‘சிறுமாமனிசர்’ பாரதி மணி சுஜாதா மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் “பாரதி மணி எழுதிய ‘தில்லியில் நிகம்போத் காட்(சுடுகாடு)’ என்ற கட்டுரையைப் படித்தீர்களா தேசிகன்? எப்பவாவதுதான் இதுபோல நல்ல கட்டுரை கிடைக்கும்” என்றார். ‘பாரதி மணி’ என்ற பெயரை முன்பு கேள்விப்பட்டிருந்தாலும் அறிமுகம் அப்போது தான் கிடைத்தது. சுஜாதா மறைந்தபோது, இந்த நிகழ்வை நான் எழுதிய சுஜாதாவின் அஞ்சலிக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இந்தப் பகுதி அச்சில் பிரசுரம் ஆகவில்லை. சுஜாதாவிற்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்று நாரத கான சபாவில் நடந்தது. அதில் நான் கலந்துகொண்டேன். கூட்டம் முடிந்த பிறகு பார்வையாளர்கள் வரிசையில் ஓர் ஓரத்தில் திரு பாரதி மணியைப் பார்த்தேன். அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டு “சுஜாதா உங்கள் கட்டுரையைப் பாராட்டினார்” என்று கூறியவுடன் அவர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார். அந்த நிகழ்வைத் திரு பாரதி மணி, “……..பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த சுஜாதாவுக்குக் காலம் தாழ்த்தாமல், மார்ச் 2-ம் தேதியே ஒரு நினைவஞ்சலியை நாரத கான சபாவில் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது. நெகிழ்வான நிகழ்ச்சி....