, maybe that’s why Mani Ratnam felt the time was ripe for his kind of cinema — because he had in front of him a young audience that wasn’t especially “Indian” when it came to, say, respecting authority figures.


Do you think a filmmaker from an earlier era would have given us the scene from Roja where Arvind Swamy’s mother speaks of his smoking habit as if it were a minor annoyance, perhaps ranking alongside a maidservant who doesn’t show up despite her previous-evening promises to be there first thing in the morning? And maybe that’s why Mani Ratnam worked so extensively with Sujatha, one Western sensibility in complete synchronicity with another. (So also Kamal Hassan, who collaborated with Sujatha on Tamil cinema’s first stab at a Bondian swashbuckler, Vikram.)


Anyway, coming back to Sujatha, here’s what I mean when I talk of his being with it, and with us: In a recent installment of his series in the magazine Kalki — the column was called Vaaram Oru Paasuram (loosely, ‘A Verse A Week’), where, each time, he’d pick a sacred hymn and lay it out in layman terms — he’d chosen a stanza from (the poet-saint) Nammazhvar’s Thiruvaimozhi, one that went Nalkuravum, selvum...


Now, this is what he does. Like that other Tamil instructor so beloved to those of a certain age — Maa. Nannan (from Doordarshan’s Vaazhkai Kalvi), who opened up to us a world of etymology and spelling and pronunciation, armed with nothing more than a piece of chalk, an easel-tilted blackboard and the patience of the ages — Sujatha first breaks down the verse word for word, stopping to intone, for instance, that “nalkuravu” is Old Tamil for “poverty.” Having approached the passage at a building-blocks level, Sujatha now stands back a little and talks about the most immediately apparent meaning, which is Nammazhvar’s contention that the image of the Lord he laid eyes on was an amalgamation of antonyms — poverty and wealth, poison and life-giving nectar, amity and enmity, hell and heaven — and therefore, He is (and is responsible for) everything. And after this is when Sujatha doffs his “Indian” hat — his truly reverential, emotional, subjective “Indian” hat; there’s not a note of condescension or scepticism in this robo-dog creator’s appraisal of the religious text at hand — and looks at things from a decidedly objective, “Western” perspective. He marvels that you could extrapolate this philosophy of God into the utmost extreme of antonyms: namely, if you think He exists, He exists; if you don’t, He doesn’t.


But because of His all-encompassing nature, even His non-existence is proof of His existence. And after this dizzying demonstration of circular reasoning, Sujatha signs his piece off with the Tamil equivalent of “the mind boggles,” capping off what could have been a fuddy-duddy exercise in esoteric academia with a cheeky flourish of hipness. And that’s why he’ll be missed — because, like few before him, he got us in touch with the uncoolest of things in the coolest of ways.


( Source: Sunday Express ) 

Wednesday, March 12, 2008

ஒரே வைரக்கல்! - மதன்

சுஜாதா பற்றி மதன் 'Sunday Indian' என்ற பத்திரிக்கையில் எழுதியது.
PDF File

Monday, March 10, 2008

அப்போலோ தினங்கள்

[%image(20080310-p13a.jpg|400|285|null)%]

'அப்போலோ தினங்கள்' என்று கடைசியாக அவர் எழுதியதைப் பார்த்தபோது, எனக்கு அவர் ஆஸ்பத்திரியில் போராடிய கடைசித் தருணம்தான் நினைவுக்கு வந்தது.


அதற்கு முன் நான் அவரைப் பார்த்தது, பிப் 21ம் தேதி. உடம்பு மெலிந்து, ஆக்ஸிஜன் மிஷினின் உதவியால் சுவாசம். கடந்த பதினைந்து வருடங்களில் நான் அவரை எவ்வளவோ முறை சந்தித்திருக்கிறேன்; இதுமாதிரி பார்ப்பது முதல் முறை. அத்தனை கஷ்டத்திலும், 'என்ன தேசிகன், ஆம்டையா நல்லா இருக்காளா? ஆண்டாள் எப்படி இருக்கா? ஸ்கூல் எல்லாம் ஒழுங்காப் போறாளா?' என்று எதையும் விடாமல் விசாரித்தார்.[%image(20080310-p13.jpg|298|247|null)%]

எல்லாரும் நல்லா இருக்காங்க சார்!'


'கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?' என்றார்.


சில மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ரத்தப் பரிசோதனை அளவில் கிரியாடினின் அளவு அதிகமாக இருப்பதாகத் தகவல் வந்ததால், டாக்டர் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லியிருந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.


'இந்தத் தடவை உடம்பு ரொம்ப படுத்திடுத்து. ஆஸ்பிட்டல் போனா இன்னும் படுத்துவாங்களே' என்றார்.


'ஒண்ணும் ஆகாது சார்! ஒரு டயாலிஸிஸ் பண்ணிட்டு அனுப்பிடுவாங்க!'


கண்களைக் கொஞ்ச நேரம் மூடிக் கொண்டார். நாக்கால் உதட்டை ஈரப்படுத்திக்கொண்டார். அருகிலுள்ள பிரின்டர், ஃபான்ட் பிரச்னையினால் பூச்சி பூச்சியாக எதையோ அடித்துத் தள்ளியிருந்தது.


[%image(20080310-p14a.jpg|191|285|null)%]

ஆம்புலன்ஸில், 'ஏ.ஸி சரியா இல்லியே' என்றார். ஃபேனைத் தட்டிவிட்டு, அவர் பக்கம் திருப்பினேன். 'எனக்கு ஒண்ணும் சீரியஸ் இல்லை, டிரைவரிடம் மெதுவாவே போகச் சொல்லுப்பா.'


ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டுக் கிளம்பினேன். 27ம் தேதி காலையில் அவரது மூத்த மகன் ரங்காவிடமிருந்து அழைப்பு. 'அப்பாவுக்கு ரொம்ப முடியலை, சீக்கிரம் கிளம்பி வாப்பா' என்றார்.


சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, 'இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது' என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.


ஆனால், நான் மருத்துவமனை போன சமயம், அவர் உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்... பெருமாளே, இதெல்லாம் அவருக்குத் தெரியக் கூடாது என்று ரெங்கநாதரை வேண்டிக்கொண்டேன்.


'சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது'


என்று அவர் தன் எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில் எழுதியிருந்தார்.


சென்ற ஜூன் மாதம் அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஸ்ரீசூர்ணம் கேட்டு நெற்றியில் இட்டுக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.


ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளைச் சேவித்த பின், அவருக்கு ஏற்பட்ட மனநிறைவை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. 'எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!' என்றார் நெகிழ்வுடன். கோயிலில் ஏனோ சில இடங்களில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துகொண்டார். அதைக் 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்தார்.


ஸ்ரீரங்கம் பயணம் முடிந்த பின், 'இந்த ட்ரிப்புக்கு நான் எவ்ளோ தரணும்?' என்றார். 'சிவாஜி படத்தின் பிரிவ்யூக்கு ஒரு டிக்கெட்' என்றேன். அதற்கும் ஒரு சிரிப்பு.


பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். 'அது உடம்புக்கு ஆகாது' என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், 'உன் பேர் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.


[%image(20080310-p14c.jpg|294|221|null)%]

'ஏம்பா, உன் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிருக்க, ஸ்கூல்ல கேலி பண்ண மாட்டாங்களா?'


'சார், மரகதவள்ளின்னே பேர் இருக்கும்போது...'


'மரகதவள்ளி நாளையே சுருக்கி மேகி ஆயிடுமே' என்றார் தனக்கே உரிய நகைச்சுவையுடன்.


சமீபத்தில் ஒரு முறை 'உன்னுடன் பைக்கில் வருகிறேன்' என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். 'இப்ப என்ன ஸ்பீட்?' என்று விசாரித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!' என்று பைக் சவாரியை அனுபவித்தார்.


'ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்' தொகுப்புக்கு நான் கோட்டோவியங்கள் வரைய ஆசைப்பட்டபோது, அவரிடம் என்னென்ன வரைய வேண்டும் என்று கேட்டேன். ஒரு பேப்பரை எடுத்து, ரங்கு கடை எங்கே இருக்கும், அவர் வீடு, கோபுரங்கள், தெருக்கள் என்று ஏராளமான இடங்களை மேப் போல போட்டுக் காண்பித்தார். வரைந்து வந்து காண்பித்தபோது, மிகவும் ரசித்தார். அவரும் ஓர் ஓவியர்தான் என்பது பலருக்குத் தெரியாது. அவர் வரைந்த வாட்டர் கலர் படங்கள் முன்பு அவர் வீட்டில் மாட்டியிருக்கும். அதே போல், கணையாழியின் கடைசிப் பக்கத்திலும் சில சின்னச் சின்ன படங்கள் வரைந்துள்ளார்.


ஐந்து வருடங்களுக்கு முன் அவரின் பயோகிராஃபியை எழுத வேண்டும் என்று கேட்டேன். 'உண்மையைச் சொல்ல வேண்டி வரும்; கூடவேபிரச் னையும் வருமே' என்று யோசித் தார். போன வருடம் மீண்டும் அதே யோசனையைச் சொன்ன போது, 'ஓ, தாராளமா செய்ய லாமே!' என்றார் ஆர்வத்துடன். 'சில பகுதிகளை எழுதிட்டு வர்றேன், பாருங்க' என்றேன். 'நீ எழுதுறாப்ல எழுதாத; நான் எழுதுறாப்ல எழுது' என்று உற்சாகப்படுத்தினார்.


அதைத் தொடர்ந்து, அவரைப் பேசவைத்து, சில பகுதிகளை ரெக்கார்ட் செய்தேன். பல தர்மசங்கடமான கேள்விகளுக்கு எளிமையாகப் பதில் சொன்னார். சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, கண்களில் நீர் வந்தது. அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள், கதைகளில் அவர் பயோகிராஃபி சம்பந்தமான பகுதிகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்...


'எல்லாமே ஒரு குறுக்கெழுத்துச் சதுரம் போல இருக்கிறது, மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று வார்த்தைகளுக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. வெள்ளைக் கட்டங்களை நிரப்புகிறோம். பல வார்த்தைகள் கிடைத்துவிட்டன. சில வார்த்தைகளுக்கு எழுத்துகள் தான் உள்ளன. சில வார்த்தைகள் காலியாகவே இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அது நிரப்பப்படும்'
என்று சுஜாதா எழுதிய வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.


[%image(20080310-p14d.jpg|185|333|null)%]

அவர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகம் நிறைய. நவம்பர் மாதம், 'இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புஸ்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அதுதான் எனக்கு எல்லாம்!' என்றார்.


அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, 'சிற்றஞ் சிறுகாலே...' என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.


'மனித உயிர் என்பது வற்றாத ஓர் அதிசயம், அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும்'


என்று சுஜாதா சொன்னது எவ்வளவு உண்மை!


இப்போது பிரிகிறோம், இனி எப்போது சந்திப்போம் சுஜாதா சார்?


(இந்த வார விகடனில் சுஜாதா பற்றி என்னுடைய கட்டுரை, நன்றி: விகடன் )
சுஜாதா எழுதிய கடைசி பத்தி 'அப்போலோ தினங்கள்' அதில் எழுதியிருப்பது


இன்று 18வது நாள்.. எத்தனை பேருக்கு கவலை, மனக் கஷ்டம். இதை விதி என்று சொல்வதா தற்செயல் என்பதா? எப்படியும் இந்த அனுபவத்தை நான் மறக்கவோ மீண்டும் தாங்கவோ முடியாது. இனி ஆஸ்பத்திரி பக்கமே வரக்கூடாதபடி பகவான் என்னைக் காக்கவேண்டும். மனைவியும் மகனும் பொறுமையாக பார்த்துக் கொண்டதை மறக்கவே மாட்டேன். இவர்கள் இல்லை என்றால் சீரியஸாகி விளைவுகள் விபரீதமாயிருக்கும்.


