Skip to main content

மேல்கோட்டையில் ஒரு நாள்

மேல்கோட்டைக்குப் பல முறை சென்றிருந்தாலும், கடந்த மாதம் 25ஆம் தேதி அங்கு பிரசித்திபெற்ற ‘வைரமுடி’ உத்ஸவத்தைக் கண்டுகளித்தது மறக்க முடியாத அனுபவம்.

“எக்கசக்கமா கூட்டம் இருக்கும், காரை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திவிடுவார்கள்” போன்ற எச்சரிக்கைகளைக் கேட்டுவிட்டு பெங்களூர் மைசூர் ரோட்டில், ராம் நகரத்தில் இருக்கும் ‘காமத் லோகருச்சி’ ஹோட்டலை அடைந்தபோது காலை எட்டரை மணி. தென்னை ஓலை இட்லியை சாப்பிட்டுவிட்டு மேல்கோட்டை சென்றபோது மதியம் பன்னிரண்டு மணி.

மேல்கோட்டை மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் தாலுக்காவில் இருக்கிறது. பெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில் மாண்டயாவிலிரிந்து சுமார் 25 கிமீ தூரத்தில், 150 மீட்டர் உயரத்தில் உள்ள தட்டையான பகுதிதான் மேல்கோட்டை என்ற ஊர். 1991ஆம் கணக்கின் படி இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை 2685. தற்போது இதைவிட 100 பேர் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

திருநாராயணபுரம், யாதவகிரி என்ற பெயர்கள் இருந்தாலும் மேலே இருக்கும் கோட்டை என்ற பொருள்பட மேல்கோட்டை என்ற பெயரே பிரசித்தம். உடல்நலத்துக்கு உகந்த இடமாகவும், வேளாண்மை நிலங்கள், நீர் நிலைகள் சூழ்ந்த, ஃபேண்டஸி கதைகளில் வருவது போன்றது இந்த ஊர்.

மேல்கோட்டை என்ற பெயர் 14ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் வருகிறது. யாதவகிரி என்ற பெயர் 12ஆம் நூற்றாண்டு ஒய்சாள கல்வெட்டில் கிடைக்கிறது. ஆக பழமையான பெயர் யாதவகிரி, ஒய்சாள அரசர்களின் வம்சமான யதுவம்சம் கூட காரணமாக இருக்கலாம். இந்த ஊரைச் சுற்றி இருக்கும் ஒன்பது பத்து உடைந்த தூண்கள் முன்பு இங்கே ஒரு பெரிய கோட்டை இருந்ததற்கான வரலாற்றுச் சுவடுகள். இந்த இடம் ஒரு காலத்தில் இராணுவத்தளமாகக் கூட இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

melkote_narashimar_3

கோயிலுக்குத் தெற்குப் பக்கம் பழைய கோட்டையின் வாயில் கதவு என்று எண்ணத் தோன்றும் ராயகோபுரம் இருக்கிறது. கோபால ராய கோபுரம் என்றும் இதற்கு பெயர். தமிழ் சினிமா இந்த நான்கு தூண்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. பல படபிடிப்புக்கள் இங்கே நடந்திருக்கிறது. இந்தத் தூண்களில் இருக்கும் சிற்பங்களில் இருக்கும் நங்கைகளைப் பார்த்தாலே சொல்லிவிடலாம் இவை ஒய்சாள மன்னர்களின் கைவண்ணம் என்று. இதே போலச் சிற்பங்களை ஸ்ரீரங்கம் வேணுகோபாலன் சன்னதியில் பார்க்கலாம்.

மேல்கோட்டையிலிருந்து பிரியும் பள்ளத்தாக்கிலிருந்து போகும் கற்சாலை தெற்கே ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கும் கிழக்கே தொண்டனூருக்கும், வடக்கே நாகமங்கலாவுக்கும் செல்வதைப் பார்க்கலாம். இந்த மூன்று இடங்களும் இடைப்பட்ட கால கட்டத்தில் முக்கியமான இடங்களாகக் கருதப்படுகிறது.

