Skip to main content

கண்ணன் கதைகள் - 9

 கண்ணன் கதைகள் - 9



கண்ணன் பற்றி கூறிவிட்டு மாடுகள் பற்றி கூறவில்லை என்றால் ? இதோ சில மாடு கதைகள். 

நந்திகிராம் போகும் வழியில் ஒடும் பஸ்ஸிலிருந்து ஒரு படம் எடுத்தேன்.  கயிற்றில் கட்டப்பட்ட சின்ன பிளஸ்டிக் கார்  இன்னொரு கையில் மாட்டை இணைக்கும் கயிறு. 

என்ன ஒரு சிம்பிள் வாழ்க்கை ! 

இந்த வயதில் மாடு மேய்க்கப் போக வேண்டிய நிலை என்று நமக்கு தோன்றும் ஆனால் யோகா, தியானம் என்று செலவு செய்யாமல் அவன் முகத்தில் உள்ள சந்தோஷம் இன்று நம் பிள்ளைகளிடம் இல்லை. 

பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக்களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள்.



சந்து பொந்து எல்லா இடங்களிலும் அவை நம்மைப் போல உலாவுகின்றன. கடைக்கு முன் நின்று சப்பாத்தி வாங்கிச் சாப்பிடுகிறது. சாலைக் குறுக்கே சென்று டிராபிக் ஜாம் செய்தால் அவற்றை ‘ஹார்ன்’ அடித்து யாரும் விரட்டுவதில்லை.



சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர்  தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு மூட்டை மூட்டையாகக் கட்டிவைத்துள்ளார்கள். உஜ்ஜைனில் ஸ்ரீராமானுஜ கூடம் முன்பு நமக்கு தெரிவது ஒரு சின்ன மாட்டுத் தொழுவம் தான்.



துவாரகாவில் ஒரு பசுமாட்டுக்கு என்னிடம் இருந்த வெள்ளரி பிஞ்சுகளை கொடுத்தேன். தீடீர் என்று ஒரு பசுமாட்டுக்கூட்டமே என் பின்னாடி வந்தது.  எடுத்தேன் ஓட்டம். சமீபத்தில் அதைப் போல் ஒலிம்பிக்ஸில் பார்த்தேன். 

கன்று குட்டிகளிடம் சென்றால் நாம் ஏதோ கண்ணன் என்று நினைத்து பரிவும் பாசத்தையும் காண்பிக்கிறது! 

கண்ணன் கதைகளை மெய்மறந்து கேட்கலாம் என்பார்கள்.  அதுவும் வேளுக்குடி ’கிருஷ்ணன்’ அவர்கள் சொன்னால்  மாடுகளுடன் மெய்மறந்து கேட்டது என்பது மறக்க முடியாத அனுபவம்.  இந்த மாடுகள் கண்ணன் இருந்த போது அவர்கள் வம்சம் என்று இந்தப் படத்தைப் பார்க்கும் போதே தெரிகிறது! இது மாதிரி உபன்யாசம் இந்த தேசத்தில் தான் சாத்தியம்




குஜராத்தில் பெட்டிக் கடை ஒன்றில் பசுமாட்டு பொம்மை ஒன்றைப் பார்த்தேன். உற்றுப் பார்த்த போது அது உண்டியல்.. கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தேன்

“இது எதற்கு?”

“பத்து மைல் தொலைவில் ஒரு கோ சாலை இருக்கிறது. அவற்றை பராமரிக்க இந்த உண்டியல்”

“எவ்வளவு பசுக்கள் இருக்கும்”

“சில ஆயிரங்கள் இருக்கும்.. பசுக்களைப் பார்த்துக்கொள்ள 27/7 டாக்டர்கள் இருக்கிறார்கள். பசுக்களுக்கு தீனி .. இந்த உண்டியலை எல்லா இடத்திலும் பார்க்கலாம்”

“யார் நடத்துகிறார்கள்?”

“ஐந்து பேர் கொண்ட குழு இதை நடத்துகிறார்கள். அதில் ஒருவர் முஸ்லீம்!”

- சுஜாதா தேசிகன்
31-08-2021
ஸ்ரீஜெயந்தி

Comments

  1. மாடு மேய்ப்பது தான் உண்மையான சந்தோஷம்
    அது நமக்கு தெரியாத உண்மை !

    ReplyDelete

Post a Comment