( விகடனில் இரண்டு லைன் எஸ்டிராவாக இருக்கிறது அது தவறு )

Sunday, March 9, 2008

சுஜாதா – ஒரு சகாப்தம் கல்கி கட்டுரை

போனவாரம் கல்கியில் வந்த கட்டுரை. 
PDF வடிவில் டவுன் லோட் செய்து படிக்கலாம் கல்கி கட்டுரை


(இது போல் பல விஷயங்களை எனக்கு ஸ்கேன் செய்து அனுப்பும் திரு. நடராஜனுக்கு இந்த சமயத்தில் நன்றி கூட விரும்புகிறேன். )

Saturday, March 8, 2008

சுஜாதாவிற்கு பதிலா - ஜே.எஸ்.ராகவன்

[%image(20080308-jsraghavan_3.jpg|175|175|null)%]

சுஜாதாவிற்கு பதிலா? ஜே.எஸ்.ராகவன் (புரோக்ராம் செய்த ஒரு ரோபோவாக சுவையான விஷயங்களை பூலோகத்தில் எழுதிக் குவித்த வித்தகர் சுஜாதா வைகுண்ட டைம்ஸில் இவ்வாறு பதிலளிப்பாரா? )? விஞ்ஞானத்தின் உதவியுடன் மானிடர்களைப் பதினாறைத் தாண்டாத மார்க்கண்டேயர்களாக மாற்ற முடிந்துவிட்டால் என்னுடயை நிலை என்னாவது?


(யமதர்மராஜன், யமலோகம்)


! காலன் கலங்க வேண்டாம். படை எடுப்பு, பயங்கர வாதம், வாகனப் புகைகள், பஸ் எரிப்பு, ஓஸோன் ஓட்டை, கலப்படம் போன்றவை உங்களுடைய பாசக் கயிற்றுக்கு வேலை வைக்கும்.


? மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி அடைய ஒரு சிறப்புப் பயிற்சி தேவையாமே? அது என்ன? ( மேனகா, இந்திர லோகம்)


! வெற்றி பெற்றவுடன் இரண்டு கைகளால் கன்னங்களை எல்.ஐ.சி எம்பிள மாகத் தாங்கி ஊஊஊஊன்னு ஒரு பாட்டம் அழணும். அப்படி அழுது பஞ்ச் வைக்கா விட்டால் சூட்டின கிரீடத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போனாலும் போய் விடுவார்கள்!


? கையில் சாப்ட்வேர் எதற்கு? சுவடிகள் இருந்தால் போறும் இல்லையா? (சரஸ்வதி, பிரும்ம லோகம்)


! Lotusல் உட்கார்ந்து கொண்டுசாப்ட்வேரைப் புறக்கணித்தால் எப்படி?


? நாராயணனைத் தூணிலே கண்டவன் நான். ஆனால் துருவன் ரேஞ்சில் பிரபலமாகவில்லையே ஏன்? (மாஸ்டர் பிரகலாதன், வைகுண்டம் 


! சிம்பிள். துருவனுடைய மேட்டர் பூலோக சினிமாக் களில் நன்றாக ஊறினஅம்மா-அப்பா-சித்தி-சென்டி மென்ட். அதனால் தான் அவன் வடக்கே நிரந்தர 'ஸ்டார்' ஆகிட்டான்.


? விமானத்திலே சீதையைக் கடத்திண்டு போனதை எதிர்த்து சண்டை போட்ட என்னை ராவணன் சிதைத்தது நியாயமா? ( ஜடாயு, ஆகாசம்)


! ஏரோடிரம்மில் வேலையாயிருந்தவன் நான். ஆனாலும் இதை விமானங்கள் எதிர்கொள்ளும் bird hit ஆகக் கருதாமல் ஒரு அரக்கச் செயலாகவே நினைக் கிறேன்.


?என்னுடைய ஐயனைப் போல பூலோகத்தில் இருப்பவர்களுக்கு மூன்றாவது கண் இருந்தால் என்ன ஆகும்? (நந்திகேஸ்வரன், கைலாயம்)


! (1) எல்லோர் கைகளிலேயும் ஒரு தீயணைப்புக் கருவி தயாராக இருக்கும். (2) மூன்று கண்ணாடிகள் பொருத்திய ஆயுத (எழுத்து)க் கண்ணாடி அணிய வேண்டி வரும். (3) விபூதிச் செலவாணி குறையும்.


? தலை கீழாக நின்று முயன்றாலும் என்னால் நேராக நிற்க முடியவில்லையே


என் செய்ய?


(திரிசங்கு ராஜா, அந்தரம்)


! அது உங்களுடைய 'மித்திரர்' செய்த வேலை! நான் என்ன செய்ய?


? காதலர்கள் தினம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? (ரதி-மன்மதன், சொர்க்கபுரி)


! தினம் காதலர்களாக இருக்கும் உங்களுக்குக் காதலர் தினம் எதற்கு?


? குக்கூ, குக்கூ என்று சப்தமிடும் புறாக்கள் பக்கம்தான் என்னுடைய தராசு சாயும். உங்கள் தராசு?


(சிபிச் சக்கரவர்த்தி, வைகுண்டம்)


! ஹைக்கூ பக்கம்!


? புள்ளின் வாய் கீண்டானை.....என்ற இடத்தில் நிறுத்தி விட்டு...பொல்லா அரக்கனை என்று பாடி நிறுத்தி விட்டு........கிள்ளிக் களைந்தானை.......என்று பாடுகிறார்களே? கண்ணன் பொல்லா அரக்கனா? இது கொடுமையில்லையா?


( ஆண்டாள் நாச்சியார் , வைகுண்டம்)


! ஓங்கியுலகளந்த உத்தமன் bare body.......... என்றும் ஒருத்தர் பாடுகிறாராமே அந்தக் கொடுமையை விடவா?


? சாகித்யங்களை அகாடமியில் 'போஸ்' சிஸ்டத்தில் கேட்டதுண்டா?


( நாரதர், திரிலோக சஞ்சாரி)


! என்னது? சாகித்ய அகாடமியா? பொழைச்சுக் கிடக்காததினாலே அடுத்த ஜன்மத்தில்தான் ?!


( நன்றி: ஜே.எஸ்.ராகவன், jsraghavan@gmail.com )

அபூர்வ மனிதர் சுஜாதா - பாவண்ணன்

தூங்கியெழுந்ததிலிருந்து தூங்கப்போவதுவரை தன் எல்லா நடவடிக்கைகளிலும் இயல்பான உற்சாகம் இழையோட வாழ்கிற மனிதர்கள் ஒரு சிலரையாவது நாம் பார்த்திருக்கலாம். அதே சமயத்தில், ஒரு புத்தகத்துக்கு அட்டை போடுவதிலிருந்து ஓர் எந்திரத்தை வடிவமைப்பதுவரை, எந்தச் செயலை எடுத்துக்கொண்டாலும் கச்சிதமாகவும் சரியான முறையிலும் செய்து முடிக்கிற திறமையாளர்கள் ஒரு சிலரையும் நாம் பார்த்திருக்கலாம். உற்சாகம் மிகுந்த மனிதர்கள் அனைவரும் திறமையாளர்களாக இருப்பதில்லை. திறமையாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வாழ்வதுமில்லை. உற்சாகமும் திறமையும் ஒருங்கே பொருந்திய அபூர்வமான மனிதர்கள் மிகவும் குறைவு. இந்தச் சிறிய பட்டியலில் அடங்கக்கூடிய அபூர்வமான மனிதர் சுஜாதா என்கிற எஸ்.ரங்கராஜன்.சுஜாதா மிகச்சிறந்த பொறியாளர். இந்தியா முழுதும் இன்று பயன்படுத்தப்பட்டுவரும் மின்வாக்குக்கருவியை வடிவமைத்த தொடக்கக்காலப் பொறியாளர்களில் ஒருவர். சங்க இலக்கியங்களiலும் பக்தி இலக்கியங்களiலும் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம் வெகுஜன இதழ்ப்பரப்பில் தொடர்ச்சியாகவும் உத்வேகத்தோடும் இயங்கியவர். எல்லாக் கட்டங்களிலும் தனக்குரிய வாசகர்களை நிறைவான எண்ணிக்கையில் கொண்டவர். வெற்றிகரமான திரைக்கதை அமைப்பாளர். தொழிலையும் எழுத்துமுயற்சிகளையும் இணைத்துக் குழப்பிக்கொள்ளாதவர். தொழிலால் உருவாகும் களைப்பை எழுத்தில் ஈடுபட்டுக் கரைத்து உற்சாகத்தைத் திரட்டிக்கொள்வதும் எழுத்தால் உருவாகும் களைப்பை தொழிலில் ஈடுபட்டுக் கரைத்து புத்துணர்வைப் பெற்றுக்கொள்வதும் அவருக்கு சாத்தியமாக இருந்தது.


எந்த ஜனரஞ்சக எழுத்தாளருக்கும் இல்லாத ஒரு முக்கியமான பண்பு சுஜாதாவுக்கு இருந்தது. மற்ற எழுத்தாளர்கள் தம் படைப்பின் சுவையில் திளைப்பவர்களாக தம் வாசகர்களை உருமாற்றி வைப்பவர்களாக இயங்கிய வேளையில் சுஜாதா மட்டுமே தன் வாசகர்களை ஏதேனும் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனையைநோக்கி எப்போதும் தள்ளிக்கொண்டிருப்பவராக இயங்கினார். எழுத்தில் திளைப்பவர்களையல்ல, எழுத்தின்வழியாக தன் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்கிறவர்களாக வாசகர்களை மாற்றினார். புதிய புதிய விஷயங்களைநோக்கி, அறிவியல் உண்மைகளைநோக்கி, நாட்டுப்புறப்பாடல்களைநோக்கி, குழந்தைகளைநோக்கி, கணிப்பொறிகளைநோக்கி, நாடகங்களைநோக்கி, கதைக்களஞ்சியங்களைநோக்கி, சங்க இலக்கியங்களைநோக்கி, பிரபந்தங்களைநோக்கி என வாசகர்களை ஓய்வற்றவர்களாக மாற்றிய பெருமை சுஜாதாவுக்குமட்டுமே உண்டு. சுஜாதாவின் ஈடுபாடுகளை வியந்து பின்பற்றும் வாசகன் ஏதோ ஒரு கணத்தில் அவரால் தூண்டப்பட்டு தானும் ஓய்வற்ற உற்சாகத்தின் இன்பத்தை நுகர்கிறவனாக, தொழில்நுட்பத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமுடையவனாக மாறிவிடுகிறான். தன்னையறிவதால் தனக்குள் நிகழும் மாற்றத்தால் ஒரு வாசகன் பெறுகிற மகிழ்ச்சியே ஓர் எழுத்தாளருக்குரிய வாசகப்பரப்பைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியென எடுத்துக்கொண்டால் சுஜாதா உருவாக்கிய வாசகப்பரப்பு தமிழ் ஜனரஞ்சக எழுத்துலகில் வேறு எவராலும் உருவாக்கப்பட முடியாத ஒன்று.


தொழில்நுட்பத்தோடு செயலாற்றும் ஒரு களமாக மட்டுமே எழுத்துமுயற்சியை வரையறுத்துக்கொள்ளும் பார்வை சுஜாதாவுக்கு இருந்தது. ஒருவகையில் இதுவே சுஜாதாவின் பலம். மற்றொருவகையில் இதுவே பலவீனமும் கூட. அப்பார்வை புறவயமாக உலகநடப்புகள் எல்லாவற்றையும் பார்ப்பதற்கான குணத்தை அவருக்கு வழங்கியது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவும் வாசகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இப்பார்வை அவருக்கு மிகவும் துணையாக இருந்தது. அதே சமயத்தில் ஆழந்து நுட்பமாக வெளிப்படுத்தப்படவேண்டிய சில செய்திகளைக்கூட அவர் போதிய நுட்பமின்றி மேலோட்டமாக வெளிப்படுத்தவேண்டிய பழக்கத்துக்கு ஆளானார் அவர். இது இப்பார்வையின் துணைவிளைவு. அகஎழுச்சியிலும் சொற்களiன் ஊடாக வெளிப்படக்கூடிய படைப்பாளியின் பார்வையிலும் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை.