மாண்டைவிலிருந்து மேல்கோட்டை செல்லும் போது இரண்டு பக்கமும் பசுமைக் காட்சிகள் நன்றாக இருக்கிறதே என்று நினைத்த போது ரயில்வே கேட் போட, அந்த சமயத்தில் அந்தப் பசுமைகளை நின்று ரசிக்க முடிந்தது. நிற்க வைத்த ரயிலுக்கு நன்றி சொல்லிவிட்டு மேல்கோட்டைக்குச் சென்ற போது மத்தியானம் 12 மணி.

melkote_nature

கோயிலுக்குப் பின்புறம் ஒரு மண்டபத்தில் பெரிய தொன்னையில் எல்லோருக்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம், சக்கரைப் பொங்கல் என்று கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். கூட்ட நெருக்கடி, அடிதடி, குலம் என்கிற வித்தியாசம் எதுவும் இல்லாமல் எல்லோரும் வரிசையில் தொன்னையில் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். தொன்னை என்றால் நீங்கள் நினைக்கும் தொன்னை இல்லை, இந்த தொன்னையில் சின்ன கைக்குழந்தையைக் கூட உட்கார வைக்கலாம்!

மேல்கோட்டையில் மலை உச்சியில் இருக்கும் நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தம்.

வைரமுடி உற்சவம் ஆரம்பிக்க மாலை 6 ஆகும் என்பதால், மலை உச்சியில் இருக்கும் நரசிம்மர் கோயிலுக்குக் கிளம்பினேன். நரசிம்மர் கோயில் மலை அடிவாரத்தில் கல்யாணி தீர்த்தம் (குளம்) அழகான ஓர் இடம். குளக்கரையில் இருக்கும் சின்னச் சின்ன கோயில்களும், மண்டபங்களும் மிகுந்த கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். மிகுந்த புனிதத் தன்மையுடன் விளங்கும் இந்தக் குளத்தில் ஸ்ரீராமானுஜர் குளித்தார் என்றும் சொல்லுவார்கள். குளக்கரையில் இருக்கும் சில மண்டபங்களில் மக்கள் கிறுக்கித் தள்ளியுள்ளார்கள். ஒரு அம்மா வாட்டர் பாட்டில் கொண்டு தன் குழந்தைக்கு அலம்பி விட்டுக் கொண்டு இருந்தார். அரசங்கம் இந்த புராதன சின்னங்களை பாதுகாக்க முதலில் ஒழுங்கான கழிப்பறைகளைக் கட்ட வேண்டும்.

நரசிம்மர் கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் மண்டபங்களை பழைய காலத்துப் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் என்று அரசு அறிவித்திப்பதை பார்க்கலாம். ஆனால் அவை எல்லாம் ஒழுங்காகப் பாதுகாக்கப்படுகிறதா என்பது சந்தேகமே. நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழி நெடிகிலும் கள்ளி மந்தாரை பூத்திருக்கிறது. மொத்தம் 400 படிக்கட்டுக்கள் இருக்கின்றன, கிட்டத்தட்ட பத்து படிக்கு ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரு சின்னப் பையன், ஆர்மோனியப்பெட்டியை ஒரு கையில் இயக்கிக்கொண்டு மறுகையில் மழலை மாறாமல் ஸ்ரீநிவாசர் பாட்டைப் பாடிக்கொண்டு பாட்டுக்கு நடுவே பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தது மனதை என்னவோ செய்தது. மேலே சுமாரான பராமரிப்பால் நரசிம்மர் கோயில் கோபுரத்தில் உள்ள சட்டம் எல்லாம் வெளியே தெரிந்துக்கொண்டு இருக்கிறது. இந்தக் கோயிலில் இருக்கும் நரசிம்மர் மூர்த்தி/விக்ரஹம் பிரஹலாதனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று சொல்லுவார்கள். இன்னொரு கதையும் இருக்கிறது. திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி பெரும் சேனையுடன் திருநாராயணபுரத்தை நோக்கி வந்துக்கொண்டு இருந்த போது, படை யானைகள் உடல்நலம் குன்றி நோய்வாய்ப்பட்டன. அங்கிருந்த ஒருவர் கூறிய யோசனையால் நரசிம்மரை வேண்ட அவை குணமடைந்தன. அதனால் ஹைதர் அலி மகிழ்ந்து நரசிம்மருக்கு ஓர் பெரிய பறையைச் சமர்ப்பித்தான் என்று சொல்கிறார்கள். இன்றும் பூஜை வேளையில் ஒலிக்கப்படும் இந்தப் பறையின் ஒலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் கேட்கலாம் என்கிறார்கள்.

