Skip to main content

Posts

கும்பகர்ணனுக்கு பிடித்த மரம்

மேலே பார்க்கும் இந்த பூவை போன வாரம் என் புதிய கேமராவில் கவர்ந்தேன். பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களிலிருந்து இந்த பூ மீது எனக்கு ஒரு வித காதல் என்று சொல்லலாம். கிரவுண்ட் சுற்றி இந்த மரங்கள் குடை போல வளந்திருக்கும். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மரம் முழுக்க சா'மரம்'மாக பூத்திருக்கும். பள்ளியில் இரண்டு வகுப்புக்கு நடுவில் பத்து நிமிடம் பிரேக் விடும் போது ஓடி சென்று இந்த மரத்திலிரிந்து சியக்காய் போல விழுந்திருக்கும் இதன் காய்களை பொறுக்கி டிராயர் பாக்கெட்டில் அடைத்துக்கொண்டு வருவோம். தட்டையாக கருப்பாக இருக்கும் இந்த காய்கள் ஒரு வித தித்திப்பு வாசனையுடன் (அதிமதுரம் மாதிரி வாசனை என்பார்கள்) பிசுபிசுப்பாக இருக்கும். ஸ்கூல் விட்டவுடன் பொறுக்கிய காய்களை கல்லை கொண்டு நசுக்கி பொடியாக்கி கார்த்திகை பொரி உருண்டை போல உருட்டினால் கார்க் பந்து போல இருக்கும். நிஜ கிரிக்கெட் பந்தின் தையலை பிரித்தால் சணல் கயிறால் சுற்றப்பட்ட சின்னதாக ஒரு கார்க் பந்து இருக்கும். அந்த கார்க் பந்தை இந்த காய்க்கொண்டு தான் செய்கிறார்கள் என்று புரளியை யாரோ கிளப்பிவிட, நாங்கள் இந்த கார்க் பந்து தயாரிப்பில் முழு வீச்சுடன் ஈடுபட...

மேல்கோட்டையில் ஒரு நாள்

மேல்கோட்டைக்குப் பல முறை சென்றிருந்தாலும், கடந்த மாதம் 25ஆம் தேதி அங்கு பிரசித்திபெற்ற ‘வைரமுடி’ உத்ஸவத்தைக் கண்டுகளித்தது மறக்க முடியாத அனுபவம். “எக்கசக்கமா கூட்டம் இருக்கும், காரை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திவிடுவார்கள்” போன்ற எச்சரிக்கைகளைக் கேட்டுவிட்டு பெங்களூர் மைசூர் ரோட்டில், ராம் நகரத்தில் இருக்கும் ‘காமத் லோகருச்சி’ ஹோட்டலை அடைந்தபோது காலை எட்டரை மணி. தென்னை ஓலை இட்லியை சாப்பிட்டுவிட்டு மேல்கோட்டை சென்றபோது மதியம் பன்னிரண்டு மணி. மேல்கோட்டை மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் தாலுக்காவில் இருக்கிறது. பெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில் மாண்டயாவிலிரிந்து சுமார் 25 கிமீ தூரத்தில், 150 மீட்டர் உயரத்தில் உள்ள தட்டையான பகுதிதான் மேல்கோட்டை என்ற ஊர். 1991ஆம் கணக்கின் படி இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை 2685. தற்போது இதைவிட 100 பேர் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். திருநாராயணபுரம், யாதவகிரி என்ற பெயர்கள் இருந்தாலும் மேலே இருக்கும் கோட்டை என்ற பொருள்பட மேல்கோட்டை என்ற பெயரே பிரசித்தம். உடல்நலத்துக்கு உகந்த இடமாகவும், வேளாண்மை நிலங்கள், நீர் நிலைகள் சூழ்ந்த, ஃபேண்டஸி கதைகளில் வர...

கூடு விட்டு கூடு

 கூடு விட்டு கூடு என்ற தலைப்பில் கூடு இணையதளத்துக்கு எழுத ஆரம்பித்திருக்கிறேன். இந்த பகுதியில் நான் பார்த்து, ரசித்த காட்சிகள், படித்து ரசித்த சிறுகதை, கட்டுரை, புத்தகங்கள். தினசரி சந்திக்கும் மக்களைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கேன். இந்த தொடர் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்..

