Skip to main content

ஷெர்ஷா(Shershaah) சில எண்ணங்கள்...

ஷெர்ஷா(Shershaah) சில எண்ணங்கள்... 


சமீபத்தில் ’ஷெர்ஷா’ என்ற ஹிந்தி படத்தைப் பார்த்தேன். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையைச் சொல்லும் படம்.  தமிழ் நாட்டில்  வழக்கம் போல இந்தப் படம் அதிக கவனம் பெறவில்லை. 

பிக் பாஸ், சமையல் நிகழ்ச்சி, லேடி சூப்பர் ஸ்டார் நடித்த படங்களைக் கழுவி ஊற்றுபவர்கள் இந்தப் படத்தைக் கண்டுகொள்ளாத தமிழ் சமூகம் குறித்து ஆச்சரியப் பட எதுவும் இல்லை,. தொன்று தொட்டு, இந்த மாதிரிப்  படங்களுக்குத் தமிழ்நாட்டில் ஒருவித அன்னியத் தன்மையே இருந்து வருகிறது.  (அங்கோ தூரத்தில் நடக்கிறது, ஒன்றிய அரசு பார்த்துக்கொள்ளும்)

கர்நாடகாவில் அப்படி இல்லை, 2019  ஜனவரி 26 அன்று URI Surgical Strikes என்ற படத்தைத் தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்தேன்.  இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் பையன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். ”யூரிக்கும் பேட்டைக்கும் என்ன வித்தியாசம் ?” 

”பேட்டை ஆரம்பிக்கும் போது எல்லோரும் கைதட்டினார்கள், யூரி படம் முடிந்த பின் எல்லோரும் கைதட்டினார்கள்” . இந்தப் படம் தொடர்ந்து பல வாரங்கள்  அவுஸ் ஃபுல்லாக இங்கே ஓடியது. 

இன்று ஓ.டி.டியின் உதவியால் பல படங்களை பார்க்க முடிகிறது.  இந்தியா - பாக் எல்லைப் பிரச்சனை படங்கள் முழுக்க உண்மைக்கு அருகில் வட மாநிலத்தவர்களே எடுத்துள்ளார்கள். 

நம்மூர் கதாநாயகர்கள் நடித்த இராணுவப் படங்கள் ஏதாவது இருக்கிறதா என்று தேடிய போது முதலில் கிடைத்தது, விஜய் நடித்த துப்பாக்கி. 

விஜய் எல்லையிலிருந்து தமிழ் நாட்டை நோக்கி ரயில் வந்துகொண்டு இருக்க, திடீர் என்று ரயில் சக்கரம் பஞ்சர் ஆக, உடனே ராணுவ வீரர்களுடன் ஓர் ஓப்பனிங் சாங், அவர்களுடன் ஒரு ஃபிரண்ட்லி குஸ்தி சண்டையில் விஜய் பனியனுடன் தரிசனம் முடிந்த உடனே நகைச்சுவை,  பாடல், பிறகு எல்லையிலிருந்து நம் ஊருக்குள் நுழைந்த தீவிரவாதியைப் போட்டுத்தள்ளுகிறார். பிறகு எல்லைக்குச் சென்றாரா என்று தெரியாது. 

ரஜினி முதல்வன், இந்தியன் படங்களில் நடிக்க பயப்பட்டார் என்று சொல்லுகிறார்கள். அப்படியே பயப்படாமல் கார்கில் சென்றால் அங்கே இருக்கும் வீரர்கள் எப்போது அரசியல் பிரவேசம் என்று கேட்பார்கள். அதனால் கார்கில் எல்லாம் வேண்டாம், காலாவே போதும் என்று இருந்துவிட்டார். அப்படியும் சூப்பர் ஸ்டார் நடித்த படம் ஏதாவது கிடைக்குமா என்று  தேடியதில் ’இராணுவ வீரன்’ படம் கிடைத்தது. அதில் இராணுவத்திலிருந்து கிராமத்துக்கு வருகிறார். அவ்வளவு தான். தமிழ்ப் படங்களில் இராணுவத்திலிருந்து ஊருக்கு வருபவர்களிடம் ‘மிலிட்டரி சரக்கு இருக்கா?’ என்று அலையும் கூட்டத்தை காண்பிக்கும் ஒரு காட்சி கட்டாயம் இருக்க வேண்டும். இது தான் தமிழ்ப் படங்களுக்கு தெரிந்த இராணுவம். 



கமலுக்கு காஷ்மீர் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர் உலக நாயகன். அதனால் பல எல்லைகளைத்  தாண்டி ஆப்கானிஸ்தான் சென்று பின் லாடனை நேரில் சந்தித்து, தாலிபானிடம் தத்துவம் பேசி அழுது, ஆட்டம் ஆடி சர்வதேசத் தீவிரவாத பிரச்சனையை அரசியலுடன் பேசி விட்டுத் திரும்புவார். 

விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் இராணுவ உடையை அணிந்தால் கம்பீரமாக இருக்கும். ஆனால் என்ன பிரயோஜனம் ? இவர்களை அங்கே எல்லையில் வேலை செய்ய விடாமல், பிரதமருக்கு ஓர் ஆபத்து என்று ஒரு கான்பிரன்ஸ் ரூம் ப்ரொஜெக்டரில் சில தீவிரவாதிகள் படங்கள், குண்டு வெடிப்பில் இறந்த சடலங்கள் என்று நாட்டின் உயர் பதவியில் இருப்பவர் PPTல் பிரதம மந்திரியிடம் காட்ட. அவரும் பதட்டத்துடன் இதைத் தடுக்க என்ன வழி என்று கேட்க,  ஒரே ஓர் ஆள் இருக்கிறார் என்று சரத்குமாரை டீ குடிக்கும் போது அடுத்த விமானம் பிடித்து வரச் சொல்லிவிடுவார்கள்.  வந்தவர் பிரதமருக்கு ஒரு  சல்யூட் அடித்து, என் குழுவை நானே  அமைத்துக்கொள்கிறேன்  எனக்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என்று வீராப்பாக பேசிவிட்டு, அடுத்த காட்சியே கவுண்டமணியுடன் நகைச்சுவை செய்யத் தொடங்கிவிடுவார். அல்லது கதாநாயகியை நாய் துரத்த அவள் பயத்தில் இவர் மீது ஏறி உட்கார்ந்துகொள்வார். முடிந்தது எல்லை பிரச்சனை. 

விஜயகாந்த்தின் பிரச்சனையே வேறு, காஷ்மீர் எல்லை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் நம்ம ஊர்  வீரப்பனைப் போட்டுத் தள்ள நம்ம எல்லைக்கு வாங்க என்று கூப்பிட, பிறகு உங்களுக்குத் தெரிந்த கதை தான். 

அஜித் போன்ற நளினமான  நடிகர்கள் கூலிங் கிளாஸ், போட்டுக்கொண்டு விவேகமான விமானம், கார், பைக் என்று தூள் கிளப்ப அவருக்கு எல்லையே கிடையாது. 



ஹிந்தி மற்றும் மற்ற மொழிகளில் வந்த எல்லைப் பாதுகாப்பு, இராணுவம், காவல்துறை சம்பந்தப்பட்ட படங்கள், வெப் சீரிஸ் பார்த்தால் அதில் அதிகாரிகள் கைகுலுக்கிக்கொள்ளும் போது அல்லது ஆணையைப் பெற்றுக்கொள்ளும் போதும்  ‘ஜெய் ஹிந்த் சார்!” என்கிறார்கள். ஆனால் தமிழில் ரோஜாவில் ஆரம்பித்து எந்த தமிழ்  படமானாலும் (சொற்பக் காட்சிகள் இருந்தால் கூட)   ’ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தை வந்ததாக எனக்கு நினைவு இல்லை. 

ஷெர்ஷா படத்தில் காட்டப்பட்ட விக்ரம் பத்ராவின் வீரச் செயல்களுக்குச் சற்றும் குறைவில்லாத வீரச் செயல்களைச் செய்தவர் திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன். இந்திய ராணுவத்தின் மதிப்புமிக்க பீகார் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார்.  1999ல் கார்கில் 33 படையினர் மற்றும் நான்கு அதிகாரிகளுடன் ஊடுருபவர்களைக் கொன்ற பின்னர் ஊடுருவல் காரர்களால் கொல்லப்பட்டார். 



சரவணன் 1999இல் நான்கு ஆண்டுகளே இராணுவ சேவையை முடித்திருந்தார். இவர் நான் படித்த திருச்சி கேம்பியன் பள்ளியில் படித்தவர். கார்கில் போரில் கொல்லப்பட்ட முதல் அதிகாரியும் இவரே. இவர் செய்த வீரச் செயல்களைப் பாராட்டி வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.  போரின் போது சரவணன் தாக்கப்பட்டுக் காயமடைந்தார். ஆனால் காயத்தினை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சண்டையிட்டார். அதிகமான அளவில் இந்திய வீரர்கள் காயமடைந்ததால் இந்திய வீரர்களைப் பின்வாங்குமாறு கட்டளையிடப்பட்டது. இந்நிலையில் சரவணன் மேலும் இரண்டு ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றார். ஆனால் இந்த நேரத்தில் இவர் தலையில் எதிர் முகாமிலிருந்து வந்த தோட்டாவால் தாக்கப்பட்டு இறந்தார். இவரது வீரச் செயல்களுக்காக இவரை "படாலிக் கதாநாயகன்" என்று அழைத்தனர். 

இவர் இறந்து எட்டு வருடம் கழித்து திருச்சியில் ஒரு நினைவுச் சின்னம் அமைத்தார்கள். 

இவரைப் பற்றி ஒரு படம் எடுக்கலாம்,  தமிழில் இது போல எடுத்துப் பழக்கமில்லை, அதனால் இதை எடுக்க இந்திக்காரர்களிடம் தான் நாம் கேட்க வேண்டும் ! 

ஜெய் ஹிந்த்! 

- சுஜாதா தேசிகன்

23-08-2021

Comments

  1. Very good article.


    Any updates on Padam Piritha Prbandham book printing?

    ReplyDelete
  2. Good article. You have rights to comment. But matha actor enna pannanum enna padam nadikanum nu sollurathu thappu. Neenga paatha hindhi padam ithu mattum thaana.

    ReplyDelete
    Replies
    1. Agree actors are free to act as they wish. I just told how Army Soldiers are portrayed in Tamil movies and how 'Jai Hind' is neglected only in Tamil Movies.

      Delete

Post a Comment