நரசிம்மர் கோயில் சொல்லும்போது ஒரு தூணில் புத்தர் உருவம் செதுக்கப்பட்டு இருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்த நரசிம்மர் கோயிலின் காலம் ஒய்சாளர்களில் கடைசிகாலமாகவோ அல்லது விஜயநகர ஆரம்ப காலமாகவோ இருக்கலாம். நரசிம்மர் கோயில் மேலேயிருந்து சுற்றியுள்ள கிராமங்களைப் பார்க்கலாம். பக்கத்தில் எந்த ஐ.டி கம்பெனியும் வராமல் இருப்பதால் சுற்றியுள்ள கிராமங்கள் இன்னும் கற்புடன் இருக்கின்றன.

நரசிம்மர் கோயில் அடிவாரத்தில் சின்னதாகப் பாறையில் குகை போல இருக்கும் இடங்களில் பாண்டவர்கள் முன்பு ஒரு காலத்தில் ஒளிந்துக்கொண்டதாகச் சொல்லுகிறார்கள். அவற்றின் கோபுரம் சோழ, பாண்டிய சாயலில் வியக்க வைக்கிறது.

melkote_thiruviza_street

கீழே இறங்கி வந்த போது ராஜவீதி என்னும் கடைத்தெருவில் திருவிழாக் கூட்டம். முதலில் என் கண்களில் பட்டது இனிப்புக்கடைதான். செங்கலை விடக் கொஞ்சம் பெரிசாக மைசூர் பாக் இருப்பதைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவரிடம் ஒரு மைசூர் பாக் என்ன கிலோ இருக்கும் என்று கேட்க நினைத்துக் கிட்ட போக உடனே அவர் நான் ஏதோ வாங்க வந்திருக்கும் கஸ்டமர் என்று நினைத்து, நம்ப மாட்டீர்கள், ஒரு பாதி மைசூர் பாக்கை என்னிடம் சாம்பிளுக்குச் சாப்பிடக் கொடுத்தார். பயந்து கொண்டு ஓடிவிட்டேன். பத்து கடைக்கு ஒரு கடை இந்த மாதிரி இனிப்புக்கடைதான். கூடவே பெரிய பையில் பொரி விற்கிறார்கள். சொல்லி வைத்தாற் போல் எல்லா ஸ்வீட் கடைக்கு மேலேயும் சில குரங்குகள் இருக்கின்றன.

அப்படியே நடந்து வந்தபோது ஊர் திருவிழாக் கோலமாக மாறியிருந்தது. மூங்கீல் கூடை, ஜூஸ் கடை, புளி, சீயக்காய், கோலம் அச்சு என்று பல கடைகளில் வியாபாரம் சூடாக நடந்து கொண்டிருந்தது.

நடந்து வரும் போது, ஒருவர் ஸ்ரீவைஷ்ணவரா இல்லை காங்கிரஸ்காரரா என்று அடையாளம் தெரியாமல் இருந்தார். நெற்றியில் பெரிய திருமண் அணிந்துக்கொண்டு , கழுத்து நிறைய மாலை. மாலையில் ரூபாய் நோட்டுக்கள், ரங்கநாதர் படம் கூடவே இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி படங்கள் என்று நான் குழம்பிப் போனேன். எல்லோர் பார்வையும் இவர் மேல் தான் இருந்தது. அவர் யாரையும் சட்டை செய்யாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். இவ்வளவு கவர்ச்சியாக இருப்பவரைப் படம் எடுத்த போது திடீர் என்று அவர் முகத்தில் அதைப் பார்த்தேன் - வெட்கம்.

