Skip to main content

அபலையின் அஞ்ஞானம் !

 அபலையின் அஞ்ஞானம் 



“வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க…” என்று ஸ்ரீ வேதாந்த தேசிகனும், “இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்…” என்று ஸ்ரீ மணவாள மாமுனிகளும் “திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே!...” என்று வாழி திரு நாமத்திலும்  திருவாடிப் பூரத்தை கொண்டாடுகிறார்கள். 

இன்றைய திருவாடிப்பூரத்தில் ஆண்டாளின் துணையுடன் ‘தினம் ஒரு பாசுரத்தில்’ நாச்சியார் திருமொழியை அனுபவிக்கலாம். 

நாச்சியார் திருமொழியை அனுபவிப்பதற்கு முன் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக அவசியம். 

எம்பெருமான் ஒருவனே புருஷன் -  ‘புருஷோத்தமன்’. மற்ற எல்லா ஜீவாத்மாக்கள் அவனுக்கு நாயகியே என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம். 

ஸ்ரீமத் ராமாயணத்தில் புலன்களை அடக்கிய ரிஷிகளும், முனிவர்களுமே ஸ்ரீராமர் மீதும் காதல் கொண்டார்கள். வால்மீகி ஸ்ரீராமர் அழகில் மோகித்து பேச முடியாமல் தவித்தார். 

ஸ்ரீராமருக்கே இப்படி என்றால் கண்ணன் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  மேகம், ஆறு,செடி, கொடி. மரங்கள் கூட கண்ணனிடம் மோகித்தது என்கிறது ஸ்ரீமத் பாகவதம். . 

பக்தியில் பல தரம்(grade) இருக்கிறது. அதில் மிக உயர்ந்தது கோபிகைகள் செய்த பக்தி. அதற்குப் பெயர் பிரேமை இல்லை பரம பிரேமை ( Intense deep love ). இதைத் தான் ஆழ்வார்கள் பின்பற்றினார்கள்.

பெரியாழ்வார் யசோதையாக மாறி கண்ணனுக்குத் தாய் போலப் பிரேமை செய்தார். பெருமாளை நாயகனாக அடைய வேண்டும் என்று நம்மாழ்வார் ‘கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்’ என்று பராங்குச நாயகியாக உருகினாள். அதே போல்  பரகால நாயகியாக திருமங்கை ஆழ்வார். 

ஆனால் இவர்கள் எல்லோரும் ஆண். அதனால் முதலில் ஆண்மையை unlearn செய்து, பிறகு கோபிகையாக தங்களை (learn) பாவித்துக்கொண்டார்கள். 

ஆனால் நம் ஆண்டாளோ பிறவியிலேயே பெண். அவளுக்கு ‘unlearn’ செய்ய எதுவும் இல்லை. அதனால் கண்ணனைச் சுலபமாக, வேகமாக அணுக முடிந்தது. 

கீதையில் கண்ணன் என்னிடத்தில் பக்தி செய்யும் முதல் அதிகாரி  “ஸ்திரிகள்” என்று பதில் கூறுகிறான். அப்படிக் கூற காரணம் என்ன  ? 

அபலை, அஞ்ஞானம் என்ற இரண்டு வார்த்தைகளை புரிந்துகொள்ளலாம். 

 நாச்சியார் திருமொழியின் சாரத்தை இந்த இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம். எப்படி என்று பார்க்கலாம். 

’அபலை’ என்ற பிரயோகம் ஒரு பெண்ணுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்களை அப்படி அழைப்பதில்லை. ஆண்கள் எப்போதும் ஆண்மை என்ற பலம் உள்ளவர்களாகவே கருதப்படுகிறார்கள். பலம் இல்லாதவர்கள் பெண்கள் அதனால் அ-பலம் - அபலை என்கிறோம். இந்த அபலை என்ற தகுதி தான் கண்ணனை அணுக முதல் தகுதி. 

அபலையாக கண்ணனை அணுகிய பெருமை ஆண்டாளையே சாரும். 

மன்மதனை வழிபடலாமா ? 

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் மன்மதனை வழிபடுகிறாள். ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெருமாளைத் தவிர்த்து மற்ற தேவதைகளை எல்லாம் வழிபடும் வழக்கம் இல்லாத போது ஆண்டாள் அப்படி செய்யலாமா ? என்ற எண்ணம் நமக்குத் தோன்றாமல் இருப்பதில்லை. பெரியவாச்சன் பிள்ளை இதற்குப் பதில் கூறுகிறார். 

