Saturday, December 31, 2005

மூக்குப்பொடி

கல்லூரி நாட்களில் நடந்த அந்தச் சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் செந்தில் வேலனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லித்தானாக வேண்டும்.செந்தில் வேலன் என் காலேஜ் ; என் வகுப்பு. காலேஜுக்கு ஜீப்பில் தான் வருவான் - மேல்கூரை இல்லாத 'ஓபன்' ஜீப். அவன் அப்பா ஏதோ ஒரு திராவிடக் கட்சியில் மாவட்டத் தலைவரோ செயலாளரோ, சரியாகத் தெரியவில்லை. ஆனால் சென்னையிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் அவன் வீட்டில் தான் தங்கி பிரியாணி சாப்பிடுவார்கள். சமிபத்தில்தினத்தந்தியில் அவன் அப்பா படம் முதல் பக்கத்தில் ஏதோ ஒரு விழாவிற்குத் தலைமை தாங்கினார் என்று வந்திருந்தது. அப்பாவின் செல்வாக்கினால்தான் அவனுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். தினமும் கல்லூரிக்கு வருவான்; வந்தவுடன் நேராக கேண்டினுக்குப் போய் டீ, சமோசா, சிகரேட் முடித்துவிட்டு காலேஜ் மணி அடித்தவுடன் கல்லூரியை விட்டுப் போய்விடுவான். ஒரு காதில் வளையம் போட்டிருப்பான். ரஜினி படம் ரிலீஸ் அன்றைக்கு எல்லோருக்கும் சாக்லேட் தருவான். கல்லூரி வாசலில் இருக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கெல்லாம் இவன் 'அண்ணா' தான்.


அன்று வெள்ளிக்கிழமை. நன்றாக ஞாபகம் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் லேப் இருந்ததால் கொஞ்சம் சீக்கிரம் போனேன். போயிருக்க கூடாது. வகுப்பறைக்குள் செந்தில் வேலனைப் பார்த்துத் திடுக்கிட்டேன். திடுக்கிட்டதற்குக் காரணம் இருக்கிறது. செந்தில் வேலன் கல்லூரிக்கு வருவதே அபூர்வம்; வந்தாலும் இவ்வளவு சீக்கிரம்... ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று உள்மனது ஏனோ அன்று எச்சரிக்கவில்லை. இவனிடமிருந்து எப்படி நழுவுவது என்று யோசிப்பதற்குள்...


"என்ன, ராகுகாலத்துக்கு முன்னாடி வந்துட்ட போல?"


"இன்னிக்கு லேப் இருக்கு. அத்தான்.. "


"சரி, சீக்கிரம் வந்துட்ட, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு!"


"என்ன ?" என்று கேட்பதற்குள் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டினான்.


"எங்கிட்ட சில்லறை இல்லை.."


"ச்சே.. காலெஜுக்கு வெளில இருக்கற பெட்டிக்கடைக்குப் போய் பட்டிணம் பொடி வாங்கி வா!"


"அப்படினா? 1431 பயோரியா பல்பொடியா?"


"ஜோக்கா '...த்தா' இதுகூட தெரியல.. பட்டிணம் பொடினா மூக்குப்பொடி; ஓடு, சீக்கிரம் போய் வாங்கி வா!"


"நான் போக..."


"போக முடியாதுன்னா '...த்தா' ஒரே அப்பு அப்பிப்புடுவேன், ஓடு!" என்று என் ரெகார்ட் நோட்டைப் பிடுங்கிவைத்துக் கொண்டான். "மூக்குப்பொடி வாங்கியாந்தபுறம் இந்த புக்கை வாங்கிக்கோ!" என்றான்.


எனக்கு வேறு வழி தெரியவில்லை. செய்வதறியாமல் நின்றேன். செந்தில் வேலன் விடுவதாக இல்லை. நூறு ரூபாய் நோட்டை என் சட்டைப் பையில் திணித்து, "ஓடு!!" என்று திரும்பவும் விரட்டினான்.


"எவ்வளவுக்கு வாங்கணும்?"


"நூறு ரூபாய்க்கு வாங்கியா! "


"நூறு ரூபாய்க்கா?" என்றேன் ஆச்சரியத்தோடு.


எங்கள் தாத்தாவிற்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் உண்டு. அவருக்குக்கூட நான் மூக்குப்பொடி வாங்கித் தந்ததில்லை. செத்துப்போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புகூட அவரே கோர்ட் எதிரில் இருக்கும் 'சோழியன் கடை' என்று அழைக்கப்படும் பெட்டிக்கடைக்கு நடந்துபோய் டப்பாவில் ரொப்பிக்கொண்டு வந்தார்; ஐம்பது பைசாவுக்கு மூக்குப்பொடியும் எனக்கு ஒரு புளிப்பு மிட்டாயும். என் தாத்தா வாழ்நாளில் போட்ட மூக்குப்பொடியைக் கணக்கு பண்ணினால் கூட நூறு ரூபாய்க்குக் கம்மியாகத்தான் இருக்கும்.


காலேஜுக்கு வெளியில் இருக்கும் பெட்டிக்கடையில் கூட்டம் என்று சொல்ல முடியாவிட்டாலும் யாராவது கடையில் இருந்துக்கொண்டே இருந்தார்கள். தர்மசங்கடமாக இருந்தது. என்ன என்று கேட்பது? யாராவது பார்த்துவிட்டால்? சிகரெட் என்றால் கூட கொஞ்சம் கவுரவமாக இருக்கும். மூக்குப்பொடி? ச்சே. சரியாக மாட்டிக்கொண்டு விட்டோம் என்று நினைத்தேன். வேறு வழி தெரியவில்லை. கடையில் கூட்டம் இல்லாதபோது வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன்.  - சிகரெட், வெத்திலை, கடலை உருண்டை, ஹமாம் சோப், சோடா, முட்டை, குமுதம், வாழைப்பழம், ஓசிச் சுண்ணாம்பு, சிகரெட் பற்ற வைக்க... என்று ஏதாவது வியாபாரம் ஆகிக்கொண்டு இருந்தபோதும் யாரும் மூக்குப்பொடி மட்டும் வாங்கவில்லை!


கடைக்குப் பக்கத்தில் கொஞ்சநேரம் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த கடைக்காரர், "என்ன தம்பி, என்ன வேணும்? ரொம்ப நேரமா நிக்கிறீங்க?"


"ஒண்ணும் இல்ல சும்மா.."


கடைக்காரர் என் பக்கத்தில் வந்து காதோடு குசுகுசுத்தார், "நிரோத் வேணுமுனா சொல்லுங்க; யாருக்கும் தெரியாம சுருட்டித்தரேன். இது இல்லாம விராலிமலைப் பக்கம் போயிடாதீங்க.."


"ஐயோ, அதெல்லாம் வேண்டாங்க.. கொஞ்சம் மூக்குப்பொடி வேணும்.."


என் மேல் நம்பிக்கையில்லாமல் "என்ன மூக்குப்பொடியா?"


"ஆமா"


"எவ்வளவுக்கு வேணும்?"


"நூறு ரூபாய்க்கு"


"நூறு ரூபாய்க்கா? என்ன தம்பி, நூறு ரூபாய்க்கு வாங்கி என்ன செய்ய போறீங்க? என் கடையிலேயே ஐம்பது ரூபாய்க்கு மேல இருக்காது. அட்வான்ஸ் வேனா கொடுத்துட்டு போங்க நாளைக்கு காந்தி மார்க்கேட்டிலிருந்து வாங்கி வைக்கிறேன்."


"சரி, ஐம்பது ரூபாய்க்குத் தாங்க"


"ஐம்பது ரூபாய்க்கா?  வேணுமுனா ஒரு முப்பது ரூபாய்க்குத் தாரேன், ரெகுலர் கஷ்டமர்களுக்கு கொஞ்சம் வேணும் பாருங்க.."


"சரி, கொடுங்க!"


மூக்குப்பொடி முப்பது ரூபாய்க்குக் கட்டப்பட்டது. வாங்கிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் வகுப்பறைக்குச் சென்றேன்.


"என்ன இவ்வளவு நேரம்" என்று என் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். "முப்பது ரூபாய்க்கு மேல் கடையில் ஸ்டாக் இல்லை.." என்று மீதிச் சில்லறையைக் கொடுத்துவிட்டு ரெகார்ட் நோட்டை எடுத்துக்கொண்டு ஓடினேன்.


லேபிற்குப் பிறகு எங்களுக்கு TC லதா மேடம் வகுப்பு. TC என்பது அவர் இனிஷியல் கிடையாது. சிலரை காலேஜை விட்டு TC கொடுத்து அனுப்பியிருக்கிறார்.  கண்டிப்பானவர்; லேட்டாகப் போனால் உள்ளே விடமாட்டார். எதாவது தப்பாகச் சொன்னால் திட்டுவார். காலேஜ் பிரின்சிபாலுக்குச் சொந்தக்காரர். நாங்கள் லேப் முடித்துவிட்டுப் போனவுடன் வகுப்பில் எங்களுக்கு முன்னரே லதா மேடம் உட்கார்ந்திருந்தார்.


போனவுடனேயே "சீக்கிரம்.. சீக்கிரம்.." என்று கடிந்துகொண்டார். நாங்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். அப்போது சிலர் தங்கள் இருக்கைக்குப் பக்கத்தில் உள்ள ஃபேன் சுவிட்சைப் போட்டார்கள். ஃபேன் சுத்த ஆரம்பித்தவுடன் எல்ல்லோரும் தும்ம ஆரம்பித்தார்கள். கச்சேரியில் தனியாவர்தனம் போல் கொஞ்சம் கொஞ்சமாகத் தும்மி, பிறகு வகுப்பறை முழுக்க ஒரே தும்மல். யாராலும் பேச முடியவில்லை; சைகையும் தும்மலும்தான். லதா மேடம் அழுதார்களா அல்லது தும்மலால் கண்ணீர் விட்டார்களா என்று தெரியவில்லை; வகுப்பறையை விட்டு நேராக பிரின்சிபால் ரூமுக்குப் போனார். ஓடினார் என்றே சொல்லவேண்டும்.


வகுப்பறை முழுக்க மூக்குப்பொடி நெடியும், தும்மலும் பரவியிருக்க வாசகர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பது அவ்வளவு கஷ்டம் கிடையாது என்று நினைக்கிறேன். நான் வாங்கிக்கொண்டு வந்த மூக்குப்பொடியை லேப் போயிருந்த சமயத்தில் எல்லா ஃபேன் இறக்கையிலும் தூவியிருக்கிறான் செந்தில் வேலன். எனக்கு இந்தச் சம்பவத்தில் பங்குண்டு என்று நினைக்கும்போது, அடிவயிற்றில் என்னவோ பண்ணியது. ஒன்னுக்கு அவசரமாக வந்தது.


லதா மேடமுடன் பிரின்சிபாலும் எங்கள் வகுப்புக்கு வந்தார்கள். வந்தபோது தும்மல் கொஞ்சம் கம்மியாகியிருந்தது. இதை யார் செய்தது என்று மீண்டும் மீண்டும் கேட்டார்கள். யாரும் வாயைத் திறக்கவில்லை. நாங்கள் லேபில் இருந்தோம், எங்களுக்குத் தெரியாது என்று கோரஸாகச் சொன்னதை அவர் நம்பவில்லை.


அப்போது அந்த வழியாக வந்த பியூனை பிரின்சிபால் சைகையால் வரச்சொன்னார்.
"காலேஜுக்கு வெளியில இருக்கும் கடையில் போய் நம்ம பசங்க யாராவது மூக்குப்பொடி வாங்கினாங்களானு கேளு..."


மாட்டிக்கொண்டால் நிச்சயம் TC தான் என்று உள்மனம் எச்சரிக்கவே, சின்ன வயதிலிருந்து சேர்ந்து வைத்த தைரியத்தை எல்லாம் வரவைத்துக்கொண்டு, "சார், மூக்குப்பொடி வாங்கிக்கொண்டு வந்தது நான்தான்....ஆனா நான் இந்த வேலையை செய்யவில்லை" என்றேன். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள், ஆச்சரியமாக.


"நீயா? வா என்னுடன் என் ரூமுக்கு!" என்று அழைத்துக்கொண்டு போனார் பிரின்சிபால்.


அதன் பின் நடந்ததைச் சுருக்கமாகத் தருகிறேன்.


நடந்தவற்றை பிரின்சிபாலிடம் சொன்னேன். செந்தில் வேலன் தான் இதற்குக் காரணம் என்று எவ்வளவு சொல்லியும் அதை அவ்ர் நம்பவில்லை. செந்தில் வேலன் அன்று காலேஜுக்கு வரவேயில்லை, இது எப்படி நடக்கும் என்றார். அடுத்த நாள் செந்தில் வேலன், தான் செய்யவேயில்லை என்று சாதித்தான். என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். மன்னிப்புக் கடிதம் எழுதித்தரச் சொன்னார்கள். அந்த செமெஸ்டரில் எனக்கு 'இண்டர்னல்' மார்க் ரொம்ப கம்மியாகக் கிடைத்தது.


அதன் பின் எங்கள் வகுப்பிற்கு மூக்குப்பொடி வகுப்பு என்று பெயர் கிடைத்தது.


"நீ எந்த பேட்ச்? "


"சார், இவனைத் தெரியாது? அந்த மூக்குப்பொடி..." போன்ற சம்பாஷணைகள் நான் கல்லூரி முடிக்கும் வரை இருந்தது.


செந்தில் வேலன் அட்டண்டன்ஸ் இல்லாமல், பரிட்சை எழுதமுடியவில்லை. கல்லூரியில் ஒரு பெண்ணுடன்..... அதல்லாம் இந்தக் கதைக்கு அவசியம் இல்லை. சுருக்கமாக - காலேஜிலிருந்து அனுப்பபட்டான்.


- - - -


இரண்டு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு திருச்சிக்குச் சென்றபோது சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடாக நடந்துகொண்டிருந்து. போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஓட்டுக்கேட்டு கதவை தட்டியவர்களில் செந்தில் வேலனும் ஒருவன். கரை வேட்டி, கதர் சட்டை, வேர்வை கலந்த ஜவ்வாது வாசனை என்று செந்தில் வேலன் மாறிப்போயிருந்தான்.


"மச்சி நீயா? உங்க தொகுதியில் நான் தான் நிக்கிறேன், கண்டிப்பாக உன் ஓட்டு எனக்குதானே?" என்று எங்கள் பெயர், வார்ட் அச்சிட்ட கார்டைக் கொடுத்துவிட்டு, "உனக்கே தெரியும், இப்போ கொஞ்சம் பிசியா இருக்கேன்; இன்னும் ஐநூறு வீடு முடிக்கணும். உங்க பூத் சேவாசங்கம். கட்டாயம் ஓட்டுப் போட வந்துடு. அம்மா, அப்பா கிட்டேயும் சொல்லிடு.." என்று கட்சியின் சின்னத்தை கையால் காண்பித்துவிட்டுச் சென்றான்.


அம்மா, "உனக்கு இவனை தெரியுமா ? யாருடா?"  என்றாள்


"என் காலேஜ் கிளாஸ்மேட் மா, இந்த எலெக்ஷன்ல நிக்கிறான்."


"அப்படியா? இவனுக்கே நம்ம ஓட்டு போடலாம்!"


நீங்க என்ன சொல்றீங்க? இவனுக்கு ஓட்டுப் போடலாமா?

Tuesday, December 20, 2005

மூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை

 அப்பாடா ஒரு வழியாக இன்று முடித்துவிட்டேன்!.


IIM இந்தோர் (Indore) தங்கள் ஆண்டு விழா (IRIS 2005) கொண்டாட்டமாக ஒரு puzzle விளையாட்டு போட்டியை இந்த ஆண்டு வைத்துள்ளார்கள்.


கிட்டத்தட்ட ஒரு வாரம் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் முயன்று ( சில சமயம் நண்பர்களிடம் கேட்டு ) இன்று காலைதான் முடிக்க முடிந்தது. ( மொத்தம் 29 நிலை(level) ).