முதலமைச்சர் வருகிறார் என்ற செய்தி பரவியபோது அமைதியாக இருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் வந்தது. வைரமுடி உற்சவம் ஆரம்பிக்க கொஞ்சம் நேரம் இருப்பதால் திருநாராயண கோயிலைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

எல்லா கோயில்களுக்கும் ஸ்தல புராணம் இருப்பது போல மேல்கோட்டைக்கும் இருக்கிறது. யாதவகிரி மாஹாத்மியம் என்பதில் விரிவாக இருக்கிறது. வரலாற்றில் ஆர்வம் இருப்பவர்களுக்கு நம் நாட்டில் இருக்கும் கோயில்கள் வரப்பிரசாதம்தான். இங்கே இருக்கும் கல்வெட்டுக்கள், கோயிலின் அமைப்பு என்று பல விஷயங்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உபயோகமாக இருக்கின்றன. அவை இல்லாமல் இருந்தால் நம் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டிருக்கவே முடியாது. மேல்கோட்டைக்கு மற்றொரு பெயர் யதுசைலம். இந்தப் பெயர் ராமானுஜர் காலத்துக்குப் பிறகு வழங்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இன்று இருக்கும் பல ஸ்தல புராணங்களில் இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக இந்த ஸ்தல புராணங்கள் ராமானுஜர் காலத்துக்குப் பிறகு வந்ததாகத் தெரிகிறது. கோயில் பற்றிய பல குறிப்புகள் குருபரம்பரையில், குறிப்பாக ரராமானுஜரைப் பற்றிய பகுதியில் கிடைக்கிறது. சில கன்னட நாட்டுப்பாடல்கள் மற்றும் சில சமஸ்கிருத நூல்களிலும் மேல்கோட்டை பற்றி சில குறிப்புக்கள் வருகின்றன. இந்த நூல்கள் எல்லாம் 16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தவிர வேதாந்த தேசிகன் (1268-1379), பிள்ளை லோகாச்சாரியார் (1264-1327) நூல்களில் உள்ள குறிப்புகள் மேல்கோட்டை பற்றிய குறிப்பில் மிக பழமையானவை.

இன்று மேல்கோட்டை மிகப் பிரபலமானதற்குக் காரணம் ராமானுஜர் இங்கே 12 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதால்தான். ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் மேல்கோட்டையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு ராஜமுடி உற்சவத்துக்குச் செல்லலாம்.

கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். அதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் ராமானுஜர் தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக தொண்டனூர் வந்தார். அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த பிட்டிதேவன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான்.

மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார். (ராமானுஜருக்குத் திருமண் கிடைத்த விவரம் பற்றி ஒரு 13ஆம் நூற்றண்டுக் கல்வெட்டு இருக்கிறது) ராமானுஜர் பெருமாள் சொன்ன வழியாக திருநாராயணபுரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எரும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். (ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது, பால் பச்சை கற்பூரம் கொண்டு தயாரிப்பதாகக் கடைக்காரர் சொன்னார்).

கோயில் உற்சவத்துக்கு உற்சவ மூர்த்தி தேவை என்று ராமானுஜர் விரும்ப, மீண்டும் அவர் கனவில் பெருமாள் தோன்றி டெல்லி பாதுஷாவின் அரண்மனையில் ராமப்ரியராக இருக்கிறேன் என்று கூற, ராமானுஜர் டெல்லிக்கு புறப்பட்டார்.

melkote_pillars

ராமானுஜர் டெல்லி பாதுஷாவின் அரண்மனைக்குச் சென்று முறையிட்டபோது பாதுஷாவும் தன் கருவூலத்தில் இருந்தால் எடுத்துக்கொள்ளும்படி சொல்ல, ராமானுஜர் அதை தேடிப் பார்த்தபோது காணவில்லை. அந்த உற்சவ மூர்த்தி பாதுஷாவின் மகளின் அந்தபுரத்தில் விளையாட்டுப் பொருளாக இருந்ததை யூகித்து கைத்தட்டி “யதிராஜ சம்பத் குமாரா, என் செல்வப்பிள்ளையே ஓடிவா” என்று அழைக்க அதைக் கேட்ட பெருமாள் தனது கால்சலங்கை ஒலிக்க ஓடி வந்து ராமானுஜர் மடிமீது அமர்ந்தார் என்கிறது குருபரம்பரைக் கதை. [ராமானுஜர் சன்னதியை நிர்வகிப்பவரின் வீட்டில் தங்கியிருந்த போது அவர்கள் வீட்டுக் கோவில் ஆழ்வார் சன்னதியில் (வீட்டின் பூஜை அறை) ராமானுஜர் மடி மீது அமர்ந்த செல்வப்பிள்ளை விக்ரஹத்தைப் பார்க்க நேர்ந்தது. இவர்கள் வீட்டில் ராமானுஜர் தன் கைப்பட எழுதிக் கொடுத்த ஓலைச்சுவடியில் 'ராமானுஜர்' என்ற கையெழுத்துடன் இருக்கிறது என்கிறார்கள். அடுத்த முறை அந்த பற்றி மேலும் விசாரித்து எழுதுகிறேன்].