இன்று அவர் நம்மிடையே இல்லை. அரைநூற்றாண்டு காலமாக அவர் எழுதிய இருநூறுக்கும்மேற்பட்ட சிறுகதைகளும் பல தொடர்கதைகளும் நாடகங்களும் அறிவியல் நூல்களும் அறிமுக நூல்களும் மட்டுமே உள்ளன. தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் அவருடைய இடம் உறுதியான ஒன்று. வகைமைகளiல் அவர் காட்டிய தீராத ஆர்வம் மிகவும் முக்கியமானது. தீவிரமான முயற்சியின் பலன் என்று எவ்விதமான தோற்றமும் தராமலேயே ஒரு பாத்திரத்தின் தன்மை அல்லது ஓர் இடச்சூழல் என எதையுமே மிகக்குறைந்த சொற்களில் வடித்துக்காட்டுவதில் அவருக்கிருந்த திறமை இறுதிவரைக்கும் குன்றாததாகவே இருந்தது. அவருடைய மொத்த சிறுகதைகளிலிருந்து கிட்டத்தட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகளைத் திரட்டியெடுக்கமுடியும். அவருடைய தொடக்கக்கால முயற்சிகளில் கனவுத் தொழிற்சாலை, காகிதச்சங்கிலிகள் ஆகிய படைப்புகளும் பிற்கால முயற்சிகளில் பதவிக்காக, ரத்தம் ஒரே நிறம் ஆகிய படைப்புகளும் முக்கியமானவை.


அறிவியல் செய்திகளை படைப்பூக்கம் மிகுந்த மொழியில் அவர் தொடர்ந்து தமிழ்ப்பரப்பில் முன்வைத்துவந்ததை வாசகர்களின் நல்லூழ் என்றே சொல்லவேண்டும். கணிப்பொறியை அறிமுகப்படுத்தும் வகையில் எண்பதுகளiல் தொடக்கத்தில் வெளிவந்த நூல் ( அன்னம் வெளiயீடு) ஓர் இலக்கியப் பிரதிக்கு இணையான வாசிப்புத்தன்மையைக் கொண்டது. 1, 0 என்ற இரு எண்களிடையே இயங்கும் உறவையும், அவை இணைந்தும் விலகியும் உருவாகும் எண்ணற்ற சாத்தியங்களையும் நகைச்சுவை உணர்வோடும் சுவாரசியமான எடுத்துக்காட்டுகளோடும் ஈர்ப்புமிகுந்த மொழியில் அவர் வெளிப்படுத்தியதை மறக்கமுடியாது.


மனம், மனத்தின் செயல்பாடு, காதல் உணர்வுகள் என தரைமீது உள்ள எல்லாவற்றையுமே அவரால் அறிவியலின் கண்கொண்டுமட்டுமே பார்க்கமுடிந்தது. இதனால் நெகிழ்ச்சியான காதல் உணர்வைக்கூட அவர் ஹார்மோன்களின் விளையாட்டு என்றும் நியுரான்களின் உந்துதல் என்றும் சொல்லி மெல்லிய நகைச்சுவையோடு கடந்துவிடுவதே அவருடைய இயல்பாக இருந்தது. இத்தனைக்கும் காதல் உணர்வைப் புரிந்துகொள்ள முடியாதவர் அல்லர் அவர். சொற்களின் இடையிலான மௌனத்தின் வழியாக, ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார் பாடல்களில் வெளிப்படும் மானுட உணர்வுகளையும் ஏக்கங்களையும் நுட்பமாக ஒரு பேராசிரியரைப்போல எடுத்துச் சொல்லத் தெரிந்தவர்தான். தன்னுடைய எழுத்து என வரும்போதுமட்டும் ஏதோ காரணத்தில் இத்தகு உணர்வுகளுக்கு அவர் இடமளித்தில்லை.


அவரை நான் நான்கு முறைகள் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்தந்த காலத்தில் வெளiவந்த நூல்களைப்பற்றியும் புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர்களைப்பற்றியும் ஆர்வத்துடன் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார். சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே இலக்கியத்தைப்பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார். இலக்கியத்தைத் தவிர வேறெந்த சிந்தனையும் அவர் மனத்தில் இருந்ததில்லை. வயது வேறுபாட்டை ஒரு பொருட்டாகவே அவர் நினைத்ததில்லை. வாசலிலிருந்து என் தோள்மீது கைவைத்தபடி உள்ளறைக்குள் அவர் அழைத்துச் சென்ற கணத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. உரைநடைப்படைப்புகளைவிட கவிதைகளைப்பற்றிப் பேசுவதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அவர் பேச்சினிடையே குறுக்கிட்டு நாம் முன்வைக்கிற பதில்களைப் பொருட்படுத்திக் கேட்பார். ஒருநாளும் எந்தப் பேச்சையும் உதறியது கிடையாது.


அவரைச் சந்திக்கச் சென்ற ஒருநாள் கடுமையான கால்வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். இதனால் நேர்ந்த மனச்சோர்வு வேறு. என்னோடு பேசத் தொடங்கிய கணத்திலேயே அவர் என் சோர்வைப் படித்துவிட்டார். "ஒரு வேளைக்கு ஒரு மாத்திரைதானே? இதில் என்ன சிரமம்" என்று சொல்லிக்கொண்டே தன் மேசை இழுப்பறையைத் திறந்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியைத் திறந்து காட்டினார். வெவ்வேறு வடிவங்களiல் வெவ்வேறு நிறங்களiல் மாத்திரைகள் குவியலாக் கிடந்தன. "ஒரு வேளைக்கு எட்டு எடுக்கணும். ஒரு நாளைக்கு இருபத்திநாலு. சராசரியா ஒரு மணிநேரத்துக்கு ஒன்னு தெரியுமா? இதுக்கெல்லாம் அலுத்துகிட்டா எப்படி?" என்று சிரித்தார். ஓர் ஊசிவழியாக மருந்தை உட்செலுத்திக்கொள்வதுபோல சோர்வற்று இயங்கத் தேவையான சக்தியை தனக்குத்தானே ஏற்றிக்கொள்ளும் ஆற்றல் அவரிடம் செயல்படுவதை அன்று அறிந்தேன். "எப்பவும் உற்சாகமா இருக்கணும் பாவண்ணன். சார்ஜ் எறங்கவே கூடாது" சொல்லிக்கொண்டிருக்கும்போது அவர் உதடுகளில் நெளிந்த புன்னகை ஒரு சித்திரம் போல மனத்தில் பதிந்திருக்கிறது. அவர் எடுத்துரைத்த உண்மை பல நேரங்களில் ஓர் ஒளிச்சுடராக நின்று எனக்கு வழிகாட்டியிருக்கிறது. இப்போதும் அவரை நினைத்துக்கொள்ளும் தருணத்தில் அவருடைய சோர்வற்ற மனமும் ஓய்வற்ற உழைப்பும்தான் நினைவுக்கு வருகின்றன.


( நன்றி: பா.வண்ணன்(paavannan@hotmail.com) , திண்ணை )

சுஜாதா பற்றி ரவிபிரகாஷ்(விகடன்)

என்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசையில் சுஜாதா பற்றியும் எழுதுவதாக இருந்தேன். ஆனால், அந்த நிகழ்வு சந்தோஷமான ஒன்றாக அமையாமல், திடுதிப்பென ஒரு துக்ககரமான சம்பவத்தில் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.


கடந்த 27-02-2008 புதன்கிழமை அன்று காலையில், விகடன் ஆசிரியர் திரு.அசோகன் எனக்குப் போன் செய்து, "எழுத்தாளர் சுஜாதா உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால் ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார்.அலுவலகம் போனதும், அன்றைக்கு முடிக்க வேண்டிய இதழுக்கான ஃபாரம் லிஸ்ட் போட்டுக் கொடுத்துவிட்டு, நான் சுஜாதாவைப் பார்க்கக் கிளம்பினேன். வெறுங்கையாகப் போகவேண்டாம் என்பதற்காக ஒரு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கிக்கொண்டு போனேன். விகடன் எடிட்டோ ரியல் அலுவலகத்திலிருந்து பொடிநடை தூரத்தில் அப்போலோ.ஆஸ்பத்திரியின் மெயின் பில்டிங்குக்குப் போனேன். சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜன் என்ற பெயரைச் சொல்லி, விசாரித்தேன். பக்கத்துக் கட்டடத்தில் முதல் மாடி, 48-ம் எண்ணுள்ள ஐ.சி.யு அறையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே போனதும், ஒரு நர்ஸ் மறித்து, "வெயிட்டிங் ஹாலில் டோ க்கன் வாங்கிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான் அனுமதிக்க முடியும்" என்றாள். அதே பில்டிங்கில் சுற்றிச் சுற்றித் தேடியும் வெயிட்டிங் ஹால் கிடைக்காமல், மீண்டும் ஒரு ஊழியரிடம் கேட்க, அவர் திரும்பவும் என்னை மெயின் பில்டிங்குக்குப் போகச் சொன்னார். அங்கே போய் விசாரிக்க, "நேரா போய் லெஃப்ட்டு!" நேரா போய் லெஃப்டை அடைந்து விசாரிக்க, "உள்ளே போய் ஃபர்ஸ்ட் ரைட்டு!" என அங்கங்கே என்னை மடைமாற்றி, குறிப்பிட்ட வெயிட்டிங் ஹாலுக்குக் கொண்டு சேர்த்தார்கள்.


அங்குள்ள வரவேற்பாளரிடம் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, விஷயம் சொல்லி டோ க்கன் கேட்டேன். "சார், டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வந்துட்டிருக்காங்க. அவங்க கீழே இறங்கினப்புறம் நீங்க போகலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!" என்றார். டீலக்ஸ் பஸ்ஸின் சொகுசு நாற்காலிகள் போல் போடப்பட்டிருந்த அந்த ஹாலில், ஒன்றில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, மூலையாக வைக்கப்பட்டு இருந்த டி.வி-யில் ஓடிக்கொண்டு இருந்த 'சூர்யவம்சம்' தொடரைப் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பெயர் அழைக்கப்படுமா என என் காதுகள் காத்திருந்தன.


முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, அழைக்கப்பட்டேன். வரவேற்பாளர் இன்டர்காமில், "தேவகி! ரவிபிரகாஷ்னு ஒருத்தரை அனுப்பறேன். அவரை ஃபர்ஸ்ட் ஃப்ளோர் 48-ம் ரூமுக்கு அனுப்புங்க" என்றுவிட்டு, "போங்க சார்!" என்றார். "டோ க்கன் சார்?" "தேவையில்லை. அதான், போன்ல சொல்லிட்டேனே!"


போனேன். மறுபடி டோ க்கன் கேட்டாள் அந்த நர்ஸ். "நீங்கதானே தேவகி?" என்றதும், சிரித்துக்கொண்டே, "நீங்களா? போங்க" என்று அனுமதித்தாள்.


ஒரே மாடிக்கு லிப்டில் சென்றிருக்க வேண்டியதில்லைதான். அப்போது இருந்த குழப்பத்தில் ஒன்றும் புரியவில்லை. காத்திருந்து, லிப்ட் வந்ததும் ஏறிச் சென்றேன். முதல் மாடியில் வெளிப்பட்டு, தேடித் தேடி, ஐ.சி.யு-வை அடைந்து, 28, 36, 42, 34, 17 என மாறி மாறி இருந்த அறைகளில் குழம்பி, அங்கிருந்த ஒருவரை விசாரிக்க, "இதோ!"


உள்ளே நுழைந்தேன். இருவர் அட்மிட் ஆகும் அறை. முதல் பிளாக் காலியாக இருந்தது. கடந்து உள்ளே போனேன். ஹா... சுஜாதா!


சின்ன வயதில் என்னைத் தன் எழுத்தால் அசர வைத்த சுஜாதா. "இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு!" என்று சாவி அவர்களால் நான் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட சுஜாதா. "எப்படிக் கூட்டினாலும் விடை ஒரே மதிப்பில் வர்றதுக்கு இப்படி ஒரு சுலபமான வழி இருக்கா? கிரேட்!" என்று வியந்து, தனது 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய சுஜாதா.


சலனமற்றுத் தலைசாய்த்துப் படுத்திருந்தார். தலை மட்டும்தான் வெளியே தெரிந்தது. உடம்பு எங்கே இருக்கிறது என்று புரியாமல் மேலே துணிகளும் போர்வையும் மூடியிருந்தன. லாலி லாலியாகத் தொங்கும் வயர்களின் நடுவே படுத்திருக்கும் அவரைப் பார்க்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அருகில் இருந்த இரண்டு நர்ஸ்களிடம், அவரது நிலை பற்றிக் கேட்டேன். "ப்ச்... நோ ஹோப்! டயலிசிஸ் நடந்துட்டிருக்கு. ஹார்ட் பீட் டவுன் ஆயிருச்சு. வென்டிலேட்டர் வெச்சிருக்கு. தெரியலே... இன்னிக்கோ நாளைக்கோ, ஒரு வாரமோ!'"