 [%image(20051219-KluelessFinal.jpg|507|250|Final Page of KlueLess)%]


முடித்த பின் மூளையை வாட்டர் வாஷ் சர்விஸ் செய்த உணர்வு :-) . நீங்களும் முயன்று பாருங்களேன்.


விளையாட்டுக்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும் (  http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/  )


தயவு செய்து விடை தெரிந்தவர்கள் விடைகளை இங்கு பின்னூட்டமிடாதீர்கள். மற்றவர்களும் முயன்று பார்த்து அனுபவிக்கட்டுமே!. (Clue, மறைமுக குறிப்பு கொடுப்பதற்கு தடையில்லை)


கேம் ரூல்ஸ் - http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/game.asp

Friday, December 16, 2005

இந்த மார்கழி

இன்று மார்கழி ஆரம்பம். போன வருடம் தினமும் அந்தந்த திருப்பாவை பாடலுக்கு, படம், தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறு விளக்கம், கோலம் என்று பதிவுகள் போட்டேன். இந்த வருடம் வேறு மாதிரி செய்யலாம் என்று யோசித்தேன். ஏனோ முடியவில்லை. போன வருடம் செய்ததை பார்பதற்கு வலது பக்கத்தில் 'இன்றைய திருப்பாவை' படத்தை கிளிக் செய்யவும்


 

Monday, December 12, 2005

E=ஹிஹி2

சுஹாசினி, குஷ்பு விவகாரத்தை படித்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனை எரிச்சலாக பார்த்தது வேதாளம்.


"எவ்வளவு நாள் தான் இந்த விஷயத்தை படித்துக்கொண்டிருப்ப?"  என்றது வேதாளம்.
"உன்னோடு பெரிய தொந்தரவு, கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடு" என்று விக்கிரமாதித்தன் திரும்பவும் படிக்க ஆரம்பித்தான்.


வேதாளம் விடுவதாக இல்லை "இன்னிக்கு உன்னை எங்க வேதாள உலகத்திற்கு அழைத்து போகலாம் என்று இருக்கேன்"


"உன்னோட தொந்தரவே தாங்கல..வேதாள உலகம் வேறயா?"


"சீக்கிரம் கிளம்பு, வெங்கட் நாராயணா ரோட்டில் ரத்தனா புதுசா கபே திரந்திருக்காங்க, ஒரு சாம்பார் இட்லி சாப்பிட்டு போகலாம்" என்றது.


விக்கிரமாதித்தனும், வேதாளமும் சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு வேதாள உலகத்திற்கு கிளம்பினார்கள். இந்த முறை வேதாளம் விக்கிரமாதித்தனை தோளில் தூக்கிக்கொண்டு வேகமாக பறந்தது."இவ்வளவு வேகமாக பறக்காதே எனக்கு பயமாக இருக்கிறது"


"பயமா? என்னது இது சின்னபுள்ள தனமா இருக்கு ? " என்றது வேதாளம் வடிவேலு ஸ்டைலில்.


"இன்னும் கொஞ்சம் வேகமா போனா என் வேஷ்டி அவுந்துடும் அப்புறம் நீ பயந்துடுவ"
"ஐயோ! நான் வேகமா போகலை, இது தான் என் நார்மல் ஸ்பீடு. உனக்கு ஒண்ணு தெரியுமா ? யாராலையும் ஒளியின் வேகத்தை விட வேகமாக போக முடியாது"


"ஆரம்பிச்சுட்டையா உன் வேலையை"


"எதாவது சொன்னா கேட்டுக்கோ. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 300,000 கீமீ"


"அப்படியா?"


"ஒளியின் வேகத்தால் ஒரு நொடிக்கு பூமியை ஏழு முறை சுற்றி வரலாம்"


"அந்த வேகத்தில் சென்றால் என்ன ஆகும் ?"


"அந்த வேகத்தில் செல்ல முடியாது ஆனால் அந்த வேகத்தில் சென்றால், முதலில் உன் வேஷ்டி அவுரும், உன் நீளம் கம்மியாகும், கடிகாரம் மெதுவாக ஓடும் ..." என்று அடிக்கிக்கொண்டு போனது வேதாளம்.


விக்கிரமாதித்தனுக்கு ஒண்ணும் புரியவில்லை. "என்ன ? இதெல்லாம் பகுத்தறிவுக்கு முரண்பாடாக இருக்கிறதே" என்றான்.


வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்தது. அப்போது வேதாளத்தின் ஒன்றுவிட்ட சித்தப்பா அவர்களை ஓவர் டேக் செய்து கொண்டு வேகமாக போனார். விக்கிரமாதித்தனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.


ஒ.வி.சித்தப்பா வேகமாக போகப்போக அவர் சின்னதாக, ரஜினி பட கட்டவுட் போல் தெரிந்தார்.


"என்ன உங்க சித்தப்பா தட்டையாக தெரிகிறார்?"


"அதுவா, அவர் கொஞ்சம் வேகமாக போகிறார் அதனால் அப்படி தெரிகிறார்"


"எப்படி ?"


"இந்த எஃபெக்டுக்கு பேர் தான் Contraction of moving bodies!"


 


[%image(20051211-street1.jpg|300|225|street 1)%]

(விக்கிரமாதித்தன் முதலில் பார்த்தது ) 


   


 


 


 


 


 


 


[%image(20051211-street2.jpg|108|225|Street 2)%]

சரி உன் வேஷ்டியையும், என்னையும் கொஞ்சம் கெட்டியா புடிச்சிக்கொ என்றது வேதாளம்.  இப்போ கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் போகப்போகிறோம்.
'ஜூட்' என்று சொல்லி வேகமாக பறந்தது. விக்கிரமாதித்தனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவனை சுற்றி எல்லாம் சுருங்கி தட்டையாக கட்டவுட் போல் இருந்தது. ஜன்னல், கதவு, பெட்டிக்கடை, மாடு எல்லாம் சுருங்கி தெரிந்தது! ( பார்க்க படம்) ஆனால் ஒன்று விட்ட சித்த்ப்பா பக்கத்தில் போனவுடன் அவர் சாதாரணமாக தெரிந்தார்.


"என்னப்பா இது?"


"இதுதாம்பா relativity(சார்நிலை). இது சிறப்பு சார்நிலை(Special theory of relativity) என்று பெயரிடப்பட்டது. அதாவது காலம் ( time), வெளி(space) இவற்றுக்கிடையேயான தொடர்பு சக்தி ( energy) பெருண்மை(matter) இவற்றுக்கு இடையேயான தொடர்பும்..."


"போதும்பா எனக்கு தலைசுற்றுகிறது" என்றான் விக்கிரமாதித்தன்


"சரி அங்கே தெரியும் மணிக்கூண்டில் என்ன மணி"  என்றது கேட்டது வேதாளம்


விக்கிரமாதித்தன் மணிக்கூண்டில் பார்த்து "நாலு" என்றான்.


"உன் கைகடிகாரத்தில் ?"


"அதுவும் சரியாக நாலு"


[%image(20051211-clock.gif|180|248|clock)%]

"சரி இப்போ திரும்பவும் கொஞ்சம் வேகமா போகப்போறோம்" என்ற வேதாளம். திரும்பவும் விக்கிரமாதித்தனை தூக்கிக்கொண்டு வேகமாக பறந்து சென்றது. கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் மணிக்கூண்டு பக்கத்தில் வந்தது. இப்போ மணி என்ன என்றது.


விக்கிரமாதித்தன் மணிக்கூண்டில் மணியை பார்த்தான். அது "நான்கு மணி முப்பது நிமிடம்" என்றது. கைகெடிகாரத்தில் நான்கு மணி பத்து நிமிடம் என்றது.


விக்கிரமாதித்தனுக்கு தலை சுற்றியது.


"என்னப்பா இது, மணி கூண்டு கடிகாரம் கொஞ்சம் வேகமாக ஓடுகிறது என்று நினைக்கிறேன்" என்றான் விக்கிரமாதித்தன்.


வேதாளம் "அதெல்லாம் இல்லை இதற்கு பேர் தான் Dilatation of Time " என்றது.


விக்கிரமாதித்தன் மேலும் குழம்பினான். போய் ஒரு காப்பி சாப்பிடலாம் என்று ஒரு கடைக்கு போனார்கள். கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு மேஜையில் இரண்டு இடம் காலியக இருந்தது. உட்கார்ந்தார்கள். பக்கத்தில் ஒரு பாட்டியும் ஒரு முப்பது நாற்பது வயது மதிக்கதக்க இளைஞனும் உட்கார்திருந்தார்கள்.
பாட்டி அந்த இளைஞனிடம் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தார். விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. இளைஞன் பாட்டியின் உதட்டில் ஒரு இங்கிலிஷ் கிஸ் கொடுத்தான். 'கலிகாலம்' என்றான் விக்கிரமாதித்தன்.


இளைஞன் சிரித்துக்கொண்டு "சார், இது என் மனைவி" என்றான்.


விக்கிரமாதித்தனுக்கு தலை நிஜமாகவே சுற்றியது. இளைஞன் மேலும் தொடர்ந்தான்.


"எனக்கு சேல்ஸ் வேலை. அதனால் நிறைய இடங்களுக்கு போகவேண்டும். இங்கு உள்ள பிளைட் எல்லாம் ரொம்ப வேகமாக போகிறது. பாதி நேரம் பிளைட்டிலேயே போவதால் எனக்கு முதிர்ச்சி மெதுவாகத்தான் வருகிறது.அதானால் இவளைவிட நான் இளமையாக இருக்கிறேன்"


அப்போது வேதாளம் "அங்கே தூரத்தில் கட்டத்தின் மீது என்ன தெரிகிறது?" என்றது.


"சிகப்பு விளக்கு எரிகிறது" என்றான் விக்கிரமாதித்தன்.


"சரி என்னை கெட்டியாக பிடித்துக்கொள்" என்று வேதாளம் விக்கிரமாதித்தனை தூக்கிக்கொண்டு சிகப்பு விளக்கை நோக்கி பறந்தது.


அப்போது விக்கிரமாதித்தன் அந்த சிகப்பு விளக்கு பச்சை நிறமாக மாறுவதை பார்த்து திடுக்கிட்டான்.


வேதாளம் கண்ணடித்துவிட்டு விளக்க ஆரம்பித்தது. சிகப்பு ஒளியை ( =650nm)  நோக்கி  நாம் போன போது நம்முடைய வேகம் 0.17c1 ( c என்பது ஒளியின் வேகத்தை குறிக்கிறது2) . சிகப்பு நிறம் நமக்கு பச்சை நிறமாக( = 550 nm) தெரிவதற்கு காரணம் Relativistic Doppler Effect என்றது.


விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. .


சரி, குஷ்பு பேசியது சிலருக்கு தப்பாக தெரிகிறது சிலருக்கு சரியாக தெரிகிறது. இதுவும் ரிலேட்டிவிட்டி தானே என்றான் விக்கிரமாதித்தன்.


"உன்னை திருத்தவே முடியாது" என்று விக்கிரமாதித்தனை தோளிலிருந்து இறக்கிவிட்டது.


 
 [%image(20051212-einstein.gif|140|198|einstien)%]

இந்த வருடம் முழுக்க ஐன்ஸ்டினைப் பற்றி உலகமே பேசிக் கொண்டிருந்தது. ஏன் தெரியுமா ? ஐ.நா.சபை இந்த வருடத்தை உலக இயற்பியல் ஆண்டாக அறிவித்திருந்திருந்தது.


* "உங்க பையனைப் போல ஒரு மக்கை நான் இதுவரை பார்த்ததில்லை, என்னால் இவனுக்கு பாடம் எடுக்க முடியது. தயவு செய்து இவனைல் கூப்பிட்டுக் கொண்டு போய்விடுங்கள்" - ஐன்ஸ்டினின் பெற்றொரை அழைத்து அவரது ஆசிரியர் கூறியிருக்கார். "இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் நேரம், பணம் எல்லாம் வேஸ்ட்" என்றும் கூறியிருக்கார்.


* ஜாலியாக பாட்டு கேட்பது, சைக்கிளில் ரவுண்ட் அடிப்பது இவை அவரது இளமைக்கால பொழுதுபோக்குகள். உயர் நிலைப் பள்ளியில் படித்த போது, தத்துபித்தென்று இவர் எழுதிய கட்டுரைக்கு ஏதோ போனால் போகட்டுமென்று வெறும் பாதி மார்க் போட்டிருக்கிறார்கள்.


* "யுனிவர்சிட்டிக்கெல்லாம் போய் படிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு கிடையாது" என்று தன் கைபட எழுதி வைத்திருந்தார் ஐன்ஸ்டின்.


 


[%image(20051212-WYP2005_small_logo.gif|125|113|wyp)%]

இந்த ஆண்டு(2005) இயற்பியல் ஆண்டு. இந்த பதிவு விசேடச் சார்நிலைக் கோட்பாடை (Special Theory of Relativity) கொடுத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின்க்கு சமர்ப்பணம்.


Coinciding with the 100th anniversary of Albert Einstein's "Miraculous Year", the events of the World Year of Physics 2005 aim to raise the worldwide public awareness of physics and more generally for physical sciences.


இயற்பியல் பற்றிய பல கட்டுரைகள், தகவல்களுக்கு  http://iyarpiyal.org/
அனிமேஷன், ஐன்ஸ்டின் படம்  உதவி : http://nobelprize.org/ 

 1. 0.17c என்பது குத்துமதிப்பாக 5.0 10^7 m/s
2. ஒளியின் வேகம் 299792458 m/s 
  

Wednesday, December 7, 2005

மதுரை திவ்வியதேசங்கள் மூன்று

நவதிருப்பதிக்கு அடுத்த நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்விய தேசங்களுக்கு செல்வதாக திட்டம். முன்னாள் இரவு சாப்பிட்ட மதுரை பரோட்டாவின் உதவியால் காலை சீக்கிரம் எழ முடிந்தது. மதுரையிலிருந்து 21 கீமீ தூரத்தில் இருக்கும் அழகர் கோயிலுக்கு புறப்பட்டோம்.[%image(20051206-small_azhgar_kovil_front_vi.jpg|250|172|அழகர் கோயில் முகப்பு தோற்றம்)%]

இக்கோயிலுக்கு மற்றொரு அருமையான பெயர் இருக்கிறது - திருமாலிருஞ்சோலை. கிழக்கு மேற்காக 10 மையில் தூரம் 1000 அடி உயரமும் உள்ள இந்த மலை சுனைகளும், அரிய மூலிகைகளைகளும் நிறைந்ததாக திகழ்கிறது என்று கூட வந்தவர் சொன்னார். பெயருக்கு ஏற்றவாறு எழிலார்ந்த பசுமையான மலையடிவாரத்தில் அமைந்த அமைதியான இடம். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,நம்மாழ்வார் என்று 6 ஆழ்வார்கள் 123 பாடல்களில் பாடப் பெற்ற இடம். பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் குறிப்பு இருக்கிறது.


மகாவிஷ்ணுவிற்கு இராம, கிருஷ்ண அவர்தாரங்களுக்கு அழகர் என்னும் சொல் சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெருமாளுக்கு கூடலழகர், கள்ளழகர் என்று திருநாமங்கள் உண்டு. ஆண்டாள் - வாயழகர், குழலழகர், கொப்பூழில் எழுகமலப்பூவழகர் என்று வர்ணித்துள்ளார். அச்சோஓரழகியவர் என்கிறார் திருமங்கையாழ்வார். சோலைமலைக்கரசர் என்று திவ்வியபிரபந்தம் உற்சவர் சுந்தரராஜ பெருமாளை வர்ணிக்கிறது. இந்த கோயிலில் இருக்கும் உற்சவர் முழுவதும் தங்கத்தாலானது என்று நம்பப்படுகிறது.


நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?


