Skip to main content

நம்மாழ்வாரின் திருவாசிரியம் - திருஆச்சரியம் !

 நம்மாழ்வாரின் திருவாசிரியம் - திருஆச்சரியம் !



3D திரைப்படம் பார்க்க ஒரு கண்ணாடி தேவை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் கண்ணாடி இல்லாமல் பார்த்தால் படம் மங்கலாகத் தெரியும். கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்தால் படம் உங்கள் கண்முன்னே வந்து விளையாடும்.

நாம் தினமும் இந்த உலகத்தை 3Dல் தான் பார்க்கிறோம். கண்களை மாறி மாறி மூடி மூடித் திறந்து பாருங்கள் ஒரே பொருள் வேறு வேறு கோணத்தில் தெரியும் ஆனால் திரைப்படத்தில் பார்க்கும் 3D போலப் பரவசம் ஏற்படுவதில்லை. அதுவும் முதன் முதலாக 3டி படம் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் அலாதியானது.

3D கண்ணாடி எப்படி வேலை செய்கிறது ?

image

ஆனந்த விகடனில் முன்பு கண்ணாடியுடன் ஒரு 3D படம் ஒன்றைக் கொடுப்பார்கள். நீல, சிகப்பு வண்ணம் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அச்சு அடித்திருக்கும். கண்ணாடி உதவியுடன் பார்த்தால் கிட்டத்தட்ட 3D மாதிரி தெரியும்.

விஷயம் இது தான். நீல நிறத்தில் இருக்கும் படம் நீல கண்ணாடி வழியாகவும், சிகப்பு நிறத்தில் இருக்கும் படம் சிகப்பு கண்ணாடி வழியாக உங்கள் கண்கள் வழியாக மூளைக்கு சென்று முப்பரிமாணமாக மாற்றிக் காட்டி வித்தையைச் செய்கின்றன.

இன்று திரைப்படத்தில் பார்ப்பது “போலராய்ட்” வகை கண்ணாடிகள். கண்ணாடிகள் ஒரே மாதிரி இருந்தாலும், அதன் கோணம் வேறு வகையில் அமைத்து அதனால் நீல, சிகப்பு வண்ணம் எப்படி பிலடர் ஆகிறதோ அதே போல ஒரே படத்தை இரண்டு கோணத்தில் பார்ப்பதால் உங்களுக்கு அது முப்பரிமாணக் காட்சியாகக் கிடைக்கிறது.

சின்னப் பையன் தன் அம்மாவிடம்
"கடவுளை நிஜமாகப் பார்க்க முடியுமா ?" என்று கேட்டான் அதற்கு அம்மா
"கடவுளைப் பார்க்க முடியாது..!" என்றாள்.
அப்பாவிடம் கேட்டான். அதே பதில். நண்பர்களிடம், மாமா, மாமி என்று கடைசியாகத் தாத்தாவிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டான்.
தாத்தா "கடவுளைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரிவதில்லை" என்றார்.

ஆழ்வார்களுக்கும் இப்படி தான். 3D கண்ணாடிக்குப் பதில் ஞானக் கண்ணைக் கொண்டு பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் கண்களுக்கு இந்த உலகத்தில் பெருமாளைத் தவிர மற்றவை எல்லாம் பில்டர் ஆகிவிட்டது. எப்படி 3D கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது பரவசம் ஆகிறோமோ அதே போல ஆழ்வார்கள் பெருமாளைப் பார்க்கும்போது பரவசம் ஆகியிருக்கிறார்கள்.( பரவசம் என்றால் தன்னை மறந்த இன்ப நிலை; பெரும் மகிழ்ச்சி.)

நாம் 3Dல் பார்க்கும்போது ஐஸ்கீரிம், பறவை, இல்லை வில்லன் எறியும் ஆயுதம் என்று தெரியும். ஆழ்வார்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்று அவர்களே ரன்னிங் கமண்டரி மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.

image

நம்மாழ்வார் - ஸ்ரீரங்கம் ( படம் எதிராஜன் )

நம்மாழ்வாரின் திருவாசிரியம் பாசுரம் இது

செக்கர் மா முகில் உடுத்து
மிக்க செஞ் சுடர்ப் பரிதி சூடி
அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ் சோதி மரதகக் குன்றம்
கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல்
பீதக ஆடை, முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து
சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப
மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப
நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன், அயன், இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை உந்தித் தனிப் பெரு நாயக
மூவுலகு அளந்த சேவடி யோயே!

இந்தப் பாசுரத்தைக் கவனித்தால், ஆழ்வார் திருமேனியழகிலும் துயில்கொண்ட அழகிலும் நெஞ்சைப் பறிகொடுத்து பரவச நிலையில், ஒரு வினைமுற்றோடே பாசுரத்தை முடிக்கமாட்டாமல் “மூவுலகளந்த சேவடியோயே!” என்று கண்ணைச் சிமிட்டாமல் அப்படியே பரவச நிலைக்குச் சென்றிருக்கிறார்.

image

திருப்பாணாழ்வார் - உறையூர்

இந்தப் பாசுரத்துக்குப் பொருள் சொல்லப் போவதில்லை. இந்தப் பாசுரத்துடன் திருப்பாணாழ்வாரின் அமலனாதிப்பிரான் பாசுரம் எப்படி ’ஜெல்லாகிறது’ என்று நீங்களே பாருங்கள்.

image

நம்மாழ்வார் போலத் திருப்பாணாழ்வாரும் பரவச நிலைக்குச் சென்று ”அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணவே என்று 'சேவடி யோயே' என்பது போல அப்படியே முடித்துவிட்டார்.

- சுஜாதா தேசிகன்

Comments