"சார் யாரு தெரியுமில்லே... வேர்ல்ட் ஃபேமஸ் ரைட்டர்!" என்றேன்.


"தெரியும். நாங்களும் இவரோட ஃபேன்ஸ்தான்!" - இருவரின் முகங்களிலும் ஒரு வறட்சிப் புன்னகை.


இதே கோலத்தில், இதே அப்போலோவில் என் குரு சாவி அவர்களைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.


நர்ஸிடம் சுஜாதாவின் மனைவி தங்கியிருக்கும் அறை எண்ணைக் கேட்டுக்கொண்டு வெளியே வந்தேன். கண்டுபிடித்து, உள்ளே போனேன். ஐந்தாறு பெண்மணிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார். கூடவே, உயரமாக ஒரே ஒரு ஆண். அவர் சுஜாதாவின் மகனாக இருக்க வேண்டும் என யூகித்தேன்.


சுஜாதாவுக்காக வாங்கி, அவரிடமே கொடுத்து, உடல்நிலை விசாரிக்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கி வந்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை, சுஜாதாவின் மனைவி சுஜாதாவிடம் கொடுத்து, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். "தெரியுமே! ரெண்டு மூணு தரம் வீட்டுக்கு வந்திருக்கீங்களே!" என்றார். அதன்பின் சம்பிரதாய விசாரிப்புகள்.


போன வியாழக்கிழமையே, நிமோனியா என அப்போலோவில் கொண்டு வந்து சேர்த்தார்களாம். இரண்டு மூன்று நாளில் குணமாகி, வீட்டுக்குப் போய்விடலாம் என்றிருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமாகி, டயலிசிஸ் செய்யவேண்டி வந்து, நேற்று (செவ்வாய்) மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வென்டிலேட்டர் வைத்து, உசிர் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்றார். "யாருக்குமே இன்னும் சொல்லலை. சங்கருக்குக்கூடத் தெரியாது. (டைரக்டர் ஷங்கரைச் சொல்கிறார் என்பது லேட்டாகத்தான் புரிந்தது.) யாருக்கும் சொல்லவேண்டாம்னுட்டார். 'உடம்பு சரியாகி வீட்டுக்கு வந்துடுவேன். நான் அப்போலோல சேர்றதும், வீடு திரும்பறதும் என்ன புதுசா? வீணா பிரஸ்ஸுக்கெல்லாம் சொல்லி காப்ரா பண்ணவேண்டாம்'னார். அதான் சொல்லலை. நாங்களே அதான் நினைச்சுண்டிருந்தோம். திடும்னு நேத்துலேர்ந்து இப்படி ஆயிடுத்து. ரொம்ப நெருங்கிய சொந்தக்காராளுக்கு மட்டும் சொன்னேன். இனிமேதான் ஒவ்வொருத்தருக்கா சொல்லணும்" என்றார். மாமிக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. ஆறுதல் சொல்லவேண்டியது மாமிக்கு மட்டும்தானா? என்னைப் போன்ற லட்சக்கணக்கான சுஜாதாவின் வாசகர்களுக்கும் அல்லவா?


பின்பு, சுஜாதாவின் மகனிடம் கைகுலுக்கிப் பேசினேன். இவரிடம் போனில் இரண்டொரு முறை பேசியிருக்கிறேன். அப்படியே சுஜாதாவின் குரல். சுஜாதாவிடமே இந்தக் குரல் ஒற்றுமை பற்றி வியந்து பேசியிருக்கிறேன்.


பின் அனைவரிடமும் விடைபெற்று, வெளியே வந்து, சுஜாதாவின் நிலைமை சீரியஸாக இருப்பது பற்றி அசோகனுக்குப் போன் மூலம் தெரிவித்துவிட்டு, வெளியேற வழி தெரியாமல் தடுமாறி, படிகளில் இறங்கி, அலுவலகம் வந்தேன். எம்.டி-யின் நம்பர் கொடுத்து, அவரிடம் பேசி விஷயத்தைச் சொல்லுங்கள் என்றார் அசோகன்.


பேசினேன். சுஜாதா கிடந்த இருப்பைச் சொன்னேன். போனிலேயே விசும்பி, விசும்பி அழத் தொடங்கிவிட்டார் எங்கள் சேர்மன் பாலசுப்ரமணியன். "நானும் அவரும் ஒரே வயசு. என்னை விட சில மாசங்கள்தான் மூத்தவராக இருப்பார். நாற்பது வருஷத்துக்கும் மேலான நட்பு" என்று மேலே பேசமுடியாமல் நா தழுதழுத்தார். பின்பு, "என் உடம்பு இருக்கிற இருப்புல எங்கேயும் போக முடியலியே! எனக்காக நாளைக்கு மறுபடியும் ஒரு தரம் போய், மாமி கிட்டே நான் ரொம்ப வருத்தப்பட்டேன்னு சொல்லுங்கோ!" என்றார். அதைச் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் எதிர்முனையில் அடக்கமாட்டாத அழுகை.


அன்று இரவு, பத்து மணிக்கு அசோகனிடமிருந்து போன்... "சுஜாதா எக்ஸ்பயர்ட்!"


எழுத்துலக சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது!


***


சுஜாதாவுடனான தொடர்பு எனக்குப் பெருமதிப்புக்குரிய சாவி அவர்களின் மூலம் கிடைத்தது. 'சாவி' வார இதழின் பொறுப்பாசிரியராக நான் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, அடிக்கடி போன் மூலம் தொடர்பு கொண்டு சுஜாதாவிடம் பேசியிருக்கிறேன். கதைகள் கேட்டு வாங்கிப் போட்டிருக்கிறேன்.


ஒரு முறை சிறுகதை எழுதித் தந்தவர், அதற்குத் தலைப்பு எழுத மறந்துவிட்டார். ஃபாரம் முடித்து அனுப்பவேண்டிய கடைசி கட்ட நிலையில், சட்டென அந்தக் கதைக்குத் தலைப்பு வைப்பதையே வாசகர்களுக்கு ஒரு போட்டியாக அறிவித்துவிட்டேன். சிறந்த தலைப்பை சுஜாதாவே தேர்ந்தெடுப்பார் என்று குறிப்பிட்டேன். மறுநாள் காலை, லே-அவுட் செய்த அட்டைகளைப் பார்வையிட்ட சாவி அவர்கள், என் சமயோசித புத்தியைப் பாராட்டினார்.


அன்று காலையே சுஜாதாவுக்கு போன் செய்து, "கதைக்குத் தலைப்பு எழுத மறந்துட்டீங்க. அதுக்குத் தண்டனையா ரவி உங்களுக்கு ஒரு வேலை வெச்சுட்டான். கதைக்கான தலைப்பை எழுதச் சொல்லி வாசகர்களுக்குப் போட்டி அறிவிச்சிருக்கான். பரிசுக்குரிய சிறந்த தலைப்பை நீங்கதான் செலக்ட் பண்ணித் தரீங்க!" என்றார் சாவி.


"ஆகட்டும்" என்றார் சுஜாதா. "ஆனா, ஆயிரக்கணக்குல விடைகள் வந்தா அத்தனையையும் எனக்கு அனுப்ப வேணாம். ரவியையே தேர்ந்தெடுத்து, அதிகபட்சமா எனக்கு 20, 25 தலைப்புகள் அனுப்பி வெச்சா போறும்!" என்றார். அதன்படியே செய்தேன். அதிலிருந்து ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். கூடவே, சிறுகதைக்குத் தலைப்பு வைக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பையும் எழுதி அனுப்பியிருந்தார். தலைப்பு மிகச் சுருக்கமாக ஒரு வார்த்தையில் இருந்தால் உத்தமம்; அல்லது, ஓரிரண்டு வார்த்தைகளில் இருக்கலாம். கதையின் தலைப்பு எக்காரணம் கொண்டும் கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்துவதாக இருக்கக்கூடாது என அவர் கொடுத்திருந்த குறிப்புகள் வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப் பயனுள்ளவை.


அதன்பின், சுஜாதா ஒருமுறை சாவியைப் பார்க்க வந்திருந்தபோது, அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி, "இவன் உங்க தீவிர வாசகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு" என்று சொல்லி, போட்டோ வுக்குப் போஸ் கொடுக்கையில், "ரவி, உனக்குப் பிடிச்ச எழுத்தாளர் சுஜாதா பக்கத்துல வந்து நின்னு போட்டோ எடுத்துக்கோ" என்றார். அந்தப் போட்டோ இன்னும் என்னிடம் மிகப் பத்திரமாக இருக்கிறது.


சாவி பத்திரிகையின் சர்க்குலேஷன் குறைந்துகொண்டே வந்த ஒரு கட்டத்தில், என் எதிர்கால நிலைமை குறித்து பயந்து, குமுதம் வார இதழில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்தேன். அப்போது குமுதம் பொறுப்பாசிரியராகச் சேர்ந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார் சுஜாதா. 'தங்களைப் பார்த்துப் பேசவேண்டும்' என்று அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குப் போனேன். அவர் அப்போது நுங்கம்பாக்கத்தில் இருந்தார் என்று ஞாபகம்.


"என்ன விஷயம்?" என்று கேட்டார்.


"சொன்னேன். 'சாவி சாரை விட்டு வர மனசில்லை சார் எனக்கு. ஆனாலும், என் எதிர்காலத்தைப் பத்தியும் யோசிக்கணுமே! அவருக்குப் பிறகு நான் எங்கே போவேன்? பத்திரிகை ரொம்பத் தள்ளாடிக்கிட்டிருக்கு. அவரால நடத்த முடியலை. ஏஜென்ட்டுகள் கிட்ட ரொட்டீனா போய் பணம் வசூலிக்கச் சரியான ஆட்கள் இல்லே. சரியா எடுத்து நிர்வாகம் செய்ய ஆள் இல்லை. மிஞ்சிப் போனா இன்னும் ஆறு மாசம், இல்லே ஒரு வருஷம்... அத்தோட பத்திரிகையை இழுத்து மூடிடுவார். அதுக்கப்புறம் நான் எங்கே போய் நிப்பேன்? அதான், உங்க கிட்டே வந்தேன்" என்றேன்.


"சரி, நாளைக்கு குமுதம் ஆபீஸ் வாங்க! எடிட்டரும் (எஸ்.ஏ.பி.) இருப்பார். பேசி முடிவு பண்ணலாம்" என்றார்.


அதன்படியே மறுநாள் காலையில், குமுதம் ஆபீஸ் போனேன். எஸ்.ஏ.பி. அவர்களைச் சந்தித்தேன். உடன் சுஜாதாவும் இருந்தார்.


எஸ்.ஏ.பி. எடுத்த எடுப்பில் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அவரது குரலும் சுஜாதாவின் குரலைப் போலவே மிக மென்மையாக இருந்தது.


"சுஜாதா சொன்னார் உங்களைப் பத்தி. நீங்கதான் சாவி பத்திரிகையைப் பாத்துக்கறீங்களா?" என்றார்.


"ஆமா சார்!" என்றேன்.


"உங்களோட வேற யார் யாரு வொர்க் பண்றாங்க?"


"ஆசிரியர் குழுனு யாரும் கிடையாது. நான் மட்டும்தான். நான்தான் அங்கே பொறுப்பாசிரியர், உதவி ஆசிரியர் எல்லாமே! லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் இருக்கார். ராணிமைந்தன் முக்கிய நிருபரா மேட்டர்கள் கொண்டு வந்து தருவார். மத்தபடி கதை, கட்டுரை, ஜோக்ஸ் செலக்ஷன் எல்லாமே நான்தான்."


"இப்ப நீங்க அந்த வேலையை விட்டுட்டு இங்கே வந்து சேர்ந்துட்டீங்கன்னா, சாவி யாரை வெச்சு நடத்துவார்?"


