Skip to main content

சர்க்கரைப் பொங்கல்

"மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்துமுடிக்கும் நாள்"-- பொங்கல் அன்று காலை டிவியில் என் ராசிக்கு  இப்படி சொன்னர்கள். 


ஒரு மணி நேரத்தில் அது நடந்தேறியது.


"இன்னிக்கு நான் பொங்கல் செய்றேன்," என்றேன். இப்படிச் சொல்லக் காரணம் இருக்கிறது; வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுவதை விட பொங்கல் செய்வது சுலபம் என்று நினைத்து அப்படிச் சொல்லிவிட்டேன்!"என்ன, நீங்க பொங்கல் பண்ணப் போறீங்களா?"
 
"ஏன் நான் பண்ணக் கூடாதா?"


"அதுக்கில்ல... அதெல்லாம் சரியா வருமா?"


சும்மா இருந்த வாய்க்கு கொஞ்சம் பொங்கல் கிடைத்த மாதிரி, "சரியா அளந்து போட்டா தன்னால நல்லா வந்துட்டுப் போறது. எல்லாமே சயின்ஸ்தான்," என்றேன்.


"சரி, என்ன அளவு, சொல்லுங்க பார்க்கலாம்.."


இந்த கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம். தேர்வில் புத்தகத்தைப் பார்த்து விடை எழுதுவது மாதிரி. என் லாப்டாப்பை எடுத்து "http://mykitchenpitch.wordpress.com/" என்று என் டைப் செய்து, சர்க்கரை பொங்கலைத் தேடி எடுத்து...


"பச்சரிசி ஒரு கப், பயத்தம் பருப்பு, 1/4 கப்...." என்று படிக்க ஆரம்பித்தேன்.


"துளியூண்டு கடலைப்பருப்பும் போடணும், எங்காத்து வழக்கம்"


"அட படிக்கிறேனில்ல, அடுத்தது அது தான், துளியூண்டு இல்லை இரண்டு டேபிள் ஸ்பூன்"


"ஜெயஸ்ரீ சரியாதான் சொல்லியிருக்கா."


"ஸ்ரீரங்கம்காரா எல்லாம் சரியாதான் சொல்லுவா." (எங்கள் ஊரை எப்படி விட்டுக் கொடுப்பது?)


என் மனைவிக்குக் கொஞ்சம் அதிர்ச்சி என்று நினைக்கிறேன் "சரி வெல்லம் எவ்வளவு அளவு போட்டிருக்கு"


"இரண்டு அரை கப்"
 
"என்ன இரண்டு அரை கப்பா ? ரொம்பக் கம்மி"


"சரியா புரிஞ்சுக்கோ, இரண்டரை கப்"


"இது கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கு, பார்த்துக்கோங்க" என்றாள்


"ஸ்ரீரங்கத்துகாரா சரியாதான் சொல்லுவா, வேணுமுன்னா பாம்பேக்கு ஃபோன் செஞ்சு கேட்கிறேன்"
 
"பாம்பேல வெல்லமெல்லாம் சீப்பா கிடைக்கும் போல; 11 வருஷமா சக்கரை பொங்கல் செய்றேன். எனக்கு என்ன வந்தது? அப்படியே பண்ணுங்க பார்க்கலாம்."


சவாலுக்குத் தயாரானேன்.


சாதாரண நாளில் சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கும், பொங்கல் அன்று சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கும் ரூல்ஸ் மாறுகிறது. வெண்கல பானையில் நாமம் இட்டு, தாலி கட்டி அதில் இஞ்சி, மஞ்சள், கரும்பு போன்ற எக்ஸ்டரா ஃபிட்டிங்  பூட்டி, அடுப்பு மூட்டி.... பொங்கல் எப்போது பொங்க வேண்டும் என்று தமிழ் காலெண்டரோ அல்லது எஸ்.டி.டி பாட்டியோ சொல்லுவார்கள். அதற்கேற்றாற்போல் தான் அடுப்பில் வைக்க வேண்டும்.


அடுப்பில் ஏதையோ போட்டு கொதிக்க வைக்கவேண்டும், அவ்வளவுதானே என்று களத்தில் இறங்கியபின் தான் இந்த வேலை எல்லாம் சேர்ந்துகொண்டது. போன பொங்கலுக்கு பரணில் போட்ட வெண்கலப் பானையை எடுத்து, புளிபோட்டுத் தேய்க்க ஆரம்பித்தேன்.


திருமண்ணைக் குழைக்கும்போது, "அட எங்காத்து வழக்கம் மாதிரியே செய்றீங்க," என்று மனைவி சொல்ல... பானை ஈரமாக இருந்ததால் நான் போட்ட வடகலை நாமம் ஒரு சொட்டுத் தண்ணீர் வழிந்து தென்கலை ஆகியிருந்தது.


பொங்கலுக்கு வேண்டிய சாமான்கள் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தேன். நல்ல வேளை எல்லாம் இருந்தது. அல்லது முதல்நாளே என் மனைவி வாங்கி வைத்திருந்தாள்.


பிரச்சினை ஆரம்பித்தது.