என்று ஆண்டாள் பாடினாள். இதை அறிந்த ஸ்ரீ இராமனுஜர், ஆண்டாளின் விருப்பம் போல் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசலும், வெண்ணையும் சமர்பித்தார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தான் பாடியதை செயல் படுத்திய இராமனுஜரின் செயலுக்கு உகந்து “வாரும் என் அண்ணலே” என்றார். இராமனுஜர் பல நூற்றாண்டு இளையவர் என்றாலும் அவர் ஆண்டாளுக்கு அண்ணனார்.
மேலும் விரிவான விளக்கத்திற்கு இங்கே பார்க்கவும்.


ஆண்டாள் 'நூறு' என்று ஆரம்பிக்கும் பாடல் பாடியது போல் திருமங்கையாழ்வார் 'ஆயிரம்' என்று பாடியுள்ளார்.


ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிரம் யாறுகளுஞ் சுனைகள் பலவாயிரம்
ஆயிரம் பூம்பொழிலுடைய மாலிருஞ்சோலையதே


பெரியாழ்வார்


...கூர்வேல் கோனெடு
மாறன் தென்கூடற் கோன்
தென்னன் கொண்டாடிய தென்
திருமாலிருஞ்சோலையே" என்கிறார். பாண்டிய மன்னர்கள் இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.


கள்ளழகர் சித்திரை மாதத்தில் ஆற்றில் இறங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புராதன ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், சைவ ஸ்ரீவைஷ்ணவ பேதம் நீங்கி ஒற்றுமை வளர்க்க இப்படியொரு விழாவை உண்டாக்கினார்கள் என்று கருதலாம்.


[%image(20051206-small_azhagar_kovil_mantapa.jpg|200|150|அழக்ர் கோயில் மண்டபம்)%]

கோயிலுக்கு வெளியில் பல மண்டபங்கள் பாழடைந்த நிலையிலும் அழகாக இருக்கிறது. படத்தில் உள்ள மண்டபம் என்னை மிகவும் கவர்ந்தது. என்ன மண்டபம் என்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா ?


கோயிலில் உள்ள கோபுரத்தில் பல அழகிய சிற்பங்கள் இருக்கிறது.சில சிற்பங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும். அதில் ஒரு சிற்பம் குழந்தை பிறப்பதை சித்தரிக்கிறது. கோயில் உள் மண்டபங்களில் பாண்டியர்கள், நாயக்கர்கள் கைவண்னத்தை காணலாம்.  


[%image(20051206-small_azhagar_kovil_monkeys.jpg|250|188|குரங்குகள்)%]

இந்த கோயிலில் பெரிய வடை போன்ற ஒன்று பிரசாதமாக விற்கிறார்கள். வாங்கி பிழிந்தால் அரை லிட்டர் எண்ணை இலவசம். நிச்சயமாக G-for-H கிடையாது. இந்த கோயிலின் மற்றொரு விசேஷம் குரங்குகள். திரும்பிய இடத்தில் எல்லாம் பார்க்கலாம். காமிரா எடுத்துச் சென்றால் கவனமாக இருக்க வேண்டும், இல்லை குரங்குகள் பிடிங்கி உங்களை படம்பிடிக்கும். நீங்கள் கார் அல்லது வேனில் சென்றால், கோயிலுக்கு போகும் போது அதில் யாரையாவது விட்டுசெல்ல வேண்டும். பல குரங்குகள் ஸ்கூரு டிரைவருடன்(screw driver) அலைகிறது.


 


கள்ளழகருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு திருமோகூருக்கு கிளம்பினோம்.


நாமடைந்தால் நல்வரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிக் சென்றடந்தால்
காமரூபங் கொண்டு எழுத்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்றென்னுமின் ஏத்துமின் நமர்காள்


என்று நம்மாழ்வார் பாடபெற்ற இத்தலம் மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் யாணை மலைக்கு பக்கத்தில் உள்ளது. திருமங்கையாழ்வாரும் இந்த இடத்தை பாடியுள்ளார். மிகவும் அழகான, அமைதியான கிராமத்தில் நெல் வயல்களுடே காணப்படும் இத்தலம் எல்லோரையும் மோகிக்கும் என்பதுல் ஐயமில்லை.
அகம்(251) பாடலில் இந்த ஊர்பற்றி சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியுள்ளார்.


... வேல் கொடித்
துனைக்காலன்ன புனைதேர் கோசர்
தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர்


நந்தர்கள் மீது வெற்றி கொண்ட மெளரியர்கள் படையெடுப்பவர்களாக விளங்கி பெரியதோர் பேரரசை நிறுவினர். படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர். பொதியமலைவரை சென்றனர் என்கிறது பாடல்.
இந்த கோயில் பக்கத்தில் அழகிய குளத்தில் சைகிள், வண்டிகளை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


[%image(20051206-small_thirumookur_leaves.jpg|250|188|முடிச்சு போட்ட தென்னை ஓலை)%]

மூலவர் காளமேகப் பெருமாள்(நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன் கருணை மழைபொழிவதால்) நின்ற திருக்கோலம். உற்சவர் பெயர் ஆப்தன். இங்குள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதி சிறப்புடையது. கோயிலில் தென்னை ஓலைகளை முடிச்சுப்போட்டிருக்கிறார்கள். ஒரு அறிவிப்பு முடிச்சு போட கூடாது என்று இருக்கிறது!. இங்கேயும் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. நிச்சயம் ராமர் கோயிலாக இருந்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். அருகில் அனுமார் சந்நதி இருக்கிறது.


அடுத்ததாக கூடல் அழகர் கோயிலுக்கு சென்றோம்.


 


[%image(20051207-koodal_periyazhavar.jpg|250|165|கூடலழகர் கோவில் - பல்லாண்டு விளக்கப்படம்)%]

பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததை சுருக்கமாக கீழே தந்துள்ளேன்.
'வல்லபதேவன்' என்ற அரசன் மதுரையை தலைநகராக கொண்ட பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஒரு நாள் இரவில் அவன் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி யாரென்று விசாரித்தான். அதற்கு அவன் 'நான் திவ்யதேச யாத்திரை செய்து விட்டு வடநாடெங்கிலும் சுற்றி, கங்கை நீராடி வரும் அந்தணர்' என்றான். அதுகேட்ட அரசன் அவனிடம் 'உனக்கு தெரிந்த நீதி ஒன்றைச் சொல்லு' என்றான். அந்தணனும், 'மழைக்காலத்துக்கு வேண்டியதை வெயில் காலத்திலும், இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக' என்னும் பொருளுடைய சுலோகத்தைச் சொன்னார். இது வல்லபதேவனின் சிந்தனையை கிளறியது. கடைசியக சொன்ன மறுமையை பற்றிய கருத்துக்கு 'அதன் பொருட்டு இதுவரையிலும் நாம் என்ன முயற்சி செய்தோம்?' என்று இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தான். மறுநாள் அரசவையில் உள்ள தன் குரு செல்வநம்பியை அழைத்து 'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்னவழி?' என்று வினவினான். உடனே நாடெங்கிலும் உள்ள அறிஞர்களைக் கூட்டி 'பரதத்துவநிர்ணயம்' ( பரம்பொருள் பற்றிய முடிவு ) செய்தால் இவ்வினாவுக்கு எளிதில் விடை கிடைக்கும் என்று யோசனை தந்தார் செல்லநம்பி. அவரது அறிவுரையை ஏற்ற பாண்டியனும் பரதத்துவ நிர்ணயம் செய்வார்க்கு பொற்கிழியளிப்பதாக பறைசாற்றிடச் செய்தான். விஷ்ணுசித்தர் 'மால்நெறியே மேல் ஒருநெறியும் இல்லா மெய்ந்நெறி' என்றும் அந்நெறியில் நிற்பவரே வீடுபேற்றிற்கு உரியவர் என்றும் ஸ்ரீமந்நாராயணனே பிரபஞ்ச காரணமான பரமாத்மாவென்றும் அவனை சரணடைவதே சகல விருப்பங்களையும் அடையும் உபாயம் என்றும் அவனே அறுமுதலான உறுதிப்பொருள்களை அளிக்கவல்லவன் என்று பரதத்துவத்தை பாண்டியன் சபையில் நிலைநாட்டினார். அப்போது கம்பத்தில் கட்டப்படிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லபதேவன் மகிழ்ந்து 'பட்டபிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரசெய்தான். இந்த காட்சியை பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து விஷ்ணுசித்தருக்கு காட்சி தந்தார். அதை கண்ட பெரியாழ்வார் உன் அழகுக்கு கண்பட்டுவிடாதோ என்று நினைத்து எம்பெருமானை பல்லாண்டு வாழ்க என்று பாடிய இடம் இந்த திருக்கூடல்.


[%image(20051206-small_koodal_azhagar_vimana.jpg|250|271|)%]

மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும், இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் என்றும், அதே போல் 'கிருதமாலா' என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரையை அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று. இந்த கோயிலில் இருக்கும் அஷ்டாங்க விமானம் ( அஷ்ட அங்கம் ) மூன்று தளங்களும் ஐந்து சிகரங்களும் கொண்டு மிக அழகாக இருக்கிறது. மேல் தளத்திற்கு சென்று அங்குள்ள பெருமாளை பார்த்தோம். இதே போல் திருக்கோட்டியூரிலும் பார்த்திருக்கிறேன்.


மதுரை பேருந்து நிலையத்தில் மதுரை மல்லி அழகாக தொடுக்கப்பட்டு 100 பூ ஐந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். மதுரையில் தாவணி போட்ட பெண்களை பார்க்கமுடிகிறது. மதுரை பேருந்து நிலையமே தாவணி போட்டிருக்கிறது -  மாட்டுத்தாவணி.


திருமாலிருஞ்சோலை ( படங்கள்)
திருமோகூர் ( படங்கள்)
திருகூடல் ( படங்கள்)


சிலபடங்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி.

Thursday, November 24, 2005

பூக்குட்டி !

[%image(20051124-pookutti_cover.jpg|407|300|பூக்குட்டி அட்டைபடம்)%]


அக்டோபர் மாதம் கற்றது பெற்றதுமில் சுஜாதா எழுதியது. ... 


'தமிழில் குழந்தைகளுக்காக ஆங்கிலப் புத்தகங்களின் வடிவமைப்புத் தரத்தில் புத்தகங்கள் இல்லை' என்று குறை சொல்வதைப் பலரிடம் அடிக்கடி கேட்டபின், குழந்தைகளுக்காக அவ்வகையில் ஒரு புத்தகம் நானே சொந்தமாகப் போடு வது என்று தீர்மானித்தேன்.


சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு கொண்டாடினார்களே... அப்போது 'பூக்குட்டி' என்ற தொடர்கதை விகடனில் வந்தது. அதற்கு மணியம் செல்வன் அழகழகான சித்திரங்கள் வரைந்திருந்தார்.


ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குழந்தையை விட்டு டைட்டில் எழுதச் சொல்லி, அந்தக் குழந்தையின் பெயரையும் போட்டு, அட்டகாசமாக வெளியிட்டார்கள். பிறகு, அது புத்தக வடிவிலும் வந்தது. ஆனால், உலகத் தரத்தில் அல்ல!


தற்போது புத்தக வடிவமைப்பிலும் அச்சு நேர்த்தியிலும் காகிதத் தரத்திலும் தமிழகத்தில் மேல்நாட்டுத் தரத்தை எட்டிவிட்டார்கள். பதிப்புத் திறமைகள் பன்மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், 'லேடி பேர்ட்' புத்தகங்களைப் போல ஒல்லியாக, கெட்டி அட்டையுடன், நல்ல காகிதத்தில் பெரிதாக அச்சிட்டு, 'பூக்குட்டி'யைச் சற்று சுருக்கி, எளிமைப்படுத்தி வெளியிடத் தீர்மானித்தேன். மணியம் செல்வனைக் கேட்டதில், நல்லவேளை... அவர் தன் பழைய சித்திரங்களைப் பத்திரமாக வைத்திருந்தார்.


விமமு வேலாயி, நாய்க்குட்டி, பூக்குட்டி மூவரும் மறுபடி பளிச்சென்று இம்மாதம் வெளிவருகிறார்கள். இதற்காக என் கைக்காசை செலவழிப்பதில் எனக்குத் தயக்கமே இல்லை... சந்தோஷம்தான்!


'பூக்குட்டி பதிப்பக'த்தில் மேலும் சில புத்தகங்கள்... பறவைகள், மிருகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், குட்டிக் கதைகள், பக்கத்துக்குப் பக்கம் சித்திரம், பெரிய எழுத்து, எளிய நடையில் கொண்டு வர ஆசை.


நேற்று சுஜாதா அவர்களிடம் பேசிய போது, புத்தகம் அடுத்த வாரம் வந்துவிடும் என்று சொன்னார். புத்தகம் வாங்க விரும்புவோர் எனக்கு [ desikann@gmail.com ] ஒரு தனிமடலில் உங்கள் பெயர், விலாசம் ஆகியவற்றை அனுப்பலாம்.


என் வலைப்பதிவின் மூலம் புத்தகம் வாங்குவோருக்கு சுஜாதா அவர்கள் கையெழுத்திட்ட புத்தகம் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன். ( விலை 90/= )
[ குழந்தைகள் இருந்தால் அவர்களின் பெயரையும் தெரிவியுங்கள், அவர்கள் பெயர் போட்டு கையெழுத்திட்டு வாங்கி தர முயற்ச்சிக்கிறேன்]


பின்னட்டையில்...


  குழந்தைகளுக்காக தமிழில் தரமான அழகான புத்தகங்கள் இல்லையே என்ற குறையை நீக்க இந்தப் புத்தகம் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உன்னதமாக அமைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் குழந்தைகளுக்கு சுலபமாக படித்துக் காட்டவும் தமிழ் கற்றுத் தரவும் உதவக்கூடிய கதைப் புத்தகம் இது.  
சுஜாதா குழந்தைகளுக்காக எழுதிய கதை. சிறுமிகள் விம்மு, வேலாயி, அவர்கள் நாய் பூக்குட்டி மூணு பேருக்கும் என்ன நிகழ்கிறது என்பதை கலர் கலராக சொல்லும் கதை.


[ Update 9th Feb 2006 ]


புத்தகங்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு Anyindian.com வழியக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.  கேள்விகள்/மேல் விபரங்களுக்கு customerservice [at] anyindian.com க்கு தொடர்பு கொள்ளுங்கள். புத்தகம் வாங்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்


இதை பற்றி பி.கே.சிவகுமார் பதிவு

Tuesday, November 22, 2005

நவதிருப்பதி

கடந்த வாரம் திருநெல்வேலி, மதுரையை சுற்றியுள்ள பாண்டிய நாட்டு திவ்வியதேசங்களுக்கு சென்றிருந்தேன். முதல் நாள் திருநெல்வேலியில் நவ திருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது திவ்வியதேசங்கள், மறு நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்வியதேசங்கள் என மொத்தம் பன்னிரெண்டு. சனிக்கிழமை மதுரையிலிருந்து புறப்பட்டு போகும் வழியில் திருநெல்வேலி 146 கீமீ என்ற போர்டை பார்த்த போது காலை மணி 11:30; கயத்தாறு என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம். இந்த இடத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட்டதாக சொல்கிறார்கள். இப்போது இந்த இடத்தில் ஏர்டெல் டவர் இருக்கிறது. திருநெல்வேலி வருவதற்குள் அதை பற்றிய ஒரு சிறு குறிப்பு...
மதுரைக்கு முன் பாண்டியர்களுக்கு தலைநகராக திருநெல்வேலி இருந்திருக்கிறது. ஊர் சுற்றிவர நெல் பயிர்கள் வேலி போல சூழ்ந்திருந்த காரணத்தினால் திருநெல்வேலி என்ற பெயர் பெற்றது. தாமிரபரணிக்கு மேற்கு பக்கத்தில் திருநெல்வேலியும் கிழக்கு பக்க்கத்தில் பாளயங்கோட்டையும் அமைந்துள்ளது. கிபி 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர்கள் இந்த ஊரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 1560 ஆம் ஆண்டு விஸ்வநாத நாயக்கர், பல கோயில்களை கட்டியுள்ளார். மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு போகும் வழியெல்லாம் பசுமை - இருபக்கமும் வாழை பயிர்கள். கொய்யா மரங்கள், (கொய்யாவை சுற்றி அணில் கடிக்காமல் இருக்க பிளாஸ்டிக் பை கவசம்), ஜெயலலிதா கொடுத்த இலவச சைக்கிளில் மாணவிகள் ஸ்கூலுக்கு செல்வதை கடந்து சென்ற போது முதல் கோயிலை அடைந்தோம் - திருவரகுணமங்கை

திருவரகுணமங்கை கோயில் வந்தவுடன் வேனிலிருந்து ஒரே ஓட்டமாய் ஓடி கோயிலுக்குள் சென்றோம் காரணம் பலத்த மழை. திருவரகுணமங்கை என்ற கோயில் நத்தத்தில் இருக்கிறது. திருவரகுணமங்கை என்றால் யாருக்கும் தெரியாது, நத்தம் என்று சொன்னால் தான் அடையாளம் காண்பிப்பார்கள். மூலவர் விஜயாஸனப் பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க வீற்றிருந்த திருக்கோலம். புளிங்குடி கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்றுதெளிந்த சிந்தை அகங்கழியாதேஎன்னையாள்வாய் எனக்கருளி...