பில்லா

Be aware of God Beware of Dog சித்தார்த் ஜான்சன் வீட்டு வாசல் கேட்டில் இப்படி எழுதியிருக்கும். நாய்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. காலை தூக்கிக்கொண்டு கம்பத்தின் மீது ‘உச்சா’ போவதைப் பார்த்திருக்கிறேன்; அவ்வளவு தான். நைட் ஷோ பார்த்துவிட்டு வரும்போது பின்தொடர்ந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் நடப்பது போல பாவனை செய்வேன். ‘குரைக்கிற நாய் கடிக்காது’ என்பார்கள். கடிக்கும் போது நாயால் எப்படிக் குரைக்க முடியும்?  அதனால் அப்படிச் சொல்லியிருப்பார்கள். கடிக்கும் என்ற வார்த்தையை “கடி+ க்க் + உம்” என்றும் எழுதலாம். ஆங்கில இலக்கணத்தில் இதை ஸ்டிராங் வெர்ப்(Strong verb) என்கிறார்கள். தமிழில் வல்வினையாம். சொற்களுக்கு நடுவில் “க்க்” வந்து வார்த்தையை வல்வினையாக்குகிறதாம். இப்பொழுது நீங்களே ‘அக்’கென்று கடித்துப் பாருங்கள்; ‘க்க்’ சத்தம் வரும். (உடனே ‘அக் அக்’னு கடிச்சுப் பார்க்காதீங்க.) கடைசியில் ‘உம்’ விகுதியில் முடிவதால் எதிர்காலமாகிறது. ‘உம்’ விகுதி பற்றி நாய்க்குத் தெரியாத காரணத்தால் பில்லா வந்த அன்றே என்னைக் கடித்தது. வால்வினையால் வந்த வல்வினை. என்ன பில்லாவா? என்று கேட்கநினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக...

கூட்டம்

“என்னை கன்னத்தில் பளார்னு அறைஞ்சுட்டாண்டா!” “நீ என்ன செஞ்சே?” “பீச் பக்கம் சும்மா வேடிக்கை பாக்கப் போனேன்.” “உன்னை யார்டா அங்கே எல்லாம் போகச் சொன்னா?” இந்த உரையாடல் என் பெரியப்பாவுக்கும் என் அப்பாவுக்கும் நான் +2 படிக்கும் போது நடந்தது. அடி வாங்கியவர் என் பெரியப்பா. அதிகம் படிக்காதவர். நாடகங்கள், ரத்னா ஃகபே சாம்பார் இட்லி தான் அவர் உலகம். இ.பி என்ற மின்சார வாரியத்தில் ஒரு சாதாரண வேலையில் இருந்தார். திருவல்லிக்கேணியில் வாடகை வீடு. இன்றும் சைக்கிள்தான் அவர் ஒரே சொத்து. காது கொஞ்சம் சரியாகக் கேட்காது. அவருக்கு தேவையான விஷயம் மட்டும் காதில் விழும்! எம்.ஜி.ஆர் இறந்த அன்று பீச் பக்கம் சைக்கிளை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். போகும்போது ஏதோ ஒரு தெருவில், ஒரு மேசை மீது எம்.ஜி.ஆர். படம் வைத்து, மாலை போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைத்துள்ளார்கள். அந்தத் தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போன அவரை நிறுத்தியிருக்கிறார்கள்… “தலைவரே போயிட்டார். நீ எப்படி சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவ? சைக்கிளை விட்டு இறங்கி தள்ளிகிட்டு போடா” பெரியப்பா கீழே இறங்கி, “என்ன?” என்று கேட்டிருக்கிறார். “கஸ்மாலம், தலைவர் போயிட்டார். ...

பயணங்கள், புத்தகங்கள்

ஜெர்மனியின்… செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் கமல் இரண்டு கைகளிலும், ‘வா, வா,’ என சைகை காண்பிக்க, ஹீரோயின் “ரதி” ஓடி வந்து ‘பச்சக்’ என்று கமல் மீது ஒட்டிக்கொள்வார். திருமணம் ஆன புதிதில் இதே போல நானும் பாட, எனக்கு ஜெர்மனி மேல் காதல் என்று நினைத்து, அலுவலகத்தில் உடனே ஜெர்மனி போகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். தனியாகத் தான். “பிராஜக்ட் ஸ்கோப்பிங். இரண்டே வாரம் தான், திரும்ப வந்துவிடலாம்.” என்றார்கள். ஜெர்மனியில் என்ன கிடைக்கும், எப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டேன், சாப்பாட்டுக்கு என்ன செய்தேன், அங்கே எடுத்துக்கொண்ட படங்கள் இவை என்றெல்லாம் எழுதி உங்களை கஷ்டப்படுத்த போவதில்லை, கவலைப்படாதீர்கள். கிளம்பும்போதுதான் ஃபிரேம் ரிலே (Frame Relay) பிராஜக்ட் என்ன என்று தெரிந்துகொண்டு வா என்று சொல்லி கையில் புத்தகத்தைத் திணித்து அனுப்பினார்கள். “என்னது, ஃபிரேம் ரிலேவா? எனக்கு அதப்பத்தி ஒன்னுமே தெரியாதே,” என்று அதிர்ந்து சொல்லி முடிக்கும்போது “லாஸ்ட் கால் ஃபார் பாசஞ்சர்..” என்று அறிவிப்பு வந்து விமானத்தில் ஏற...

