Skip to main content

கூட்டம்

“என்னை கன்னத்தில் பளார்னு அறைஞ்சுட்டாண்டா!”

“நீ என்ன செஞ்சே?”

“பீச் பக்கம் சும்மா வேடிக்கை பாக்கப் போனேன்.”

“உன்னை யார்டா அங்கே எல்லாம் போகச் சொன்னா?”

இந்த உரையாடல் என் பெரியப்பாவுக்கும் என் அப்பாவுக்கும் நான் +2 படிக்கும் போது நடந்தது. அடி வாங்கியவர் என் பெரியப்பா. அதிகம் படிக்காதவர். நாடகங்கள், ரத்னா ஃகபே சாம்பார் இட்லி தான் அவர் உலகம். இ.பி என்ற மின்சார வாரியத்தில் ஒரு சாதாரண வேலையில் இருந்தார். திருவல்லிக்கேணியில் வாடகை வீடு. இன்றும் சைக்கிள்தான் அவர் ஒரே சொத்து. காது கொஞ்சம் சரியாகக் கேட்காது. அவருக்கு தேவையான விஷயம் மட்டும் காதில் விழும்!

எம்.ஜி.ஆர் இறந்த அன்று பீச் பக்கம் சைக்கிளை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். போகும்போது ஏதோ ஒரு தெருவில், ஒரு மேசை மீது எம்.ஜி.ஆர். படம் வைத்து, மாலை போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைத்துள்ளார்கள். அந்தத் தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போன அவரை நிறுத்தியிருக்கிறார்கள்…

“தலைவரே போயிட்டார். நீ எப்படி சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவ? சைக்கிளை விட்டு இறங்கி தள்ளிகிட்டு போடா”

பெரியப்பா கீழே இறங்கி, “என்ன?” என்று கேட்டிருக்கிறார்.

“கஸ்மாலம், தலைவர் போயிட்டார். கும்பிடு போடுடா!”

இதுவும் காதில் சரியாக விழாமல் “என்ன?” என்று திரும்பக் கேட்க… விழுந்தது அறை.

பேசாமல் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார்.

ஐஸ் அவுஸ் என்ற பிரசித்தி பெற்ற இடத்தில் இருக்கும் ஒரு சேரியில் மேலே சொன்ன சம்பவம் நடந்தது. படிக்காதவர்களே இப்படித்தான் என்று உடனே முடிவு கட்டிவிட வேண்டாம்.

படிப்பவர்கள் இருக்கும் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தோம். கல்லூரி ராகிங் எல்லாம் இதில்தான் சேரும். கல்லூரி, பள்ளிகளில் படிக்கும்போது வகுப்பில் ‘ஓஓஓ’ என்று சத்தம் போடுவதும், கல்லூரி விழாக்களில் “அடுத்ததாக…” என்று அறிவிப்பு வந்தவுடன் தேவையே இல்லாமல் கைத்தட்டுவதும், சத்தமாக கமெண்ட் அடிப்பதும்கூட இந்த வகைதான்.

மேலே சொன்ன எல்லாவற்றிலும் இருக்கும் ஓர் ஒற்றுமை - கூட்டம்.

கூட்டம் என்பது பலபேர் சேர்ந்த ஒரு முகம்! கூட்டத்தின் உளவியல் பற்றி 200 வருடங்களுக்கு முன்னரே ஆராய்ந்துள்ளார்கள். கூட்டம் பற்றி பல புத்தகங்கள், ஆராய்ச்சி இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கூட்டத்தில் என்ன மாதிரி வண்ணங்கள் உபயோகப்படுத்தினால் மக்களைக் கவரலாம் (தமிழ் நாட்டில் பார்க்கும் எல்லாக் கொடிகளிலும் கருப்பு, பச்சை, சிகப்பு, மஞ்சள், நீலம் மட்டுமே இருப்பதற்குக் காரணம் அதுதான்.) என்பதைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். கூட்டத்தில் கலவரம் ஆரம்பித்துவிட்டால் அதைத் தடுப்பது மிக கடினம்; அப்போது அங்கே தலைவர் சொல்லை யாரும் கேட்க மாட்டார்கள் என்றும் ஆராய்ந்து கண்டிருக்கிறார்கள்.