 
என்று நம்மாழ்வார் திருவாய்மொழில் (9-2-4, 3571) மங்களாசாசனம் செய்துள்ளார்.இந்த கோயிலை முடித்துவிட்டு திருபுளிங்குடி சென்றோம். "நிலமகளும் மலர்மகளும் வருடும் நின் மெல்லடியை இந்தக் கொடியவினை செய்த பாவியேனும் பிடிக்க வேண்டுமென்று கூவுகிறேன். அந்தோ நீ வராதிருக்கின்றாயே" என்று நம்மாழ்வாரால் திருவாய்மொழில் (9-2-10, 3577) பாடப்பெற்ற இத்தலம் திருவரகுணமங்கையிலிருந்து 1 கிமி தூரத்தில் இருக்கிறது. சயனத்திருக்கோலத்தில் காய்சினவேந்தன். திருவயிற்றிலுருந்து தாமரைக்கொடி தனியாக கிளம்பிச் சென்று சுவற்றிலுள்ள பிரம்மாவின் தாமரைமலருடன் சேர்ந்து கொள்வதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கோயிலின் தனி சிறப்பு. வெளி பிரகாரத்தில் உள்ள ஒரு ஜன்னல் வழியாக உற்று பார்த்தால் காய்சினவேந்தனின் பாதங்களை தரிசிக்கலாம். ராமானுஜர் இவ்வூருக்கு வந்து பெருமாளை சேவித்துவிட்டு வெளிப்புரத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்த அர்ச்சகர் மகளைக் கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அந்த பெண் "முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளர்..." என்று நம்மாழ்வார் பாசுரத்தை சுட்டிக்காட்டி "நம்மாழ்வார் பெருமாளை கூப்பிடும் தூரத்தில் இருக்கு" என்று கூறியது இந்த கோயிலில் தான்.மழை நின்றுவிட்டது. இரட்டை திருப்பதி என்று அழைக்கப்படும் திருதொலைவில்லிமங்கலம் என்ற இடத்திற்கு கிளம்பினோம். இங்கு இரண்டு கோயில்கள் சேர்ந்தே ஒரு திவ்வியதேசமாக கருதப்படுகிறது. முதல் கோயில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது. தேவபிரான் என்ற ஸ்ரீநிவாசன் நின்ற திருக்கோலம். இரண்டாவது கோயில் வாய்க்கால் கரையிலேயே உள்ளது. மூலவர் அரவிந்தலோசனன் என்னும் செந்தாமரைக்கண்னன், வீற்றிருந்த திருக்கோலம். இந்த கோயிலகள் இருக்கும் இடத்தில் அவ்வளவாக வீடுகள் கிடையாது. இந்த கோயில்கள் இருக்கும் இடம் முன்பு ஒரு யாகசாலையாக இருந்தது என்றும் அதனால் இந்த கோயில்களில் துவாரபாலகர்கள் கிடையாது என்று அர்ச்சகர் சொன்னார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார் ( திருவாய்மொழி 6-5-1(3271), 6-5-8( 3278 ) )இந்த கோயிலை சுற்றி உள்ள நந்தவனத்தில் முல்லை, மகிழம்பூ, விருச்சி போன்ற பூக்கள் அழகாக வளர்ந்திருப்பதை காணலாம். (உபயம் TVS). இந்த கோயில் அருகே உள்ள குப்பை தொட்டியில் "மக்கும் குப்பை" "மக்காத குப்பை" என்று தமிழில் சுற்றுபுரசூழல் பாதுகாக்கப்படுகிறது. நகரத்தில் இருக்கும் நாம்தான் அலட்சியப்படுத்திகிறேம். ( பார்க்க படம் )அடுத்ததாக நம்மாழ்வார் திருவாய்மொழியில் (8-2-4, 3561) பாடப்பெற்ற ஸ்தலமாகிய திருக்குளந்தை என்ற இடத்திற்கு சென்றோம். திருக்குளந்தை என்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் பெருமாள் கோயில் என்று கேட்டால் வழி சொல்கிறார்கள். சோரனானன் மீது நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமாளுக்கு சோரநாதன் என்ற திருநாமம் வந்தது ( சோர நாட்டியன் ). தூய தமிழில் மாயக் கூத்தன். இங்கு இருக்கும் யானைக்கு வாழைப்பழம் கொடுத்து அதை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம். சிரித்து போஸ் கொடுத்தது. ( பார்க்க படம் )மகர நெடுங்குழை நாதன் இருக்கும் இடமான தென் திருப்பேரைக்கு அடுத்ததாக சென்றோம். நம்மாழ்வாரால் 11 பாசுரங்களில் பாடப் பெற்ற ஸ்தலம் இது ( திருவாய்மொழி 7-2 3359-69 ). நிகரில் முகில் வண்ணன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. ஸ்ரீரங்கநாதனின் அழகை முகில் வண்ணன்(அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார், இப்பெருமாளை நிகரில் முகில் வண்ணன் (அரங்கநாதனின் நிகராக அழகுடையவன் ) என்று பாடியுள்ளார். ( மகர நெடுங்குழை நாதன் என்றால் என்ன என்று ஆராய்ந்ததில் மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன் என்று பொருள் ). இந்த கோயிலில் கவிபிச்சு ஐய்யங்கார் எழுதிய ஒரு கவிதை சுவற்றில் தேர் வடிவில் எழுதியிருக்கிறார்கள். என்ன என்று புரியவில்லை. யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். திருச்சிக்கு பக்கத்தில் திருப்பேர் நகர் என்ற திவ்வியதேசம் இருப்பதால், இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைக்கிறார்கள்.தென் திருப்பேரையிலிருந்து ஆழ்வார் திருநகரி போகும் வழியில் ஒரு கிளைப் பாதையில் 2 கீமீ சென்று மதுரகவியாழ்வார் பிறந்த இடமான திருக்கோளூர் வந்தடைந்தோம்.

"வைத்தமாநிதியாம் மது சூதனனையே யல்ற்றிகொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன என்று நம்மாழ்வார் 12 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இதில் இருக்கும் பெருமாள் பெயர் வைத்தமாநிதிப் பெருமாள். சயனத்திருக்கோலம். குபேரனின் தொலைந்த செல்வத்தை பாத்துகாத்து அளந்ததால் தலைக்கு மரக்கால் வைத்து படுத்துள்ளார் என்று கூறுவர். தொலைந்த செல்வத்தை கையில் மை தடவி எங்குள்ளது என்று பார்ப்பது போல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இழந்த செல்வத்தை பெற இப்பெருமாளை வழிபட்டால் இயலும் என்ற நம்பிக்கை உண்டு. மரக்கால் வைத்து பெருமாள் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்விய தேசமான திரு ஆதனூரில் மட்டுமே இருக்கிறது

திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு சென்ற போது சாய்ந்திரம் ஆகிவிட்டது. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமானதால் ஆழ்வார் திருநகரி என்று பெயர் பெற்றது. சடகோப அந்தாதியில் ( கம்பர் எழுதியது என்று நம்பப்படுகிறது) குருகூர் என்றே எடுத்தாண்டுள்ளார். திருவழுதி வள நாட்டை குருகன் என்ற அரசன் ஆண்டமையால் அவன் நினைவாக குருகபுரி ஆயிற்றென்றும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு. குருகு என்ற தமிழ் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. 


 இங்குள்ள மூலவர் ஆதிப்பிரானின் கால்கள் பூமியுள் இருப்பதாக ஐதீகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை எழுத நினைத்த நாதமுனிகள், மதுரகவி ஆழ்வாருடைய "கண்ணி நுண் சிறுத்தாம்பு" என்ற பத்து பாடலை பல்லாயிரம் முறை சேவித்தவுடன் நம்மாழ்வாரே நேரில் வந்து அருள நாதமுனி அவற்றை எழுதினார் என்று கூறப்படுகிறது. நம்மாழ்வார் மூலவர் வடிவம் தாமிரபரணி நீரை காய்ச்சி அதில் மதுரகவி ஆழ்வார் தன் சக்திகளை அளித்து உருவாக்கிய சிற்பம் என்று நம்பப்படுகிறது. சின்ன வயசில் என் அப்பாவுடன் இந்த கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இது இரண்டாவது முறை. இந்த கோயிலில் இருக்கும் புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் வீற்றிருந்தார் பின் மதுரகவி ஆழ்வார் காசியிலிருந்து திரும்பி வந்துக்கொண்டிருந்த போது வானத்தில் ஒரு ஒளி தெரிவதை கண்டு அதை நோக்கி நடந்து குருகூர் வந்ததும் ஒளி மறைந்துவிட்டது. ஊரில் ஏதாவது விசேஷம் என்று கேட்டார். அதற்கு ஊர்கார்கள் இந்த ஊர் புளிய மரத்தில் சிலகாலமாக ஒரு குழந்தை அன்ன ஆகாரமின்றி ஒரு புளிய மரத்தின் பொந்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று சொன்னார்கள். புளியமரத்தின் பொந்தில் இருந்த யோக நிலையில் இருந்த குழந்தையிடம் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?"

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று நம்மாழ்வார் கூறியவுடன், மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடனானார் என்கிறது குருபரம்பரை

இங்குள்ள புளிய மரம் 'உறங்கா புளி' என்றழைக்கப்படுகிறது. இந்த புளிய மரம் பூக்கும் ஆனால் காய்க்காது, மற்ற புளிய மரத்தை போல் இரவில் மூடிக் கொள்வதில்லை ( நான் சென்றபோது இதை கண்கூடாக பார்த்தேன் ). அங்குள்ள அர்ச்சகரிடம் ஒரு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி புளிய மரத்தின் அமைந்திருக்கும் வேலிக்குள் சென்று அதன் கிளைகளையும் அடிபாகத்தையும் தொட்டுபார்த்தேன். ஏதோ பல நூற்றாண்டுகள் பின்நோக்கி சென்ற ஒரு அனுபவம். பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பதுடன் இங்கே வந்துவிடலாம் என்று எண்ணினேன். 


கடைசியாக ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்த போது மத்தியானம் பெய்த மழையால் கோவில் முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே சென்றபோது கோஷ்டி பிரபந்தத்தை சேவித்துக்கொண்டிருந்தார்கள். கோஷ்டி முடிந்த பின் அரவணை பிரசாதம், கொடுத்தார்கள். மற்ற எல்லா கோயில்களிலும் பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிக்கொண்டிருப்பார் அனால் இந்த கோயிலில் இருக்கும் வைகுண்ட நாதன் நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்கும் வண்ணத்தில் இருக்கிறார். இங்கு உள்ள பெருமாள் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி செல்லமாக கன்னத்தில் கிள்ளி விட்டார், அந்த வடுவை எம்பெருமான் கன்னத்தில் இன்றும் காணலாம். ஸ்ரீவைகுண்டம் மண்டபங்களில் இருக்கும் சிற்பங்கள் மிக அழகானவை. நாயக்கர், பாண்டியர்களின் கை வண்ணத்தை அதில் காணலாம். திருவேங்கடமுடையான் சன்னிதியில் ராமர், ஹனுமார் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ராமர் ஹனுமார் தோள் மேல் கை போட்டுக்கொண்டிருக்கும் சிற்பத்தை பாருங்கள் - எவ்வளவு அழகு.


வைகுண்ட நாதனை சேவித்துவிட்டு புறப்பட்ட போது மாலை 8:30.மதுரை வந்து சேர்ந்த போதுதான் என் நண்பர் திருநெல்வேலி அல்வா வாங்கி வரச் சொன்னது நினைவிற்கு வந்தது. அவருக்கு நிஜமாகவே அல்வா தான்.பிகு: என்னுடன் நவ திருப்பதி சுற்றி பார்க்க முடியாதவர்களுக்கு இணையத்தில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளேன். கீழ் காணும் சுட்டியில் கிளிக் செய்து பாருங்கள்.நவ திருப்பதி செல்லும் வழி


அதில் ஒவ்வொரு கோயிலின் மேலும் கிளிக் செய்து கோவிலை சுற்றி பார்த்து, பெருமாளையும் சேவிக்கலாம்.


[ சில படங்கள் www.navathirupathi.org என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது ]


[ Update ]
நண்பர் திருமலை ராஜன் அவர்கள் ரத கவிதைக்கு மரத்தடியில் எழுதியிருக்கும் விளக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.


கோவிலில் வரையப்பட்ட ரத பந்தனத்தை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வரிசைப்படி படித்து, பின் தேரின் உச்சியில் இருந்து நடுவரி கீழ் நோக்கிப் படித்தால் பின்வரும் கவிதை கிடைக்கிறது.இணையொத்து வாழ்வோர்க் கிடரைத் தவிர்க்கும்
பணைகாண் சீர்செல்வம் பாலிக்குங் குணமீந்த
வாதழைக்கு மெல்லோர்க்கும் ஆந்தனமிப் பார்
வாழ் சுவாமி குழைக்காதர் துணை


இந்தக் கவிதை தமிழறிஞரும் வைணைவ இலக்கியங்களை நூல் வடிவில் கொணர்ந்தவரும், கம்பன் புகழ் பரப்பியவருமான பி.ஸ்ரீச்சாரியார் அவர்களின் தந்தை பிச்சுவையங்கார் அவர்களால் இயற்றப்பட்டுள்ளது.

Tuesday, November 8, 2005

தி கிரேட் எஸ்கேப்

"ஐயோ!. இது என்ன சத்தம் ?"


ஏதோ உடைந்தது போல்... கடவுளே... மழையா ? வெள்ளமா? சுனாமியா ? இவ்வளவு வேகமான நீரோட்டமாக இருக்கிறதே.. வானிலை அறிக்கையில் கூட ஒன்றும் சொல்லவில்லையே...? எங்கு பார்த்தாலும் தண்ணீர். இந்த சின்ன இடத்தில்... மாட்டிக்கொண்டுவிட்டேனே...முழுகிவிடுவேனா ? கடல் அலை போல் மேலும் கீழுமாக... 'பளக்' ...'பளக்'... வாய்க்குள் தண்ணீர்... இந்த சத்தம்... இவ்வளவு நாள் வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம் என்று அமைதியாக சிக்கிகொண்ட உணர்வே இல்லாமல்....  இன்று ஏன் எனக்கு இந்த சோதனை ? இப்படி குலுக்கிபோடுகிறதே..இந்த சுவற்றில் இடித்து இடித்து தூள் தூளாகிவிடுவேனா ?  கடவுளே... அட என்னது இது ஒரு சின்ன சுரங்க பாதையா ? கடவுள் அதற்குள் என் பிராத்தனைக்கு கண்ணை திறந்துவிட்டாரா ? ஆச்சரியமாக இருக்கிறதே!


