Skip to main content

இரட்டை ஆசாரியர்கள்

 இரட்டை ஆசாரியர்கள்


கண்ணன் பிறந்த இடம் எது ? என்றால் உடனே மதுரா என்று பதில் சொல்லுவீர்கள். ஆனால் பெரியாழ்வாருக்கு கண்ணன் பிறந்த இடம் திருக்கோட்டியூர் ! தான் !

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்து அளறு ஆயிற்றே.
என்கிறார்.

ஆண்டாள் துளசி தோட்டத்தில் பிறந்து ஆயர்பாடியில் பெண்ணாக தன்னைப் பாவித்துக்கொண்டு ’சங்கத்தமிழ் மாலை’ என்ற திருப்பாவையை நமக்கு தந்தாள்.

திருப்பாவை தனியனான ”நீளாதுங்கஸ்தன கிரிதடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்” என்ற தனியனுக்கும் மேலே சொன்ன திருக்கோட்டியூருக்கும் சம்பந்தம் உண்டு. இந்தத் தனியன் எப்படி அவதரித்தது என்று பார்க்கலாம்.

திருக்கோட்டியூருக்கு ஸ்ரீராமானுஜர் பதினெட்டு முறை நடந்தார் என்ற சரித்திரம் பிரசித்தம் ஆனால் ஸ்ரீராமானுஜருக்கு பிறகும் அங்கே நடந்த சில சரித்திர நிகழ்வுகள் பற்றி பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். வாருங்கள் கிபி 1122க்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.

கூரத்தாழ்வான் திருகுமாரரான பட்டர் காலம் கிபி 1122 முதல் கிபி 1174. இந்தக் காலத்தில் விக்கிரம சோழன் ஆட்சி புரிந்தான் ( முதலாம் குலோத்துங்கனின் புதல்வன். விக்கிரம சோழனுக்கு அகளங்கன் என்ற பெயரும் உண்டு)

விக்கிரம சோழன் அமைச்சரவையில் அகளங்க ப்ரம்மராயர் என்பவர் அமைச்சராக இருந்தார். அறிவாற்றலில் உயர்ந்த அந்தணர்.

சோழ அரசனின் விருப்பத்தின் படி திருவரங்கம் பெரிய கோயிலுக்கு ஒரு பெரிய மதிளைக் கட்ட தொடங்கினார். அடைய வளைந்தான் என்று இன்றும் வழங்கப் படுகிறது. அந்த மதிளைக் கட்டிவரும் போது வழியில் இளையாழ்வான் என்பவருடைய திருமாளிகை ( வீடு ) குறுக்கிட்டது. அதை இடித்துத் தள்ளி விட்டு மதிளைக் கட்ட முற்பட்ட ப்ரம்மராயரிடம் பட்டர் “இந்த மதிள் தான் பெருமாளைக் காக்கின்றது என்று நினைக்காதே. இங்கே கோயிலை சுற்றி வாழும் இளையாழ்வான் போன்ற ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் தான் பெருமாளை ‌ரக்ஷிக்கிறார்கள்” மேலும் “திருமங்கை மன்னன், தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாளிகையை ஒதுக்கித் திருமதில் கட்டவில்லையா ? நீரும் அவ்வாறே செய்ய வேண்டும்” என்று விண்ணப்பித்தார். ஆனால் ப்ரம்மராயர் ஆழ்வான் புத்திரன் பட்டர் சொல்லை மதியாது இளையாழ்வான் திருமாளிகையை தரைமட்டமாக்கி திருமதில் கட்ட தொடங்கினார். மேலும் பட்டருடன் விரோதித்து உபத்திரம் தர தொடங்கினான்.