அன்றிலிருந்து யதிராஜ சம்பத் குமாரன் என்று அழைக்கப் பெற்றார் உற்சவர். செல்வப்பிள்ளை திருநாராயணபுரம் வந்த நாளான மாசி கேட்டை “டில்லி உத்சவம்” என்று இன்றும் கொண்டாடப்படுகிறது. டெல்லி பாதுஷாவின் மகள் தன் ஆசைப் பெருமாளை பிரிய மனமில்லாமல் மேல்கோட்டை வந்து பெருமாளுடன் ஐக்கியமானாள் என்று குருபரம்பரைக் கதை முடிகிறது. இவர் தான் ‘பீபி நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறாள். கன்னட நாட்டுப்புற இலக்கியத்தில் இவருக்குத் தனி இடம் உண்டு.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. டில்லியிலிருந்து செல்வப்பிள்ளையை கொண்டு வந்தபோது அவருக்கு ஜாதி பேதம் பார்க்காமல் ஹரிஜன மக்களும், மலைவாழ் மக்களும் உதவினர். அவர்களுக்கு ‘திருக்குலத்தவர்’ என்ற பெயரிட்டு அவர்களுக்கு ஆலயப் பிரவேச அனுமதி கொடுத்து கௌரவித்தார் ராமானுஜர்.

அவர்களுக்கு வைரமுடி போன்ற பல உற்சவங்களுக்கு விசேஷ தரிசனம் செய்து கொடுத்தார். பெருமாள் புறப்பாட்டின்போது, வாத்தியம் வாசிக்கும் உரிமை ஹரிஜன இனத்தைச் சேர்ந்தவருக்கே இன்றும் உள்ளது.

இங்கே இருக்கும் பெருமாளின் பெயர் யதிராஜன் - இளவரசன் என்று பொருள். (ராமானுஜருக்கும் யதிராஜர் என்று பெயர்). ராமானுஜர் மேல்கோட்டையில் 12 வருஷம் இருந்துவிட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் புறப்பட்டபோது, அங்கிருந்த அவரது சீடர்கள் துயரமாக இருப்பதைக்கண்டு அவரை மாதிரியே ஒரு விக்ரஹம் செய்து அதை அவர்களுக்குத் தன் நினைவாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். இது இன்றும் ‘தமர் உகந்த திருமேனி’ என்று போற்றப்படுகிறது. ஊர் மக்கள், அவரைப் பார்த்தால் உங்களிடம் பேசுவது போல இருப்பதால், இந்த விக்ரஹத்தைப் ‘பேசும் ராமானுஜர்’ என்று அழைக்கிறார்கள்.

கோயிலுக்குள் இருக்கும் தூண்களில் வேலைப்பாடுகள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. எல்லாத் தூண்களும் பல கதைகள் சொல்லுகின்றன. கல்லைக் குடைந்து எப்படி இவ்வாறு செய்ய முடிந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. வெறும் எழுத்துக்களால் அதை விவரிப்பது முடியாத ஒன்று. கோயிலுக்கு வெளியில் இருக்கும் துவஜஸ்தம்பம் கம்பீரமாக ஒரே கல்லில் 45 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஒரு பக்கம் ஹனுமார், மறுபக்கம் கருடன் என்று அதற்கு முன் விளக்கு ஏற்றி அதைச் சின்னக் கோயிலாகவே ஆக்கிவிட்டார்கள். நான் பார்த்த சமயம் அந்த கோயில் நிர்வாகி போல இருப்பவர் குச்சி ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