இந்த தண்ணீர் தான் இதை திறந்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் எனக்கு இது கண்ணில் படவில்லையே...ஏதோ ஒன்று வெளியே போனால் போதும். இவ்வளவு சின்ன வழியில் போகமுடியுமா? இதன் வழியாக வெளியே வந்தால் உயிருடன் இருப்பேனா ?எனக்கு இதை தவிற வேறு வழியில்லை. கூனிக்குறுகி ஒரு சரியான நிலையில் போனால் முடியும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.


முதலில் தலையை நுழைக்கவேண்டும், பின் தோள்கள், அப்புறம்  ஈஸியா வெளியே வரலாம் என்று நினைக்கிறேன். டிரை பண்ணுகிறேன். முதலில் தலை.. இன்ச், இன்சாக வெளியே போகவேண்டும். வெளியே என்ன இருக்கும் என்று தெரியாது...பயமாக இருக்கிறது. என்னதான் ஆகிறது என்று பார்க்கலாம். "Always there is light at the end of the tunnel" என்று சொல்கிறார்களே, இருக்கிறதா என்று பார்க்கலாம். "Dead End"டாக இருக்குமோ? சே சே அப்படியெல்லாம் யோசிக்காதே. நம்பிக்கைதான் வாழ்க்கை. இப்போ யோசிச்சு ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. இந்த குறுகலான பாதையில் திரும்பிக்கூட போக முடியாது. கவலைப்படாமல் முன்னே செல்ல வேண்டும். கடவுள் தான் என்னை காப்பாத்த வேண்டும். அட்லீஸ்ட் தண்ணீர் வெள்ளம் குறைந்துவிட்டது. சுரங்க பாதை வழியாக கசிந்துவிட்டதா? அப்பா, முழுகிவிடுவேன் என்று பயப்பட தேவையில்லை.


சுரங்க பாதையில் யாரோ என்னை பின் பக்கமாக தள்ளுகிறார்கள் யாரது ? திரும்பிக் கூட பார்க்க முடியாவில்லை. ஒத்தையடிப் பாதை போல் இருக்கிறது. சைடில் இடமிருந்தால் அவனை முன்னே போகச் சொல்லாம். ரொம்ப தள்ளுகிறான். அவன் அவசரம் அவனுக்கு. சுயநலம் என்பது எல்லோருக்கும் இருப்பது தானே!.  பின்னாலிருந்து அவன் தள்ளிக்கொண்டிருக்கிறான். நான் மெதுவாக முன்னே போய்க்கொண்டிருக்கிறேன். ஒரே இருட்டாக இருக்கிறது.


எதாவது எசகுபிசகாக நடந்தால்?... அவ்வளவு தான்.  "எங்கே செல்லும் இந்த பாதை.. ? " என்று பாடிக்கொண்டே முன்னே போக வேண்டியது தானா ?


பாதை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தலையை அசைக்க கூட முடியவில்லை. கரும்பு ஜூஸ் மிஷினில் சிக்கிகொண்டது போல் இருக்கிறது. ஆழமாக செல்ல செல்ல... எனக்கு கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிற வேறு வழியில்லை. எப்போ சுரங்கத்தின் மறு முனையை அடைவேன் ? மறுமுனை என்று ஒன்று இருக்கிறதா ?


"அட!, என்னது அது ? நான் காண்பது கனவா ? இருக்காது. கொஞ்சம் மங்கலாக வெளிச்சம் தெரிகிறதே!. பாதையும் கொஞ்சம் அகலமாக இருக்கிறதே. சீக்கிரம் வெளியே போக வேண்டும். என்னிடம் இருக்கும் எல்லா சக்தியையும் உபயோகிக்க வேண்டும். முன்னே செல்! எதை பற்றியும் கவலைபடாதே!.  ம்..ம்..ம்.. இன்னும் கொஞ்ச தூரம் தான். பின்னாடி இருப்பவன் தள்ளுகிறான். தள்ளு தள்ளு இன்னும் வேகமாக தள்ளு. ஆ.. வந்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தான், என் முழு உடலும் வெளியே வர வேண்டும். ம்...ம்...ம் வந்துவிட்டேனா ? இல்லை. இன்னும் கொஞ்சம் ம்...ம்... ஆ வந்துவிட்டேன்.  என்ன ஒரு போராட்டம்.. கடைசியில் விடுதலை.. அப்பாடா வெளிச்சம் தெரிகிறது. இவ்வளவு நேரம் இருட்டில் இருந்ததால் கண் கூசுகிறது. என்ன ஒரு அவஸ்தை. எனக்கு பின்னால் வந்தவனும் தப்பித்துவிட்டான்.


கூச்சல்.. சத்தம்.. பேச்சு குரல்கள்... 


"கங்கராட்ஸ்!, உங்களுக்கு டுவின்ஸ் பிறந்திருக்கு!"


[Based on an English story, of an unknown author]

Friday, November 4, 2005

ஐஸூக்கு வந்த மவுஸ்!

ஐஸூக்கு வந்த மவுஸ்! - எஸ்.வி. ராமகிருஷ்ணன்

 [%image(20051103-ice_svr1.jpg|226|150|Ice)%]

1944. ஐரோப்பாவில் மட்டுமல்லாது இந்தியாவில் இம்பால் முனையிலும் (மணிப்பூர் சமஸ்தானம் - இந்திய பர்மா எல்லை) உலக யுத்தம் உக்கிரமாக நடந்த காலம். தாராபுரத்தில் பார்க் ரோட்டில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு காம்பவுண்டுகள் தள்ளி இருந்த ஒரு பங்களாவை (காம்பவுண்டு வைத்த தனி வீடுகளை அப்படித்தான் சொன்னார்கள். தனி வீடு என்று தனியாகச் சொல்ல வேண்டியதுகூட இல்லை. ஏனெனில் திறீணீt என்ற கூடுகளை, பம்பாய் போய் வந்தவர்களைத் தவிர யாரும் பார்த்ததுகூட இல்லை) ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு இருந்தனர். அங்கே எப்போதும் சீருடை அணிந்த துருப்புகள் ஜீப்பிலும் மிலிட்டரி லாரியிலும் வருவதும் போவதுமாக இருக்கும். அவர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் தொடர்பே இருக்கவில்லை. அது ஒரு தனி உலகம்.ஒரு நாள் பார்க் ரோட்டில் ஒரு பரபரப்பு. ராணுவத்தினரின் உபயோகத்துக்காக வந்த ஐஸ் கட்டிகள் உபரியாக இருந் திருக்க வேண்டும். பாறை போன்ற ஒரு பெரிய ஐஸ் கட்டியை அவர்கள் வீட்டுக்கு வெளியே சாலையில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எல்லோரும் காணாதது கண்ட மாதிரி அதை வெட்டி எடுத்துக் கட்டிகளை வீட்டுக்குக் கொண்டுசென்றனர். எங்கள் வீட்டு சமையற்காரர் அப்பா துரையும் தன் பங்குக்கு ஒரு கட்டியைக் கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் ஐஸ் சர்பத் பண்ணிக் கொடுத்தார். ஆம். அன்று ஐஸ் என்பது ஒரு அபூர்வமான பொருள். ஃபிரிட்ஜ் என்பது (முனிசிபல் நகரமான) தாராபுரத்தில் யார் வீட்டிலும் இல்லாத காலம். வியாபார ரீதியில் பனிக்கட்டிகள் விற்கப்பட வில்லை. வெள்ளைக்காரர்களுக்கு ஐஸ் ஒரு அத்தியாவசிய மான பொருள். ஆதி நாட்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் பாளம் பாளமாக இறக்குமதி செய்து ஐஸ் ஹவுஸில் (இன்றைய விவேகானந்தா ஹவுஸ்) வைத்திருப்பார்களாம். அங்கிருந்து உஷ்ணம் ஏறாமல் பாதுகாப்பாக மரத்தூள் சுற்றி பல ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும். ரயில்வேயிலேயே முதல் வகுப்புகளில் (அன்றைய முதல் வகுப்பு ஒரு ‘சூப்பர் கிளாஸ்’ என்று சொல்லலாம். ஆங்கிலேயர் போன பின்னர் பிரயாணிகளே  இல்லை என்று நீக்கப்பட்டது) உபயோகத்துக் காகவும் ஜில்லாத் தலைநகரங்களில் இருந்த இங்கிலீஷ் கிளப்புகளில் துரைகளின் குடி உபயோகத்துக்காகவும் சென்றது.
நான் சொல்லும் காலத்தில் இறக்குமதிக்கெல்லாம் அவசி யம் இருக்கவில்லை. ஐஸ் உற்பத்தி செய்யும் ரெப்ரெஜிரேஷன் சாதனம் வந்துவிட்டது. ஆனால் மக்களின் பரவலான உபயோகத்துக்கு ஏற்ற மாதிரியல்ல. கடைவீதியில் போய் ஐஸ் கட்டி வாங்க முடியாது. அதனால் ஐஸ் என்றால் சிறுவர்களுக்கு அத்தனை ‘எக்சைட்மெண்ட்.’ ஒரு கட்டி கிடைத்தால் ஆசையோடு கடித்துச் சாப்பிடுவார்கள். “பல் போயிடுண்டா” என்று கூடவே பெரியவர்கள் கத்திக்கொண்டிருப்பது அவர்களின் காதிலேயே ஏறாது.
அவர்களின் ஆசை நிறைவேறும் காலமும் சீக்கிரமே வந்தது. 1945 ஆகஸ்டில் உலக யுத்தம் முடிந்துபோயிற்று. அடுத்த ஒரு வருடத்தில் ராணுவ உபயோகத்துக்காக வர வழைத்து வைத்திருந்த சாதனங்கள் பொது உபயோகத்துக்காக வியாபாரத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆக, சுதந்திரம் வருவதற்குச் சற்று முன்பே எங்கள் பள்ளிக்கூட வாசலில் ‘குச்சி ஐஸ்’ என்ற புதிய வஸ்து தோன்றியது. அதுவரை மிட்டாய், சாக்லேட், பர்பி, கொய்யாப் பழம், இலந்தை, வடாம் முதலியவைதான் பள்ளிச் சிறுவர்களின் வேட்டை. இப்போது போட்டியாகக் குச்சி ஐஸ் முளைத்தது. மதிய உணவு இடை வேளையில் இந்தப் புதுமையைச் சுற்றி நாங்கள் கூட்டம் போடுவோம். ஆளுக்கு அரையணா வாங்கிக்கொண்டு (அதாவது முதலில் ஆர்டர்கள் எடுத்துக்கொண்ட பின்னர்) ஐஸ்காரன் ராஜா தன் அதிசய வஸ்துவை உண்டுபண்ணுவான். ஈரத் துணியில் சுற்றி வைத்திருந்த ஒரு பெரிய ஐஸ் கட்டியை எடுத்து தேங்காய், மாங்காய் மாதிரி துருவுவான். ஒரு கைப்பிடி அளவு துருவலை ஒரு குச்சியைச் சுற்றி பைத்துணியால் பிடித்து இறுக்குவான். ஐஸ் துருவல் எப்படியோ குச்சியைச் சுற்றி ஒட்டிக்கொண்டுவிடும். அந்த அற்புதத்தை நாங்கள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.
அடுத்தது தித்திப்பான சர்பத் எஸென்ஸை அதன் மேல் ஊற்றி எங்களுக்கு கொடுப்பான். நாங்கள் அதைச் சுவைக்கச் சுவைக்க அது உருகி எங்கள் சட்டையில் வழிந்துகொண்டே இருக்கும். இப்போதெல்லாம் ஐஸ் எந்தத் தண்ணியில் உண்டாக் கப்பட்டது, அமீபா இருக்குமா, சேர்க்கப்பட்டிருக்கும் கலர்கள் அங்கீகரிக்கப்பட்டவையா என்றெல்லாம் பெரியவர்கள் மட்டு மல்லாது சிறுவர்கள்கூட கவலைப்படக்கூடும். அன்று அதைப் பற்றியெல்லாம் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஊரில் காலரா, டைபாய்டு போன்ற விஷ ஜுரங்கள் பரவியிருந்தால் மட்டுமே எங்களை எச்சரித்தார்கள்.
குரங்காக ஆரம்பித்து மனிதனாக வளர்ச்சி பெற்றது போலவே, குச்சி ஐஸின் அடுத்த பரிமாணத் தோற்றம் தொடர்ந்தது. இதன் பெயர் ஐஸ்புரூட். இப்போது ராஜாவுக்கு பதில் ஒரு கூஜா வந்து சேர்ந்தான் (அவனுடைய பெயர் தெரிய வில்லை). ஒரு வினோதமான பெட்டி அவனிடம் இருக்கும். அதில் நிறையக் குழிகள் உண்டு. ஒவ்வொன்றிலும் எஸென்ஸ் கலந்த ஸிரப்பை ஊற்றி அதற்கு நடுவில் ஒரு குச்சியையும் செருகிவிட்டு அந்தப் பெட்டியை லொடலொடவென்று ஆட்டு வான். பெட்டிக்குள் பனிக்கட்டியையும், உப்பையும் கலந்து போட்டிருப்பான் என்று கேள்விப்பட்டேன் (அது அதிகக் குளிர்மையை விளைவிக்குமாம்). காசையும் கொடுத்துவிட்டுக் கொதிக்கும் வெய்யிலில் நாங்கள் பொறுமையாக  (சில சமயங் களில் பொறுமை இல்லாமலும்) காத்துக்கொண்டிருப்போம். கடைசியில் கோயில் கதவு திறக்கிறாப் போல, ‘ரெடி’ என்று சொல்லி ஆளுக்கு ஒன்றாக எங்களிடம் ஒன்று கொடுப்பான். நாங்கள் அனைவரும் ‘ஏழாவது சொர்க்கத்துக்கு’ போவோம்.
இன்னும் இரண்டு வருடங்களில் மெஷினில் பண்ணிய ‘ரெடிமேட்’ ஐஸ்புரூட்டுகள் வரலாயின. இவை இன்னும் கெட்டியாக அமைந்திருக்கும். அளவில் பெரியது. அதற்குத் தகுந்தாற்போல விலையும் ஓரணா. தரத்தில் இது (கையால் எங்கள் முன்னிலையில் செய்த) பழைய ஐஸ்புரூட்டை விட உயர்ந்ததுதான்.
ஆனாலும் காத்துக்கொண்டிருந்து வாங்கிச் சாப்பிட்ட (அம்மா சுடச்சுடப் பண்ணி ஒவ்வொன்றாக நம் இலையில் போடும் தோசையைப் போன்ற) ‘த்ரில்’லும் திருப்தியும் இதில் இருக்கவில்லை.


நன்றி: உயிர்மை ( நவம்பர் 2005)

Thursday, October 27, 2005

சென்னை – பெங்களூர் ரயில் நிலவரம்.

லால்பாக், சதாப்தி, சென்னை எக்ஸ்பிரஸ் - ரத்து செய்யபட்டுள்ளது.
பெங்களூர் மெயில் - ஐந்து மணி நேரம் தாமதம்.
மைசூர் சென்னை - காவேரி எக்ஸ்பிரஸ் - ரத்துதானது என்று செய்தித்தாளில் போடப்பட்டுள்ளது ஆனால் ரயிவே தகவல் மையத்தில் ரத்தாகவில்லை என்கிறார்கள்.


சென்னை - பெங்களூர் இடையே பழுதுப்பட்ட இனைப்பு இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள். சென்னை பெங்களூர் மழையை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது.


ரயில்வே தகவல் அறிய : 139
மேலும் தொலைபேசி எண்கள்: 22874670,22200971,22200972
தென்னக ரயில்வே தகவல் தளம் :
http://www.indianrail.gov.in/temp.htm
புயல் பற்றிய செயற்கைகோள் படங்கள் : http://www.imd.gov.in/section/satmet/img/sa.htm


[ Update 1 27/05/05]


[%image(20051027-chennai_rain.jpg|360|197|Chennai Rain)%]

 சென்னை மழை படம் உதவி தமிழ் முரசு


[ Update 2 27/10/05]


மேலும் சென்னை படங்கள் : தினமணியில்.