சென்ற வருடக் கடைசியில் சென்னையில் இருந்தபோது, கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் இறந்துவிட்டார் என்ற குறுஞ்செய்தி வந்தது. திருச்சி ஊர்வசி தியேட்டரில் ரஜினியுடன் அவர் நடித்த படமும், பெங்களூரில் கடை, வாகனங்கள், தமிழர்களும் நினைவுக்கு வந்தார்கள். அடுத்த நாள் செய்தித்தாளில் வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன என்று வந்திருந்தது. கூடவே இந்தக் கலவரங்களில் தொடர்புடைய கலவரக்காரர்களை, தொலைக்காட்சி, வீடியோ காட்சிகள் உதவியுடன் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சொல்லியிருந்தார். கூட்டம் பற்றிய உளவியல் இவர்களுக்குப் புரியவில்லை. கூட்டத்தில் வன்முறை செய்பவர்களுக்கு அவர்களுடைய ஆளுமை போய், கூட்டதின் ஆளுமை வலுப்பெற்று விடுகிறது. கூட்டத்துக்குத் தலைகள் பல, மூளை மட்டும் கிடையாது. (The mob has many heads but no brains..)கூட்டம் எப்போதும் ஆபத்து விளைவிக்கக் கூடியதுதான்தான். அதில் பெரும்பாலும் நல்லவர்கள் இருப்பதில்லை. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா தான் என்று பாகுபாடு கூட்டத்துக்கு இல்லை.

ஃபிரான்சு, இங்கிலாந்து தேசங்களில் நடந்த எல்லாப் புரட்சிகளிலும் கூட்டம் இல்லாமல் இருக்காது. இன்றும் பிபிசி அல்லது வேறு எந்த செய்திச் சானலைப் பார்த்தாலும் கூட்டம், கலவரம் என்ற செய்தி இல்லாமல் இருக்காது.

கை தட்டுவதும் ஒரு விதத்தில் கூட்டம் தரும் ஊக்கம் தான். கூட்டத்தை ஊக்குவிப்பதும் அதுவே. வீட்டில் தனியாக கிரிக்கெட் பார்ப்பதற்கும், குடும்பத்துடன் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தனியாகப் பார்க்கும் போது, டெண்டுல்கர் 100 அடிக்கும் போது கை தட்ட மாட்டோம், ஆனால் அதே குடும்பத்துடன் பார்த்தால் கைத்தட்டி, தீபாவளிக்கு வெடிக்காமல் விட்ட வெடியை பால்கனியில் வெடிப்போம்;

பங்கு மார்கெட்டில் கும்பலாக எல்லோரும் எதையாவது விற்பதும், வாங்குவதும் இந்த வகையே.  திருப்பதியில் கூட்டமாகக் கோவிந்தா என்பது இந்த வகையில் சேருமா என்று யோசிக்கலாம்.

நான் பெங்களூரில் பார்த்த இரண்டு கூட்டம் பற்றிய சம்பவங்கள்.

முதலில் ராஜ்குமார் இறந்த போது நடந்த கலவரம்.

அந்த புதன் கிழமை அலுவலகத்தில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு வெளியே வந்த போது, நூறு பேர் இருக்கவேண்டிய இடத்தில் என்னையும் சேர்த்து மொத்தமே நான்கு பேர் தான் இருந்தார்கள்.

விசாரித்ததில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று எல்லோரையும் வீட்டிற்குப் போகச் சொல்லி ஈ-மெயிலில் அறிவுரை. நானும் கிளம்பினேன். வீட்டுக்குப் போகும் வழியில் ரோட்டில் டயர் எரிந்துகொண்டிருந்தது. சில பஸ், கார்களில் கண்ணாடிகளைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்குமார் ஜெராக்ஸ் படங்கள் முன்பும் பின்பும் கண்ணாடிகளில் ஒட்ட வைத்துக்கொண்டு வேகமாகப் போய்க்கொண்டு இருந்தார்கள். சுமார் இரண்டு கி.மீ. தூரத்துக்கு வாகன நெரிசல்… பயந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்து தொலைக்காட்சியைப் போட்டேன். அதில் ராஜ்குமார் இறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாள் காலையிலிருந்தே தொலைக்காட்சியில் எங்கும் வன்முறை, பதட்டம் என்று சோக இசைக்கு நடுவே காண்பித்துக்கொண்டு இருந்தார்கள்.