"ஒரு வாரம் ராணிமைந்தனை வெச்சு நடத்தலாம். தொடர்ந்து பார்த்துக்க ஆள் வேணும். சாவிக்கும் வயசாச்சு. முடியாது. அதனால..."


"அதனால..?"


"அதிகபட்சம் அடுத்து ரெண்டு வாரம் நடத்துவார். அப்புறம் மூடிடுவார்."


"அப்படியா சொல்றீங்க?" என்றார் எஸ்.ஏ.பி.


"ஆமாம். ஏற்கெனவே பத்திரிகை தள்ளாடிட்டிருக்கு. அதை நிறுத்திட என் விலகல் ஒரு காரணமா இருக்கும்!" என்றேன்.


எஸ்.ஏ.பி. சற்று யோசனையில் மூழ்கினார். பின்பு, "சமீபத்துல ஒரு ஃபங்ஷன்ல சாவி சாரைப் பார்த்தேன். பத்திரிகை நஷ்டத்துல ஓடறது பத்தி சொல்லிட்டிருந்தார். 'நிறுத்திடலாம்னு நினைக்கிறேன்'னு சொன்னார். எனக்குக் கஷ்டமா போச்சு! 'இல்ல சார், பத்திரிகை ரொம்ப நல்லா வந்துட்டிருக்கு. லே-அவுட், எடிட்டிங் எல்லாம் பிரமாதம். வேற சில காரணங்களால அதை உங்களால கொண்டு வர முடியாம இருக்கலாம். அதுக்கெல்லாம் தகுந்த ஆளுங்களைப் போட்டுச் சரி பண்ணிக்குங்க. ஒரு நல்ல பத்திரிகை இப்படி திடும்னு நிக்கிறது எனக்கு வருத்தமா இருக்கு. எனக்காக பல்லைக் கடிச்சுக்கிட்டு 2000-வது ஆண்டு வரைக்குமாவது நீங்க 'சாவி'யைத் தொடர்ந்து நடத்தணும்'னு கேட்டுக்கிட்டேன். 'சரி, முயற்சி பண்றேன்'னார்" என்றவர் சற்று இடைவெளி விட்டு,


"இது நடந்து ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே நீங்க குமுதத்துல சேர்ந்து, அதனால சாவி சார் வேற வழியில்லாம சாவி பத்திரிகையை நிறுத்தும்படி ஆகுதுனு வெச்சுக்குங்க. அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பார்? நாளைப் பின்ன என்னை எங்கேயாவது பார்க்கும்போது, 'என்ன சார், 2000 வரைக்கும் நடத்தணும்னு கேட்டுக்கிட்ட நீங்க அடுத்த கொஞ்ச நாள்லயே, பத்திரிகையின் விலா எலும்பு மாதிரி இருக்கிற ரவியை உருவிக்கிட்டீங்கன்னா என்ன அர்த்தம்?'னு கேட்டா, அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன்?" என்றார்.


இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சுஜாதாவின் பலமான சிபாரிசோடு குமுதத்தில் சேர்ந்துவிடலாம் என்று ரொம்ப நம்பிக்கையோடு போயிருந்தேன். எஸ்.ஏ.பி. என்னடாவென்றால் இப்படி ஒரு கேள்வியைத் தூக்கிப் போடுகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது?


"சார், மறுபடியும் சொல்றேன்... எனக்கு சாவியை விட்டு வர மனசில்லை. ஆனா, நான் அங்கே நீடிச்சாலும், அவர் இன்னும் எத்தனை நாளைக்கு சாவியை நடத்துவார்னு தெரியாது. உங்க கிட்டே '2000 வரைக்கும் நடத்துவேன்'னு அவர் சொல்லியிருக்கலாம். ஆனா, அது சாத்தியமில்லை. எனவே, நான் சுயநலமா யோசிச்சுதான் முடிவு எடுக்க வேண்டியிருக்கு!" என்றேன்.


எஸ்.ஏ.பி. புன்னகைத்துவிட்டு, "ஒண்ணும் கவலைப்படாதீங்க! நீங்க குழப்பம், கவலை எல்லாத்தையும் விட்டுட்டு, வழக்கம்போல நாளைக்கு சாவி கிட்டேயே வேலைக்குப் போங்க! எவ்வளவு காலம் நடத்தறாரோ நடத்தட்டும். அது வரைக்கும் அவர் கிட்டேயே வேலை செய்யுங்க. சாவி போன்ற பத்திரிகை ஜாம்பவான்களிடம் வேலை செய்ய, நீங்க கொடுத்து வெச்சிருக்கணும். அவர் என்னிக்குப் பத்திரிகையை மூடிட்டு உங்களை வேற வேலை தேடிக்கச் சொல்றாரோ, அன்னிக்கு வேற எங்கேயும் போகாம நேரே என்கிட்டே வாங்க. குமுதத்தின் கதவுகள் உங்களுக்காக என்னிக்கும் திறந்திருக்கும்" என்றார்.


எதிர்பார்த்தபடி குமுதத்தில் வேலை கிடைக்கவில்லை என்றாலும், எஸ்.ஏ.பி. கொடுத்த தைரியமும், சொன்ன ஆறுதல் வார்த்தைகளும் என் மனசில் இருந்த குழப்பத்தையும் கவலையையும் துப்புரவாகப் போக்கிவிட்டன. அவர் சொன்னபடியே, தொடர்ந்து சாவியிடம் வேலைக்குப் போய் வந்தேன்.


எஸ்.ஏ.பி. அடுத்த இரண்டு நாளில் அமெரிக்கா பயணமானார். அங்கிருந்து திரும்பி வரவில்லை... உயிரோடு!


சுஜாதாவை நான் மீண்டும் சந்தித்தது, சாவி பத்திரிகை நின்ற பின்பு!


மீண்டும் குமுதம் ஆபீஸ் போனேன். ஒரு சின்ன அறையில், மிகச் சாதாரண மர மேஜையின் பின்னால், மர நாற்காலியில் எலிமென்ட்டரி ஸ்கூல் வாத்தியார் போல அமர்ந்திருந்தார் சுஜாதா. என்னைப் பார்த்ததும், "வாங்க ரவி! முன்னாடி கிடைக்கவிருந்த ஒரு நல்ல வாய்ப்பு கை நழுவிப் போயிடுச்சு உங்களுக்கு. இப்ப சூழ்நிலையே வேற. எல்லாமே மாறிப்போச்சு! இங்கே சப்-எடிட்டர்கள் தேவையில்லே. ரிப்போர்ட்டர்கள்தான் தேவை. இளம் விஞ்ஞானிகள் நாலஞ்சு பேரைப் பார்த்து லேட்டஸ்ட் தியரிகள், கண்டுபிடிப்புகள்னு ஏதாவது மேட்டர் பண்ணிட்டு வாங்க. நாலு வாரம் தொடர்ந்து பண்ணா போதும்; மாச சம்பளத்தைவிட அதிகமா ரெமுனரேஷன் வாங்கிடலாம்!" என்று சொல்லி அனுப்பினார்.


எனக்குத் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை. இளம் விஞ்ஞானிகளை எங்கே போய்த் தேடுவேன் என்று சுஜாதாவிடமே கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது. தவிர, நான் பேட்டி எடுத்தெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. ஜர்னலிஸத்தில் நான் பழகாத ஒரு பிரிவு, பேட்டி எடுத்தல்தான். குறிப்பாக அரசியல்வாதிகள், சினிமா தொடர்புடையவர்கள் என்றால், எனக்கு அலர்ஜி!


சாவியில் இருக்கும்போது கவிஞர் வைரமுத்துவுடனெல்லாம் டீல் பண்ணியிருக்கிறேனே தவிர, அதெல்லாம் சப்-எடிட்டராக இருந்துதான். பேட்டி என்று யாருக்காகவும் போய்க் காத்திருந்தது இல்லை.


எனவே, "ஆகட்டும் சார்!" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்தால் போதும் என்கிற மன நிலையில் எஸ்கேப் ஆனேன்.


அதற்கப்புறம், 'சுதேசமித்திரன்' நாளிதழில் சுதாங்கனின் கீழ் ஒரு நாலு நாள் வேலை பார்த்தேன். இடையில், சாவி நின்றவுடனேயே வேலை கேட்டு ஆனந்த விகடனுக்கும் விண்ணப்பித்திருந்தேன். என்னைப் பற்றி அங்கிருப்பவர்களுக்குத் தெரிந்திருந்தது. கூடவே, ஓவியர் அரஸ்ஸின் பலமான சிபாரிசும் சேரவே, அங்கிருந்து அழைப்பு வந்தது. விகடன் அலுவலகத்துக்குப் போனது, ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களைப் பார்த்துப் பேசியது, வேலையில் சேர்ந்தது எல்லாவற்றையும் பிறகு விரிவாக எழுதுகிறேன்.


விகடனில் வேலையில் சேர்ந்த பின், சுஜாதா அவர்களுடனான தொடர்பு அறுந்தது.


அங்கே சீனியர்களே சுஜாதா, வாலி, வைரமுத்து போன்ற பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தனர். பின்னர் மதன், ராவ், வீயெஸ்வி என ஒவ்வொருவராக விலகிவிட, ஆனந்த விகடனின் நிர்வாக ஆசிரியர் ஆனார் அசோகன்.


அவர் பந்தா இல்லாதவர்; பழகுவதற்கு மிக மிக எளிமையானவர்; தன் தலைக்குப் பின்னே ஒளிச் சக்கரம் சுழல்வது போன்ற எண்ணங்கள் எதுவும் இல்லாதவர். அவர் விகடனின் முக்கியப் பொறுப்புக்கு வந்த பிறகுதான் சுஜாதா, வாலி இருவரிடமும் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. சுஜாதாவுடனாவது முன்பே பழகியிருக்கிறேன். காவியக் கவிஞர் வாலியின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது விகடனில்தான். அதற்குக் காரணம் அசோகன்தான். மற்றபடி, எனக்கு வைரமுத்துவுடனான தொடர்பு சாவியோடு அறுந்தது. விகடனில் தொடரவில்லை. காரணம், இங்கே வைரமுத்துவுடன் மிக நெருக்கத்தில் இருந்தவர் கண்ணன்.


சுஜாதாவிடம் சிறுகதை, கட்டுரைகள் வேண்டுமென்றால், அது விகடனுக்காக மட்டுமல்ல, ஜூனியர் விகடனுக்காக இருந்தாலும் என்னைத்தான் பேசச் சொல்வார் அசோகன். அதே போல் வாலியிடம் ஏதாவது பேசவேண்டும் என்றாலும், என்னைத்தான் பேசச் சொல்வார். அதை அசோகன் எனக்கு அளித்த கௌரவமாகவே கருதினேன். இந்த இரு ஜாம்பவான்களுடன் தொடர்பு கிட்டியதற்கு, இன்றளவும் அசோகனுக்கு மானசிகமாக நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.


சுஜாதாவிடம் பல முறை போனிலும், சில முறை நேரிலும் பேசியிருக்கிறேன். மிக மென்மையான குரலில் பேசுவார். பெரும்பாலும் அவர் பேச்சினிடையே 'அது வந்திட்டு...' என்ற சொற்றொடர் தவறாமல் இடம்பெறும்.


அவர் விகடனில் தொடர்ந்து எழுதி வந்த 'கற்றதும் பெற்றதும்' கட்டுரைகளில் ஒரு முறை, மாயச் சதுரம் அமைப்பது பற்றி எழுதியிருந்தார். எப்படிக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 15 வருகிற 3x3 கட்டத்தைக் கொடுத்துவிட்டு, சீனர்கள் அதை சனி கிரகத்துக்கான கட்டம் என்று சொல்வதாகவும், அதே போல் 9x9 கட்டத்தைக் கொடுத்து (எப்படிக் கூட்டினாலும், கூட்டுத் தொகை 369 வரும்) அது சந்திரனுக்கான மாயச் சதுரம் என்றும், அது போல் உங்களால் (வாசகர்களால்) அமைக்க முடியுமா என்றும் கேட்டிருந்தார்.


இப்படியான மாயச் சதுரங்கள் அமைப்பது பற்றி நான் விளையாட்டாக, எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அறிந்து வைத்திருந்தேன். இந்த ட்ரிக்கை யார் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள் என்பது நினைவில்லை. உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக திருச்சி போயிருந்த சமயத்தில், அங்கே யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்தார் என்று ஞாபகம்.