[ Update 3 - 28/10/05 11:30am ]சென்னை மழை நிலவரம் : அருள்,  நாராயணன், பத்ரி
சன் டிவி நிலவரம்: உயிர்மை 


[ Update 4 - 28/10/05 11:50am ]சென்னை - பெங்களூர் KSRTC and TNSTC பேருந்துகள் சித்தூர்-ஓசூர் வழியாக இரண்டு மணிக்கு ஒன்று என்று விடப்பட்டுள்ளது. அட்வான்ஸ் ரிசர்வேஷன் தேவையில்லை.
சென்னையில் மழை நீர் வடிய தொடங்கியுள்ளது. சென்னை - பெங்களூர் ரயில் நிலவரம் இன்னும் சரியாக தெரியவில்லை.


[ Update 5 - 28/10/05 15:30pm ] ஸ்பெஷல் ரயில் தகவல் நம்பர்: 22876288 - நான் விசாரித்துவிட்டேன். நன்றாக தகவல் சொல்கிறார்கள்.


KPN பஸ் தொலைபேசி எண்கள்: 26709911, 26702777, 26700111 ( ஒரு பெங்களூர் - சென்னை டிக்கேட் 600/= என்கிறார்கள் )


[ Update 5 - 28/10/05 17:00pm ]  பெங்களூர் - சென்னை ரயில்கள் எல்லாம் ஓடும் என்கிறது !
http://www.srailway.com/arr_dept/press/pr.asp?sl=253 (நன்றி அலக்ஸ் )

Wednesday, October 26, 2005

ஜோ ஜோ - தீபாவளி

[%image(20051026-jothika_7.jpg|200|149|Jothika_7)%]

நேற்று காலையிலிருந்து பெங்களூரில் 'ஜோ ஜோ'ன்னு நல்ல மழை. சென்னைக்கு போகும் பல ரயில்கள் ரத்தாகியுள்ளது என்று NDTVவில் சொன்னார்கள். தீபாவளிக்கு சென்னைக்கு போக முடியுமா என்று தெரியவில்லை. ஆபிஸிலிருந்து வீட்டுக்கு போவதே கஷ்டமாகயிருக்கிறது. பார்க்கலாம்.


 


 தீபாவளி என்று சொன்னால் நினைவிற்கு வருவது, பட்டாசு, புது துணி மற்றும் திபாவளி ரிலீஸ் படங்கள். ஆனால் இன்று ?


[%image(20051026-jothika_1.jpg|172|216|Jothika_1)%]

தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று படித்த ஞாபகம். நான் ஸ்கூல் படித்த போது இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு.


போன வாரம் சென்னைக்கு போன போது தி.நகரில் எப்போதும் போல் இந்த வருடமும் மக்கள் கூட்டம். ஒரு மாறுதலுக்கு இந்த முறை போலிஸ் போக்குவரத்தை அருமையாக கட்டுப்படுத்தியிருந்தார்கள். பனகல் பார்க் அருகில் இரண்டு புதிய கடைகள் வந்திருக்கிறது - சரவணா ஸ்டோர்ஸ் 'பிரமாண்டமாய்' மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலெக்ஷன்ஸ். இந்த கடைகளில் நிஜமான 'தள்ளு'படியை காணமுடிந்தது.


கூட்டத்தை பார்த்தாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. இந்த ஜோதியில் கலக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் "வேடிக்கை பார்க்காம இந்த தூண் பக்கத்தில் பத்திரமா இந்த பையை பார்த்துக்கோங்க நான் அஞ்சு நிமிஷத்தில வந்திருவேன்" என்று என் மனைவி உள்ளே போனாள். இது எவ்வளவு பெரிய பொய் என்று எலோருக்கும் தெரியும். என் அதிர்ஷ்டம் ஒரு புண்ணியவான் எழுந்துப்போக எனக்கு உக்கார சீட் கிடைத்தது. நான் கல்கியின் சிவகாமி சபதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.


[%image(20051026-jothika_2.jpg|172|216|Jothika_2)%]

ஒரு குழந்தை ஒரு பெண்மணியை "அம்மா, வா" என்று கூப்பிட்டது. அந்த பெண்மணி கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றாள். எனக்கு 'பக்' என்றது. திரும்பவும் "அம்மா வா" என்றது. இப்போது வேறு ஒரு பெண்மணி.


பிறகு தான் தான் தெரிந்தது அந்த குழந்தை போகிற வருகிற எல்லா புடவை கட்டின பெண்களையும் 'அம்மா வா' என்று கூப்பிடுகிறது என்று. அந்த குழந்தையை பார்க்க பாவமாக இருந்தது. என்னிடத்தில் இருந்த ஒரு பிஸ்கேட் பாக்கெட்டை எடுத்து கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சாபிப்பிட தொடங்கிற்று. சாப்பிட்டு முடித்துவிட்டு, மறுமடியும் 'அம்மா வா'. பக்கத்தில் இருந்தவர் "பாவம் சார், ரொம்ப நேரமா குழந்தை அம்மாவை கேட்கிறது உள்ளே கூட்டிண்டு போங்க" என்றார். பிஸ்கேட் பாக்கெட் கொடுத்ததனால் என்னை அந்த குழந்தைக்கு அப்பா என்று நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது அந்த குழந்தை என்னிடத்தில் வந்து நான்கு விரலை மடக்கி ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியது. .


நான் 'ஒன்' என்றேன்.


"அதுக்கு போகவா?" என்றது.


"சரி, என்றவுடன் அங்கேயே .."


[%image(20051026-jothika_3.jpg|172|216|Jothika_3)%]

அந்த குழந்தை இரண்டு விரலையும் நீட்டுவதற்குள் " 'இந்த கலரா'ன்னு அட்வர்டைஸ் பண்றா, ஆனால் நான் கேட்ட கலர் இல்லவேயில்லை, அடுத்த கடைக்கு போகலாம் வாங்க" நல்லவேளை சிவகாமியின் சபதத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது.


நான் திருச்சியில் இருந்த போது. தீபாவளி என்றால் எங்கள் வீட்டு முன் யாராவது வந்து "தீபாவளி இனாம்" கேட்பார்கள். இந்த பழக்கம் நாயக்கர் காலத்தில் தொடங்கியதா என்று தெரியாது. பாட்டி கதவை திறந்து "உங்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லையேபா"


"பாட்டி, எங்களை பார்க்கவே முடியாது, ஏன்னா நாங்கள் வருஷா வருஷம் தீபாவளிக்கு இனாம் வாங்க மட்டும் தான் வருவோம்!. பல இடத்துக்கு போவணும் சீக்கிரம் கொடுங்க பாட்டி"


"சரி, உன் கண் ஏன் சிவந்திருக்கு ராத்திரி சரியா தூங்கலையா ?"


போதைக் கண்ணுக்கும், தூங்காத கண்ணுக்கும் பாட்டிக்கு வித்தியாசம் தெரியாது.


[%image(20051026-jothika_4.jpg|172|216|Jothika_4)%]

இப்படி டெலிபோன், தபால், மின்சாரம், குழாய் ரிப்பேர், எதிர் விட்டில் பால் கறக்கும் கோனார், பூக்காரி, நாதஸ்வரத்தில் "மல்லிகை முல்லை.." வாசிக்கும் கோஷ்டி..


அதேபோல் தீபாவளி என்றால் என் நண்பன் பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் சென்று வான்கோழி பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்து தான் பட்டாசு, புது துணி எல்லாம். கட்டாயம் வானொலி ( தமிழில் ரேடியோ ) "உன்னை கண்டு நான் ஆட" என்ற பாடல் வரும். பிஜிலி வெடி, கொட்டாங் குச்சியில் யானை வெடி, ராக்கேட்டை படுக்க வைத்து விடுவது...  மற்றொன்று தீபாவளி அன்று அட்லீஸ்ட் ஒரு படமாவது பார்க்க வேண்டும். சில சமயம் இரண்டு. "மச்சி நாளைக்கு தலைவர் படம் ரீலிஸ்" என்ற உரையாடல்கள்.


தீபாவளி அன்று பக்கத்திவீட்டு மாமா எங்காத்துக்கு உள்ளே வந்து நான்கு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி "என்னடா ? கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்பார். அவருக்கு அன்று அது ஒரு கடமை. பார்க்கும் எல்லோரிடமும் இதை கேட்பார். போன் அடித்தால் அதே "கங்கா ஸ்நானம் ஆச்சா" விசாரிப்புகள்...


[%image(20051026-jothika_5.jpg|172|216|Jothika_5)%]

என் அப்பா எல்லா தீபாவளி மலர்களையும் வாங்கி விடுவார். ஆனந்த விகடன் கொஞ்சம் சைஸ் சின்னதாக இருக்கும். கல்கி ஒரு மாதத்து நியூஸ் பேப்பர் எல்லாம் பைண்ட் செய்தால் எப்படியிருக்குமோ அந்த சைஸில் இருக்கும். எனக்கு ஆனந்த விகடனில் பின் அட்டை , மற்றும் உள்ளே இருக்கும் தலை தீபாவளி, மைசூர் பாக்கில் மண்டை உடையும் ஜோக்ஸ்.....


"ஏங்க...ஏங்க காஞ்சிபுரம், தர்மாவரம், பனாரஸ் இந்த ஊரெல்லாம் நெனச்சா உங்களுக்கு என்ன ஞாபகம் வருது"


"திருப்பதி, திருச்செந்தூர், பழனி ஞாபகம் வருது"


போன்ற ஜோக்ஸ் எல்லாம் இப்போது கிடையாது.


தீபாவளி ஸ்வீட் எல்லோர் விட்டிலும் ஒரு வாரத்திற்கு முன்பே பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். அதில் நிச்சயம் தீபாவளி லேகியம் இருக்கும்(தீபாவளி மருந்து என்றும் பாடம்). பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, அடுத்த தெரு என்று எல்லோரும் வீட்டிலிருந்தும் தீபாவளி பக்ஷணம் வரும். அதே போல் நானும் எங்க வீட்டு பக்ஷணத்தை அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் கொடுக்கணும். இன்று கிருஷ்ணா ஸ்வீட், அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்னெக்ஸ் என்று மாறிவிட்டோம். "தீபாவளி பக்ஷணமா ? நோ வே, ஆர் யூ கிரேசி ?"


இப்போது தீபாவளி "இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக" காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிக்கு முடிகிறது. நடிகைகளின் அசட்டு பேட்டி, புது பட பாடல்கள், பட்டிமன்றம் என்பது தான் இப்போதைய தீபாவளி மெனு. இந்த சானலை பார்க்கவா அதை பார்க்கவா என்ற நிலையில் நமக்கு நேரம் சரியாக இருக்கிறது.


[%image(20051026-jothika_6.jpg|180|157|Jothika_6)%]

"போனை எடுத்து கீழே வை, நல்ல சீன் பார்க்கிறப்ப எவனாவது உயிரை எடுப்பான்"


"சீக்கிரம் பெட் ரூமில் இன்னொரு டிவி வாங்கனும் எந்த் பிரோகிரமும் சரியா பார்க்க முடியர்தில்லை" என்று பேசிக்கொள்ளும் நாம் வாழ்கை, உறவுகள், நட்பு என்று எல்லாவற்றையும் 29  இன்ச்சில் (டிவியில்) அடக்கிவிட்டோம்.


இன்னும் கொஞ்ச நாளில் "தீபாவளிக்கு நாங்க எல்லாம் வாங்கிவிட்டோம் அப்ப நீங்க ?" என்று டிவியில் விளம்பரத்தில் காலி பையை தூக்கி காண்பிக்கும் குடும்பத்தை மட்டும் தான் நாம் பார்க்க போகிறோம்.


பழசை எல்லாம் யோசித்தால் எதோ 'கருப்பு-வெள்ளை' திரைப்படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சி மாதிரி இருக்கிறது.


எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.[ பிகு1: "ஜோ ஜோ"ன்னு மழை அதான் ஜோதிகா படங்கள்.
  பிகு2: எவ்வளவு நாள் தான் குஷ்பு பற்றியே படித்துக்கொண்டிருப்பது, ஒரு மாறுதலுக்கு ஜோதிகா இருக்கட்டுமே என்று ஹிஹி!]

[படங்கள் உதவி: RMKV] 


 


  

Thursday, October 20, 2005

உடைந்த கையை ஒட்டின கதை

உடைந்த கையை ஒட்டின கதை
(1943)

எஸ்.வி. ராமகிருஷ்ணன்


[%image(20051019-svr_hand_small.gif|142|200|SVR Hand Image)%]

என் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஜனவரி 1943. யுத்தத்தின் தாக்கம் உக்கிரமாக இருந்த காலம். நான் எண்ணும் எழுத்தும் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு ஆனால் பள்ளிக் கூடத் தில் சேராமல் சுதந்திரப் பறவையாக இருந்த கடைசிக் காலம். நாள் முழுக்க விளையாட முடியும் என்றிருந்த நேரம். சென்னையில் இருந்து வந்திருந்த, என் வயதை ஒத்த உறவுக்காரப் பெண் சரோஜா வுடன் மும்முரமாக சிங்க விளை யாட்டு விளையாடிக்கொண்டி ருந்தேன். நான்தான் சிங்கம். அவள் தயைகூர்ந்து ஆடாக இருக்க ஒப்புக் கொண்டிருந்தாள். சிங்கமாகிய நான் ஒரு கட்டிலின் மேல் வீற்றிருக்க, சரோஜா கட்டிலின் கீழ் பயந்து பதுங்கினாள்.சிங்கம் ஒரு கர்ஜனையுடன் கீழே பாய்ந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கட்டிலிலிருந்து தொங்கிக்கொண்டி ருந்த ஒரு நாடாவில் அதன் ஒரு கால் மாட்டிக்கொள்ளவே, சிம்ம கர்ஜனை ஓலத்தில் முடிந்தது. நான் அழுத அழுகையைக் கேட்டு எல் லோரும் ஓடி வந்தார்கள். என்னை அள்ளி எடுத்துக்கொண்டு மாடியிலி ருந்து கீழே கொண்டு போய் பரி சோதித்தார்கள். கீழே விழுவதும் விழுந்தால் அழுவதும் சகஜமான விஷயங்கள்தானே, இது என்ன கொஞ்சம் ஜாஸ்தியாகவே கவனிக் கிறார்கள் என்று எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. என் மரியாதை போய்விடக் கூடாதே என்பதற்காகத் தொடர்ந்து ஓலமிட்டேன்.
“எலும்பு உடைந்துவிட்டாற் போலிருக்கிறது” என்று அப்பா சொன்னது கேட்டது. அதற்கெல் லாம் எனக்கு அர்த்தம் தெரியாத தால் சிராய்ப்பு மாதிரி ஏதோ இன்னொரு காயம் என்று நினைத் துக்கொண்டேன். என்னைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு ‘லேடியாஸ்பத்திரி’ என்று பொது மக்களால் அழைக்கப்பட்ட லேடி டாக்டர் மேரி வர்க்கியிடம் போனார்கள். ‘வர்க்கியம்மா’ எங்கள் குடும்ப டாக்டர் மட்டுமல்ல, எங் கள் வீட்டில் எல்லாப் பிரசவங் களையும் பார்த்து என்னையும் என் சகோதர சகோதரிகளையும் இவ் வுலகிற்கு அறிமுகம் பண்ணி வைத்தவரும் ஆவார். அப்போது பார்த்து பக்கத்து கிராமம் ஒன்றில் பிரசவம் பார்க்க அவர் போயிருந் தார். உடனே பெரியாஸ்பத்திரி என்று பெயர் பெற்ற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கே ஒரு ‘ஆம்பிள்ளை டாக்டரும்’ ஒரு லேடி டாக்டரும் இருந்தனர். முதலாமவர் என்னைப் பரி சோதித்துவிட்டுக் கோயமுத்தூருக்கு எடுத்துப் போகும்படி அறிவுரை கொடுத்தார். அப்புறம் அம்மா சொல்லித் தெரிந்தது : என் இடது முழங்கை எலும்பு ஒடிந்துவிட்ட தாம். மூட்டில் பார்த்து முறிந்து வைத்ததால் எக்ஸ்ரே எடுத்து ரிப்பேர் பண்ண வேண்டிய கேஸாம். தாராபுரம் ‘பெரியாஸ்பத் திரி’யில் எக்ஸ்ரே கிடையாததால் கோயமுத்தூருக்குத்தான் போக வேண்டுமாம்.
எலும்பு முறிந்தால் மிகவும் வலி இருக்குமென்று பின்னால் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நிஜமா கவே அன்று தொடர்ந்து வலி ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒருவேளை எனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், கோயமுத்தூருக்கு, அதுவும் காரில், போகும் வாய்ப்பும் கொடுத்த சந்தோஷத்தில் வலி அமுங்கிப் போயிருக்கக்கூடும். அப்போது கார் என்பது மிக அபூர்வம். எங்கள் வீட்டிலும் கார் கிடையாது. அப்பா அவசரமாகக் கச்சேரிக்கு (கோர்ட்டு) போய் வேலைகளை முடித்துக் கொண்டு சீக்கிரமே திரும்பினார். வழக்குகளுக்கு ‘வாய்தா’ வாங்கி இருக்க வேண்டும். டாக்ஸிக்குச் சொல்லியனுப்பினார்கள். தாரா புரத்தில் அந்த நாளில் டாக்ஸி என்றால் கள்ள டாக்ஸிதான். அதா வது பிரைவேட் கார் என்று பதிவு செய்துகொண்டு கறுப்பு போர்டில் வெள்ளை எண்கள் எழுதியிருப் பார்கள். ஆனாலும் வாடகைக்குத் தான் ஓடும். இந்தக் கார்களின் முக்கியமான உபயோகம் கல்யாண ஊர்வலங்களே. அதனாலோ என் னமோ அவை எல்லாமே கூரையை சுலபமாகத் திறக்கக்கூடிய ‘டூரர் டாப்’ வண்டிகளாகத்தான் இருந் தன. வெயிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்பு கொடுப்பது கேன்வாஸ் துணிதான். (21 வருடங் கள் கழித்து என் கல்யாண ஊர் வலம் நடந்தபோது கூட இவை இருந்தன. பின்னால் காணாமற் போய்விட்டன.)
கிளம்புவதற்குள் ஒரு சிக்கல். கோவை வரை போய்த் திரும்பி வர வேண்டிய பெட்ரோல் இல்லை யாம். அப்போது உலக யுத்தத்தின் காலமாகையால் பெட்ரோலுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு நிலவியது. ரேஷன் என்று கொஞ்சம் கொடுப் பார்கள். கூடுதலாக வேண்டுமா னால் குதிரைக் கொம்புதான். எப்ப டியாவது ‘பிளாக் மார்க்கெட்டில்’ வாங்கிக்கொண்டு ஒரே மணியில் வந்துவிடுவதாகச் சொல்லி தாராள மாகவே பணம் வாங்கிக்கொண்டு போன டாக்ஸி டிரைவர் மூன்று மணி நேரம் ஆகியும் காணாமற் போக என் அம்மாவும் அப்பாவும் தவித்துப்போனார்கள். கடைசியில் கொஞ்சம் பெட்ரோலும் கொஞ்சம் சீமெண்ணையும் (சீமை எண்ணை -வெள்ளைக்காரன் கொண்டுவந்த எண்ணை; அதாவது கிரஸின் ஆயில்) கலந்து குடித்துவிட்டு ஒரு ஹைதர் காலத்து கார் வந்து நின்றது. இதை வைத்துக்கொண்டு கோய முத்தூர் போய்ச் சேர முடியுமா என்று அம்மாவுக்குக் கவலை. ஆனா லும் ஓட்டையோ உடைசலோ எப்படியோ ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துவிட்டோம்.
கோவையில் ராமராவ், லஷ்மண ராவ் என்று இரண்டு டாக்டர்கள். இருவரும் சகோதரர்கள். இதற் கென்று ஆஸ்பத்திரி கட்டி வைத்து ஜில்லாவில் யாருக்காவது எலும்பு முறியாதா என்று காத்துக்கொண்டி ருந்தார்கள். அன்று நான் கிடைத் தேன். ராமராவ் ரொம்ப நல்லவர். தம்பி கொஞ்சம் முசுடு. கோபக் காரர் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ராமராவ்தான் என்னி டம் வந்தார். அன்பாகப் பேசினார். எண்ணத் தெரியுமா என்று கேட் டார். தெரியும் என்று பெருமை யாகச் சொன்னேன் எத்தனை வரை எண்ணுவாய் என்றார். தைரியமாக “நூறு” என்று சொன்ன பிறகு மனதுக்குள் கொஞ்சம் சந்தேகம் எழுந்து உறுத்தியது. ஆனால் என் கவலைக்கு அவசியம் இருக்க வில்லை. அவர் குளோரோபாரம் (அந்தக் காலத்தைய மயக்க மருந்து) கொடுப்பதற்காகத்தான் கேட்டிருக் கிறார். பெரியவர்களைக்கூட அப்படித்தான் எண்ணச் சொல்லி மயக்கம் கொடுப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது. பத்தொன்பது எண்ணிய பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. அதனால் லக்ஷ்மணராவின் முன்கோபம் (அவர்தான் எலும்பை இணைத்தா ராம்) என்னைப் பாதித்திருக்க முடியாது.
நான் விழித்தபோது என் இடது கையை மடக்கி பிளாஸ்டர் போட்டிருந்தது. இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் தாராபுரம் திரும்ப முடி யாது. அடிக்கடி டாக்டரிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்பதால் இரண்டு வாரம் போல் நானும் என் அம்மாவும் கோவை யிலேயே எங்கள் மாமா வீட்டில் தங்கினோம். மாமா என்றாலும் என் அம்மாவின் கூடப்பிறந்த சகோ தரர் அல்ல. பெரியப்பாவின் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது எல்லாம் சொந்த அண்ணன் வீட்டில் போய்த் தங்குவதற்கே யோசனை செய்கிறார் கள். அந்த நாளில் சொந்த பந்தங்கள் எல்லாம் இன்னும் நெருக்கமாக இருந்தன. ஒன்று விட்டாலும் சரி, இரண்டு விட்டாலும்கூட சரியே, தைரியமாக உரிமையோடு போய்  ‘டேரா’ போடலாம்.
மாமா வீடு இருந்தது இப்போது ராம் நகர் என்றழைக்கப்படும் அன்றைய ‘பிராமின் எக்ஸ்டென் ஷன்.’ சுருக்கமாக எக்ஸ்டென்ஷன் என்று சொல்வார்கள். கோவையில் அந்தப் பகுதி அந்தக் காலத்தில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. பிளான் போட்டு அமைத்த ஒழுங்கான, விசாலமான வீதிகள், மரங்கள் அடர்ந்த காம்ப வுண்டு கொண்ட தனித்தனி வீடு கள். மாமா வீட்டில் ஒரு மயில்கூட இருந்தது. ஆனால் அது தோகையை விரித்து ஆடாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதற்கு அம்மா சொன்ன காரணம்: அது பெண் மயிலாம், ஆண் மயில்கள் தான் டான்ஸ் ஆடுமாம்.
கை சீராக முன்னேற்றம் அடைந் ததால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு பிளாஸ்டரை உடைத்து ஒரு பெரிய துணிக்கட்டு போட்டார்கள். இன்னும் சில நாளில் ஊருக்குப் போக அனுமதித்தார்கள். இப்போது மறுபடி ஒரு கார் சவாரி. ஆனால் இம்முறை அது (என் பெற்றோருக்கு) ஒரு பதட்டமில்லாத, சமாதான மான யாத்திரையாக இருந்தது. சில வாரங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை வந்து காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
அடுத்த கோவை விஜயம்தான் கடைசி விசிட் கூட. கை முழு குணமாகிவிட்டது. என்று சொல்லிக் கட்டை எடுத்துவிட்டார்கள். பிறகு ஊருக்குப் போய், ஒட்டின கைக்கு மறுபடியும் பலம் வருவதற்காக தினசரி ஒரு சின்ன பயிற்சி. அதா வது ஒரு டிபன் பாக்ஸில் மணலை நிரப்பி என்னிடம் கொடுப்பார்கள். எங்கள் வீட்டுக் காம்பவுண்டிலேயே நான் முறிந்து ஒட்டின என் இடது கையால் அதைத் தூக்கிக்கொண்டு மேலும் கீழுமாகப் பத்து தடவை நடக்க வேண்டியது. கைக்கு இன்னும் முழு பலம் வராததால் சில சமயம் அது கொஞ்சம் கஷ்ட மாக இருந்தது. அதற்கு நானே ஒரு வழி கண்டுபிடித்தேன். கஷ்ட மாக இருக்கும்போதெல்லாம் டிபன் பாக்ஸை வலது கைக்கு மாற்றி நடந்துகொண்டிருந்தேன். பத்து தடவை என்னவோ கரெக்டாக நடந்துவிடுவேன். ஒரு நாள் அம்மா அதைக் கண்டுபிடித்துக் கொஞ்ச லாகக் கடிந்துகொண்டாள். அப் போதுதான் எனக்கு அந்தப் பயிற் சியே ஒடிந்த கைக்குத்தானே என்பது உறைத்தது!
சீக்கிரம் எலும்பு நன்றாகப் பிடித்துக்கொள்ளவும் பலப்படு வதற்கும் இன்னும் ஒரு உபாயமும் கையாளப்பட்டது. இது நாட்டு வைத்திய முறை. ‘கொசத்தி’ என் றழைக்கப்பட்ட குயவனின் மனை வியை அழைத்து என் கைக்கு மயி லெண்ணை தடவி நீவி விடச் சொல்லுவார்கள். அதற்கு ஏன் மயில் எண்ணை என்று பெயர், அது மயிலில் இருந்து எடுத்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதன் மணம் என்னமோ சுகந்தமாக இருக்கவில்லையே என்பது மட்டும் நினைவிருக்கிறது.
எப்படியோ கை சீக்கிரத்திலேயே குணமாகிவிட்டது. ஐந்தே மாதங் களில் நான் பள்ளியில் சேர்ந்த போது என் இடது கைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எல்லாம் சுபம்!


நன்றி : உயிர்மை(Oct 2005 )

Wednesday, October 12, 2005

கண்கலங்க வைக்கும் கடிதங்கள்

நேற்றைய அசோகமித்திரன் கட்டுரையை தொடர்ந்து இன்று ரா.கி.ரங்கராஜன் அவர்களுடையது.


சமிபத்தில் எனக்கு பிறந்த நாள் வந்தது. (எத்தனையாவது பிறந்த நாள் என்று கேட்க நினைப்பவர்கள் 'எத்தனையாவது' என்பதற்கு சரியான இங்கலிஷ் வார்த்தையை கண்டுபிடித்துச் சொல்லுங்கள். பார்க்கலாம் ரொம்பப் பேரிடம் கேட்டு வருகிறேன். மகாமகா இங்கிலீஷ் பேராசிரியர்கள்கூட முழிக்கிறார்கள்)


பிறந்த நாள் என்றால், வாழ்த்து வராமலா இருக்கும் ?. வந்தன தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலர் எழுதியிருந்தார்கள், இருந்தாலும்.."என் அன்புள்ள அப்பாவுக்கு உங்களுடைய இந்தப் பிறந்த நாளன்று நீங்கள் என்னை எப்படியெல்லாம் வளர்த்து மனிதனாக்கினீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.


எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, சின்ன பையனாயிருந்தபோது காலில் ஏதோ புண் ஏற்பட்டிருந்தது. தூங்கும் போது என்னை அறியாமல் அதை சொறிந்து சொறிந்து ரத்தக் களரியாக்கிக் கொண்டிருந்தேன். அதற்காகவே முரட்டுக் கதர்த்துணையில் க்ளவுஸ் மாதிரி உறை தைத்துப் போட்டு அது கழன்றுவிழுந்து விடாமலிருக்க முடிச்சுப் போட்டு வைத்தீர்கள். தினம் ராத்திரி உங்களுடைய கடைசி வேலை அது.


அந்த நாளில் ஹாவாய் செருப்பு, சிங்கப்பூர் செருப்பு என்று சொல்லப்பட்ட ரப்பர் செருப்பு வாங்கித்தந்தீர்கள். தீடீர் தீடீரென்று அதன் 'வார்' அறுந்து போய்விடும். நான் கஷ்டபடக் கூடாது என்பதற்காக, செட் செட்டாக வார்கள் வாங்கி வைத்திருப்பீர்கள். ஒன்றின் வார் அறுந்ததும் உடனே புதிதாகப் போட்டு விடுவீர்கள்.


தீபாவளி சமயத்தில் நான் கடை கடையாகப் போய், வாசலில் தொங்க விட்டிருக்கும் சட்டைத் துணியைப் பார்த்து எனக்குப் பிடித்தது எது, அது எந்தக் கடையில் தொங்குகிறது என்பதை உங்களிடம் சொல்வேன். அந்தத் துணியை வாங்கி வந்து டெய்லரிடம் கொடுக்கும்படி சொல்வேன். அதற்கு இரண்டு மூன்று நாளாகும். "சீக்கிரமா வாங்கி வாங்க. இல்லாட்டி அந்தத் துணி கடையில் தீர்ந்து போயிடும்' என்று நான் நச்சரிப்பேன். நீங்கள் கோபப்பட மாட்டீர்கள்.


பரீட்சை சமயத்தில், ராத்திரி அம்மா மறந்து போய்த் தூங்கி விட்டால் நீங்கள் டீ போட்டு எடுத்து வந்து எனக்காக ஆற்றிக் கொடுப்பீர்கள். இன்ஜினியரிங் காலேஜில் சீட் கிடைப்பதற்காக ஒரு லட்ச ரூபாய் கஷ்டப்பட்டு கொடுத்தீர்கள். நான் கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். மேலும் பத்தாயிரம்தந்தால்தான் அந்த குரூப் தருவோம் என்றார்கள். அதையும் எப்படியோ சமாளித்துக் கொடுத்தீர்கள். இன்றைக்கு நான் நல்ல நிலைமையில் இருப்பது உங்களால் தான் அப்பா !


இப்படிக்கு உங்கள் பிரியமுள்ள..."


"அன்புள்ள அப்பாவிற்கு அநேக நமஸ்காரம். இங்கு நான் மாப்பிள்ளை மாமியார் அனைவரும் சவுக்கியம். இன்றைக்கு உங்க்ள் பிறந்த நாள். என்னை எப்படியெல்லாம் அன்போடும் அக்கரையோடும் வளர்த்தீர்கள் என்பதை நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்.


நான் வீணை கற்றுக் கொண்டேன், ஞாபகம் இருக்கிறதா ? வாசித்து வாசித்து வலதுகை விரல்களில் கோடு விழுந்து எரிச்சலாக எரியும். தினம் தினம் நீங்கள் தேங்காய் எண்ணெயில் பஞ்சைத் தேய்த்துத் தடவி விடுவீர்கள்.


நான் தூங்கும்போது மேலே துணி விலகயிருக்கும். நீங்கள் மெதுவாக, என் தூக்கம் கொடாமல் போர்வையை போர்த்திவிட்டுப் போவீர்கள்.


எனக்காக ஒரு முறை தாவணி வாங்கி வந்தீர்கள். அது ப்ளூ கலர். ஸ்கூல் யுனிபாரமும் ப்ளூ கலர்தான். வேறே கலர் வாங்கியிருக்கக் கூடாதாவென்று நான் அம்மாவிடம் முனகிக் கொண்டிருந்தது உங்களுக்கு கேட்டுவிட்டது. அதற்குள் நான் அதைக் கட்டிக் கொண்டுவிட்டேன். இருந்தாலும் பரவாயில்லை என்று அந்த தாவணியைக் கழற்றித் தரச் சொல்லி, நீட்டாக மடித்துக் கடைக்கு எடுத்துப் போனீர்கள். அதை எடுத்துக்கொண்டு வேறே கலரில் தரச் சொல்லி கேட்டீர்கள். உடுத்திக் கசங்கிப் போன துணியைக் கடைக்காரன் வாங்கிக் கொள்வானா ? மாட்டேன் என்று சொல்லிவிட்டான். நீங்கள் மறுபடி பணம் கொடுத்து, புதிதாக வேறு கலரில் ஒரு தாவணி வாங்கி வந்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா, அப்பா ?