சர்க்கரைப் பொங்கல்

"மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்துமுடிக்கும் நாள்"-- பொங்கல் அன்று காலை டிவியில் என் ராசிக்கு  இப்படி சொன்னர்கள்.  ஒரு மணி நேரத்தில் அது நடந்தேறியது. "இன்னிக்கு நான் பொங்கல் செய்றேன்," என்றேன். இப்படிச் சொல்லக் காரணம் இருக்கிறது; வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுவதை விட பொங்கல் செய்வது சுலபம் என்று நினைத்து அப்படிச் சொல்லிவிட்டேன்! "என்ன, நீங்க பொங்கல் பண்ணப் போறீங்களா?"   "ஏன் நான் பண்ணக் கூடாதா?" "அதுக்கில்ல... அதெல்லாம் சரியா வருமா?" சும்மா இருந்த வாய்க்கு கொஞ்சம் பொங்கல் கிடைத்த மாதிரி, "சரியா அளந்து போட்டா தன்னால நல்லா வந்துட்டுப் போறது. எல்லாமே சயின்ஸ்தான்," என்றேன். "சரி, என்ன அளவு, சொல்லுங்க பார்க்கலாம்.." இந்த கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம். தேர்வில் புத்தகத்தைப் பார்த்து விடை எழுதுவது மாதிரி. என் லாப்டாப்பை எடுத்து " http://mykitchenpitch.wordpress.com/ " என்று என் டைப் செய்து, சர்க்கரை பொங்கலைத் தேடி எடுத்து... "பச்சரிசி ஒரு கப், பயத்தம் பருப்பு, 1/4 கப்.......

காதலாவது கத்தரிக்காயாவது

“எங்க காதலைக் கத்தரிக்காதீங்க!” என்று காதலர்கள் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்க, உடனே அப்பாமார்கள், “காதலாவது கத்தரிக்காயாவது,” என்று சொல்லியிருப்பார்கள். தமிழில் வங்கணம் என்ற சொல் இருக்கிறது அதற்கு நட்பு, காதல், கத்தரிச் செடி என்று ந.சி.கந்தையாப் பிள்ளை, (1950 edition ) தொகுத்த செந்தமிழ் அகராதியில் பொருள் கூறியிருக்கிறார்கள். இரட்டைக் கத்தரி காதல் சின்னம் போல இருப்பது கூட, ‘காதல் என்ன கத்தரிக்காயா?’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம்! காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது, ஆனால் தற்போது கத்தரிக்காய் மீது மக்களுக்கு திடீர் காதல் வந்துவிட்டது. ஏன் என்று பார்க்கலாம். நன்றி :  flickr இந்தக் கத்தரிக்காய்க் காதலைப் பற்றிச் சொல்லும் முன், உங்களுக்கு வழுதலை, வழுதுணங்காய், வழுதுணை பற்றியும் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள்; வழுதுணங்காய், வழுதுணை, வழுதலை என்பவை கத்தரிக்காயின் தமிழ்ப் பெயர்கள். நம்புங்கள், சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று வருகிறது. வழுக்கையாக இருப்பதால் அது வழுதலை என்று பெயர் பெற்றது என்று ஆராய்ச்சி செய்துள்ளா...

ரங்கராஜனும் ரங்கநாதனும்!

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தில்.... குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது; - ஆண்டாள் அருளிய திருப்பாவை( 28 ) இந்த வரிகளுக்கு எளிய விளக்கம்: "எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா; நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது." சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக்கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது "இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்" என்பார். அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும்வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாது சிலசமயம் நடந்து செல்வார். " ஏம்ப்பா வெயில்ல போற?" என்று கேட்டால், "யாருக்குத் தெரியும்?  இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா?" என்பார். அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதி...

பூவா தலையா

மேலே பார்க்கும் இந்த ஃபிளக்ஸ் பேனர் (தமிழ் பெயர் டிஜிட்டல் பேனர்), 3 பாஸ் முறையில், பத்துக்கு பத்து என்ற அளவில், கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் செலவில் அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், வட்டம் என்ற நீண்ட பட்டியலினால் கொஞ்சம் கனமாகவே இருந்தது. ஏழைகளின் காவலன் என்ற வாசகத்துக்கு கீழே, தலைவர் இரு கரம்கூப்பி வணக்கம் சொல்லும் படத்தில் பவழ மோதிரம் பளிச் என்று தெரிந்தது. வட்டங்களின் படங்கள் சதுரமாக ஸ்டாம்ப் சைஸுக்கு கீழே அடுக்கியிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு பட்டி. வெயில் வழக்கதை விட அதிகமாக அடிக்கும் ஒரு நாள். மெயின் ரோட்டிலிருந்து பிரியும் அந்த ரோட்டில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் போனால், “மங்கலம் காலனி வருக! வருக!” என்று வரவேற்கும். அதைத் தாண்டிப் போனால் மங்கலம் காலனி எக்ஸ்டென்ஷன். தபால்காரரைத் தவிர்த்து வேறு யாரைக் கேட்டாலும் “எக்ஸ்டன்ஷனா ? என்று வானத்தைப் பார்த்துவிட்டு “அங்கே சிவா மெடிக்கல்ஸுல கேளுங்க” என்பார்கள். பிரசித்தி பெற்ற சிவா மெடிக்கல்ஸ் பக்கத்தில் குப்பைத் தொட்டி மறைத்திருக்கும் மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த கல்லில் எழுதியிருக்கும் “மூன்றாவது மெயினை”க் கடந்த...