வெல்லம் உருண்டையாக இருந்தது. எப்படி 2 1/2 கப்பாக அளப்பது என்று தெரியவில்லை. பிராஜக்ட் மேனேஜருக்கு இது கூட தெரியவில்லை என்றால்? உடனே என் மூளைக்கு அவுட் ஆப் பாக்ஸ் ஐடியா தோன்றியது. வெல்லத்தை பொடியாகச் செய்து படத்தில் இருப்பது மாதிரியே ஒரு கப்பைத் தேடி, அதில் பொடி செய்த வெல்லத்தை அடைத்து, அச்சு வெல்லம் செய்ய ஆரம்பித்தேன். ஒரு வழியாக, கொஞ்சம் போராடி வெல்லம் மற்றும் சில சாமான்களை எடுத்து ஒரு வட்டத் தட்டில் படத்தில் இருப்பது மாதிரியே அடுக்க ஆரம்பித்தேன்.


"ஐயோ என்ன பண்றீங்க?"


"முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸை எண்ணிண்டிருக்கேன்; 20 போடணுமாம்"


"அடக்கடவுளே, கையில இருக்கறத அப்படியே போடுங்க. நிறைய போட்டா நல்லாதான் இருக்கும்"


"இருந்தாலும் அளவுன்னு ஒன்னு இருக்கில்ல. நான் அதுபடிதான் செய்வேன். சயின்ஸ் யூ ஸீ"


அரிசி, பருப்பு எல்லாம் அலம்பி நீரை வடித்து, எப்படிச் செய்ய வேண்டும் என்று போட்டிருந்ததோ அதே போலச் செய்ய ஆரம்பித்தேன். பால் ஒரு கப் உள்ளே சென்ற காரணத்தால் பொங்கல் பொங்க ஆரம்பித்தது.


"என்ன அதுக்குள்ள பொங்கலைப் பொங்க வைச்சுட்டீங்க? மாசம் பொறக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு," என்று சொல்லி 'டக்' என்று அடுப்பை அணைத்துவிட்டு டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். அதாவது சர்க்கரைப் பொங்கல் ஆஃப்டர் தி பிரேக்.


எவ்வளவோ தேடிப் பார்த்தும், சர்க்கரை பொங்கல் செய்யும் குறிப்பில் இந்த மாதிரி தடாலடிகளை எப்படிச் சமாளிப்பது என்று உபகுறிப்பு எதுவும் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க ஆரம்பித்தேன்.


அரை மணி நேர இடைவேளைக்குப் பிறகு, பொங்கலைப் பொங்கவிட்டு, கடைசியில் "ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, முந்திரி, கிஸ்மிஸ், மிகச் சிறுசிறு துண்டுகளாகக் கீறிய தேங்காய் எல்லாவற்றையும் 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் பொரித்துப் போட்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து..." இறக்கி வைத்தேன்.


நான் செய்த பொங்கலை உடனே டேஸ்ட் செய்ய முடியவில்லை. பொங்கலன்று, யார் பொங்கல் செய்தாலும் அதை பெருமாளுக்குக் காண்பித்துவிட்டு சாப்பிடுவது வழக்கம். அதனால் சுடச் சுட பெருமாளுக்குக் காண்பித்துவிட்டு, பெருமாள் சாப்பிட்டாரா இல்லையா என்று கூட பார்க்காமல் உடனே அதை எடுத்து ஒரு தட்டில் போட்டு என் மனைவியிடம் கொடுத்தேன். தன்னம்பிக்கை.


"நான் அப்பவே சொன்னேன் வெல்லம் ரொம்ம்ம்ம்ம்ப ஜாஸ்தி. நீங்க இதை மோந்து பார்த்தாலே ஷுகர் ஏறிடும். ஜாக்கிரதை"


நம்பிக்கை இல்லாமல் கொஞ்சம் வாயில் போட்டுப் பார்த்தேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள், அந்தத் தித்திப்பு இன்னும் என் நாக்கில் இருக்கிறது, இத்தனைக்கும் தினமும் இரண்டு வேளை பல் தேய்க்கிறேன்.


வெண்கல பானையின் அடியில் பொங்கல் அடிப்பிடித்து இருக்க, விம், சபினா எல்லாவற்றையும் உபயோகித்துத் பினிஷிங்  டச் செய்து பரணில் ஏற்றிக் களைப்பாக இருந்தபோது...


"வெல்லத்தை போட்டு கொதிக்க வைக்கற டிஷ்ஷை எல்லாம் கெடுக்க ஒரு அசாத்திய திறம வேணும். உங்களுக்கு அது நிறையவே இருக்கு," என்றாள்.


மாலையில் என் வீட்டுக்கு வந்த என் மாமியார் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை வாயில் போட்டுப் பார்த்துவிட்டு, "இந்தத் தடவை சக்கரைப் பொங்கல் பிரமாதமா அமைஞ்சிருக்கே. என்ன அளவுடீ போட்ட?"


"அவரத்தான் கேக்கணும்"


சுஜாதா இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் எழுதியது.


( படம், சமையல் குறிப்பு நன்றி: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் )

Comments