என் சினேகிதன் எல்லோரும் அப்போது சல்வார் கமீஸ் போட ஆரம்பித்தார்கள் நானும் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டேன் அம்மா முடியவே முடியாது, தாவணி தான் போட வேண்டுமென்று சொன்னாள். நீங்கள் என்னை ஆதரித்து, சல்வார் கமீஸ் துணி வாங்கித் தந்தீர்கள். தைத்துப் போட்டுக் கொண்டேன். எனக்கு ரொம்ப அழகாயிருக்கிறதென்று என் சிநேகிதிகள் எல்லாரும் சொன்னார்கள்.


என்னை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எத்தனை பாடுபட்டீர்கள்! பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று சும்மா சும்மா வந்து கொண்டிருந்தால் எனக்கு என்னவோ போலிருக்கும் என்பதற்காக, எவ்வளவு பேரை வடிகட்டி வீட்டுக்கே வராமல் பண்ணினீர்கள்! மகாலிங்கபுரம் கோயிலில் எனக்காக எழுதி வைத்துவிட்டு, எத்தனை நடை நடந்திருப்பீர்கள்!.


நாலு மாசம் முன்பு நான் அங்கே வந்திருந்த சமயம், மாப்பிள்ளை மதுரைக்குப் பறப்பட்டாரே, நினைவு இருக்கிறதா அப்பா ?


மதுரைக்கு நாலு ஸ்டேஷன் முன்பு ரயில் தடம் புரண்டதென்று டி.வி.யில் நியுஸ் சொன்னதும் எல்லாரும் எப்படிப் பதறிப் போனோம் ? நீங்கள் மதுரையில் இருக்கும் உங்கள் சிநேகிதருக்கு ஃபோன் போட்டு, அந்த இடத்துக்குப் போய் பார்த்து உடனே தகவல் தெரிவிக்கும்படி ராத்திரியோடு ராத்திரியாகச் சொன்னீர்கள். மாப்பிளை பத்திரமாக இருக்கிறார் என்று சேதி வருவதற்குள் என்னைக் காட்டிலும் நீங்கள்தானே அதிகம் தவித்தீகள்!


என் நாத்தனார் புருஷன் வேளச்சேரியில் வீடு கட்ட ஆரம்பித்து, சொஸைட்டியில் போட்ட லோன் அப்ளிகேஷன் லேசில் சாங்ஷன் ஆகாமல் திண்டாடியபோது, அந்த சொஸைட்டியின் மேலதிகாரிக்கு எப்படியோ சிபாரிசு பிடித்து, ஆறு மாதத்துக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய லோனை இரண்டே மாதத்தில் வாங்கித்தந்தீர்களே. அந்த ஒரு காரியத்தில் இந்த வீட்டில் என் மதிப்பும் கவுரவமும் எவ்வளவு கும்மென்று உயர்ந்த்து தெரியுமா ?


இப்படி ஒவ்வொன்றையும் இன்றைக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கண்ணில் ஜலம் வருகிறது அப்பா.


இப்படிக்கு உங்கள் அன்புள்ள.. ."


மேற்கண்டவாறு நிஜமாகவே எனக்கு கடிதங்கள் வந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் ? ஊகூம். இயந்திரத்தனமாக இண்டர்நெட்டில் இரண்டு வரி வாழ்த்து. அதிலேயே ஒரு க்ரீட்டிங்ஸ் கார்டு ( என்னுடைய கம்ப்யூட்டரில் அதை வரவழைப்பதற்குள் அடுத்த பிறந்த நாள் வந்துவிடும் போலிருக்கிறது )..


[ நாலு மூலை, 208 பக்கம், ரா.கி.ரங்கராஜன், கிழக்கு பதிப்பகம், விலை 80/= ), பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் சென்னை வருவதற்குள் படித்து முடித்து ஒரு சின்ன் தூக்கம் போடலாம் ]

Tuesday, October 11, 2005

இரண்டு கட்டுரைகள்

சமிபத்தில் இரண்டு கட்டுரைகளை இரண்டு முறை படித்தேன். ஒன்று அசோகமித்திரன், மற்றொன்று ர.கி.ரங்கராஜன். யோசித்து பார்த்தால் இரண்டிலும் உள்ள நகைச்சுவைதான் காரணம் என்பது புலப்படும்.


முதலில் அசோகமித்திரன்.


இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆர். காலமான தினம், யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்தவேண்டியவர்கள் திண்டாடிப் போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கில் யாரும் முன்கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்கமாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச் சின்னங்கள். எம்.ஜி.ஆர். இறந்த தினம் இந்தத் துக்கச் சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது. தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால் பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச் சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது.


ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது. வண்டி கிடைத்தாலும் தெருவில் திரண்டிருக்கும் ஜனத்திலிருந்து அதைக் கொண்டு செல்ல அனுமதி கிடைக்காது. யாரிடம் எதற்கு அனுமதி?


"என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க."


"எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது."


"அதுக்குள்ளே எடுத்துப் போயிடறோம்."


"எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம்தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு."


அப்பா பிணவறையிலிருந்து எழுந்து நடந்து போனார்.


( நன்றி: Samachar.com )


 [ நாளை ரா.கி.ரங்கராஜன். ]

Saturday, October 8, 2005

சென்ற வாரம் சென்ற இடம்!

கல்யாணத்திற்கு முன் வாராவாரம் பைக் எடுத்துக்கொண்டு ஒரு திவ்விய தேசம் சென்று வந்துக்கொண்டிருந்தேன். வந்த பிறகு அந்த கோயிலை பற்றி ஒரு சிறு குறிப்பை ஒரு நோட்டு புத்தகத்தில் "சென்ற வாரம் சென்ற இடம்" என்ற தலைப்பில் எழுதியும் வைப்பேன்.
அவ்வாறு எழுதியதில் இரண்டை இங்கு தந்துள்ளேன்.திருநீர் மலை !இந்த ஞாயிற்றுகிழமை சினிமாவிற்கு சென்று ஷெரன் ஸ்டோனை(sharon stone) பார்ப்பதற்கு பதில். திருநீர் மலைக்குச் சென்று திருமங்கை ஆழ்வார் வர்ணித்த


"அன்றயர்குலக்கொடியோடு அமாமலர்மங்கையொடுஅன்பளவி அவுணர்
எந்தானும்இரக்கமிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும்பொழில்சூழ்
நன்றயபுனல்நறையூர்திருவாலிகுடந்தை தடம்திகழ்கோவல்நகர்
நின்றான்இருந்தன்கிடந்தான்நடந்தாற்குஇடம் மாமலையாவதுநீர்மலையே."


[%image(20051007-THIRUNEER-MALAI--A.jpg|192|144|ThiruneerMalai)%]

இந்த நான்கு கோலங்களை கொண்ட நீலவண்ணனை பார்ப்பது என்று முடிவு செய்தேன்!.


திருநீர் மலை சென்னை தாம்பரம் ரயில் பாதையில் பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் "ponds" தொழிற்சாலை நறுமணம் கமவழ அமைந்த அமைதியான இடம். இந்த மலையை நீர்சூழ்ந்திருந்ததால் ஆறு மாத காலம் திருமங்கை ஆழ்வார் ஊருக்கு வெளியே காத்திருந்ததாகவும் இதனால் இம்மலைக்கு நீர்மலை என்ற பெயர் உண்டானதாகவும் வரலாறு.


300 அடி உயரத்தில் இருக்கும் இம்மலையை சுற்றி பசுமையான புல்வெளிகள், அதன் மேல் தவழ்ந்துவரும் மிகமெல்லிய காற்று - இனிமை


கோயிலுக்கு செல்லும் சாலைகளில் மாட்டுவண்டிகளில் மாட்டுத்தோல் ஏற்றி செல்வது விந்தை.


 


திருப்பதி


[%image(20051007-venkateshwara-temple-tirupati-india.jpg|226|150|thirupathi)%]

இந்த வாரம் 30ரூ டிக்கேட் வாங்கி 12 மணி நேரம் "க்யூ"வில் நின்று ஒரு செல்வந்தரை சந்திக்க சென்றிருந்தேன்!.


பணக்காரர்கள் லாபத்தில் 10% காணிக்கை செலுத்தவும், மத்தியமர் லட்டு வாங்கவும், ஏழைகள் மொட்டை போடவும், ஆந்திரவா(அ)தமிழ்நாடா என்று அறிந்துக்கொள்ள முடியாத வினோத இடம் - திருப்பதி. இங்கு எல்லாவற்றுக்கும் "க்யூ" வரிசை. கோபுரங்களை பித்தளை (தங்கம் ?) தகடுகளால் உண்மையான வேலைப்பாடுகளை மறைத்திருக்கிறார்கள். திருவள்ளரை,அன்பில் ஆகிய இடங்களில் கோபுரம் இடிந்த நிலையில் அரச மரம் முளைத்திருப்பதை பார்த்திருந்தால் முரண்பாட்டைக் கவனித்திருப்பீர்கள்!.


பெருமாள் சன்னதியிலிருந்து தள்ளப்பட்டு, மலைமேலிருந்து ஜீப்பில் கீழே இறங்கி வரும் பொழுது ,இரவு 1 மணி,மழை,அக்ஸிலேட்டர் உடைந்து போய், காப்பாத்த யாரும் இல்லாமல், நியுட்டிரலில் இறங்கும் பொழுது பொய்கையாழ்வார் பாடிய


"உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவருள்ளத்து-உளன்கண்டாய் வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தினுள்ளானென்று ஓர்"


என்ற பசுரம் நினைவுக்கு வந்தது.


 

Tuesday, October 4, 2005

சொடக்கு


[%image(20051003-stretching.jpg|144|99|stretching)%]

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனை அடிக்கும் முன் கழுத்தை 180 டிகிரி சுழட்டி, பின் இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து மடக்கி 'Warm-up' செய்யும் போது பின்னனியில் DTS எப்பெக்டில் 'படக் படக்' என்று சொடுக்கும் சத்தம் வரும். இந்த சொடுக்கும் சத்தம் சிலருக்கு கை, கால் மடக்கினால் வரும். சிலருக்கு மாடிப்படி ஏறி இறங்கினால்; சலூனில் முடி திருத்துபவர் கழுத்தை திருப்பி காதை இழுத்து மசாஜ் செய்யும் போது; என் பாட்டிக்கு கொட்டாவி விட்டால் வரும். இரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசுவதால் வருகிறது என்று நேற்று காலை டிபன் சாப்பிடும் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இல்லை என்று கூகிளில் தேடிப் படித்ததில் புரிந்து கொண்டேன். சரி சத்தம் எப்படி வருகிறது என்று தெரிந்துக்கொள்ள நம்முடைய எலும்புகள், மூட்டு, கணுக்களின் அமைப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.


[%image(20051003-knuckles.jpg|222|216|Knuckles)%]

படத்தில் ( படம் உபயம் howstuffworks ) மஞ்சள் கலரில் பார்ப்பது தசைநார்/நரம்பு(ligament). நீல கலரில் பார்ப்பது 'சைனோவியுல் திரவம்' ( Synovial - suh-No-vee-ul). கொஞ்சம் தெளிவான அதேசமயம் கெட்டியான திரவம். இயந்திரத்தினுள் உராய்தலைத் தடுத்து மென்மையாக ஓடுவதற்கு பயன்படுத்தப்படும் கிறீஸ் போன்ற ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சொடக்குவதற்கு உங்கள் கை/கால்களை இழுக்கும் போது எலும்பு மூட்டுக்கள் விரிவடைகின்றது. இதனால் எலும்பு சுற்றியிருக்கும் இடத்தின் கொள்ளளவு(volume) கூடி, ஒரு சிறு வெற்றிடம்(vacuum) உண்டாகி, காற்றழுத்தம் குறைகிறது (decrease in pressure).  [%image(20051003-joint.gif|235|165|joint)%]

காற்றழுத்தம் குறைவதால் சைனோவியுல் திரவத்தில் இருக்கும் வாய்வுக்களின்1 கரைத்திறன் கம்மியாகி (becomes less soluble) நீர்க்குமிழிகள் (air bubbles) உருவாகிறது இதற்கு பெயர் Cavitation. இந்த நீர்க்குழுமிகள் வெடிப்பது தான் நாம் கேட்கும் சொடுக்கு சத்தம்!

கொஞ்சம் ஈஸியா விளக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். ஒரு (பெட் பாட்டில்) பெப்ஸி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குலுக்கு குலுக்குங்கள். உள்ளே 'உஸ்' கிளம்பும். 'உஸ்' சத்தம் நிற்கும் வரை காத்திருங்கள். நின்றவுடன் மூடியை மெதுவாக ஒரு இரண்டு சுற்று திறங்கள். திறக்கும் போது பாட்டிலை பாருங்கள் அதில் இருக்கும் வாயு 'உஸ்' என்று மேலே கிளம்பும். பாட்டிலின் மூடியை திறக்கும் போது கொள்ளளவு கூடி, காற்றழுத்தம் குறைந்து உள்ளிருக்கும் வாயு வெளியே வருகிறது. இது தான் Cavitation!. 

 சரி இப்போது ஒரு 'பபுள் கம்' எடுத்து மென்று, நாக்கால் தட்டையாக செய்து ஒரு சின்ன பலூன் போல் செய்து 'பட்' என்று உடையுங்கள்.

மேலே சொன்ன பெப்ஸியையும், 'பபுள் கம்' மையும் சேர்த்து பாருங்கள் சொடக்கு சத்தம்  எப்படி வருகிறது என்று புரியும்


இருபது வருடத்திற்கு முன் விஞ்ஞானிகள் சொடுக்கும் போது x-ray எடுத்து வாயு குமிழ்கள்(gas bubbles) இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். சொடுக்கும் போது 0.1 milli-joule per cubic millimeter சக்தி ( energy) உண்டு பண்ணுகிறது.

சொடுக்கு எடுத்தவுடன், திரும்பவும் எலும்புகள் பழைய நிலைக்கு வருவதற்கு 10-15 நிமிடமும், வாயுக்கள் திரவத்தில் மீண்டும் கரைய (அல்லது உறிஞ்சிக்கொள்ள) 20-30 நிமிடம் எடுத்துக்கொள்கிறது, இதனால் தான் சொடுக்கு வந்த விரல்களில் திரும்ப உடனே சொடுக்கு வருவதில்லை.


சொடுக்குவதால் கை/கால்களுக்கு பிற்காலத்தில் மூட்டு வலி (arthritis - "arthro" - மூட்டு, "-itis" -வீக்கம்) வரும் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. என்ன எலும்பை சுற்றி உள்ள மெல்லிய தசைநார்(soft tissues) உடையும் சாத்தியம் இருக்கிறது.

அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சொடுக்கு பழக்கம் உள்ளவர்களின் கை பிடிமானம்(Grip) மற்றவர்களை காட்டிலும் 75% கம்மியாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. அடுத்த முறை மனைவியிடம் சொடுக்கு இழுத்துவிட சொல்லும் போது 'DTS' எப்பெக்டில் சத்தம் வந்தால் பக்கத்தில் இருக்கும் டாக்டரை பார்ப்பது உத்தமம்.

 (1) பிராண வாயு (oxygen), ஜட வாயு(nitrogen),கரியமில வாயு(carbon dioxide). 

உதவிய நூல்கள்/தளங்கள்:
கூகிள் - சொடுக்கு பற்றி நிறைய தகவல்கள்.
10ஆம் வகுப்பு அறிவியல் புத்தகம்.