அயோத்தியில் ராமரைத் தவிர மற்றவை எதுவும் தெரியாத அந்த ஊர் மக்கள்  இரவு பகலாக எல்லா தேவதாந்த்ர கோயிலுக்கு செல்வார்கள்( வால்மீகி ராமாயணம்). காரணம் - ராமருடைய நலனுக்காக அங்கே வேண்டிக்கொள்கிறார்கள். 

ஞானம் இருப்பவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள். கலங்கிய ஞானமே பக்தி. அ-ஞானம் - அஞ்ஞானம். ஒரு தாய் தன் குழந்தையிடம் உள்ள பிரேமையினால் எது வேண்டும் என்றாலும் செய்வாள். ஜுரம் வந்தால் மந்திரித்த கயிற்றை கட்டுவாள். கண்மூடித்தனமாக எதையாவது தன் அஞ்ஞானத்தால் செய்வாள். அயோத்தி மக்கள் தேவதைகளை வேண்டிக்கொண்டது போல,  ஆண்டாளும் மன்மதனை கொண்டாள் அஞ்ஞானத்தால். 

அயோத்தி மக்கள் ஸ்ரீராமரின் நலனுக்காக வேண்டிக்கொண்டார்கள், ஆனால்  கண்ணன் நலம் வேண்டி ஆண்டாள் மன்மதனை வேண்டிக்கொள்ள வில்லையே ” கண்ணனுக்காக என்னை விதி’ என்று கூறுவது எப்படிக் கண்ணனின் நலம் வேண்டுதலில் வரும் என்ற சந்தேகம் எழலாம். 

இளைய பெருமாள் என்ற லக்ஷ்மணர் ஸ்ரீராமர், பிராட்டியுடன் காட்டுக்கு சென்றார். ஸ்ரீராமருக்காகத் தன்னை விதித்துக்கொண்டு அவருக்கு கைங்கரியம் செய்ய வேண்டும் என்று கூட சென்றார். ஸ்ரீராமர் நலம் வேண்டி சென்றார்! 

அது போல இங்கே ஆண்டாள் ’ மன்மதன் காலில் விழுந்தாவது கேசவ நம்பியைக் கால் பிடிக்கும்’ கைங்கரியம் கிடைக்குமா என்று தவிக்கிறாள். அவ்வளவு intense deep love அதனால் வரும் அஞ்ஞானம். 

அனுமார் எப்பேர்ப்பட்ட ஸ்ரீராம பக்தர் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் வைகுண்டம் கூட வேண்டாம் என்றவர்,  சுந்தரக் காண்டத்தில் அவர் கைகளைக் கூப்பிக்கொண்டு ருத்திரன், யமன், வாயு என்று இந்தத் தேவதைகளிடம் சீதையைக் காட்டிக்கொடு என்று வேண்டிக்கொள்கிறார். அது போல ஆண்டாள் நாச்சியார் கண்ணனைக் காட்டிக்கொடு என்று மன்மதனை வேண்டிக்கொள்கிறாள். 

அனுமார், அயோத்தி வாசிகளுக்கு பெரியாழ்வார் தந்தையாக கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டாளுக்கு விஷ்ணுவைத் தன் சித்தத்தில் வைத்திருக்கும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தந்தை. பரத்துவத்தை நிர்ணயம் செய்தவர், அவர் மகள் ’விட்டுசித்தர் கோதை’ என்று தன்னை கூறிக்கொள்பவள் எப்படி மன்மதனை வேண்டலாமா ? என்று தோன்றும். 

பராங்குச நாயகியாக நம்மாழ்வார் கதறிவிட்டு கடைசியில்  ’தெய்வங்காள் என் செய்வேன்?’ என்று மற்ற தெய்வங்களைப் பார்த்துக் கூறியது போல ஆண்டாளும் எத்தை திண்ணால் பித்தம் தெளியும் என்று மன்மதன் காலில் விழுகிறாள்.  ஆண்டாளுக்கு பெரியாழ்வார் அப்பா என்றால் நம்மாழ்வார் பெரியப்பா! 

இது தவிக்கும் வெளிப்பாடு அபலையாக அஞ்ஞானம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இதைப் புரிந்துகொண்டால் மட்டுமே நாச்சியார் திருமொழியை ஓர் அளவு புரிந்துகொள்ளலாம். இதைப் புரிந்துகொள்ள ஆண்டாளே அருள் புரிய வேண்டும். 

பிகு: அ- என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அ-பலை - விஷ்ணுவே பலம். 

அ-ஞானம் விஷ்ணுவே ஞானம்.  

நாளையிலிருந்து நாச்சியார் திருமொழியை அனுபவிக்கலாம். 

- சுஜாதா தேசிகன்

Comments

  1. Please read Uttamur swami's vyakhanam. You will know theal reason why Nachiyer did Mamatha poojai

    ReplyDelete

Post a Comment