ஒற்றைப்படை எண்ணிக்கையிலான சிறு சிறு கட்டங்கள் கொண்ட எத்தனை பெரிய மாயச் சதுரத்தையும் அமைக்கமுடியும். ஒரே ஒரு ட்ரிக்தான். மேல் நோக்கி வலது புறமாகப் பாயும் ஒரு அம்புக்குறியைக் கற்பனை செய்துகொள்ள வேண்டும். அதன் போக்கிலேயே கட்டங்களை நிரப்பிக்கொண்டு போகவேண்டும். அதாவது, ஒரு எண்ணை ஒரு கட்டத்தில் பூர்த்தி செய்த பிறகு, அடுத்த எண்ணைப் பக்கத்தில் உள்ள கட்டத்துக்கு மேலே உள்ள கட்டத்தில் எழுத வேண்டும். இதற்குப் பல துணை நிபந்தனைகள் உள்ளன. எல்லாமே சிம்பிள்தான்! இந்த விதிமுறைகளின்படி எத்தனை பெரிய மாயச் சதுரமும் அமைக்க முடியும். ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என்பதில்லை. எந்த ஒரு எண்ணிலிருந்தும் தொடங்கலாம்; கூட்டு எண்ணாக எந்த ஒரு எண்ணையும் பயன்படுத்திக் கூட்டிக் கூட்டிப் போட்டுக்கொண்டே போனால், இறுதியில் படுக்கைவசமாக, நெடுக்குவசமாக, மூலை விட்டமாக எப்படிக் கூட்டினாலும், ஒரே கூட்டுத் தொகைதான் வரும்.


அது எப்படி என்று சுஜாதாவுக்கு விரிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதி, 25x25 அளவிலான ஒரு பெரிய மாயச் சதுரத்தையும் தயார் செய்து அனுப்பியிருந்தேன்.


அதைப் படித்துவிட்டு, சுஜாதா உடனே எனக்கு போன் செய்தார். "ஆச்சர்யமா இருக்கு ரவிபிரகாஷ்! எப்படி இதை நீங்க கண்டுபிடிச்சீங்க? பிரமிப்பா இருக்கு. மேத்ஸ்ல நீங்க கில்லாடியோ?" என்றெல்லாம் மனம் விட்டுப் பாராட்டினார். "அப்படியெல்லாம் இல்லை சார்! கணக்குல நான் புலியும் இல்லை. இந்த மாதிரி கணக்குப் புதிர்கள்னா எனக்கு இன்ட்ரஸ்ட் உண்டு. எப்பவோ சின்ன வயசுல யாரோ சொல்லிக்கொடுத்த ட்ரிக்தான் இது. ஒற்றைப் படை எண்ணில் அமைந்த மாயச் சதுரங்கள் அமைக்கிறதுக்கான ட்ரிக் இது. அதுக்கப்புறம் நானே முயற்சி பண்ணி இரட்டைப் படை மாயச் சதுரத்துக்கு என்ன ட்ரிக்னு கண்டுபிடிச்சேன். அதையும் உங்களுக்கு எழுதி அனுப்பறேன், பாருங்க!" என்றேன்.


சுஜாதா தனது அடுத்த க-பெ கட்டுரையில், 'மாயச் சதுரம் பற்றி ஒரு சுவாரஸ்யமான கடிதம், விகடன் ஆசிரியர் குழுவைச் சார்ந்த ரவிபிரகாஷிடமிருந்து வந்தது. எந்த எண்ணையும் ஆரம்ப எண்ணாக வைத்து, ஒற்றைப் படை எண் வரிசையில் எத்தனை பெரிய மாயச் சதுரத்தையும் அமைக்க, ஓர் எளிய முறை சொல்லியிருக்கிறார். Amazing! இதே போல் இரட்டைப் படை மாயச் சதுரம் அமைக்கவும் ஒரு தந்திரம் உள்ளது. தெரிந்தவர்கள் எழுதலாம்' என்று என்னைப் பற்றிச் சிலாகித்துக் குறிப்பிட்டிருந்தார்.


ஏராளமான வாசகர்கள் மாயச் சதுரம் அமைப்பது பற்றி எழுதியிருந்தார்கள். அவற்றில் சிக்கலான வழிமுறைகளை விட்டுவிட்டு, எளிமையானவற்றை, சுலபத்தில் விளக்கிப் புரிந்துகொள்ள முடிகிற வழிமுறைகளை நானே தேர்வு செய்து, சின்ன குறிப்புகளோடு சுஜாதாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை அப்படியே அடுத்த வார 'கற்றதும்-பெற்றதும்' கட்டுரையில் ஆரம்பப் பகுதியாக வைத்திருந்தார்.


சுஜாதா மறைவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கூட, அவரோடு போனில் பேசி, காதலர் தினத்தை முன்னிட்டுக் காதல் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தேன். கேட்ட ஒரு வாரத்துக்குள் கட்டுரையை எனக்கு இ-மெயில் செய்தார். அதற்கு அவர் தலைப்பு எதுவும் வைக்கவில்லை. இரண்டு வகையான காதலைப் பற்றி அவர் அதில் விவரித்திருந்தார். எனவே, நானே 'காதலிலே ரெண்டு வகை' என்று தலைப்பு போட்டு, கீழே பிராக்கெட்டுக்குள் குட்டியாக 'சைவம், அசைவம் அல்ல!' என்று போட்டிருந்தேன். வைரமுத்துவின் வரிகளை சுஜாதா பாணியில் கொஞ்சம் நகைச்சுவையாக்கிய தலைப்பு அது.


அவரது கட்டுரை விகடனில் பிரசுரமான பிறகு, அது பற்றிய அவரது அபிப்ராயத்தைக் கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். சந்தர்ப்பம் அமையவில்லை.


அது மட்டுமல்ல, விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் என் 'ஏடாகூட கதைகள்' புத்தகத்தை அவர் வீட்டுக்கே சென்று அவரிடம் கொடுத்து ஆசி வாங்கி வரவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். அதற்கும் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.


விகடன் பிரசுரம் மாதா மாதம் வெளியிடும் 'விகடன் புக் கிளப்' என்கிற புத்தகத்தில் வெளியிட பொன்ஸீ என்னிடம் சுஜாதா பற்றி ஒரு கட்டுரை கேட்டிருந்தார். வியாழன் அன்று காலையில், அவரைப் பற்றி எனக்குத் தோன்றியதை மடமடவென்று கம்போஸ் செய்தேன். ஜூனியர் விகடனுக்காக ரா.கி.ரா-விடம் சுஜாதா பற்றி ஒரு கட்டுரை கேட்கச் சொன்னார் அசோகன். கேட்டேன். அதன்படியே மறுநாள் (வியாழன்) காலை கொடுத்தார். அது ரொம்ப நீளமாக இருக்கவே, ஜூ.வி-யில் இடம் இல்லாத காரணத்தால், இரண்டு பக்க அளவில் சுருக்கிக் கொடுக்கச் சொன்னார்கள். செய்தேன்.


சுஜாதா பற்றிய அந்த நினைவு அஞ்சலி கட்டுரைக்கு ரா.கி.ரா வைத்திருந்த தலைப்பு...


'அவரைப் போல் இனி ஒருவர் வரமாட்டார்!'


சத்தியமான வார்த்தை.


<hr>


சுஜாதா கட்டுரை


''விகடன் பிரசுரத்திலிருந்து வெளியாகும் 'விகடன் புக் கிளப்' புத்தகத்துக்காக சுஜாதா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுங்கள்'' என்று 27.2.2008 புதன்கிழமை இரவு போன் பண்ணிக் கேட்டார் பொன்ஸீ. சுஜாதா மறைந்த தினம் அது. மறுநாள் வியாழனன்று காலையில் கம்போஸ் செய்யத் தொடங்கி, அடுத்தடுத்து வந்த விசாரிப்பு போன்கால்களால் எட்டரை மணிக்கு எழுதி முடித்த கட்டுரை கீழே!


சுஜாதா பேரைக் கேட்டாலே அதிருதுல்லே!


'சிவாஜி... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லே..!' - சிவாஜி படத்தில் சுஜாதா எழுதிய இந்த வசனம் பட்டிதொட்டி பூராவும் பற்றிக்கொண்டு, இன்னமும் அதிர்ந்துகொண்டு இருக்கிறது.


சொல்லப்போனால், இந்த வசனம் எழுத்துலகைப் பொறுத்தவரை சுஜாதாவுக்கே பொருந்தும். 1960-கள் வரை கட்டுப்பெட்டியாக இருந்த தமிழ் நடை, சுஜாதாவின் வருகைக்குப் பின் சிலிர்த்துக்கொண்டு படு நவீனமாகியது. மாட்டுவண்டியிலும் குதிரையிலும் பயணித்துக்கொண்டு இருந்த தமிழ் உரைநடைக்கு மின்சாரம் பாய்ச்சி, அதை ராக்கெட்டில் சீறிப் பாயச் செய்தவர் சுஜாதா. வாயிலேயே நுழையாத ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களின் கதைகளைத்தான் தாங்கள் படிப்பதாக ஜம்பமடித்துக்கொண்டு இருந்த அன்றைய இளைஞர்களைத் தமது காந்த எழுத்தால் கட்டிப்போட்டு, 'நான் சுஜாதாவின் வாசகன்' என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளச் செய்தவர் சுஜாதா.


அன்றிலிருந்து இன்று வரை எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் 'சுஜாதா'தான்!


அவர் இன்று நம்மிடையே இல்லை!


தமிழகத்தின் தென்கோடி கிராமங்களில் வசிக்கும் சாமான்ய மனிதர்கள் பலரால் எப்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்ததை இன்னமும் ஏற்க முடியவில்லையோ, அப்படித்தான் இந்தப் புரட்சி எழுத்தாளர் சுஜாதா மறைந்ததையும் வாசகர்களால் ஜீரணிக்க முடியும் என்று தோன்றவில்லை.


சுஜாதாவின் பேனா தொடாத விஷயங்கள் உண்டா? சிறுகதை, நெடுங்கதை, சரித்திரக் கதை, ஆன்மிகம், நாவல், நாடகம், கட்டுரை, புதுக்கவிதை, ஹைக்கூ, வெண்பா, திரைக்கதை வசனம்... எத்தனை எத்தனை! நகரத்து இளைஞனுக்கும் கிராமியப் பாடல்களை அறிமுகப்படுத்தி, மண் வாசனையில் மயங்க வைத்த 'கரையெல்லாம் செண்பகப் பூ', கடினமான அறிவியல் விஷயங்களையும் எளிய தமிழில் சொன்ன அடுத்த நூற்றாண்டு, கி.பி.இரண்டாயிரத்துக்கு அப்பால், சிலிக்கன் சில்லுப் புரட்சி, செய்தி சொல்லும் செயற்கைக் கோள்கள், கணிப்பொறியின் கதை, தலைமைச் செயலகம்... தூண்டில் கதைகள், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என, ஜீனோமிலிருந்து ஜீனோ நாய்க்குட்டி வரை எல்லா தளங்களிலும் அவரது பேனா நாட்டியமாடியிருக்கிறது.


தான் பெற்ற கண் சிகிச்சை, பல் சிகிச்சை, ஹார்ட் ஆபரேஷன், டயலிஸிஸ் பற்றியெல்லாம் கூட விளக்கமாகவும், வாசகர்களை பயமுறுத்தாத விதத்தில் நகைச்சுவையோடும் எழுதி, விழிப்பு உணர்வு ஏற்படுத்தியவர் சுஜாதா.