தொலைக்காட்சியில் பார்த்த போது வன்முறை செய்பவர்கள் 15-25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தார்கள். பெரும்பாலும் வேலை இல்லாதவர்கள். தொலைக்காட்சி கேமிராவைப் பார்த்துச் சிரித்து, தங்கள் சோகத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்! ராஜ்குமார் ஊர்வலமாக எடுத்துச் சென்ற வழியெல்லாம் இந்தக் கூட்டம் கல்லெறிவதையும் காவல்துறையினரை அடிப்பதையும் வண்டிகளை எரிப்பதையும் பார்த்தபோது என்னவோ செய்தது.

இந்த மாதிரிக் கூட்டங்களுக்கு ஒரு விதமான anonymity கிடைத்துவிடுகிறது. அடையாளமிழந்தால் (Anonymity) கிட்டும் பாதுகாப்பில் இவர்கள் யாரை வேண்டுமானாலும் அடிக்கிறார்கள், உடைக்கிறார்கள். குடித்திருப்பதால் எல்லாம் இவர்களுக்குக் குறி தவறுவதில்லை.

ஜூலியஸ் சீசர் இறந்தவுடன், ஆந்தோனியின் பேச்சினால் உசுப்பப்பட்ட ஊர் மக்களால் ஒரு கலவரம் வெடிக்கும். கூட்டம் வன்முறையில் இறங்கும். அப்போது சின்னா (Cinna) என்ற கவிஞர் இந்தக் கூட்டத்தினரிடம் மாட்டிக் கொள்வார்.

“உன் பேர் என்ன?” என்று கூட்டத்தினர் கேட்பார்கள்.

அந்த அப்பாவி கவிஞர் “சின்னா” என்பார்.

“சதிகாரன் சின்னா, இவன் தான் கொல்லுங்கள்!” என்பான் கூட்டத்திலிருந்த ஒருவன்.

“ஐயோ நான் சின்னா என்ற கவிஞர்..” என்பார் சின்னா.

“கொல்லுங்கள் இவனுடைய மோசமான கவிதைகளுக்கு!!” என்று கத்தியபடியே அவனைச் சாகடிப்பார்கள்.

கூட்டத்துக்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டும். இந்த முறை அது ராஜ்குமார் இறந்த செய்தி. இதில் தமிழ், கன்னடம் என்று இதைப் பிரிக்கமுடியாது. எல்லோரிடமும் இந்த வன்முறை இருக்கிறது. நாகரிகம், மதம் எல்லாம் நம்மை ஓரளவு கட்டிப்போட்டுள்ளது. அவ்வளவு தான்.

ராஜ்குமார் இறுதி ஊர்வலம் 12 கீமீ தூரத்தைக் கடக்க நான்கு மணிநேரம் ஆனது. இறுதிச் சடங்குகள் நடக்க விடாமல் கூட்டம் எல்லோரையும் தள்ளியது. ராஜ்குமார் எழுந்து, “என்னைச் சீக்கிரம் குழியில் போட்டு அடக்கம் பண்ணுங்கப்பா!” என்று கேட்டுக் கொண்டவுடன் குழி மூடப்பட்டது. தொடர்ந்து தொலைக்காட்சியில் ஜெயபிரதாவுடன் ராஜ்குமார் டூயட் பாடிக்கொண்டிருந்தார்!

அமைதியான குளத்தில் கல்லெறிவது, பூக்களைப் பறிப்பது, டிஸ்கவரியில் சிங்கம் மானைக் கொல்வதைப் பார்ப்பது எல்லாம் ஒரு விதத்தில் வன்முறை தான்.

இரண்டு கதவுகள் உள்ள ஓர் அறையில் ஒரு கூட்டத்தை அனுப்பிவிட்டு அவர்களுக்கு பூச்சாண்டி காண்பித்து பயப்பட செய்து, இரண்டு கதவையும் திறந்துவிட்டால் முக்கால்வாசி பேர் ஒரே கதவை நாடிச் செல்வார்கள் என்று கூட ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இரண்டு கதவுகளும் ஒரே தூரத்தில் இருந்தால் கூட பல பேர் ஒரே கதவுக்குச் சென்று முட்டிக்கொள்வார்கள். எந்த தேசத்து கூட்டமாக இருந்தாலும், கூட்டத்தில் கேட்கும் ஒலி கூட ஒரே மாதிரி ஓசையுடன் இருப்பதை அடுத்த முறை கவனித்துப் பாருங்கள்.

அடுத்த சம்பவம் என் அலுவகலத்துக்கு வெளியில் நடந்தது.