பட்டர் சோழ தேசத்தை விட்டு பாண்டிய நாட்டில் இருந்த திருக்கோட்டியூரைக் நோக்கிப் புறப்பட்டர். நடுப்பகலில் ஓர் இடத்தில் பசி மிகுந்து களைப்புற்று அயர்வடைந்தார். அப்போது பட்டர் புறப்பட்டுச் சென்றதை அறிந்த நஞ்சீயர் கட்டுச்சோறும், தண்ணீரும் எடுத்துக்கொண்டு ஓடிவந்து பட்டரைச் சந்தித்து இளைப்பாற்றி வைத்தார். இதற்கு நன்றியாகப் பட்டரும் அவருக்கு விசேஷ உபதேசங்களைச் செய்வித்தார்.
பட்டரும், நஞ்சீயரும் பல தினங்கள் நடைப்பயணமாக ஸ்ரீராமானுஜர் சென்ற வழியிலேயே திருக்கோட்டியூர் வந்தடைந்தனர். பெரியாழ்வார் புகழ்ந்த திருகோட்டியூர் மக்கள் பட்டரும், நஞ்சீயரையும் விருந்தோம்பல் செய்தனர் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எந்த வேறுபாடின்றி அவர்கள் செய்யும் விருந்தோபல் பண்பைக் கண்டு பட்டரும், நஞ்சீயரும் வியந்தனர். அங்கே வசிக்கும் திருகோட்டியூர் நம்பிகள் திருக்குமாரர் தெற்காழ்வானையும் குமாரத்தி தேவகிப் பிராட்டியையும், சிஷ்யையான திருக்கோனேரி தாஸ்யையும் சேவித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், பிரம்மராயன் பட்டரை சமாதானம் செய்ய ‘இருகை மதவாரணம்’ என்பவரைத் திருக்கோட்டியூருக்கு அனுப்பி வைத்தான். அவனும் பட்டரை சமாதானம் படுத்தி மீண்டும் ஸ்ரீரங்கம் சென்றார்கள்.

திருவரங்கத்துக்குச் செல்வதற்கு முன் பட்டரும், நஞ்சீயரும் திருக்கோட்டியூரிலே தங்கியிருந்த இரண்டு வருடங்களில் நடந்த சில நிகழ்வுகள் மிக சுவாரசியமானவை.

அனந்தாழ்வான் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை மங்களாசாசனம் செய்த போது, நஞ்சீயரும், பட்டரும் திருக்கோட்டியூரில் இருப்பதை கேள்விப்பட்டுத் திருக்கோட்டியூர் வந்து அங்கே பட்டரைக் கண்டு மிகிழ்ச்சியுடன் வாரி அணைத்துக்கொண்டு தம் மடி மீது வைத்துக்கொண்டார். கூரத்தாழ்வான் தேவியரான ஆண்டாளுக்கு முதலில் ஒரு பிள்ளை பிறந்து இறந்துவிட்டது. பிறகு பட்டர் பிறந்தார். பிறந்ததும் இவர் நெடுநாள் வாழ வேண்டும் என்பதற்காக எம்பெருமானார் பெரிய பிராட்டியாருக்கு நீராட்டிய மஞ்சள் நீர் குடித்து பிள்ளையாக ( தத்துப்பிள்ளையாக ) தாரை வார்த்துக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தவிட்டார். அதனால் பட்டரை அனந்தாழ்வான் ஸ்ரீரங்க நாச்சியாருக்கு மகன் என்றேன் கூறுவாராம். அதனால் தான் வணங்கும் தாயாருடைய மகன் என்றே கருதி அனந்தாழ்வான் பட்டரைத் தம் மடி மீது வைத்துக் கொண்டாராம்.

ஆதிஷேசன் தன் மடி மீது எம்பெருமானை அணைத்துக் கொண்ட மனோபாவத்தில் அவ்வாறு செய்தார் அனந்தாழ்வான் என்று பெரியவாச்சான் பிள்ளை உரையில் குறிப்பு இருக்கிறது.

பட்டரும், நஞ்சீயரும் அனந்தாழ்வானும் கூடியிருந்த குளிர்காலத்தில் ஆண்டாள் விஷயமாக ஆழ்வார்கள் விஷயமாகப் பட்டர் இரண்டு ஸ்லோகங்கள் அருளிச் செய்தார்.

“நீளாதுங்க ஸ்தனகிரி தடீ” என்ற தனியனையும் ஆழ்வார்கள் பதின்மர் விஷயமாக “புதம் ஸ்ரச்ச மஹதாஹவய” என்ற ஸ்லோகத்தையும் பட்டர் அங்கு அருளிச் செய்தார்.