ஆழ்வார்களைப் பற்றியும் எழுதுவார்... அணு ஆராய்ச்சி பற்றியும் எழுதுவார்; கும்பகோணம் கோயில்கள் பற்றியும் எழுதுவார்... குவாண்டம் தியரி பற்றியும் எழுதுவார்! ஜூனியர் விகடனில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிய 'ஏன்? எதற்கு? எப்படி?' கேள்வி-பதில் பகுதி வாசகர்களின் அறிவியல் தாகத்துக்குத் தண்ணீர் வார்த்தது. ஆனந்த விகடனில் அவர் தொடர்ந்து எழுதி வந்த 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைகளில் அவர் வாசகருக்குச் சொல்லாத விஷயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


'க-பெ' கட்டுரை ஒன்றில்... "எழுபது ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த பல்லை ஏழே நிமிஷங்களில் நீக்கி, ட்ரேயில் 'ப்ளங்க்' என்று போட்டபோது, அதை வாஞ்சையுடன் பார்த்து, 'போய் வா, நண்பா!' என்று விடைகொடுத்தேன்" என்று பல்லுக்கும் பிரியாவிடை கொடுத்து எழுதியிருக்கிறார் சுஜாதா. இன்று அவருக்கே நாம் விடைகொடுத்து அனுப்பவேண்டும் என்றால், முடியுமா நம்மால்?


தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளிலும் அவரது வாசகர் வட்டம் பரந்து விரிந்திருக்கிறது. சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை அவர்கள் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறார்கள்?


தன்னைப் படைத்த பிரம்மனின் பிரிவால் கலங்கி நிற்கும் கணேஷ் - வசந்த்துக்கு யார் ஆறுதல் சொல்லப்போகிறார்கள்?


( நன்றி: ரவிபிரகாஷ்)

எங்கே சுஜாதா குமுதம் கட்டுரை

[%image(20080308-Kumudam_sujatha_1.jpg|335|198|null)%]

எங்கே சுஜாதா குமுதம் கட்டுரை - ஐ.ரா.சுந்தரேசன்


தமிழ் அன்னை ஒரு வசன பாரதியை இழந்து விசனத்துக் குள்ளாகியிருக்கிறாள்.
உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை.
சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.
பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது.
வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.
ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.


வஞ்சக வியூகத்தில் அகப்பட்டுக் கொண்ட அபிமன்யு மாதிரி உள்ளிருந்தே வளைத்துக் கொண்ட நோய்களுடன் ஒண்டியாக, தீரமாகப் போரிட்டு வீர மரணம் எய்தினீர். (நோய்களையும், மருத்துவ மனைகளையும், மருத்துவர்களையும் எமனே சிரிக்கும்படி கிண்டல் செய்த எம காதகர்!)


அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.


ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.


அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.


அவர் குமுதத்தில் எழுதிய ‘ரத்தத்தின் நிறம் சிவப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.


‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.


ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.


‘சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.


எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பை யும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.


மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் _ கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.


[%image(20080308-Kumudam_sujatha_2.jpg|207|284|null)%]

உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.


தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீ


ஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.


நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுÊதுவார்’ என்றேன்.


அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.


நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.


குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.


குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.


சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப் போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.


ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தைவிடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.


இந்தக் கட்டுரையை சுஜாதா எழுதியிருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன். அவருடைய ‘டச்’ எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், காப்பி அடித்தாலும் வேறு ஒருத்தருக்கும் வரவே வராது. ஊனைத் தேனாக்கிய மணிவாசகனும் வான் கலந்தான்.


கம்பனும் போயினன்.


பாரதியும் பறந்தனன்.


கண்ணதாசனும் காலன் வசப்பட்டான்.


உலக நீதி : உளது இலதாகும். இலது உளதாகும்.


மறைந்தால் இப்படிப் பட்ட புகழுடம்புடன் மறைய வேண்டும் என்று ஓரொரு எழுத்தாளனையும் ஏங்க வைக்கும் மகத்தான முடிவு எழுத்தாளப் பெருமகன் சுஜாதாவுடையது.


இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..


( நன்றி: குமுதம் 12.3.2008 )

Thursday, March 6, 2008

சுஜாதா பற்றி திரு.அப்துல் கலாம்

நேற்று சிங்கப்பூர் ஒலி வானொலி வெளிச்சம் என்ற நிகழ்ச்சியில் திரு.அப்துல் கலாம் அவர்கள் சுஜாதா பற்றி ( ஒலி வடிவில் )


ஒலி துண்டை இங்கே டவுன் லோட் செய்துக்கொள்ளலாம்


(  நன்றி: ஒலி வானொலி )

சுஜாதா பற்றி பாலகுமாரன்

[%image(20080306-balakumaran.jpg|150|100|null)%]

சுஜாதா பற்றி பாலகுமாரன் அவர்கள்


சில நினைவுகள் இருக்கின்றன. அவர் மறைவு செய்தியைக் கேட்ட பின் உள்ளுக்குள்ளே அவை மெல்ல சோகத்தோடு மலர்ந்தன.


அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில் முன்பு ஒரு திருமண மண்டபம் இருந்தது. அந்த திருமண மண்டபத்தில் தினமணி கதிர் பத்திரிக்கையின் சார்பாக, அதன் ஆசிரியராக இருந்த திரு. சாவி அவர்கள் எழுத்தாளர் சுஜாதாவை சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.மண்டபம் முழுக்க அடர்த்தியான கூட்டம். புதிய உரைநடை எழுதுபவர்கள், புதுக் கவிஞர்கள், சிவப்பிலக்கிய எழுத்தாளர்கள், காதல் கதை எழுதுபவர்கள், துப்பறியும் கதை செய்பவர்கள் என்று பல தரப்பட்ட எழுத்தாளர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். எழுத்தாளர் திரு. மெளனி அவர்கள் வந்திருந்தார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு எழுத்தாளர் திரு. மெளனியிடம் திரு.சுஜாதா போய் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். திரு. மெளனி அவர்கள் நாங்கள் உங்கள் எழுத்தை படித்ததில்லை, உங்களை பற்றி இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் வந்தேன் என்று சொல்ல, சற்றும் தயங்காமல் நான் உங்கள் எழுத்தை படித்திருக்கிறேன். எனக்கு அது பேருதவி செய்திருக்கிறது என்று சிறிது கூட சலனமில்லாமல் உண்மையான பணிவோடு பதில் சொன்னார். தொட்டதெற்கெல்லாம் சீறி விழும் எங்களை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு அந்த பணிவு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


கூட்டம் முடிந்த பின் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கவிதையில் உள்ள ஆளுமை போல சிறுகதையில் வரவில்லை. சிறுகதை சிந்திப்பது எப்படி என்று தெரியவில்லை என்று நான் கேட்க, இது ஒன்றும் கடினம் இல்லை. நான் சொல்லித் தருகிறேன் என்று சொல்லி ஒரு நேரம் குறிப்பிட்டார்.


நானும், அமரர் சுப்ரமணியராஜூவும் அவருடைய தமையனார் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் காத்திருந்தோம்। எழும்பூரில் டாக்டர் நாயர் பாலத்திற்கு போகும் முன்பு ஒரு சிறிய புல் திடல் இருந்தது। அந்த புல் திடலில் நின்றபடி வெகு நேரம் இலக்கியம் பேசினோம். மறுபடியும் சிறுகதை எழுதுவது எப்படி என்று கேள்வி கேட்க, முதல் வாக்கியத்திலேயே கதையை ஆரம்பித்து விட வேண்டும்.


"நான் ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு தலை வாரிக் கொண்டிருந்தேன்। தெருவில் ஒருவன் நடந்து போய் கொண்டிருந்தான். அவனுக்கு தலையே இல்லை" .இது முதல் பேரா.


அடுத்த பேராவில் "அவன் தலையில் ஒரு பானையை கவிழத்து கொண்டு போய் கொண்டிருந்தான்।" என்று எழுது அல்லது "அவன் தலை வெட்டப்பட்டு விட்டது. முண்டம் மட்டும் நடந்து போய் சுருண்டு விழுந்தது" என்று எழுது. முதல் வகை நகைச்சுவை கதை. இரண்டாவது துப்பறியும் கதை. வேறு ஏதாவது விதமாகவும் கூட இதை எழுதலாம். ஆனால் முதல் பேராவில், முதல் வாக்கியத்தில் கதை ஆரம்பித்து விட வேண்டும்.


பொல பொலவென்று பொழுது விடிந்தது. “சார் போஸ்ட்” என்ற சத்தம் கேட்டது. நாளை விடிந்தால் தீபாவளி என்றெல்லாம் எழுதாதே என்று சொல்லிக் கொடுத்தார். என்ன சொல்லப் போகிறோம், எப்படி சொல்லப் போகிறோம் என்று யோசி என்று விவரித்துக் கொடுத்தார். எனக்கு அந்த சந்திப்பு மிக உபயோகமாக இருந்தது.


பிற்பாடு ஒரு கூட்டத்தில் அவர் இருந்த போது அவர் முன்னிலையில் “எனக்கு எழுத சொல்லிக் கொடுத்தது திரு. சுஜாதா அவர்களே” என்று நான் நன்றியோடு இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த போது, அவர் மெல்ல எழுந்து வந்து என்னிடமிருந்து மைக் வாங்கி, “நான் ஒரு நூறு, நூற்றைம்பது பேருக்கு எழுத சொல்லிக் கொடுத்தேன். ஒரே ஒரு பாலகுமாரன் தான் புரிஞ்சிண்டான். கத்துக் கொடுக்கிறது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல. கத்துக்கறது தான் பெரிய விஷயம்” என்று சொன்னார். கூட்டம் கை தட்டி பெரிதாக ஆரவாரித்தது. கூட்டம் முடிந்த பிறகு எனக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று பல இளைஞர்கள் திரு. சுஜாதாவை சூழ்ந்து கொண்டார்கள். திரு. சுஜாதா பல பேருக்கு பலதும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.


ஒரு கால கட்டத்து இளைஞர்களை வெகு அழகாக தமிழ் இலக்கியத்திற்கு இழுத்து வந்தார். கட்டுரையாயினும் சரி. கதையாயினும் சரி. படிக்க சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதை முக்கியமான கட்டளையாக ஏற்று எல்லா படைப்புகளையும் மிக நேர்த்தியாக நெய்து வந்தார்.


எழுத்தாளர் திரு। சாவி அவர்களுடன் பெங்களூருக்கு ஒரு சுற்றுப்பயணம் போனோம்। அதில் எழுத்தாளர் ராணி மைந்தன், சுப்ரமணியராஜூ, விசிட்டர் அனந்த், நான் என்று பலர் இருந்ததாக நினைவு। நாங்கள் எல்லோரும் திரு. சுஜாதா வீட்டிற்கு ஒரு காபி குடிக்க போய் அவரோடு பேசி விட்டு வந்தோம். பல எழுத்தாளர்கள் ஒன்று கூடி ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு பத்திரிக்கையில் எழுதுவதற்காகப் போனதாய் சம்பவம் உண்டா. இது போல் முன் எப்போதும் நடந்ததில்லை. இனி நடக்குமா என்றும் தெரியவில்லை.


அவரிடம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கனிவு இருந்தது. அந்தக் கனிவும், கவர்ச்சியும் அவர் எழுத்திலும் இருந்தது. சுஜாதாவின் மறைவு தமிழ் உரைநடைக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு. சுஜாதா ஸ்தூலமாக இல்லாது போனாலும் எவரெல்லாம் நல்ல தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடைய நெஞ்சில், அவர்கள் ஆசையில் வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருப்பார்.


( நன்றி: பாலகுமாரன் )

Tuesday, March 4, 2008

சுஜாதா பதில்கள், வாரம் ஒரு பாசுரம்.

இந்த வாரம் குங்குமத்தில் சுஜாதா பதில்களில் இரண்டை இங்கே தந்திருக்கிறேன்.


கே: அப்துல் கலாமுடன் இணைந்து நீங்கள் எழுதுவதாக இருந்த 'இந்திய ராக்கெட் இயல்' புத்தகம் எந்த நிலையில் உள்ளது ?


பதில்: கைவிடப்பட்டது.


கே: நீங்கள் யாருக்கு தொண்டன், யாருக்கு தலைவன் ?


பதில்: என்னை வியக்கவைக்கும் புத்தகங்களை எழுதியவர்களுக்கெல்லாம் தொண்டன்; ஒரு எறும்புக்கு கூட தலைவனாக என்னால் இருக்க முடியாது.இந்த வாரம் கல்கியில் வந்த வாரம் ஒரு பாசுரம்


தேரழுந்தூர் காவிரிக் கரை யில் உள்ள ஊர். திருமங்கை யாழ்வார் இவ்வூரில் நின்றிருக் கும் பெருமானை ஏத்தி 45 அழகான பாடல்கள் பாடியிருக்கிறார். அவற்றில் ஒன்றை மாதிரி பார்க்கலாமா?