இப்போது வைர முடி உத்சவத்தைப் பார்க்கலாம். சரியாக மாலை 6:30 மணிக்கு “சார் எங்கே இருந்தால் பெருமாளை நல்லா தரிசிக்க முடியும்?” என்று ஒருவரிடம் கேட்க அவர் நீங்களே பார்க்கக் கூடாது என்று நினைத்து ஒதுங்கினாலும் அவர் உங்களைத் தேடி வந்து தரிசனம் தருவார் என்றார்! சரி பார்க்கலாம் என்று கோயில் மண்டபத்தில் உட்கார்ந்துகொண்டேன். கோயிலைச் சுற்றி கூட்டம்; 2500 பேர் இருக்கும் ஊரில் 70,000 பேர் வந்தால்? முதலில் கருடாழ்வார் கோயிலைச் சுற்றி வலம் வந்தார். பிறகு வைரமுடி என்று அழைக்கப்படும் கிரீடம் பல்லக்கில் ஏற்றப்பட்டு கோயிலைச் சுற்றி வந்தது.

இந்த வைரமுடி என்ற வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை மாண்டய கஜானாவிலிருந்து சகல மரியாதையுடன் கலெக்டர் கொண்டு வருவார். இந்தக் கிரீடம் யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால் வருடத்துக்கு ஒரு முறை இந்த விலை உயர்ந்த கிரீடம் சில மணி நேரம் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

melkote_rajamudi

சுமார் 7:30 மணிக்கு பெருமாள் இதை அணிந்துக்கொண்டு பல்லக்கில் வெளியே வருகிறார். எல்லாத் திசைகளிலும் பெருமாளை அழைத்து செல்லுகிறார்கள். யாராவது நான் பெருமாளைச் சேவிக்கவில்லை என்று சொன்னால் அவர் நிச்சயம் பொய் சொல்கிறார் என்று சொல்லிவிடலாம். பிறகு விடியற்காலை கிட்டதட்ட 2 மணிக்கு திரும்பவும் பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்துக்குச் செல்கிறார் அங்கே வைரமுடி கழட்டப்பட்டு பெட்டியில் சீல் செய்கிறார்கள். பிறகு ராஜ முடி அணிந்துக்கொள்கிறார்.

மைசூர் அரச பரம்பரையில் வந்த மன்னர்களில் கிருஷ்ணராஜ உடையார் வைரமுடியைப் போலவே மற்றொரு கிரீடத்தை அளித்தார். இதை கிருஷ்ணராஜ முடி என்று புத்தகங்கள் சொன்னாலும், கூட்டம் ராஜ முடி என்று அழைக்கிறது. ராஜ முடி அணிந்துக்கொண்டு நிஜமாகவே அவர் இளவரசன் போல நடந்து செல்கிறார். நம்மாழ்வார் சொன்ன “கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்” வைர முடி, ராஜமுடி நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. ராஜமுடியை அணிந்துக்கொண்டு பெருமாள் கூட்டத்தை நோக்க, கூட்டம் நோக்கியாவில் பெருமாளை நோக்கியபின் பெருமாள் ரெஸ்ட் எடுக்க உள்ளே செல்கிறார்.

நான் பார்த்து ரசித்த காட்சிகள் சிலவற்றை இங்கே வாசகர்களுக்குத் தந்துள்ளேன்.



(இக்கட்டுரையிலுள்ள புகைப்படங்களையும், வீடியோவையும் எடுத்தவர் கட்டுரையாசிரியர் தேசிகன். புகைப்படங்கள் மீது க்ளிக் செய்தால் பெரிதாக்கிப் பார்க்கலாம். இன்னும் சில புகைப்படங்களை பார்க்க இங்கே செல்லவும்).

Comments

  1. Well written. Directions from Bangalore please. Cannot find in maps.google.com. Where to turn in Mandya.

    ReplyDelete
  2. "ராஜமுடியை அணிந்துக்கொண்டு பெருமாள் கூட்டத்தை நோக்க, கூட்டம் நோக்கியாவில் பெருமாளை நோக்கியபின்" - கசப்பான உண்மை. இப்போது எல்லாம் சேவிப்பதை விட படம் பிடிக்கவே பெரும்பாலானோர் முயல்கின்றனர் என்பது வருத்தம் அளிக்கிறது.

    ReplyDelete

Post a Comment