இச்செய்தியைப் பிள்ளை லோகஞ்ஜீயர் இந்த தனியன்கள் வியாக்யானத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். கண்ணன் மட்டும் இல்லை தனியன் பிறந்த இடமும் திருக்கோட்டியூர் தான். இன்றும் பட்டர், நஞ்சீயர், அனந்தாழ்வானும் சேர்ந்து வாழ்ந்த நமக்கு அந்தத் தனியனை பெற்றுத் தந்த திருமாளிகை திருக்கோட்டியூரில் மேலரத வீதியில் இருக்கிறது.

பராசர பட்டரருடைய இளைய சகோதரர் வேத வ்யாஸ பட்டர் ஆவார். இவரை ஸ்ரீராமபிள்ளை என்றும் அழைப்பர். பராசர பட்டர், வேதவ்யாஸ பட்டர் இருவரும் இரட்டையர்கள்.

கூரத்தாழ்வானும் அவர் மணைவி ஆண்டாளும் ஸ்ரீரங்கத்தில் இருந்த சமயம் ஒரு நாள்
நல்ல மழை! அவரால் வெளியே செல்ல முடியவில்லை. ஆழ்வானும், ஆண்டாளும் அன்று பட்னி.

இரவு கோயிலில் அரவணை மணி சத்தம் கேட்கிறது. ஆழ்வான் மீது உள்ள பற்றினால்
ஆண்டாள் ”உன் பக்தன் இங்கு பட்டினியாக கிடக்க..... ” என்று ஒரு நெடி யோசித்தார்.

யோசித்த மறு நொடி அரங்கன் அர்ச்சகர் மூலமாக ஆவேசித்து “ஆழ்வானுக்கு பிரசாதம்
அனுப்பிவையும்” என்று கூற, கோயில் உத்தமநம்பி மூலமாக சகல மரியாதையுடன்
பிரசாதம் ஆழ்வான் திருமாளிகைக்கு வந்து சேர ஆழ்வான் “எதுக்கு ?” என்று வினவ
“நம்பெருமாள் நியமனம்” என்றார் உத்தமநம்பி.

ஆழ்வான் இரண்டு கவளம் ( தனக்கும், ஆண்டாளுக்கும் ) பெற்றுக்கொள்கிறார். உத்தமநம்பி
சென்ற பிறகு ஆழ்வான் ஆண்டாளை பார்த்து “நீ ஏதாவது நம்பெருமாளிடம் வேண்டினாயோ
?” என்று கேட்க ஆண்டாள் தான் நினைத்ததை கூறினாள். “குழந்தை தாயை பார்த்து
என்னை காப்பாத்து என்று கேட்குமோ ? உலகத்துக்கே படியளக்கும் நம்பெருமாள் அடியார்களை மறந்துவிடுவானோ ?” என்று கூறிவிட்டு பிரசாதத்தை ஸ்வீகரித்தார்கள் (உண்டார்கள்). அதன் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பராசர பட்டர், வேதவ்யாச பட்டர் பிறக்கிறார்கள். ( கூரத்தாழ்வான் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம்
வைத்துகொண்டதில்லை இவருடைய குழந்தைகள் ஸ்ரீரங்கநாதனுடைய அரவணைப்
பிரசாதம் கடாக்ஷத்தினாலேயே அவதரித்தனர்)

பராசர பட்டர் இளைய வயதில் பரபதம் அடைந்த போது பட்டரின் தாயார் (ஆண்டாள்) சரம கைங்கர்யங்களை மகிழ்ச்சியுடன் முடித்துவிட்டு, வீடு திரும்பிய போது பட்டரின் பிரிவைத் தாங்கமுடியாமல் ஸ்ரீராமபிள்ளை அழுவதைக் கண்டு ‘பராசர பட்டர் பரபதம் சென்றதைப் பார்த்து உமக்குப் பொறாமையா ?’ என்று கேட்டார். ஸ்ரீராமபிள்ளையும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு பட்டருக்காக விழா எடுத்துக் கொண்டாடினார்.

-சுஜாதா தேசிகன்
3.6.2023
இன்று வைகாசி அனுஷம்.
இரட்டை ஆசாரியர்களாக -ஸ்ரீ பராசர பட்டர் மற்றும் ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர் திருநட்சத்திரம்

Comments