இந்தப் பாடலில் கஜேந்திர மோட்சம் சொல்லப்பட்டிருக்கிறது.


‘குலத் தலைய மதவேழம்
பொய்கை புக்கு,
கோள் முதலை பிடிக்க,
அதற்கு அனுங்கி நின்று,
நிலத் திகழும் மலர்ச் சுடர்
ஏய் சோதீ! என்ன,
நெஞ்சு இடர் தீர்த்தருளிய
என் நிமலன் காண்மின் -
மலைத் திகழ் சந்து, அகில், கனகம்,
மணியும் கொண்டு
வந்து உந்தி, வயல்கள்தொறும்
மடைகள் பாய,
அலைத்து வரும் பொன்னி வளம்
பெருகும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று, உகந்த
அமரர் கோவே.’


‘நல்ல இடத்தில் பிறந்து (குலத்தலைய) அலைகிற யானை, பொய்கையில் புகுந்த போது கொடிய (கோள்) முதலை அதனைப் பிடித்துக்கொள்ள, பயந்துபோய் (அனுங்கி) ‘நிலவைப்போல் ஒளிரும் சோதியே!’ என்று கதற, அதன் கஷ்டத்தைத் தீர்த்தருளிய பா¢சுத்தமானவனை (நிமலன்) காணுங்கள். மலையிலிருந்து வரும் சந்தனமும் அகி லும் பொன்னும் மணியும் கொண்டு வந்து தள்ள மடைகள் எல்லாம் பாயும் காவிரியின் வளம் பெருகும் திருவழுந் தூரில் காட்சி தரும் பெரு மானே! தேவர்களுக்கு அதி பதியே!’


ஆழ்வார் காலத்தில் காவிரி நதியில் சந்தனமும் அகிலும் பொன்னும் மணியும் பாய்ந்திருக்கின்றன. இப்போது குப்பை களுக்கும் தண்ணீர்ப் பாம்புகளுக்கும் பயந்து, குளிக்காமல் வருகிறோம். திவ்ய பிரபந்தத்தில், பொரிய திருமொழி ஏழாம் திருமொழி எட்டாம் பத்தில் உள்ள இந்


தப் பாடல்களில், மகாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களையும் ஒவ்வொரு பாசுரமாகப் பாடியிருக்கிறார்.


குதிரை முக அயக்¡£வ அவதாரம், சிங்க முக நரசிம்மாவதாரம், கிருஷ்ணாவதாரம், வாமனாவதாரம், இராமாவதாரம். பன்றி யாய் மீன் ஆகி அ¡¢ ஆய், பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன்தன் எல்லா அவதாரங்களையும் பாடுகிறார். அற்புதமான பாசுரங்கள்!


( உடம்பு நல்ல இருக்கும் போதே திவ்விய தேசங்களுக்கு செல்ல வேண்டும் என்று திருமங்கை ஆழ்வார் சொல்லியிருக்கிறார் என்று ஒரு முறை என்னிடம் சுஜாதா சொல்லியிருக்கிறார் )

Monday, March 3, 2008

சுஜாதா மறைவு குறித்து - மனுஷ்ய புத்திரன்

சுஜாதா:நம் காலத்து நாயகன்
( 1935-2008 )


பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து 'நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்' என்று கொடுத்தார்.


 சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.
புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின. 'அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்' என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார்.
கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. 'கால்களின் ஆல்பம்' அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் 'அம்மா இல்லாத முதல் ரம்ஜான்' கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன். ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், 'உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்' என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். 'இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை' என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது.
சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். 'சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்' என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன்.
சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன். நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.
உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள்.
கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். 'உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது' என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் 'சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்' என்றார்.
அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.
எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.


( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )
 


சுஜாதா: (1935-2008) நவீனத் தமிழின் அடையாளம்


இந்தக் குறிப்பு சுஜாதாவின் எண்ணற்ற வாசகர்களின் இடையறாத தடுமாறும் தொலைபேசி குரல்களுக்கிடையே எழுதப்படுகிறது. இந்த குறிப்பினால் அந்தக் குரல்களின் ஆழம் காணமுடியாத துயரத்தின் நடுங்கும் நிழல்களைத் தொட முடியாது. நமது கனவுகளோடும் சிந்தனைகளோடும் வெகு ஆழமாக உரையாடிய மகத்தான கலைஞனின் நீங்குதல் நமது அந்தரங்கத்தின் ஒரு பகுதியை இழப்பதாகவே இருக்கிறது. சுஜாதா அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசகனின் அந்தரங்கம். தமிழில் வாசிப்பு பழக்கமுள்ள ஒவ்வொருவரின் அந்தரங்கத்திலும் கனவிலும் ஏதாவது ஒரு மூலையில் அவர் படிந்தே இருப்பார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது கூறினார் ‘மனித வாழ்வின் தீராத புதிரும் விசித்திரமும் என்னவென்றால் மனிதர்கள் இந்த வாழ்க்கையிலிருந்து திடீரெனெ காணாமால் போய்விடுவதுதான்’ என்றார். சுஜாதாவும் இப்போது அந்த விசித்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டார்.


மொழியை வெறுமனே பயன்படுத்தும் கலைஞர்களுக்கிடையே தான் புழங்குகிற மொழியைப் புதுப்பித்து அதற்கு புதிய உள்ளோட்டங்களை வழங்குகிறவனே மகத்தான கலைஞனாகிறான். 20ஆம் நூற்றாண்டில் பாரதியும் புதுமைப்பித்தனும் தமிழில் உருவாக்கிய நவீனத்துவத்தின் பேரலைகள் மொத்த படைப்பியக்கத்தையும் மாற்றியமைத்தது. அதற்குப் பின் தமிழ் உரைநடைக்கு புதிய வேகமும் வண்ணமும் கொடுத்த பேரியக்கம் சுஜாதா. கடந்த ஐம்பதாண்டு காலமாக சுஜாதாவின் இந்த எழுத்தியக்கம் தமிழ் உரைநடைக்கு எண்ணற்ற புதிய சாத்தியங்களை வழங்கியது. தமிழ் வெகுசன எழுத்தின் அசட்டு மிகை உணர்ச்சிகளையும் பாசங்குகளையும் சுஜாதாவின் வருகை துடைத்தெறிந்தது. குடும்பக் கதைகளும் வரலாற்று புனைவுகளும் நிரம்பிய பரப்பில் அறிவுணர்ச்சி மிகுந்த ஒரு நுண்ணிய அழகியலை உருவாக்கினார். சுஜாதா தமிழுக்கு வழங்கிய இந்த புத்துணர்ச்சி தமிழில் படைப்பிலக்கியம் சார்ந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்ட புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு பெரும் உத்வேகம் வழங்கியது. சிலர் அதை தங்கள் இலக்கிய பாசாங்குகள் காரணமாக வெளிப்படையாக அங்கீகரிக்க மறுத்தனர். ஆனால் எழுபதுகளுக்கு பிறகான தமிழ் புனைகதை பரப்பில் சுஜாதா உருவாக்கிய தடங்கள் அழுத்தமானவை. மீறிச் செல்ல முடியாதவை.


ஒரு எழுத்தாளனின் அக்கறைகள், ஈடுபாடுகள் எவ்வளவு பரந்த தளத்தில் செயல்பட முடியும் என்பதற்கு அவர் ஒரு தனித்துவமான உதாரணம். சங்க இலக்கியம், புதுக் கவிதை, நாட்டார் பாடல்கள், ஹைக் கூ என கவிதையின் அத்தனை வடிவங்களோடும் அவர் தீவிரமான அக்கறை கொண்டிருந்தார். தமிழ்க் கவிதை இயக்கத்தை வெகுசன தளத்தில் கொண்டுசென்றதில் அவரது செயல்பாடுகள் முக்கியமானவை. உரைநடையை தனது பிரதான வெளிப்பாட்டு முறையாக கொண்ட சுஜாதா கவிதை மீது காட்டிய இந்த தீவிர அக்கறை நவீன கவிதை இயக்கத்தை நோக்கி புதிய வாசகர்களை தொடர்ந்து உருவாக்கியது. அவர் உண்மையில் தீவிர இலக்கிய இயக்கத்திற்கும் வெகுசன வாசகர்களுக்குமிடையே பெரும் இணைப்புப் பாலமாக இருந்தார். ஒவ்வொரு இளம் எழுத்தாளனைப் பற்றி அவர் எழுதினார். தமிழில் வெளிவந்த பல கவிதை நூல்கள் குறித்த முதல் குறிப்பை அவர் எழுதியிருக்கிறார்.


சுஜாதா அறிவியலை தமிழில் எழுதுவதன் சவால்களை மிக வெற்றிகரமாக கையாண்டார். அறிவியலை தமிழில் மொழிபெயர்ப்பதல்ல; அதை ஒரு சிந்தனை முறையாக உள்வாங்கி எழுதியதன் வழியாக சுஜாதா தமிழ் அறிவியல் எழுத்துக்களின்  அடையாளமாக மாறினார். அவரது புனைகதைகள், அதன் நுண்ணிய சித்தரிப்பு சார்ந்த அழகியலுக்காகவும் உயர்குடி மத்தியதர மற்றும் விளிம்புநிலை மனிதர்களின் வீழ்ச்சிகளை, பாசங்குகளை காட்டும் யதார்த்தத்திற்காகவும் நவீனத் தமிழிலக்கியத்தில் காலத்தால் அசைக்க முடியாத இடத்தைப் பெற்று நிற்கின்றன.


அவர் எந்த அளவு பிரபலமாக அறியப்பட்டாரோ அந்த அளவு விலகியிருப்பவராகவும் தனிமை உணர்ச்சி கொண்டவராகவும் இருந்தார். தனது படைப்பு சார்ந்த தனிமையை ஆரவாரங்கள் தீண்டக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். எழுதுவது ஒன்றே அவருக்கு பெரும் போதமாக இருந்தது. புகழ் சார்ந்த எந்த பலவீனங்களும் பதட்டங்களும் அவருக்கு இருந்ததில்லை. அவருடைய புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு அவரை மிகவும் வற்புறுத்தியே அழைத்து வந்திருக்கிறேன். புகழுரைகள் அவருக்கு அலுப்பையும் மிகுந்த கூச்சத்தையும் உண்டு பண்ணின. ‘பத்து நிமிட புகழுக்காக இந்த உலகில் மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பார்’ என்பார் அடிக்கடி. தமிழ் இலக்கிய உலகின் ஊழல்களால் அவருக்குரிய மரியாதைகளையும் அங்கீகாரங்களையும் இங்குள்ள இலக்கிய அமைப்புகள் முற்றாக மறுத்தன. அவருடைய அஞ்சலி குறிப்பில் குறிப்பிட அவருக்கு வழங்கப்பட்ட இலக்கிய விருதுகளின் பெயர் ஏதும் இல்லை. ஆனால் அது அவருக்கு என்றுமே அவசியமாக இருந்ததுமில்லை. அவர் இலட்சக்கணக்கான வாசகர்களின் இதயத்துடிப்பினால் இயங்கிய கலைஞன்.
 
கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே நிகழ்ந்த போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது. சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு அவரது இறுதி மூச்சு அதிர்ந்துகொண்டிருந்த மருத்துவமையின் அறையில் ஒரு கணம் நிற்க முடியாமல் மனம் கலைந்து வெளியே வந்தேன். அது நான் அறிந்த சுஜாதா அல்ல. அவர் தான் ஒரு போதும் அப்படி பார்க்கப்படுவதை விரும்ப மாட்டார். அவர் அருகில் இருந்த நண்பர் தேசிகன் என்னிடம் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம் ஒன்று இங்கு வரவழைக்க ஏற்பாடு செய்ய முடியுமா’ என்று கேட்டார். நான் சுஜாதாவுக்கு எத்தனையோ முக்கியமான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இது அவருக்காக அல்ல, அவரின் பொருட்டு நான் கடைசியாக வாங்கிய புத்தகம்.


( நன்றி: இந்தியா டுடே 12 மார்ச் 2008,  மனுஷ்ய புத்திரன் )