“சார், உங்களிடம் வேலை செய்யும் குமார் (பெயர் மாற்றப்படுள்ளது, அவர் ஒரு பெங்காலி) பக்கத்தில் இருக்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருக்கு அடி பட்டிருக்கிற‌தாம்.”

“என்ன ஆயிற்று?”

“என்னவென்று தெரியவில்லை. ஆனால் காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதிவிட்டார்களாம்.”

புதன் கிழமை மாலை 6:40க்கு செல்பேசியில் இந்த சம்பாஷனை நடைபெற்றது. நான் அந்த சமயம் மீட்டிங்கில் இருந்தேன். மீட்டிங்கை விட்டுவிட்டு எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தேன்.

குமார் அங்கு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் கண்ணில் கலவரம் தெரிந்தது.

“என்ன ஆச்சு குமார்?”

“காரை வெளியிலே எடுக்கும் போது ஸ்கூட்டரில் வேகமாக வந்த இருவர் மோதி கீழே விழுந்துவிட்டார்கள். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, ஆனால் அவர்களுக்கு கை, காலில் சின்ன அடி,” என்றார்.

அடிப்பட்டவர்கள் முதலுதவி பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 45 வயதுக்கு மேல் இருக்கும். என்ன காயம் என்று பார்த்தேன். ஒருவருக்கு கைமுட்டியில் சின்னதாகச் சிராய்ப்பு. மற்றொருவருக்கு என்ன காயம் என்று நான் கேட்டதும்தான் தேட ஆரம்பித்தார்.

அப்போதுதான் கவனித்தேன், குமார் சட்டை கிழிந்திருந்தது.

“சட்டை ஏன் கிழிந்திருக்கிறது உனக்கு ஒன்றும் ஆகலையே?”

“பைக்கில் இடித்துவிட்டுக் கிழே விழுந்தவர்கள், என் கன்னத்தில் அடித்துவிட்டு, என் சட்டையைக் கிழித்துவிட்டார்கள். பக்கத்தில் இருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டு இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கச் சொன்னார்கள்.”

இப்படி கைநீட்டி அடித்தவர்களை நாலு கேள்வி கேட்ட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எங்களுக்குக் கன்னடம் தெரியவில்லை. உடனே பக்கத்தில் இருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு வந்து எங்கள் மேனேஜரிடம் விஷயத்தைச் சொன்னோம்.

நாங்கள் மூவரும் மருத்துவமனை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும்முன், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்கள், எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். (அவர்களுக்கு நாங்கள் மருத்துவமனை பில் குடுக்காமல் எஸ்கேப் ஆகிவிடுவோம் என்ற பயம்.)

வந்தவர்களை எங்கள் மேனேஜர், “இரண்டு பேர் மீதும் தவறு. அப்படியிருக்க ஏன் குமார் மீது கைவைத்தீர்கள்? அது உங்கள் தவறு. நீங்கள் அவரை அறைந்த பின்பும் உங்களுக்கு சிகிச்சை அளிக்கிறார், அப்படி இருக்க… ”

உடனே அவர்களுக்குக் கோபம் மேட்டூர் அணையில் காவிரி நீர் போல் வந்தது.

“நாங்கள் அப்படித்தான் வேகமாக வருவோம். உங்கள் ஊழியர் சீட் பெல்ட் போட்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. (அவர்கள் ஹெல்மெட் போடவில்லை) நீங்கள் ஒரு கன்னடர், இந்த ஊர் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு ஏன் அவர்களுக்கு சப்போர்ட் செய்கிறீர்கள்…,” என்று ஆரம்பித்தவர்கள், “உங்களை எல்லாம் ஊரைவிட்டு விரட்டவேண்டும். எல்லா ஐ.டி. கம்பெனிகளையும் மூடவேண்டும்; அப்பா.. அம்மா… ,” என்று எல்லோரையும், எல்லாவற்றையும் சந்திக்கு இழுத்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக மேலும் இரண்டு பேர் பைக்கில் வந்து ஹிந்தியில் சில கெட்ட வார்த்தைகளைச் சொன்னார்கள். கூட்டம் சேர ஆரம்பித்தது. எல்லோரும் எப்போது அடிதடி ஆரம்பிக்கும் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள். தசாவதாரத்தில் கேயாஸ் தியரி என்று பேசினார்கள். அப்போது புரியவில்லை, கூட்டத்தைப் பார்த்ததும் புரிந்தது.

உடனே நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவது என்ற முடிவுக்கு வந்தோம். போனதற்கு முக்கிய காரணம் கூட்டத்தைத் தவிர்க்க.

“வாருங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு; அங்கே போய் இரண்டு பேரும் புகார் கொடுக்கலாம்.”

“நாங்களே டிராஃபிக் போலீஸ்தான்,” என்ற அதிர்ச்சி தரும் உண்மையைச் சொன்னார்கள். உடனே கூட்டம் கொஞ்சம் சலசலத்தது. ஸ்கூட்டரில் வந்தவர்கள் ரொம்ப நல்லவர்கள், எங்கள் மீது தான் தப்பு என்று கூட்டத்தில் சிலர் பேச ஆரம்பித்தார்கள். மொத்த கூட்டமும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் ஆமோதிக்கப் போகிறது என்று உணர்ந்தோம்.

“அதனாலென்ன, ஸ்டேஷன் போகலாம்.”

ஸ்டேஷனுக்குப் புறப்பட்டு சென்றோம். அவர்களும் தயங்கித் தயங்கி வந்தார்கள்.

எங்கள் ஆபீஸுக்கு பக்கதில் இருக்கும் மடிவாளா போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றோம். அங்கே இருக்கும் போலீஸ் ஒருவர் முழுக் கதையும் கேட்டுவிட்டு எங்கள் புகாரை அந்தக் கோடியில் இருக்கும் ஆடுகோடி காவல் நிலையத்தில் கொடுக்கச் சொன்னார்.

ஆடுகோடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “இதோ பாருங்க, கோர்ட் கேஸ் என்றால் இருவருக்கும் பிரச்சினைதான்; அதனால் உங்களுக்குள் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள்,” என்று ஒரு தீர்வு சொன்னார்.

இருவரிடமும் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டார். நாங்கள் எழுதிய கடிதத்தை அவர்களிடமும், அவர்கள் எழுதிய கடிதத்தை எங்களிடமும் கொடுத்தார். முதலுதவி சிகிச்சைக்கு ஐநூறு ரூபாயை அவர்களிடம் கொடுக்கச் சொன்னார். நாங்களும் கொடுத்தோம்.

ஸ்கூட்டரில் வந்தவர்கள் போலீஸ்காரர்களே இல்லை என்ற உண்மை போலீஸ் ஸ்டேஷனில் தெரிந்தது.

நாங்கள் கிளம்பிய போது, ஸ்கூட்டரில் வந்த இருவரும் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் தமிழ் ஆசிரியர் ஒருமுறை ஒன்றை செய்யச் சொன்னார். அவர் சொன்னது இது தான்- வெளியே ரோட்டில் செல்லும் போது ஏதோ ஒரு மரம் அல்லது விளக்கு கம்பம் ஏதாவது ஒன்றின் மேலே பார்த்துக்கொண்டு இருங்கள். கொஞ்சம் நேரத்தில் உங்களுடன் நாலு பேர் வந்து நீங்கள் பார்ப்பதை அவர்களும் பார்ப்பார்கள். நீங்கள் மெதுவாக நழுவி வந்தாலும் கூட்டம் மேலே எதையாவது பார்த்துக்கொண்டுதான் இருக்கும் என்பார். நானும் என் நண்பரும் இதைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறோம். கூட்ட உளவியல்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அசோகமித்திரன் ஒரு சின்ன கட்டுரை எழுதியிருந்தார். அதை என்னால் மறக்க முடியாது. அது உங்கள் பார்வைக்கு:

இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆர். காலமான தினம், யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்தவேண்டியவர்கள் திண்டாடிப் போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கில் யாரும் முன்கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்கமாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச் சின்னங்கள். எம்.ஜி.ஆர். இறந்த தினம் இந்தத் துக்கச் சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது. தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால் பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச் சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது.

ஒரு கடையும் திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது. வண்டி கிடைத்தாலும் தெருவில் திரண்டிருக்கும் ஜனத்திலிருந்து அதைக் கொண்டு செல்ல அனுமதி கிடைக்காது. யாரிடம் எதற்கு அனுமதி?

“என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க.”

“எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது.”

“அதுக்குள்ளே எடுத்துப் போயிடறோம்.”

“எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம்தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு.”

அப்பா பிணவறையிலிருந்து எழுந்து நடந்து போனார்.

Comments